About Me

Thursday, July 29, 2021

தேநீர் அனுபவங்கள். பகுதி3

 Tea shops - like local News channels!

Hot News served with our cup of  tea...

Low rate. Experience are great!

                    - Conditions apply...



'TEA' Stories... 

  'கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்"- என்கிற பதம்  நாம் அறிந்தது.' தேநீர்க்கடை இல்லா தெருவே இருக்க வேண்டாம்'-ன்பது என் போன்ற தேநீர் விரும்பிகளின் விண்ணப்பம். ஆனால் பெரும்பாலும் வீதிக்கு ஒன்றாக ஒரு தேநீர்க் கடையேனும் இருக்கும். காரணம் அதிக முதலீடுகள் தேவை இல்லை. சிறுக ஆரம்பித்து பெருக்கிக் கொள்ளலாம். 
"Slow and steady wins the race" - என்பது போல செயலாற்றலாம். (முதலீடுகள் மட்டும் குறைவு. இரண்டு சக்கர வண்டியையோ, நான்கு சக்கர வண்டியையோ எளிதில் தேநீர்க் கடையாக மாற்றிவிடலாம். மற்றபடி உழைப்பு கடினமாகத்தான் இருக்கும்).

கொரோனா காலத்தில் ஆட்டோக்களும், தள்ளுவண்டிகளும் மளிகைக் கடைகளாக மாறிய விநோதங்களையும் நாம் கண்டிருப்போம். 
 கொரோனா அலையில் அலையோடு போக நாம் என்ன செத்த மீன்களா? உயிருள்ள மீன்களாக எதிர்நீச்சல் இடக் கற்றுக் கொண்டோம். எல்லாம் கடந்து போகும். கிமு & கிபி மாதிரி இனி வரும் காலம் கொரோனாவுக்கு முன் & கொரோனாவுக்குப் பின் என்று பகுக்கப்படுமோ என்னவோ? தெரியவில்லை. 
       தின வருமானத்தை நம்பியிருந்த பல்வேறு தொழில்கள் கொரோனா காலத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாயின. இவற்றுள் முடி திருத்தும் கடைகளும் தேநீர்க் கடைகளும் அடைக்கப்பட்டது பறவையை கூண்டுக்குள் அடைத்து வைப்பது மாதிரி கொடுமையாக இருந்தது.
              நான் இக்கால கட்டத்தில் முடி திருத்தக் கற்றுக் கொண்டேன்.'ஆலை இல்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை' என்கிற மாதிரி என் மகனுக்கு நானே முடிதிருத்துபவனானேன். எனக்கு நல்ல பயிற்சி. ஆனால் மகன் வாழ்வில் நான் முடி திருத்தியது ஒரு வரலாற்றுப் பிழை. ஒரு முறை மகனுக்கு முடி திருத்தும் போது அவன் காதில் சிறிதாக கோடு போட்டுவிட்டேன். அவன் என்னைப் பார்த்த பார்வையில் ஆடு களவாணி மாதிரி விழித்தேன். 'வீர விளையாட்டுல இதெல்லாம் ஜெகஜம்டா' - என்று சமாளித்தேன்.அவனுக்கு முடி திருத்தும் வைபவம் வீர விளையாட்டு போலத்தான் நடந்து முடியும். நல்ல வேளையாக முடிவெட்டிய சில நாட்களுக்கு என் மனைவி எந்தப்புகைப்படமும் என் மகனை வைத்து எடுக்கவில்லை!எடுத்திருந்தால்??? 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்கிற பழமொழி என்னைப் பழம் பிழிந்திருக்கும். தப்பித்தேன். 
முடிதிருத்தலை மையமிட்டு நிறைய 'மீம்சுகள்' கொரோனா காலத்தில் உலா வந்தன. அனைத்தும் சிறந்த நகைச்சுவைத் தோரணங்கள்... உங்களில் யாரேனும் நகைச்சுவைத் தோரணங்கள் கட்டியிருக்கலாம். கட்டியவர்களுக்கு' Special tea parcel'. 
ஒரு கோப்பைத் 'தேநீர்' ...
விஞ்சும் நகைச்சுவை! 


       தேநீர்க் கடைகளுக்கு சென்று வருவது எனக்கு இன்பச்சுற்றுலா சென்று வந்த உணர்வை எப்பொழுதும் கொடுக்கும். பத்து ரூபாய்க்கு ஒரு தேநீர் குடித்துவிட்டு 'Add an pack' - போல சூடான செய்திகள், கிசுகிசுக்கள், நையாண்டி நகைச்சுவைகளை அனுபவித்துவிட்டு வரலாம். 'இன்று புதிதாய் பிறந்தேன்' - என்ற மீசைக்கவி பாரதியின் வரிகள் எனக்கு தேநீர் கடைக்கு சென்று திரும்பும் பொழுதெல்லாம்  மனதில் 'Rewind' ஆகும். இதற்கு சிறந்த உதாரணங்களாக நம் திரைப்படங்களில் இடம்பெற்ற தேநீர்க் கடைகளின் நகைச்சுவைக் காட்சிகளைச் சொல்லலாம். 
         காலம் எடுத்துக்கொண்ட சின்னக் கலைவாணர் விவேக் அவர்களுக்கும் , வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கும் தேநீர்க் கடைகள் காமெடிகளை அள்ளித் தந்த வானமாகவே இருந்தன. 
 'ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற?' - என்ற சின்னக் கலைவாணரின் நகைச்சுவையும், வைகைப் புயல் வடிவேலு அவர்களின் எண்ணற்ற தேநீர்க் காமெடிகளும் தொடர்ந்து ஏதேனும் இடங்களில் ஏதேனும் ஒரு சூழலில் புகுந்து பாய்ந்து வேர்களின் தாகம் தீர்க்கும் நதி போல நம்மை சந்தோசப்படுத்தி ஓடிக்கொண்டே இருக்கிறது. 

