About Me

Saturday, November 6, 2021

Reloaded... கம்பி மத்தாப்பும், பூ வானமும்...

Fly...


ஊர் கூடி இழுத்த தேர் போல... தீபாவளி எனும் தேர்  வீடுகளைக் கடந்து   மகிழ்ச்சியான தருணங்களை  கம்பி மத்தாப்பாக, பூ வானமாக, சங்கு சக்கரமாக சுற்றிச் சுழல விட்டுவிட்டு 'டாட்டா' காட்டியபடி நகர்ந்து போய்விட்டது.
         

தீபாவளி மட்டுமல்ல எந்தப் பண்டிகையாக இருந்தாலும் பண்டிகை நாளை விட அந்நாளுக்கான முந்தைய தயாரிப்புகள் தரும் மனமகிழ்வுகள் திருநாளைக் காட்டிலும் மனசுக்கு மிக நெருக்கமாகவே இருக்கும்.

காற்றுக்குக் கூட இடமளிக்காமல் இறுகக் கட்டியணைத்து கூடிக் களிக்கும் புதுமணத் தம்பதிகள் போல பண்டிகை நாளை இறுகக் கட்டிக் கொண்டு கொண்டாட்டமாகக் கழித்தாலும் கைகளுக்குள் இறுகப் பிடித்துக்கொண்ட பனித்துகள்கள் நமக்குத் தண்ணீர் காட்டியபடி கைகளின் வழியே ஒவ்வொரு துளியாகக் கரைந்தே போய்விடுவது போல பண்டிகை நாட்களும்  மகிழ்ச்சியைக் கரைத்து மனம் முழுக்க இரைத்துக் கடந்து போகும். பனித்துகளைப் பற்றிய கரங்களுக்குள் துகள்கள் கரைந்தாலும் அது தந்த குளிர்ச்சி உள்ளங்கை ரேகையாக
 விரவிக் கிடக்கும்.

பண்டிகை நாட்களும் பனித்துகள்கள் போலவே மகிழ்ச்சியை மனசுக்குள் குளிர வைத்துக் கடக்கும்.

இதோ, தீபாவளித் தேர் நம் கண்கள் காண கடந்துபோய்விட்டது. ஆனால் இத் தேரின் தடங்கள் மீண்டும் நாம் பயணிக்க ஒரு வரைபடமாகும். பயணித்து மீ்ண்டும் தேர் காணலாம். 


சந்தோசங்கள் ஒரு வாரத்திற்குள் காணாமற் போகும் 'ஜலதோஷம்' போல் இல்லாமல் 'வளி' முழுக்க நிறைந்து கிடக்கும் காற்றுப் போல நம் வழியெலாம் மகிழ்வைக் கடத்திக் கடந்தால் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான் திருநாள் தான்...

Have your cup of 'Green tea' 

'தீபாவளி 'Re loaded... 


         தீபாவளிக்கு முந்தைய இரவின் பழைய தருணங்களோடு  கடந்த பதிவை முடித்திருந்தேன். 
இதோ, விடியல் தீபாவளியின் பழைய ஞாபக முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறேன். அவிழும் முடிச்சுகளுக்குள் உறைந்து கிடக்கும் ஞாபகங்களை உங்களின் மனங்களுக்குள் இட்டு முடிச்சிடுகிறேன். இந்த முடிச்சுகளுக்குள் உங்களின் பழைய ஞாபகங்களும் கைபிடித்துக் கொள்ளட்டும். 

ஞாபக முடிச்சு1


ஜெய்ஹிந்துபுரத்து தெருக்கள் தீபாவளியின் விடியலில் 
'ஜெ... ஜெ!' - என்றிருக்கும். எனது தந்தை அதிகாலை 4 அல்லது   5மணி வாக்கில் தீபாவளி 'பர்சேஸிங்' முடித்து வீடு வருவார். 


தோளில் ஒரு புதிய பையுடனும் கக்கத்தில் புதிய 
குடையுடனும், இரண்டு கைகளிலும் அகன்று விரிந்த கட்டைப் பிடியுள்ள கைப்பைகளுடனும், அத்தனைப் பைகள் நிறைய தீபாவளிப் பொருட்களோடும் எங்களின் மனம் நிறையும்படி உறங்க ஏங்கும் கண்களின் வழியே மகிழ்வைக் கடத்தியபடி வீடு வந்து சேருவார். 

வளரும் பிள்ளைகள் இறுகப் பற்றி வழியெல்லாம் கடக்க தந்தை எனும் பிடிமானம் போதும். ஆறுதலாக தாய் உடன் வருவார். வேறு பிடிமானங்கள் தேவையில்லை. இது மனங்களின் வார்த்தைகள். எல்லோர் வாழ்வின் ஆதாரங்கள். 
மறுக்க முடியாது.

தீபாவளியின் முந்தைய இரவில் ஒரு பெரிய பட்டியலோடு  தன்னை 'load' செய்து கொண்டு தீபாவளியின் இரவுக் கடைகள் நோக்கிக் கிளம்புவார் என் தந்தை. சில சமயங்களில் மழை பிடித்துக் கொள்ளும். இருப்பினும் விடாப்பிடியாக குடை பிடித்து எங்களுக்குப் பிடித்தவைகளை வாங்க  அடாத மழையிலும் கிளம்பி விடுவார். நாங்கள் விடியலுக்காகக் காத்திருப்போம். அப்பா வந்ததும் தீபாவளிக் கடைகளில் வாங்கிய பொருட்களை  அம்மா எங்கள் வீட்டில் கடை விரிக்க.... அத்தனையையும் பார்த்துச் சந்தோசித்து உறங்கச் செல்வோம்.
எங்களின் சந்தோச நிறைவைக் கண்டு மனநிறைவு கொண்ட பின்னரே தந்தை நித்திரை காணச் செல்வார். வாங்கி வந்த பொருட்களுக்குள் கிறிஸ்துமஸ் தினத்தன்று நாங்கள் வெடித்துக் கொளுத்தி மகிழ்வதற்கான வெடிகளும், மத்தாப்புகளும் அடங்கும். 

ஞாபக முடிச்சு 2

 காலை  9 மணிக்கெல்லாம் தீபாவளித் தருணங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும். அன்றைய தினம் எங்களின் உறக்கம் கலைப்பவர்கள் எங்களது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களாகத்தான் இருப்பார்கள். உறக்கம் கலைந்து விழித்தால் கண் எதிரே அவர்களின் கைகளில் இலை மூடிய பெரிய தட்டு எங்களைப் பார்த்துச் சிரிக்கும். சிரித்தபடி வரும் தீபாவளிப் பலகாரத் தட்டுக்களை அம்மா புன்முறுவலோடு வாங்கி எங்கள் வீட்டுப் பாத்திரத்திற்கு மாற்றுவார். 


தரும் தட்டை வெறுமையாகத் தராமல் அதனுள் சிலபல '
சூஸ்பெரிகளை' (cookies) வைத்துக் கொடுப்பார். இது வழக்கம். இன்றும் அப்படித்தான். 
இப்படியாக தட்டுக்கள் தட்டாமல் எங்கள் வீட்டுக் கதவு தட்டி ஒவ்வொரு தீபாவளிக்கும் வந்து எங்கள் வீட்டுப்பாத்திரங்கள் நிறைக்கும். 

அம்மா  அத்தனையையும் கண்களால் புகைப்படம் எடுத்துக்கொள்வார். சட்டகமிட்டு மனச்சுவரில் மாட்டிக் கொள்வார். அத்தனையும் மாற்று வடிவங்களுடனும் வேறுவேறு சுவைகளுடனும் ஒன்றும் குறைவு படாமல் நிறைவாக 'கிறிஸ்துமஸ்' தினத்தன்று அக்கம்பக்கத்து வீடுகளின் வாசற்படி ஏறும். 

மகிழ்வுடனே நான், என் அண்ணன், என் தம்பி மூவரும்  அத்தனை தட்டுக்களையும் ஒவ்வொன்றாக கைகளில் ஏந்தி மூடிய இலை பறந்து விடாதபடி அக்கம்பக்கத்து வீடுகளுக்கு கடத்துவோம். தம்பி சிறியவன் என்பதால் என் உடன் வருவான். கைகளில் தட்டு தரப்பட மாட்டாது. அவனுக்கு அது சற்று எரிச்சலைக் கொடுக்கும். அம்மா அவனை என்னுடன் கோர்த்து விடுவார். 'கூட்சு'  வண்டி கணக்காக கிளம்புவோம். 
தீபாவளிக்காரர்களை விட தீபாவளியை வேடிக்கை பார்க்கும் எங்கள் வீட்டில் தான் தீபாவளிப் பலகாரங்கள்  ரகம் ரகமாகப்  பல் இளித்தபடி எங்களின் பற்கள் கடக்கும். 

அதிரசங்கள், முறுக்குகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்டமைப்பில் இருக்கும். வட்டமாக, தட்டையாக, பொடிமாசாக  என்றபடி புதிய வார்ப்புகளோடும் புதிய பரிமாணங்களோடும் தட்டுகளுக்குள் இலை முக்காடிட்டு வீடு வந்து சேர்ந்த காட்சிகள் மனசுக்குள் சுவையும் வண்ணமும் குறையாமல் பொக்கிஷத்தைப் போல இன்றும் பத்திரமாக  இருக்கின்றன. உங்களிடமும் இப்படிப்பட்ட பொக்கிஷங்கள் இருக்கலாம். 

இன்று, நான் கண்ட வரை சென்னையில் அடுக்கங்களில் அடைக்கப்பட்ட கதவுகளின் இடுக்கு வழியே கூட தீபாவளிப் பலகாரங்கள் தன் வாசனைகளை அருகாமைக்கு கசியவிடுவதில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது. 

  ஞாபக முடிச்சு - 3

              புத்தாடை உடுத்தி பெரியவர்களின் ஆசி பெற்று  சுவைமிகு பலகாரங்கள் உண்டு பட்டாசுகள் வெடித்து மகிழ்வதைப் போலவே தீபாவளி தினத்தன்று புதுத் திரைப்படங்களைக் கண்டு களிப்பது பலருக்கு வழக்கமாகவே இருந்தது. இன்றும் அப்படியே! 
               
          அன்றைய நாட்களில் திரைப்படங்கள் தான் ஆகச்சிறந்த பொழுதுபோக்காக இருந்தன. திரையில் பார்க்கும் கதாநாயகனில்
  திரைகாணும் ரசிகன் தன்னைக் கண்டான். சிலாகித்தான். அப்பொழுது தொலைக்காட்சிகள்  வீடுகளுக்குத் தொலைவாகவே இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகளில் கறுப்பு வெள்ளையில் தெரியும் தொலைக்காட்சிகள் இருக்கும். 


வெள்ளிக்கிழமை '
ஒளியும் ஒலியும்' தமிழ்த் திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்பாகும். ஞாயிறு மாலை ஒரு திரைப்படம். மற்ற நாட்களில் 'ஸப்பாடி' கண்ணைக் கட்டும்.  அந்த வயது அப்படி. இப்பொழுது கடந்தவைகளை நினைத்தால் 'தூர்தர்ஷன்' நிகழ்ச்சிகள் அத்தனையும் நினைத்தாலே இனிக்கும் ரகங்கள் தான். கண்மணிப் பூங்கா', 'Wonder Baloon' 'எதிரொலி', 'சித்ரகார்' 'சித்ரமாலா' போன்ற நிகழ்ச்சிகளை மறக்க முடியாது. தீபாவளி தினத்தன்று அப்பொழுது வெளியாகும் திரைப்படங்களின் பாடல்கள் 'பல்லவி' முதற் 'சரணத்தில்' பாதி வரை 'தூர்தர்ஷனில்' சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும். 

சரி தீபாவளி திரைக்கு வருகிறேன். 

 தீபாவளித் திரை அன்று... 
                   