தேநீர் ஒரு வற்றாத ஜீவ நதி... 


              பெரும்பாலும் தேநீர் தரும்  'மாஸ்டர்களின்' உடல்மொழி ரசிக்கத்தக்கதாகவே இருக்கும். காரணம் அவர்களின் நடை, உடை பாவனைகள் அப்படி! 'மாஸ்டர்கள்' தேநீர் தயாரிப்பது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். வரிசை கட்டி நிற்கும் கண்ணாடி'டம்ளர்களில்' சிந்தாமல் சிதறாமல் பால் ஊற்றுவதும், 'டிக்காஷன்' இடுவதும், சர்க்கரையை சரியான அளவில் நிரந்திடுவதும், 'டம்ளரை  ' உயரத் தூக்கி சூடு ஆற்றுவதும் பார்ப்பதற்கு பொம்மலாட்ட மேடை நாடகம் பார்ப்பது போன்று இருக்கும். இதில் சிறப்பு என்ன தெரியுமா? வரிசை கட்டி நிற்கும்        'டம்ளர்கள்' ஒவ்வொன்றும் ஒரு ரகமாக இருக்கும். சர்க்கரை தூக்கலாக, சர்க்கரை கம்மியாக, சர்க்கரையே இல்லாமல், சூடாக, சூடு இல்லாமல் என்று ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் தயாராகும். தலை சுற்றும். 


கடைக்கு வருபவர்கள் கல்லாவில் இருப்பவரிடம் கல்லாக் கட்டாமல் மாஸ்டரிடம் கலாய்த்து கல்லாக்கட்டுவார்கள். 'மாஸ்டர்கள்' எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள். புன்முறுவலோடு தான் இருப்பார்கள்.  சில தேநீர்க் கடைகளில் 'மாஸ்டர்கள்' உள்ளுர் 'மார்க்கெட்டிங் அம்பாஸிடர்களாக' செயல்படுவார்கள். ஆனால் இவ்விஷ(ய)ம் அவர்களுக்குத் தெரியாது. ' மாஸ்டர் இந்தாங்க'round neck T-shirts' போட்டுக்கங்க. கூலா இருக்கும். வெக்க தெரியாது'என்று அவர்கள்' 'brand' அச்சிட்ட 'T-Shirts' - ஐ கொடுத்துவிடுவார்கள்.ஆனால் அவைகள் 'T-shirts' அல்ல. கை வைக்காத பனியன்கள். நாள் முழுவதும் நின்றபடி 'T-shirts' அணிந்து 'டீ'  ஆற்றுவார்கள் நம்  'மாஸ்டர்கள்'. 

கொரோனா  காலத்திற்கு முன்... 

இடம்- சென்னை 
நேரம்- அந்திமாலை... 
களம்-  தேநீர்க்கடை

    இரை முடிந்து கூடடையும் பறவைகள் போல வேலை முடிந்து பெரும்பாலானோர் வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம்.... 
சாலைகள் வாகனப்போக்குவரத்தால் சிக்கித் திணறிக்கொண்டிருந்தன. வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும்
போது எழுப்பும் ஒலியை விட 'சிக்னலில்' நின்று கொண்டு இருக்கும்போது தான் அதிக ஒலிகள் எழுப்புகின்றன. இங்கு யாருக்கும் நிற்க நேரமில்லை. உண்மையா? பொய்யா? என்று சென்னையில் இருப்பவர்கள் தான் சொல்ல வேண்டும். 
       நான் அங்கிருந்து விடுபட்டு தாய்க்கோழியின் இறக்கைகளுக்குள் புகுந்து கொண்ட கோழிக்குஞ்சு போல ஒரு தேநீர்க் கடைக்குள் புகுந்தேன். 
'மாஸ்டர் ஒரு தரைப்பலகையில் நின்றபடி தேநீர் ஆற்றிக் கொண்டிருந்தார். ஆவி படர்ந்த பால் சட்டி முன்  நின்றபடி' மாஸ்டர்' தேநீர் ஆற்றியது பார்ப்பதற்கு நீராவி எஞ்சினை  இயக்குவது போலத் தெரிந்தது. சூடான தேநீர் என் கைக்கு வந்தது. அப்பொழுது தள்ளுவண்டியை நிறுத்திவிட்டு நிற்காமல் கைப்பேசியில் பேசியபடி ஒருவர் கடைக்குள் வந்தார். பார்ப்பதற்கு நடிகர் 'அல்வா வாசு' மாதிரியே இருந்தார்.கைப்பேசியை கையால் பொத்தியபடி 'மாஸ்டர் நீங்க சாப்டுற மாதிரி ஒரு டீ சுருக்குனு போடுங்க' - என்று சொல்லி விட்டு மீண்டும் கைப்பேசியைக் காதுகளுக்குக் கொடுத்த சில நொடிகளில் அவர் கைக்கு தேநீர் வர வந்தவர் 'மாஸ்டர் டீய டிராயர்ல ஏற்கனவே போட்டு வச்சிருந்தியா!' என்றபடி ஒரு மிடறு உறிஞ்சி விட்டு தரையில் இருந்த காலி தண்ணீர்' கேன்களைப்' பார்த்தபடி' மாஸ்டர் தண்ணிக் கேனெல்லாம் நல்லாப் போகுது போல! வீடுகளுக்குத் தான தண்ணிக்கேன போட்றீங்க?' - என்று கலாய்க்க 'மாஸ்டர்' நிதானமாக புன்முறுத்தபடி'கைப்புள்ள... தண்ணிக்கேனு என்ன வெல தெரியும்ல. மொதல்ல பழைய பாக்கிய கல்லாவுல கட்டு' என்றபடி கண்ணாடி 'டம்ளர்களைக்'கழுவிக் கவிழ்த்தார். கவிழ்த்து வைத்த கண்ணாடிக் குவளைகளிலிருந்து தண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. அப்படியே என் பரபரப்பும் மனதை விட்டு வடிந்து ஓடியது. 
           பொதுவாக கலையைக் கற்றுக் தருபவர்களை 'மாஸ்டர்' என்று அழைப்போம். ஆனால் தேநீர் ஆற்றுபவர் எப்படி' மாஸ்டர்' ஆனார்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இந்தக் கேள்வியே இப்பதிவின் திறவுகோலாகவும் அமைந்தது. திறவுகோல்கள் கேள்விகளிடம் உள்ளன. கேட்டுப் பெறலாம். திறக்கலாம். மனம் எனும் பறவை பின்னோக்கிப் பறக்கலாம். பறக்கலாமே... 