          அப்பொழுதெல்லாம் ஒரு வருடத்திற்கு பத்து முதல் இருபது படங்கள் தான் வெளியாகும். வெளியான படங்கள் குறைந்த பட்சம் இருபத்தைந்து நாட்களில் இருந்து ஐம்பது நாட்களாவது ஓடும். படம் நன்றாக இருந்தால் நூறு நாட்களையும் கடந்து ஓடும். வெள்ளி விழாக் காணும். மறு தீபாவளி வரை ஓடிய திரைப்படங்களும் உண்டு. இன்று அப்படி இல்லை. 
'திரைக்கு வந்த சில நாட்களிலேயே' - என்கிற குரலோடு நம் வீட்டு வரவேற்பறையில் புதுப்படங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் 'பவுசு' காட்டும். 

அன்று படங்களை மக்களிடம்  கொண்டு சேர்க்கப் பயன்படுத்திய, கையாண்ட வழிமுறைகளை நினைத்தால் அதற்கென தனியே ஒரு பதிவு தேவை. ஒரு விதத்தை மட்டும் பகிர்கிறேன். 

ஒரு பெரிய சட்டக வண்டி... 


நடுவில் ஆட்டோ டயர் போன்று இரு டயர்கள் இருக்கும். முன் பக்கம் சட்டக வண்டியை இழுக்கத் தோதாக ஒரு கைப்பிடி இருக்கும். பின்னிருந்து தள்ள ஒருவரும் முன் இழுத்தபடி ஒருவருமாக இருக்க... மூன்றாவதாக வரும் நபர் சினிமா விளம்பரம் அச்சடித்த வண்ணக் காகிதங்களை 
விநியோகித்தபடி வருவார். கூட்டம் கூடிவிட்டால் கைகளை உயர்த்தி வண்ணக்காகிதங்களை வான் நோக்கி எறிந்து சூறை விடுவார். சிறுவர்கள் குதூகலச் சத்தத்துடன் அங்குமிங்கும் ஓடி காகிதங்களைக் கைப்பற்றுவார்கள். அச்சிறுவர்களில் நானும் ஒருவன். 

தீபாவளி அன்று கமல், ர‌ஜினி திரைப்படங்கள் வெளியானால் அது தனித்தீபாவளியாக இருக்கும்.அப்பகுதிகள் தனித் தீவுகளாகி ஆட்டம் பாட்டம் என்று கலை கட்டும். அன்று தீபாவளி தினத்தில் படம் பார்த்து வருபவர்கள் ஏரியாவின் கதாநாயகர்களாகி விடுவார்கள். அன்றைய காலங்களை தமிழ்த்திரையின் பொற்காலங்கள் என்றே சொல்லலாம். 
இப்படியாக அன்றைய தீபாவளி நாட்கள் நினைக்கையில் கைகளுக்குள் ஒட்டிக் கொண்ட வண்ணத்துப் பூச்சியின் நிறத்தைப் போல மகிழ் நினைவுகள் மனதோடு ஒட்டிக் கொள்ளும். என்றும் எப்பொழுதும்... 

 வழியெல்லாம் விழிகள் நிறை ஒளியாக நாட்கள் தொடரட்டும்.... 


மனப் பறவை மனம் கொத்தும். பழம் நினைவுகள் உண்ணும்! 
      பறக்கும்... 


                            Irudhy.a  



Thursday, November 4, 2021

கம்பி மத்தாப்பும், பூ வானமும்... ...

Fly...


புறச்சூழல் மழையால் நனைந்திருக்க அகத்தில் அகல் விளக்கின் ஒளி மனம் முழுக்க நிறைந்திருக்கும்.  தண்ணீரும் நெருப்பும் எதிரெதிர் துருவங்கள். இருப்பினும்  எதிரெதிர் துருவங்களை இடம் வலமாகக் கைகளில் ஏந்தி மத்தாப்பும் பூ வானமுமாகக் கண்கள் நிறையும்படி பட்டாசு கொளுத்தி  
மழைக்காலத்தின் ஈரம் மனசுக்குள் ஒளிர்ந்துகொண்டிருக்கும் தீப ஒளித் திருநாளின் சந்தோசங்களை அணைத்துவிடாதபடி  வியாபாரிகள் முதல் விளையாட்டுப்பிள்ளைகள் வரை உள்ளங்கைக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கும் அணையா நெருப்பின் வெளிச்சத் திருவிழாவாக... மகிழ்வெனும் தேர் உருட்டி  வீடுகள் தோறும் விருந்தாளியாக வந்து சேரும் நாள்  தீபாவளித் திருநாள். 


W
hy this 'தீபாவளி?' 

தீபாவளித் திருநாள் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் முனைவர். அமரர் திரு.தொ.பரமசிவன் அவர்கள் தனது 'அறியப்படாத தமிழகம்' நூலில் 
     விஜய நகரப் பேரரசுக் காலத்தில் தான்  தீபாவளி தமிழ்நாட்டுக்குள் நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 
மேலும்,' "நரகாசுரன்" எனும் அரக்கன்
கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக்கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்பில்லாதது என்றும், மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதை" எனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து நூலில்
 "இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் 24 ஆம் தீர்த்தகாரரான வர்த்தமான 'மகாவீரர்' வீடு பேறு அடைந்த நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்கள் ஏற்றி கொண்டாடுமாறு மகாவீரர் கேட்டுக்கொள்ள பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள்
குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும். "என்றும் தீபாவளித் திருநாள் குறித்து எழுதியிருக்கிறார்.
 இத் தகவலை எனது கல்லூரிக் கால நண்பர் 
'what's app-ல் எங்கள் குழுவில் பகிர்ந்திருந்ததால் அறியமுடிந்தது. அதை உங்களிடமும் பகிர விரும்பினேன். 
காரணங்கள் எதுவாக இருந்தாலும் மனங்களை மகிழச் செய்வதே  பண்டிகைகளின் மைய நோக்கம். 

"தீபாவளி" - 
            அன்றும்... 
                 இன்றும்...


   தீபாவளி என்றதும் சில நினைவுகள் 
மத்தாப்பூ கொளுத்தும். சில நினைவுகள் பூ வானமாகிச் சிதறும். சில நினைவுகள் சங்கு சக்கரமாக மனசுக்குள் சுற்றிச் சுழலும். 