மனப் பறவை மனம் கொத்தும்! 
பழம் நினைவுகள் உண்ணும்...
சிறகு விரிக்கும். பறக்கும்...


Irudhy.a 
                                  



Saturday, July 24, 2021

தேநீர் அனுபவங்கள். பகுதி2

 Tea filter depressions.

Tea express wonderful things...

'Tea break'- starter of newthings... 

Have your cup of tea...


                        Tea stories
                        - ' Memories' ... 

              உலகம் முழுக்க அதிகம் பேர் பருகும் பானம் தேநீர் என்கிறது ஆய்வுகள். அதிகம் பேரில் நானும் ஒருவன் என்பதில் ஒரு பெருமிதம் எப்பொழுதும் உண்டு. நீங்கள் எப்படி என்று தெரியாது. ஆனால் பலர் என் கட்சியாக இருக்கலாம். 
அதனாலேயே தைரியமாக தேநீரை ஆற்றாமல் சூடாக உங்கள் குவளைகளில் ஊற்றுகிறேன்.  சூட்டோடு பருகுகிற தேநீர் அனைத்தையும் ஆற்றிவிடுகிறது.

              "Tea solves everything" ... 

    வளர்ந்த ஒரு மரத்தை வேர்களோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவது போன்றது பெண்ணை மணம் முடித்து அனுப்புவது. மறுவீடு சென்றாலும் பெண்களின் வேர்கள் எப்பொழுதும் தன் தாய் வீட்டில் பதியமிட்டபடியே இருக்கும். அது அவர்களின் உரிமை. அவர்களின் உலகம். அவர்களின் சுதந்திரம். அதனாலேயே பெண்களுக்கு தாய்வீடு திரும்புகிற தருணங்கள் எல்லாம் தங்கமாகி விடுகிறது. முகத்தில் அப்படி ஒரு ஜொலிப்பு அப்பிக்கிடக்கும். முதல் சாட்சி நான். என் மனைவியிடம் கண்டிருக்கிறேன். நண்பர்களே! நீங்களும் யோசித்து ஆம் என்பீர்கள். சரி நம் பெண்கள் அப்படித்தான். 

 கவலை வேண்டாம்.

 "எம் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா!" - என்று நம்மையே 'உற்சாகப்படுத்திக் கொள்ளலாம்.' 'பொண்டாட்டி' பற்றி ஒரு 'மீம்ஸை'ப் படித்தேன். "ஒண்ணு பொண்டாட்டி வரமா  இருக்கணும். இல்லைனா ஊருக்குப் போன பொண்டாட்டி வராம இருக்கணும்" -  அதிகம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். காலந்தோறும் இம்மாதிரியான காமெடிகள் 'பொண்டாட்டி' பற்றிய மன உணர்வுகளை  கொடிப் பிடித்தபடி கடக்கின்றன. பேச்சு எங்கோ போகிறது. சரி விஷயத்துக்கு வருகிறேன்.           தாய்வீடு திரும்பும் பெண்ணின் மனநிலை எப்படி இருக்குமோ அப்படி தேநீர் குறித்த தருணங்களுக்கு  திரும்பும்  பொழுதெல்லாம் என் மனம் மகிழும். அந்த மகிழ்வை உங்களுக்கும் கடத்த வேண்டுமென்பதே என் விருப்பம்.

       'வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும். டீ சாப்ட்டு வர்றவங்க சாப்ட்டு வாங்க' என்கிற பேருந்து நடத்துனரின் குரலில் நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கும். தேநீர் இடைவேளைக்கு அவ்வளவு அர்த்தங்கள் உண்டு.  ஒவ்வொரு தேநீர் சந்திப்புகளிலும் நிறைய விஷயங்கள் விளங்கிக்கொண்டே இருக்கும். 

 Morning cock + morning clock=Tea
Cit(y) tea story... 

        (குட்'டீ' story) 

    அதிகாலை சேவல் கூவும் முன்பே தேநீர்க் கடைகள் விழித்துக்கொள்ளும். தெருவில் தேநீர்க் கடையின் விளக்கொளி சன்னமாகப் படர்ந்திருக்கும். பக்திப்பரவசமாக மெல்லிசை காற்றில் கசிந்து வரும். சூரியன் மெல்ல தன் சோம்பல் முறிக்கும் வேளையில் மூத்த குடிப் பெருமக்கள் வீட்டுச் சிறுசுகளை தொந்தரவு செய்யாமல் நைசாக வெளியே கிளம்பி சங்கமிக்கும் இடம் பெரும்பாலும் தேநீர் கடையாகத் தான் இருக்கும். நீங்களும் பார்த்திருக்கலாம். அப்படி நான் கண்ட ஒரு அதிகாலைக் காட்சிகள்  ஒர் உன்னத ஓவியம் போல, கூழாங்கற்களுக்குள் உறைந்து கிடக்கும் குளிர்ச்சியைப் போல என் மனசுக்குள் உறைந்து கிடக்கிறது. 