தீபாவளி 'Rewind' 


1980களுக்குப் பிறகான தீபாவளி நாட்கள் நெஞ்சுக்குள் இட்ட மருதாணியாக மனம் முழுக்க சிவந்து கிடக்கிறது. இக்காலத்தில்   மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில்  வசித்தோம். மனம் போன போக்கில் சுற்றித் திரிந்த காலகட்டம். படிப்பு எனக்கு அப்பொழுது பாகற்காய். பகலிலேயே கனவுகள் கண்டு திரிவேன். மேல் சட்டை அணியாமல் சட்டை குறித்து சட்டை செய்யாமல் அதிரிபுதிரியாக வாழ்ந்த காலம். 
காற்றடி காலத்தில் பக்கத்து வீட்டு மொட்டைமாடி ஏறி காற்றாடி விடுவது. மழைக்காலத்தில் களிமண் பிசைந்து விளையாட்டுச் சாமான்கள் செய்வது. விடுமுறை நாட்களில் கல்லா மாங்காயை பொடியாக்கி கடுகு, உப்பு, மிளகாய்த் தூளை கொட்டாங்குச்சியில்(தேங்காய் மூடி) போட்டுக் கிளறி விற்றது. ஐந்துகாசிற்கு பழைய சைக்கிள் டயர்களை வாங்கி தெருத் தெருவாக கம்பால் அடித்து ஓடித்திரிந்தது அத்தனையும் கம்பு ஊன்றி நடக்கும் காலந்தொட்டாலும் மறக்காது.கம்பு ஊன்றும் ஆசையெல்லாம் எனக்கு இல்லை. கால் ஊன்றித் திரிகிறபோதே கதவடைத்துவிடவேண்டும் என்பதுதான் விருப்பம். சரி ஜெய்ஹிந்தபுரத்து தீபாவளிக்கு வருகிறேன். 

வண்ண மீன் தொட்டிக்குள் உலவித் திரியும் கண்ணாடி மீன்களுக்கு மத்தியில் குளத்து மீன்கள் நீந்தினால் எப்படி இருக்குமோ அப்படி நாங்கள் வசித்த தெருவில் மூலைக்கு ஒரு கிறிஸ்தவக் குடும்பம் மட்டுமே இருக்கும். மற்றபடி இந்துமதம் தழுவிய குடும்பங்கள் தான் அதிகமாக இருக்கும். அதனால் 'தீபாவளி' வான்நட்சத்திரங்களைப் போல ஜொலியாய் ஜொலிக்கும். 


காட்சி1
 

தெருக்குழாய்களில் விடிய விடிய தண்ணீர் விழுந்த படி இருக்கும். வாசற் படிகளில் அமர்ந்தபடி தாவணி அணிந்த இளங்குமரிகள் 
 கைகளில் மருதாணி அப்பிக் கொண்டு எந்தப் பல்லும் 'absent' ஆகி விடாதபடி எல்லாப்பற்களும் தெரியச்சிரித்து வயசுப்பயல்களின் மனசுக்குள் கூழாங்கல்லின் குளுமை சேர்ப்பார்கள். 

காட்சி-2

'வயசுப் பயலுகளென்றால் சும்மாவா! மீசை முறுக்கி தாடி தடவி கிப்பித் தலை சிலிர்க்க ஓரக் கண்ணால் அங்குமிங்கும் மேய்ந்து கைகளுக்குள் பதுக்கி வைத்திருந்த வெங்காய வெடியை தடாலென சுவரில் அல்லது தரையில் தேங்காய் உடைப்பது போல எறிய ஏரியாவே எழுந்து நின்று பார்க்கும். அப்புறம் குமரிகள் பார்க்காமலா இருப்பார்கள். பிறகு 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் ஓடும். 
'கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்...' பாடல் போல காட்சிகள் அரங்கேறும். இப்படத்தைப் பார்த்தபோது எனக்கு ஜெய்ஹிந்துபுரத்து ஞாபகங்கள் அலையடித்தது. 

காட்சி-3

 அப்புறம் இரவு கொஞ்சம் கடக்க இளங்காளைகளும், அப்புறங்காட்டி 
'இந்தா உங்க லிஸ்ட்ல நாங்களும் சீக்கிரம் சேந்துருவோம்ல' என்கிறதொனியில் உள்ள சிறு வரும் காளைகளும் தலையில் டப்பா எண்ணையைக் கொட்டித் தேய்த்தபடி முகத்தில் எண்ணெய் வழிய குழுகுழுவாக கதைகள் பேசி அமர்ந்திருப்பார்கள். குழாயடிகளில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும் பெண்கள் அவர்களின் எண்ணெய் முகம் கண்டு அசடு வழிவார்கள்.

காட்சி-4 

இரவு மூன்று மணி கடக்க மீண்டும் வெடிச்சத்தம் காதுகளில் திரி கிள்ளும். வாசல் வந்தால் தாவணிகளும் தாவணிக்களின் அம்மாக்களும் தங்கைகளும்   கோலமாவுகளை டப்பாக்களில் எடுத்துக்கொண்டு தரையில் குதிங்காலிட்டு அமர்ந்தபடி' என்ன கோலம் இடலாம்?' - என்று ஆலோசித்து முடிவில் தரையில் கோலமாவால் தொடக்கப் புள்ளி இடுவார்கள். பார்க்கும் மனசுக்குள் ஓர் அழகான கோலம் வரையப்பட்டிருக்கும். இப்படியாக தீபாவளியின் முந்தைய நாள் இரவு முடிவுக்கு வரும். 


வி
டியற்கால தீபாவளி சரவெடியாகத் தொடரும். 


இரவின் விடியலாகவும்
இருளில் ஒளியாகவும்
ஒளிரும் 'தீபாவளித் திருநாள்' நல்வாழ்த்துக்கள்... 

மனப் பறவை மனம் கொத்தும்! 
பழம் நினைவுகள் உண்ணும். 
பறக்கும்... 


                          Irudhy.a 
 

 


Sunday, October 31, 2021

காதல் உலாப் போகும் காலம்...

      Fly...

            மனம்கொத்தும் பறவை.... 