சில வருடங்களுக்கு முன்பு...
 
இடம் - திருப்பூர்
நேரம் - சேவல் கூவும் முன் எழுந்த அதிகாலைப் பொழுது...
களம்-தேநீர் விடுதி... 

                திருப்பூரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியின் 'மகளிர் திருவிழா* நிகழ்ச்சித் தயாரிப்பிற்காக என் நண்பரின் நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்துடன் சென்றிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த விடுதியின் எதிரில் அழகாக ஒரு தேநீர்க் கடை. சற்று வித்தியாசமாக இருந்தது. தண்ணீருக்குள் இருக்கும் மீன் எப்படி மகிழுமோ அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு. அன்று விடியற்காலை 4.30மணிக்கு எழுந்து மாடியில் இருந்து பார்த்தபோது தேநீர்க் கடை திறந்திருந்தது. வேகவேகமாக விடுதியை விட்டு வெளியே வந்து தேநீர்க் கடையில் அமர்ந்தேன். அப்பொழுது எனக்கு எதிர் பெஞ்சில் நான்கு மூத்த குடிப் பெருமக்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குள் அப்படி ஒரு சம்பாஷனைகள். முகத்தில் சந்தோச ரேகைகள் படர்ந்து விரிவதைக் கண்டேன். வாடா, போடா என்று 'டா' போட்டுத்தான் பேசிக்கொண்டார்கள். (வருத்தப்படாத முதியோர் சங்கம் போல...) அவர்களின் ஒவ்வொரு நாள் விடியலும் அப்படித்தான் அழகாகத் தொடங்கும் போலத் தெரிந்தது. அவர்களை இணைத்தது அதிகாலை இஞ்சித் தேநீர் என்பதை அறிந்தேன். 
     தேநீர் ஆற்றுபவர் பகுதி சற்று வித்தியாசமாக இருந்தது. தேநீர் தருபவர் என் ஊர் பணியாரக்கடை பாட்டி போல தரைப்பலகையில் அமர்ந்தபடி ஒரு நீளமான கம்பியில் மாட்டிய குவளையை லாவகமாக தேநீர்குண்டானுக்குள்  விட்டு தேநீரை முகந்து சில்வர் குவளைகளில் பரிமாறியது ஒரு அழகியலாகவே எனக்குத் தெரிந்தது. அன்று வருத்தப்படாத முதியோர் சங்கத்தினரை ரசித்தபடி சாப்பிட்ட இஞ்சித் தேநீரும் அக்காட்சிகளும் இன்றும்  வெம்மை குறையாத தேநீராக என் மனக்குடுவைக்குள் இருக்கிறது. உங்கள் மனக்குடுவைக்குள்ளும் இப்படி ஒரு தேநீர் நிகழ்வு காட்சியாக விரியலாம். மனம் எனும் பறவை பின்னோக்கிப் பறக்கலாம்.

      மனம்  பறவையாகும். பழம் நினைவுகள் உண்ணும்... 
பறக்கும்...

 Irudhy. a




                 







Wednesday, July 21, 2021

தேநீர் அனுபவங்கள்...

Fly 


Tea had a story... 

Lot of  story begins with Tea.  Tea makes better everything. Just think with tea...

Before think... Before ink... Just  Do after drink tea..





            தீர்ந்து போகாத பேச்சுக்கள் போல தேநீர்க் கதைகளும் தீர்ந்து போவதே இல்லை. தேநீர் பிறந்த கதை அறிந்திருப்பீர்கள். "சீன மன்னர் ஒருவர்"-/ நிற்கவும். "ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு" என்று நிறுத்தினால் மீதமுள்ள கதையை அவரவர் கற்பனைக்கு ஏற்ப எழுதிக்கொள்ளலாம். ஆனால் தேநீர் பிறந்த கதை ஒரு வானம் போல ஒரே மாதிரியாக  காணக் கிடைக்கிறது.

"சீன மன்னர் ஒருவர்" என்று நிறுத்தியிருந்தேன். இக் கதையை நான் சொல்வதை விட நீங்கள் 'நாட்டாமை கூகுள்' அவர்களைத் தொடர்பு கொண்டால் பல தகவல்களை நொடிகளில் தருவார். படித்துக்கொள்ளுங்கள். துப்பறியும் கதை போன்று சுவாரஸ்யமாக நீளும். நம் கதைக்கு வருவோம். என் கதை என்று சொல்லாமல் நம் கதை எனச் சொல்வதற்கு காரணங்கள் உண்டு. என் கதைகள் போலவே உங்களுக்குள்ளும் தேநீர்க் கதைகள் நிறைய இருக்கலாம். 

பொதுவாக யார் நம் வீட்டிற்கு வந்தாலும் தேநீர் குடிக்க கொடுப்போம். இது மதுரை மண்ணின்  கலாச்சாரம்.

         ' உட்காருங்கண்ணே. ஒரு வா 'டீ' குடிச்சிட்டு பேசுங்க' என்றதும் வந்தவர்,' தங்கச்சி இப்ப தான்' டீ' குடிச்சிட்டு வர்றேன். இப்பக்குள்ள 5 டீ குடிச்சிட்டேன்.  (டீ வேண்டாம்னு சொல்லிருப்பாரோ? '- னு நினைச்சா நீங்க கொஞ்சமா டீ குடிக்கிற ஆளு.) 