மழைக் காலத் தேநீருடன் மனம் கொத்தும் மையல் காதலோடு.... 
மழை கண்ட மயிலாக 
கண்ட காதலை
 மனம்கடந்த காதலை மனப்பறவை தன் சொற்தோகையால் விரித்தாடும்...
ஆடலில் குறை இருப்பின் பொறுத்தருளுங்கள். நிறை கண்டால் பகிருங்கள். 
நிறை இருக்க விரும்பி முனைகிறேன். முயல்கிறேன். 
Have your cup of tea 

இனி ஞாயிறு தோ(ன்)றும்... மழைக் காலத் தேநீரோடு
மனம் உண்ணும் காதல் உங்கள் விழி வழி உலா வரும். 

காதல் உலாப் போகும் காலம்... 


காதல் உலகில் மூன்று வர்க்கம் உண்டு. 

          காதல் செய்வோர்... 
         காதலில் வென்றோர். 
          காதலில் தோற்றோர். 
இம்மூன்றிலும் ஆதி வேராக காதல் மனம் முழுக்க பற்றிப் பரவி படர்ந்திருக்கும். 


பிரபஞ்சம்  முழுக்க நிறைந்திருக்கும் காற்றுப் போல கடற்கரை மணலினும் மிகுதியாக நிலத்தினும் பெரிதாக! 
வானினும் உயர்ந்ததாக! 
காதல் தன் வசீகரக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி... 
மனங்கள் தோறும்   மன்மதநடை இட்டுக் கடக்கிறது. 

காதலைக்  கடக்காதவர் எவரும் உண்டோ? காதல் எல்லோர் மனத்திலும் வேர் பிடித்திருக்கும். பிடித்திழுக்கும் காதல் எதன் மீது? என்பதில்தான் வேறுபாடு இருக்கும். மற்றபடி காதல் மனங்களின் 'பொதுவுடைமை' என்பதில் ஐயம் இல்லை. 


காதல்.... 
சிலருக்கு வான்நிலா! 
மேலும் சிலருக்கு நட்சத்திரம்! 
காதல்... 
சிலருக்கு சூரியன்! 
மேலும் சிலருக்கு 
அன்னார்ந்து பார்க்கும் வானம்! 
காதல்.... 
இன்னும் சிலருக்கு... 
கால் நனைத்துக் கடல்சேரும் கடற்கரை அலை! 

காதல் கடல் காண கரை செல்லலாம். பாறை மோதிச் சிதறும் அலை கண்டு ரசிக்கலாம். கரை இறங்கிக் கால் நனைக்கலாம். கரையோரமாகவே நடந்து கண்கள் காண கடல் ரசிக்கலாம். 

காதல் ஒரு கடல்! 

காதலை மனம்  ஏன் கடலாக எண்ணுகிறது? ஆராய்ச்சி தேவையில்லை. 
'ஆராய்தல்'
 காதலுக்கு எப்பொழுதும் 'அந்நியன்' தான். 
மனம் காதல் கடலின் 
ஆழம் அறியாது. 
ஆராயாது உள் இறங்கும்.
 சில வேளை முத்தெடுக்கும்! 
சில வேளை மூச்சறுக்கும்.
 கரை ஒதுங்கும். 

காதல் கடல் அலை   எப்பொழுதும் ஓயாது. 

கடல் ரசிக்கலாம். ஆழ் கடல் அமைதி உணரலாம். ஆராயத் தேவையில்லை. 
மூழ்கலாம். முத்தெடுக்கலாம்! மூச்சறுக்கலாம்! 
கரை ஒதுங்கும் சிப்பிகளாகலாம்.

ஆதலின் காதல் செய்வீர்!.... 


'காதல் காதல் காதல்... 
காதல் போயிற் 
சாதல் சாதல் சாதல்...' 
                     -என்றார் மகாகவி பாரதி. 
பாரதியின் காதல் தமிழினத்தின் மீதும், தேசத்தின் மீதும், தாய்த்  தமிழின் மீதும் தான் இருந்தது. மிகையில்லை. 

மற்றபடி... 

"செல்லமா! செல்லம்மா... 
உன் அங்கம் மின்னும் தங்கமா!" என்றெல்லாம் காதலில் திளைக்கவில்லை மீசைக்கவி.

தேசத்தின் மீதான பாரதியின் காதல் அளப்பறியது. 

பாவேந்தர் பாரதிதாசனோ முதுமையின்  காதலுக்கு முகவுரை எழுதினார். 

முதியோர் காதலில்... 

"காய்ந்த புற்கட்டு அவள் உடம்பு
...... ......... 
இருக்கின்றாள் என்பதே
எனக்கின்பம்"
-என்று முதுமைக் காதலில் முழுமை கண்டார். 

இனி...


தொடரும்  வானில்  
காதல் 
பிறை நிலவாக... 
முழுமதியாக... 
தேயும். வளரும். தேயும்... 
பின் முழுமதியாகும்!


காதல் கடலா? நீளும் வானமா? 
வான் வரும் நிலவா? 
ஆராயத் தேவையில்லை.
 
ஒவ்வொரு ஞாயிறும்.... 
உதயமாகும் உறக்கம் தொலைத்த காதலும், உறங்க மறுக்கும் விழிகளும் மனம் கொத்தும் பறவையாக காதல் வானில் 
உலாப் போகும். 


ண்கள் உறங்கிடுமா? 
காதல் கண்கள் உறங்கிடுமா! 


காதல் கடலில் சிறு துளிகள்... 

உறக்கம் தொலைத்த காதல்...
உறங்கா விழிகள்! 
விழித்திருக்கும் இரவின் மடியில்-
முடிவில் விடியலாய் வருவாள்... 
விழி திறந்து கூவினான். 
அவளை வரவேற்கும்
சேவலானான்! 
கொக்கரக் கோ கோ... 
இது காதல் பாட்டு. 
      காதல் -  காதல் செய்வோரை               படுத்தும் பாட்டு! 

பாட்டெடுக்கும். 
மனம்கொத்தும்! பறக்கும்... 


Irudhy.a 

Thursday, October 28, 2021

வீடு... வாசல், வாழ்வு... (மிக்கேல் பட்டணம்)

Fly...


மழையின் அருமை கோடையில் விளங்கும். கொடையின் அருமை கொடுத்தலில் புரியும். 

                         கோடை... 
                             மழை....
                               கொடை!

எப்படியோ தொடங்க நினைத்து கட்டக் கடைசியாக அழைக்காமல் வீடு வந்த விருந்தாளி கணக்காக இப்படியொரு தொடக்கம் இப்பதிவிற்கு அமைந்தது.

 தொடங்கி விட்டது மழைக்காலம்.

கறுப்புக்குடை விரிக்காமல்
பூக்குடை விரிப்போம்!
மழை மண்ணின் பூக்காலம்.
மனம் பூக்கும் காலம்!

மழை விட்ட பின்னும் விடாத தூறல்... சாரல் போல சொந்த ஊர் குறித்த நினைவுச்சாரல்கள் மனசுக்குள் சதா தூறிக் கொண்டே, மனம் காய்ந்துபோகாதபடி  சொந்த ஊர் மண்ணின் வாசனைகள் மூக்கின் நாசிகளில் கர்ணனின் கவசகுண்டலம் போல ஒட்டிக்கிடக்கிறது. இவ் வாசனையை யாசகமாக எவராலும் கவர்ந்து செல்ல முடியாது. 

  "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" - 
              என்றார் மீசைக்கவி பாரதி. 

'எல்லோரும் மன்னர்' என்றால் அனைவருக்கும் ஆளும் தேசம் ஒன்று உண்டு என்று தானே அர்த்தம்.
ஆள ஒரு தேசமிருக்கிறதோ இல்லையோ ஆசுவாசமாக அமர்ந்து பழம் நினைவுகளை உண்டு அசை போட எல்லோருக்கும் சொந்த ஊர் உண்டு. காலந்தோறும் மண் மீதான வன்முறைகள் வளர்ந்தபடிதான் உள்ளன. பளபளக்கும் சாலைகள் மலைப்பாம்பு போல ஊர்ந்து பசுமைகளை கபளீகரம் செய்ய கிராமங்கள் தன் இயல்பைத் தக்க வைக்கமுடியாமல் 
காலமாற்றத்தில் தன் இயல்முகம் மறந்து பல்வேறு ஒப்பனைகளை இட்டுக்கொண்டு அரிதாரம்பூசி உள்ளுக்குள் மட்கிக் கிடக்கும் தனது இயல்பை மறைத்து இறகு உதிர்த்தபடி பறக்கும் பறவை போல கிராமங்கள் நகரங்களாகி  ஒவ்வொரு நொடியாக நரகம் நோக்கி அடிஎடுத்தபடி கடக்கிறது.

சிறு பிராயத்தில் நான் எனது ஊரில் கண்ட காட்சிகளை தற்பொழுது ஊர் சென்றபொழுது காணமுடியவில்லை. ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இதுதான் இன்றைய சூழலின் நிதர்சனம். ஆனால்,தற்பொழுது  நான் மிக்கேல் பட்டணத்தில் கண்ட  சில காட்சிகள் ஆச்சரியங்களைத் தான் எனக்கு ஏற்படுத்தின.

மனசுக்குள் மத்தாப் பூ.... 

வடிவம் மாறாத சில வீடுகள், 



சில தெருக்கள்... 


குறைவில்லாது சுற்றித் திரிந்த கோழிகள்... 




பஞ்சாரக் கூடை... 

மழைக்கு ஒண்டி நிற்க இடமளித்த ஓட்டுத் தாழ்வாரங்கள்... 


மாற்றமில்லாத என் அம்மாச்சி வீடு... 


இப்படிச் சில காட்சிகள் மனசுக்குள் மத்தாப்பூ கொளுத்தின.

மனப்பறவை பின்னோக்கிப் பறந்தது... 

கீழ்இறங்காதபடி தோளுடன் பிணைக்கப்பட்ட கயிறுடன்(நாடா) கூடிய 'டவுசர்' அணிந்து நுங்கு வண்டி உருட்டி கருவேல மரங்களின் ஊசி முனை கால்களில் தைக்க எருக்கம் பூப் பாலை சூடு குறையாது சட்டென கால்களில் ஊற்றி தட்டிவிட்டு முள் கொடுக்கும் 
வலியோடு வீதி வழி விளையாடி ஓடித் திரிந்த நாட்கள் ஒரு வரைபடம் போல மனசுக்குள் விரிந்தது. உங்களிடம் பகிர்ந்து கொள்ள பாதை காட்டுகிறது. பாதைகள் பழம் நினைவுகளை விதைக்கின்றன. அறுவடை செய்கிறேன். 

என் மனைவி பணி புரியும் பள்ளியில் பணி செய்யும் சக ஆசிரியர் 'எல்லாம் கற்பனையா எழுதுறாரா மிஸ்?' - என்று கேட்டிருக்கிறார். அவர் கேட்டதில் தவறேதும் இல்லை. நான் உங்களிடம் பகிரும் எனது ஊர் குறித்த விஷயங்கள் அத்தனையும் நான் அனுபவித்தவைகள். வார்த்தைப் பதங்களை ஒவ்வொரு பூவாக எடுத்துக்  கட்டி ஒரு மாலையாக்கி உங்களுக்குத் தருகிறேன்.  வாசமற்ற வாடாத வண்ணம் நிறைந்த செயற்கைப் பூக்கள் அல்ல நான் தரும் பூக்கள். என் பூக்கள் அத்தனையும் விடியலில் மலர்ந்து மணம் வீசி மாலையில் வதங்கும் உயிருள்ள பூக்களே.
எனது அம்மாவிடம் ஊர் பற்றி எழுதிவருவதாகச் சொன்ன பொழுது 'உனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கா?' - என்று கேட்டார். நான் சொன்ன சில விஷயங்களைக் கேட்டு மகிழ்ந்தார். 'பரவாயில்ல உனக்கு இன்னும் ஞாபகத்துல இருக்கே!' என ஆச்சரியப்பட்டார்.
உண்மையில் நம் சொந்த ஊர் குறித்த நினைவுகள் எக்காலமும் எவரும் கவர்ந்து போகமுடியாத பொக்கிஷங்கள் தான். அப்புறம் எப்படி மறக்கும்.

                   
   Have your cup of
       "கருப்பட்டித் தேநீர்" 

கோடை கொடை ஆன காலம்! 