காமெடியே இனிதான்... 

' தங்கச்சி அரைக்கிளாசா கொண்டாமா. வேணாம்னா கோச்சுக்குவ. '- என்றதும் மதுரைக்கார த(எ)ங்கச்சி முழுக் கிளாசு தான் குடுப்பார். வந்தவர் சலித்துக்கொண்டு 'சொன்னாக் கேக்க மாட்ட நீ. போயி ஒரு டம்ளர எடுத்தாம்மா' என்று கறாராகச் சொல்லி வந்த டம்ளரில் ஒரே ஒரு மிடறு தேநீரைக் கவிழ்த்து அடுத்த மிடறு இறங்கும் முன் லாவகமாக எடுத்து உறிஞ்ச ஆரம்பிப்பார்.ஏற்கனவே கழுத்து வரைக்கும் இருக்கும் தேநீர். மனசு முழுக்க தேநீர் வியாபித்து இருந்தால் எப்படித் தேநீரை விட முடியும்.இது பொதுவான 'universal tea story'. இன்றும் எங்கேனும் வீடுகளில் இக்கதை நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். கதையல்ல. நிஜம்...(குறிப்பாக மதுரையும் மதுரை சார்ந்த ஊர்களிலும்)


எனக்குள் இருக்கும் தேநீர்க் கதைகள் இன்றும் மனம் எனும் தேநீர்க் குடுவைக்குள் சூடு குறையாமல் இருக்கிறது. முதல் தேநீர் அனுபவம்  எனது மூன்றாம் வகுப்பு நண்பன் வீட்டில் நடந்தது.

இடம்-மதுரை.
(எம். கே. புரம். மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நேரம்.
  • நண்பன் பெயர் இன்றும் ஞாபகம் இருக்கிறது. மறக்கமுடியாத பெயர். பரமசிவம். இப்பொழுது எங்கிருக்கிறான். எப்படி இருப்பான்? எதுவும் தெரியாது. ஆனால் அன்று அவன் வீட்டில் நான் சாப்பிட்ட(குடித்த) தேநீரின் சுவை இன்றும் என் நாவில் உள்ளங்கை ரேகை போல ஒட்டிக்கிடக்கிறது. 

  • பரமசிவம் வீடு
பரமசிவனின் தாயார் வாட்டசாட்டமாக இருந்தார். காதுகளில் தொங்கட்டான் அணிந்திருந்தார். கிராமத்து அப்பத்தாக்கள் சேலை கட்டுவதைப் போல கட்டியிருந்தார். என்னைக் கண்டவுடன் 'டீச்சர் மவனாப்பா? பரமு சொல்லிருக்கு. செத்த உக்காருயோவ்.' என்ற சிறிது நேரத்தில் பித்தளைக் குண்டாஞ்சட்டி நிறைய டீ எடுத்து வந்தார். கூடவே நான்கு குவளைகள். பரமசிவனுக்கும் எனக்கும் குடிக்க குடிக்க தேநீர் ஊற்றிக் கொண்டே இருந்தார். குடித்து முடித்ததும் தயாராக அடுத்த ரெண்டு குவளைகளும் நிரம்பி இருக்கும். பரமுக்கு டீ ரொம்ப உசுரு. வீட்டு மாட்டுப் பாலு தான். நல்லா குடிப்பா. பரமுவ அம்மாகிட்ட சொல்லி நல்லா படிக்க வைச்சிருங்க. இன்னும் ஊத்தவா?' என்றதும் நான் நாளைக்கு வர்றேன்'என்றபடி புறப்பட்டேன். இன்றும் தேநீர்  குறித்த கதைகள் யோசித்தால் மனம் பரமசிவத்தின் வீட்டு வாசலுக்குத் திரும்பும். உங்கள் மனதில் ஏதேனும் தேநீர்க் கதைகள் இப்பொழுது நிழலாக உங்கள் முன் விழுந்தால் நிழலில் நின்று கொண்டு சூடாக தேநீர் அருந்துங்கள். 


மனம் பறவையாகும். பழம் நினைவுகள் உண்ணும்
பறக்கும்... 







                                         Irudhy. A

Saturday, July 17, 2021

தேநீர் தருணங்கள்...

Fly... 
 

கொஞ்சும் காதல்... 
விஞ்சும் தேநீர்


Un conditional love will live... 

தேநீர் தருணங்கள்... 

கணக்குகள் ஏதும் இல்லை. 
வழக்குகள் உண்டு...
'ஒரு நாளைக்கு நிறைய
'டீ'குடிக்கிறீங்க.' 
ஒரு கணக்கு வழக்கு வேண்டாமா? இனி 'டீ' கிடையாது. 
நிறைய 'டீ' சாப்பிட்டா* 
குறிப்பு. ('டீ'  குடிச்சா என்று தான்சொல்லவேண்டும். நிறைய குடிப்பதால் 'டீீ' பலருக்கு சாப்பாடு
ஆகிவிடுகிறது.கூட்டத்தில் நானும் ஒருவன்) சரி விஷயத்துக்கு வருவோம். நிறைய 'டீ' சாப்பிட்டா பித்தம். 
தலை முடி நரைக்கும். (பரவாயில்ல. நரைச்சா மருதாணி இலைய அரைச்சு தலைக்கு போட்டு 'டீ'கலர்ல முடிய maintain பண்ணிக்குவேன். நரை நல்லது.) 
இது என் தரப்பு வாதம். 