மேமாதக் கோடை விடுமுறைகள் சிறு பிராயத்தில் ஒரு கொடையாகவே இருந்தது. சொந்த ஊர் செல்வது இல்லாவிட்டால் திருத்தலமான 'வேளாங்கண்ணி' செல்வது இவை தான் அக்கால எங்களின் வாழ்வு 'அஜந்தாக்கள்'
பெரிய மாற்றங்கள் இருக்காது.
அப்படி என் சொந்த ஊர் மிக்கேல் பட்டணத்தில் கழிந்த பொழுதுகள் இன்றும் பசுமை போர்த்திக் கிடக்கிறது. மிக்கேல் பட்டணத்து சூடும், சூதற்ற மக்களின் முகங்களும் அவர்களின் வாழ்வும் பசுமைக்குள் பொதிந்து கிடக்கும் பொக்கிஷங்கள். 

' ஒண்ணு சொன்னாப்ல ஒண்ணு மண்ணா மண் பூசி சாணத்தின் வாசனையை நீரோடு சேர்த்து தங்களின் முகத்தில் அப்பிக்கொண்டு பள்ளிச்சீருடை அணிந்தாற் போல வரிசை கட்டிச் சிரித்தபடி பெரும்பாலான வீடுகள் அன்று மிக்கேல் பட்டணத்தில் இருந்தன. வீட்டுக்கு வீடு முள்ளு முருங்கைகளும், ஏதேனும் ஒரு பந்தற்கொடிகளும் வீட்டைக் கட்டிக் கொண்டு படர்ந்திருக்கும். 


பார்க்கும் மனங்களை இழுக்கும். 
உணவு சமைக்க எழும் புகை வீட்டிற்குள் ஒளிந்திருக்கும் சாணத்தின் வாசனையை கை பிடித்து இழுத்து வீட்டின் ஓட்டுத் தாழ்வாரத்தில் ஏற்றி முன் வாசல் வழி இறக்கிவிடும். சமையற்புகையோடு கலந்த சாணத்தின் வாசனை நாசிகளில் ஏற கிராமத்தின் வாசனை அறிந்த காலங்கள் அவை. 
வாசனையோடு அம்மனிதர்களின் நேசங்களையும் அடுத்த பதிவில் தொடர்கிறேன்... 

மனப் பறவை மனம் கொத்தும்... 
பழம் நினைவுகள் உண்ணும்! 
பறக்கும்...

                             
    Irudhy.a   


Monday, October 25, 2021

ஊர்... வலம்... (மிக்கேல் பட்டணம்)

Fly...


வெயில்... நிழல்... நிலவு! 


நீ..... ண்ட கால இடைவெளிக்குப்பின்னும்  
சொந்த ஊர் சென்று திரும்பிய தருணங்கள் மனதிற்கு நெருக்கமாகவே இருந்தது. இம்மனநிலையை எப்படிச் சொல்லலாம்? என யோசிக்கையில் யாசித்தவுடன் கிடைத்த பரிசுப் பொருள் போல சட்டென ஓர் உணர்வு தோன்றியது. தலைப்பிரசவம் முடிந்து தன் 
தாய்வீடு திரும்பும் பெண்மையின் மனநிலை போன்ற உணர்வு தான் எனக்குத் தோன்றியது. இப்படிக்கும் நான் பிறந்ததெல்லாம் மதுரை தான். இருப்பினும் என் அம்மாவின் ஊரையே என் மனம் சொந்த ஊராகச் சொந்தம் கொண்டாடுகிறது. ஏன்? கேள்வியால் தான் விஞ்ஞானம் பிறந்தது. ஆனால் இவ்விஷயத்தில் 'ஏன்?' என்ற கேள்விக்கு  விடை தெரியவில்லை. அது ஓர் உணர்வு. அவ்வளவு தான். 


அந்த உணர்வுடன் மழையில் நனைந்தபடி ஊரின் தெருக்களில் நடந்தேன். ஒருவரிடம் "பாஸ்கா மேடை உள்ள தெருவிற்கு இப்படிப்  போகலாமா? '-என்று கேட்டவுடன் என்னை ஊன்றிப் பார்த்துவிட்டு
'இப்ப பாஸ்காவெல்லாம் போடுறது இல்ல. இடதுபக்கமாப் போய்த் திரும்புங்க'- என்றார். 
நான் சரி எனச் சிரித்துவிட்டு இடமாகத் திரும்பி நடந்தேன். 

('பாஸ்கா'என்பது கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்று நிகழ்த்துக்கலை மேடை நிகழ்வு. இரண்டு நாட்கள் நடக்கும். (இரவில்). நான் பார்த்தது இல்லை. என் அம்மா சொல்லி அறிந்திருக்கிறேன். ஆனால், என் தந்தை ஊரான 
இடைக்காட்டூரில்
இன்னமும் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவிற்குப் பிறகு' பாஸ்கா' நடத்தப்பட்டு வருகிறது.)

அம்மாச்சியின் வீட்டருகே ஒரு தாய்க்கோழி மழையில் நனைந்தபடி இறகு உலர்த்த, சேய்க்கோழிகள் 'குருச்... குருச்' ஓசையுடன் நனைந்தபடி தாய்க்கோழியின் கால்களுக்கு இடையில் முண்டி ஒண்டின.

பார்க்க கொள்ளை அழகாக இருந்தது. அக்காட்சிகளைச் சிறைப்பிடித்தேன். 


மிக்கேல் பட்டணத்து வீடுகளில் கோழிகள், ஆடுகள், மாடுகள் எல்லாம்  குடும்ப உறுப்பினர்கள் போலவே வலம் வந்து கொண்டிருக்கும்.

 




 'ரேசன்' அட்டையில் மட்டும் தான் பெயர் இருக்காது. மற்றபடி இந்த ஜீவராசிகள் மிக்கேல் பட்டணத்து மக்களின் ஜீவியம் காக்கும் ஆதர்ச ஜீவன்கள் என்றே சொல்லலாம். கோழிகளின் மீதான பிரியத்தை மிக்கேல் பட்டணம் தான் எனக்குள் விதைத்தது.