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" 
            - பெரும்பாலான தேநீர் விரும்பிகளின் குடும்பத்தில் இப்படி ஒரு சம்பாஷனைகள் நிகழலாம். இருப்பினும் இந்த நிமிடம் வரை 'டீ' தோற்றதில்லை. 

          " பொண்டாட் 'டீ'... 
   கொண்டா 'டீ'. 
                          - இது எப்படி இருக்கு?


பெரும்பாலான சந்திப்புகள் தேநீரில் தான் துவங்குகிறது. மீண்டும் தீண்டும் தேநீரோடு  தான் வந்திருக்கிறேன். 

கொஞ்சும் காதலோடு 
விஞ்சும் தேநீரோடு!

Te(A) en Agers only


ஒரு குவளைத் தேநீர்.
இரு அமர்வுகள்!
உறுமீனுக்காகக் காத்திருக்கும் 
கொக்குப் போல 
ஒற்றைக் குவளையில் 
காத்திருக்கும் தேநீர்... 
ஆறி ஆடை படியும் முன்
மிச்சமின்றி அருந்திவிடு.

காத்தல்...  
காதலிலும்
ஆடை படிதல்...
ஆறவிடுதல்
காமம், தேநீர் இரண்டிலும் அழகல்ல. 
காதல்
காமம்
  தேநீர்... 
மூன்று புள்ளிகளும் உயிர் தன் மெய்யில் ஒன்றாகும் 
ஆயுத எழுத்து! 
- Conditions apply 

இல்லாளிடம் ஒரு விண்ணப்பம் 

அகத்துத் தேநீர்


" ஒரு புத்தகம். 
ஒரு குவளைத் தேநீர்? 
புத்தகம் முடியும் வரை 
தேநீர் வருமா! 
தேநீர் முடியும் முன்
புத்தகம் முடியுமா? 
பக்கங்களைப் புரட்டுகிறேன்
பக்கம் வரும்போதெல்லாம் 
சிக்கனமின்றி இக்கணம்முதல்
'பக்கெட்' தேநீரோடு 
பக்கம் வா. 
வெட்கம் இல்லை எனக்கு
நான் தேநீர்க் காதலன். 
நிறுத்தா தேநீராக நான்! 
எனைத் திருத்தும் ஆசிரியையாக நீ... "

கணக்கு எனக்கு பிணக்கு


காரணங்கள் 
தேவையில்லை. 
கரம் பிடிக்க உன்னை! 
கரம்பிடித்ததில்
கணக்கு வழக்குகள் இல்லை. 

உன் கைவளை
 என் விரல்கள் கோர்க்க
இல்லை எல்லை. 
உன்னில் தொடங்கி 
உன்னில் மடிந்து 
மீண்டும் தொடர்ந்து 
நகரும் நாழிகையில்
நாள்பொழுது பார்க்காமல்
நாளெல்லாம் தொடர்வேன்... 

தேநீர்  உனைச் சுற்றும் 
தேனீயாவேன்! 
காரணங்கள் தேவையில்லை 
கரம்பிடிப்பேன் உன்னை.

இசையும் தேநீரும்
இசையும் பொழுதும்


இசையுடன் தேநீர் 
இணையும் பொழுதெல்லாம்...
புதுமணத் தம்பதிகளின் 
தேன் நிலவுப் பொழுதுகளாகும். 

தேநீரும் இசையும் புதுமணத் தம்பதிகள்! 

தொடர்ந்த இரவு... 
விடிகிறபொழுது...

எனை எழுப்பும் 
அதிகாலைச்
 சேவலாக நீ! 


என் கைவிரலில் 
கை சேரும்
மோதிரமோ நீ! 


தேநீர் 
தொட்டுத்தொடரும் வானமாகும்
உலகில் அதிகம் பருகும்
பானமாகும்.

ஒவ்வொரு நொடிகளையும் ரசிக்கிறேன். ஒவ்வொரு துளித் தேநீராக... 

கால நேரம் தேவையில்லை.
கணக்கு வழக்குகள் ஏதுமில்லை. 

Have your cup of tea 

Enjoy your little things... 

மனப்பறவை பறக்கும் 
மனம் கொத்தும்! 
பறக்கும்... 


                                    Irudhy.a 











 





















Wednesday, July 14, 2021

தேநீர் பொழுதுகள்...

Fly.... 


 

                Have your cup of tea... 

         'தடுக்கி  விழுந்த இடமெல்லாம் பள்ளம்' - என்கிற பதம் அறிந்திருப்பீர்கள். கால்கள் தளர்ந்து நிற்கும் இடத்திலெல்லாம் எங்கேனும் ஓரு மூலையில் தேநீர் விடுதி ஒன்று திறந்திருக்கும். 

'கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்' அறிந்த வார்த்தைகள் இவை. தேநீர்க்கடை இல்லா தெருவே இருக்க வேண்டாம். இது தேநீர் விரும்பிகளின் விண்ணப்பம்... 

மயில் மகிழ் மழையும்... 

மனம் நெகிழ் தேநீரும்! 


"மழை கண்ட மயில் அகவும்... 
தேநீர் உண்ட மனம் புலரும்!
மழை கண்டு
 மயில் தோகை விரிக்கும்!... 
தேநீர் உண்டு 
மனம் சொல் விரிக்கும்!... 
மயிலாகும் மனம்... 
மழை கண்ட தினம்!

கண் ரசிக்கும் மழையும்... 
மழையுடன்
கைசேரும் தேநீரும்-இருப்பின்
இருக்குமிடமெல்லாம் 
சுற்றுலாத் தலமே! 

 

"தேநீர் குவளையே! 
உன் கைவளை
 என் கைவிரல்கள் கோர்க்கும்
ஒவ்வொரு பொழுதும்
எனக்கு மயில் மகிழ் மழைப் பொழுதுகளே!... "

ஒன்றுபட்டு உண்ணும் வாழ்வு. பகிர்தலிலும் உண்டு. பருகுதலிலும் உண்டு. 
பருகவோ, உண்ணவோ? தேநீர் உண்டு. 


லகம் முழுக்க அதிகம் பேர் பருகும் பானம் தேநீர் என்கிறது தேநீர் குறித்த ஆய்வுகள். தேநீர் தேசங்களெங்கும் மேகக் கூட்டங்களாக பரந்து பறக்கிறது. தரை இறங்கும் மேகங்கள் மழையாகும். தேசங்களெங்கும் அதிகம் பருகும் பானம் தேநீராவதால் தேநீர் நில்லாது கடக்கும் நதியாகும். 
வேர்களின் தாகம் தீர்க்கும் நதி போல தேநீரும் பலரது தாகம் தீர்க்கும் வற்றாத வாழ்நிதி. காரணம் தேநீர் பலருக்கு வாழ்வாதாரம். 

வேறுபட்ட  தேசங்களிடையே காணும் ஒரே ஒற்றுமை. அதிகம் பருகும் பானம் தேநீர் என்பதே! 
 வேற்றுமையில் ஒற்றுமை. 

சொல்லுதல் உண்மை
        கவிதைகள் காகிதங்களில் அல்ல. வாழும் கணங்களில் உறைகிறது... 
நான் பகிர்வதும் தேநீர் கணங்களே. 
மற்றபடி எனக்கு கவிதைகள் எல்லாம் எழுதத் தெரியாது. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. சொல்லுவது உண்மை. 
  
என்னிடம் அநேகக் கணங்களில் அநேகர் கேட்கும் கேள்வி... 

        ஒரு நாளைக்கு எத்தனை 'கப்' தேநீர் குடிப்பீர்கள்? 

     மன்னிக்கவும். கேள்வியில் பிழை என்பேன். 

சொற் குற்றமா? பொருள் குற்றமா? என்பது போல பார்ப்பார்கள். சிரித்தபடி பதில் தருவேன். நான் தேநீர் குடிப்பவனல்ல. 

பின்னே! கேள்விப்பட்டது பொய்யா? பார்வையில்  கேள்வி முளைக்கும். 
பொய்யில்லை. உண்மை. உங்கள் கேள்வியில் சிறு பிழை திருத்தம் மட்டும் செய்கிறேன் என்பேன். 
நான் தேநீர் குடிப்பதில்லை. தேநீரை உண்பேன். 
           - என்பேன். 

சரி எத்தனை தேநீர் உண்பீர்கள்? 

      இமை துடித்தல் கணக்கு உண்டா? 
      கடற்கரை மணல் கணக்கு உண்டா? 
 வான் நட்சத்திரம் எண்ணும்
எண்ணம் உண்டா? 
       எனக்கு இல்லை. அப்புறம் ஒரு ரகசியம் உடைக்கிறேன். 

இக்கணம் வரை... 
கணக்கு எனக்குப் பிணக்கு. 

ஒரு நாளைக்கு எத்தனை தேநீர்?... 

       முடிக்கும் முன் பதில் தருவேன். எத்தனை வேண்டுமானாலும்.... 
                  உண்பேன். 

"'டீ சாப்பிடறீங்களா? 
டீ சாப்ட்டு பேசுவோமா? 
டீ கடை எங்க இருக்கு? 
டீ' Break' விடுவாங்களா? 
வண்டிய பத்து நிமிஷம் எப்ப நிறுத்துவீங்க? (பயணங்களில்)" 
           - இப்படி கேள்விகள் ஆயிரம் உண்டு.

 உண்டு மகிழ தேநீர் இருந்தால் கேள்விகள் எதற்கு? பதில் இருக்கு.


'தேநீர் உண்ட மனம் 
தேனீயாகும் தினம்!... 

தேசமெங்கும் சுற்ற வேண்டும்... 
தேநீரின் சுவை அறிய! 

தேநீர் சிலருக்கு பழக்கம்...
பலருக்கு வழக்கம். 
எனக்கு...
தேநீரோடு தான் புழக்கம்!' 

தேநீருக்கு ஏது இடைவேளை! 
தொடர்வேன் அடுத்த வேளை... 

இது எங்கள் தேநீர் தேசம். 

மனப்பறவை தன் அலகில் தேயிலை சுமந்தபடி சிறகு விரிக்கும். பறக்கும்... 

மனம் பறவையாகும்... 
மனம் கொத்தும்!
பறக்கும்...





 



                                   Irudhy.a      






 



























Monday, July 12, 2021

நீள் வானம்... இரு சிறகு... மனப்பறவை அறிமுகம்...

 


வெற்றியோ, தோல்வியோ எது வேண்டுமானாலும் கிடைக்கட்டும். வீரனுக்கு இரண்டும் ஒன்றுதான். முதலில் அவன் விரும்புவது போரிட ஒரு போர்க்களம். காற்றோடு வாள் சுற்ற வீரன் விரும்புவதில்லை. எதுவாயினும் எல்லோருக்கும் தேவை ஒரு களம்.
 