                Cut to

சென்னைப் பட்டணம்

கோடம்பாக்கத்தில் வசிக்கும் நான் இப்பகுதிகளில் வீடுகளை ஒட்டிச் சுற்றும்  கோழிகளைப் பெரும்பாலும் கண்டதில்லை. (பிராய்லர்) கறிக் கோழிக்கடைகளைத் தான் அதிகம் கண்டிருக்கிறேன். 
பல சமயங்களில் இரு சக்கரவாகனத்தில் சோடி சோடியாகக் கட்டப்பட்டு தலைகீழ் விகிதங்களாக தலை தரை தொங்கக் கத்தியபடி கொத்துக்கொத்தாக 'விதிவிட்டவழி' என்றபடி வழி பயணிக்கும் கலப்பின நாட்டுக்கோழிகளையும், கறிக்கோழிகளையும் அதிகம் கண்டிருக்கிறேன். நீங்களும் கண்டிருக்கலாம். ஆனால் விட்ட குறை தொட்டகுறையாக எங்களது  அடுக்கக்குடியிருப்புக்கு அருகில் ஒரு சண்டியர் சேவல்  இருக்கிறார்.  என் மகனுக்கும் சண்டியருக்கும் சதா சண்டையாகத்தான் இருக்கும்.

  காரணம் சண்டிப் பயலுக்கு உறக்கம், விழித்தல், பின் காலைக்கடன்கள் கழித்தல் எல்லாம் எங்களது இரு சக்கரவாகனத்தில் தான் நிகழும். இப்படிக்கும் அருகாமையில் விதவிதமாக இரு சக்கரவாகனங்கள் நின்றுகொண்டிருக்கும். ஆனாலும் படவா ராஸ்கல்! 
சண்டியருக்கு 
இருத்தல், கழித்தல் எல்லாம் எங்களது வாகனத்தில் தான். மகன் சமயங்களில் சண்டியரை விரட்டிக் கொண்டு ஓடுவான். ஆனால் சண்டியர் சிட்டாகப் பறந்து சுவரின் மீது ஏறி நின்று ஒரு பார்வை பார்த்து கொக்கறிப்பார். 'போடா பொடிப்பயலே' என்பது போல சிறகு தட்டுவார். உங்களுக்கு சண்டியரைக் காட்டவே அவரைப் புகைப்படம் எடுத்தேன். சற்றே தள்ளி நின்றபடி 'போஸ்' கொடுத்தார் சண்டியர். முகம் மட்டும் திருப்பிக் கொண்டார். (படவா ராஸ்கல்) 


ண்டியரைப் போலவே சில பல புறாக்களும்  'லிஸ்டில்' அடங்கும். ஏனோ! பறவைகள் எனக்கு எப்பொழுதும் நெருக்கமானவைகளாகவே இருக்கின்றன. பலமுறை சட்டையில், தலையில் அவைகளின்  பிரசாதங்களைப் 
 பெற்றிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு ரகம். சட்டை செய்யாமல் மனசுக்குள் சிரித்துக் கொள்வேன். இந்த உணர்வுக் கலவைகளை கலைரசிப்பாக எனக்குள் கடத்தியது மிக்கேல் பட்டணம் தான். அத்தனையும் ஒப்பனைகளற்ற உண்மை. 

            Cut to 

மிக்கேல் பட்டணம் 


நான் அறிந்தவரை
ஒப்பனைகளற்ற முகங்களாகத் தான் மிக்கேல் பட்டணத்து மக்கள் .இருந்தார்கள். இருப்பார்கள். முகங்கள் மட்டுமல்ல மனங்களும் அப்படித்தான். உங்கள் ஊர் மக்களும் அப்படி இருக்கலாம். அதுதான் நம் ஊர்மக்களின் பெருமை. அதனாலேயே திருவிழா பண்டிகை நாள்களில் 
நம் சொந்த ஊருக்கு சிறகடித்துப் பறக்கிறோம். 
அப்படிப் பறந்து வந்து பருந்தாகச் சுற்றாமல் அவசரகோலத்தில் சூழல் காரணமாக புள்ளிக்கோலம் மட்டும் இட்டுவிட்டு சென்னை திரும்பினேன். மீண்டும் செல்லவேண்டும். பருந்தாகச் சுற்ற வேண்டும். 

எனது அம்மாச்சியின் வீடு கண்டேன். 


மாறாத வீடு. மாறாத தெரு. பெரிய மாற்றத்துடன் நான் கண்டது தண்ணீர்க் குழாயடிதான்.


தண்ணீர் வந்து கொண்டிருந்தது.  
எனக்குள் சந்தோசத்தை ஊற்றியது.   எனது சிறு பிராயத்தில் அந்தக் குழாயடிக் குழாய்களைத் திறந்து காற்று வாங்கலாம். எப்பொழுதேனும் சிலசமயங்களில் தண்ணீர் வடியும். 'வரும். ஆனா வராது? அம்புடுதேன் சங்கதி'. இது தான் அன்று அக்குழாயடியின் விதியாக இருந்தது. 
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மிக்கேல் பட்டணம் சென்றபொழுது அங்கிருந்த குறைந்த பொழுதிலும் மனசுக்குள் 'மிக்கேல் பட்டணம்' குறித்த எனது மனச் சித்திரங்களைக் காலம் தன் அழகான தூரிகைகள் கொண்டு தூறலில் தொடங்கி மழையாகப் பொழிந்த அந்த நாளில்  என்மனசுக்குள் இருந்த பழஞ் சித்திரங்களுக்கு
புதிய வண்ணங்கள் சேர்த்தது. 
'மிக்கேல் பட்டணம்' மீதான என் எண்ணங்களைத் தொடர்ந்து வண்ணங்களோடு உங்களின் மனத் தாள்களில் தீட்டுவேன். தூரிகையுடன் அடுத்த பதிவில் நினைவுகளைப் பதியமிடுகிறேன். 

தொடர்ந்திருங்கள். தொடர்ந்திடுங்கள்.... 

Have your cup of tea... 

...   
மனப்பறவை மனம் கொத்தும்!
பழம் நினைவுகள் உண்ணும்! 
பறக்கும்...

 Irudhy. A


அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...