'Fly' என் எண்ணங்களுக்கான களம். எழுதுவது எனக்கு தேநீீர் பருகுவது போல பிடித்தமான ஒன்று. 'என்ன எழுதுவது?' என்ற எந்த திட்டமிடலும் எனக்கு இல்லை. இலக்கின்றிப் பறக்கும் ஒரு பறவையைப் போல என் எழுத்துக்களும் இலக்கின்றி தன் சிறகு விரிக்கும். என் பதிவுகளைக் கண்ணுறும் அனைவரும் என்னைவிட புத்திசாலிகள் என்பதை நான் அறிவேன். உங்களின் சாளரம் வழியே பறந்து செல்லும் சிறு பறவை நான். உங்களைக் கடக்கும் பறவையை எப்படி ரசிப்பீர்களோ! அப்படியே என் கிறுக்கல்களையும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரசிக்கவில்லையெனில் கழுவிக்கழுவி ஊற்றுங்கள். கழுவுகிற பாத்திரம் தானே தூய்மை பெறும். நானும் தூய்மையாவேன். உறைபனியிலும் வெண்மையாவது சிறந்ததே... பறத்தலில் நான் கண்டது. கேட்டது. அறிந்தது. பிடித்தது. படித்தது இவை அனைத்தும் இடம் பெறும்.  எனக்கு தேநீர் மிகவும் பிடிக்கும். இதில் என்ன சுயநலம். மன்னிக்கவும். தேநீர் அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் சூடான தேநீரோடு பயணத்தை துவங்குகிறேன். 


'என் கைவிரல்களோடு 
உன் கை வளை... 
 இணைந்து கொண்டால்
 பசி ஏது! தூக்கம் ஏது!' ... 


நிறைய தேநீர்... கொஞ்சம் கிறுக்கல்கள்... 




மனம் சிறகு விரிக்கும்....
பறக்கும்... 
மனம் கொத்தும் பறவையாகும்!... 
                                Irudhy. a

Friday, July 9, 2021

தேநீர் தொடக்கம்...


Tea is my Wonder... 


தேநீர்க் குவளைையை
சுற்றிச் சுழலும் எனது நொடிகள்
 24*7

 

முரண்


துதிக்கை மடக்கி அமர்ந்திருக்கிறது... 
         ஒற்றைத் தேநீர்க் குவளை! 
யானைப் பசிக்கு... 
சோளப்பொறி? 

பெருமழை நீ... 

தனித்திருத்தலில்
மழையின் சாரலாக அல்ல. 
மேகவெடிப்பின்... 
பெருந்தூறலாய்த் தொடங்கி
பெருமழையாய்! 
என் நா நனைப்பாய்...
என் விழிதிறக்கையில் 
என் எதிரில் விழித்திருப்பாய்! 
தேநீர்க் கோப்பையில் 
என் குடியிருப்பு! 


தேநீீர் முடிவல்ல. தொடக்கம்... 

மனப் பறவை பறக்கும்... 


Irudhy. A






Tuesday, July 6, 2021

மனம் கொத்தும் பறவை...

Fly... 



காற்று வழி ஒரு கடிதம்..

மனம் விடும் தூது... 

சிநேகத்திற்குரிய பறவைக்கு... 


 தேடலில் திறக்கும் வானம்... 
சிறகுகள் விரிக்கும் மனம்... 
பெருவெளியில்
சிறகுகள் விரிய பறவையாகிறது 
மனம் தினம்!... 


பறவையே! 
கால் சுருக்கி சிறகு விரிப்பாய்... 
மனமோ 'கண்' சுருக்கி நினைவெனும் சிறகு விரிக்கும்! 

உனைக் கண்டோம் 
விமானம் படைத்தோம்.
 கற்க விரும்பிக்
 கரைகிறது மனம்... 
காணும் கண்கள் விரியும்! 

சிறகுகள் விரித்து 
காற்று வெளியில்  வாழ்வைச் சிறகால் எழுதிப் பறக்கிறாய். 
பறத்தலே உன் வாழ்வு!
பறத்தலின் வழி எல்லாம் தெளிகிறாய். 
தெளிந்த வழி பறக்கிறாய்!


றவை
            உன்னிடம் பாடம் பயில...

 கற்றுத் தெளிய ஏராளம் உண்டு.

 இரை சுமந்து  பறக்கிறாய்.
அறிந்தோ, அறியாமலோ 
எதுவாயினும் இருக்கட்டும். 
உன் அலகிலிருந்து தவறிய 
சிறு இரை கூட! 
காற்று வழிக் களம் சேர்ந்து மண்ணில் வித்தாகிறது. செடியாகிறது. மரமாகிறது. பூக்கிறது. காய்க்கிறது. 
கனி மரமாயின் கனி தருகிறது. 
பூ மரமாயின் வண்டுகளும்... தேனீக்களும் பசியாற இலையிடுகிறது. 
பறவைகள் வந்து இளைப்பாற கிளை தருகிறது!


உலகில் காடுகளைத் திறக்கும் சாவியே! 
மனம் தனைத் திற...
மனம் வாழ்வெனும் வனத்தில் பறக்கட்டும்.... 

 பறவை  நீ...
மனம் விரும்பும் பாடசாலையாகிறாய்! ...

பறத்தலிலும் துறத்தலிலும் உள்ளது வாழ்வு! 


நி
னைவில் சிறகுள்ள மனம்  ஒரு பறவையே! 
  பறக்க சிறகுகள் வேண்டாம். மனம் போதும். 

மனம் பறவையாகும்! 
சிறகு முளைக்க... 
அகம் அறுக்கும். 
முன், பின் எதிர்நோக்கில் கடந்து 
புறம் பறக்கும்... 
பழம் நினைவுகள் உண்ணும்...

மனம் எனும் பறவை பறக்கும். மனம் கொத்தும்.

சிநேகச் சிறகுடன்... 
மனம் கொத்தும் பறவை 








Irudhy. A 




அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...