Tea filter depressions.
Tea express wonderful things...
'Tea break'- starter of newthings...
Have your cup of tea...
Tea stories - ' Memories' ...
உலகம் முழுக்க அதிகம் பேர் பருகும் பானம் தேநீர் என்கிறது ஆய்வுகள். அதிகம் பேரில் நானும் ஒருவன் என்பதில் ஒரு பெருமிதம் எப்பொழுதும் உண்டு. நீங்கள் எப்படி என்று தெரியாது. ஆனால் பலர் என் கட்சியாக இருக்கலாம்.
அதனாலேயே தைரியமாக தேநீரை ஆற்றாமல் சூடாக உங்கள் குவளைகளில் ஊற்றுகிறேன். சூட்டோடு பருகுகிற தேநீர் அனைத்தையும் ஆற்றிவிடுகிறது.
"Tea solves everything" ...
வளர்ந்த ஒரு மரத்தை வேர்களோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவது போன்றது பெண்ணை மணம் முடித்து அனுப்புவது. மறுவீடு சென்றாலும் பெண்களின் வேர்கள் எப்பொழுதும் தன் தாய் வீட்டில் பதியமிட்டபடியே இருக்கும். அது அவர்களின் உரிமை. அவர்களின் உலகம். அவர்களின் சுதந்திரம். அதனாலேயே பெண்களுக்கு தாய்வீடு திரும்புகிற தருணங்கள் எல்லாம் தங்கமாகி விடுகிறது. முகத்தில் அப்படி ஒரு ஜொலிப்பு அப்பிக்கிடக்கும். முதல் சாட்சி நான். என் மனைவியிடம் கண்டிருக்கிறேன். நண்பர்களே! நீங்களும் யோசித்து ஆம் என்பீர்கள். சரி நம் பெண்கள் அப்படித்தான்.
கவலை வேண்டாம்.
"எம் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா!" - என்று நம்மையே 'உற்சாகப்படுத்திக் கொள்ளலாம்.' 'பொண்டாட்டி' பற்றி ஒரு 'மீம்ஸை'ப் படித்தேன். "ஒண்ணு பொண்டாட்டி வரமா இருக்கணும். இல்லைனா ஊருக்குப் போன பொண்டாட்டி வராம இருக்கணும்" - அதிகம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். காலந்தோறும் இம்மாதிரியான காமெடிகள் 'பொண்டாட்டி' பற்றிய மன உணர்வுகளை கொடிப் பிடித்தபடி கடக்கின்றன. பேச்சு எங்கோ போகிறது. சரி விஷயத்துக்கு வருகிறேன். தாய்வீடு திரும்பும் பெண்ணின் மனநிலை எப்படி இருக்குமோ அப்படி தேநீர் குறித்த தருணங்களுக்கு திரும்பும் பொழுதெல்லாம் என் மனம் மகிழும். அந்த மகிழ்வை உங்களுக்கும் கடத்த வேண்டுமென்பதே என் விருப்பம்.
'வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும். டீ சாப்ட்டு வர்றவங்க சாப்ட்டு வாங்க' என்கிற பேருந்து நடத்துனரின் குரலில் நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கும். தேநீர் இடைவேளைக்கு அவ்வளவு அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு தேநீர் சந்திப்புகளிலும் நிறைய விஷயங்கள் விளங்கிக்கொண்டே இருக்கும்.
Morning cock + morning clock=Tea
Cit(y) tea story...
(குட்'டீ' story)
அதிகாலை சேவல் கூவும் முன்பே தேநீர்க் கடைகள் விழித்துக்கொள்ளும். தெருவில் தேநீர்க் கடையின் விளக்கொளி சன்னமாகப் படர்ந்திருக்கும். பக்திப்பரவசமாக மெல்லிசை காற்றில் கசிந்து வரும். சூரியன் மெல்ல தன் சோம்பல் முறிக்கும் வேளையில் மூத்த குடிப் பெருமக்கள் வீட்டுச் சிறுசுகளை தொந்தரவு செய்யாமல் நைசாக வெளியே கிளம்பி சங்கமிக்கும் இடம் பெரும்பாலும் தேநீர் கடையாகத் தான் இருக்கும். நீங்களும் பார்த்திருக்கலாம். அப்படி நான் கண்ட ஒரு அதிகாலைக் காட்சிகள் ஒர் உன்னத ஓவியம் போல, கூழாங்கற்களுக்குள் உறைந்து கிடக்கும் குளிர்ச்சியைப் போல என் மனசுக்குள் உறைந்து கிடக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு...
இடம் - திருப்பூர்
நேரம் - சேவல் கூவும் முன் எழுந்த அதிகாலைப் பொழுது...
களம்-தேநீர் விடுதி...
திருப்பூரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியின் 'மகளிர் திருவிழா* நிகழ்ச்சித் தயாரிப்பிற்காக என் நண்பரின் நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்துடன் சென்றிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த விடுதியின் எதிரில் அழகாக ஒரு தேநீர்க் கடை. சற்று வித்தியாசமாக இருந்தது. தண்ணீருக்குள் இருக்கும் மீன் எப்படி மகிழுமோ அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு. அன்று விடியற்காலை 4.30மணிக்கு எழுந்து மாடியில் இருந்து பார்த்தபோது தேநீர்க் கடை திறந்திருந்தது. வேகவேகமாக விடுதியை விட்டு வெளியே வந்து தேநீர்க் கடையில் அமர்ந்தேன். அப்பொழுது எனக்கு எதிர் பெஞ்சில் நான்கு மூத்த குடிப் பெருமக்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குள் அப்படி ஒரு சம்பாஷனைகள். முகத்தில் சந்தோச ரேகைகள் படர்ந்து விரிவதைக் கண்டேன். வாடா, போடா என்று 'டா' போட்டுத்தான் பேசிக்கொண்டார்கள். (வருத்தப்படாத முதியோர் சங்கம் போல...) அவர்களின் ஒவ்வொரு நாள் விடியலும் அப்படித்தான் அழகாகத் தொடங்கும் போலத் தெரிந்தது. அவர்களை இணைத்தது அதிகாலை இஞ்சித் தேநீர் என்பதை அறிந்தேன்.
தேநீர் ஆற்றுபவர் பகுதி சற்று வித்தியாசமாக இருந்தது. தேநீர் தருபவர் என் ஊர் பணியாரக்கடை பாட்டி போல தரைப்பலகையில் அமர்ந்தபடி ஒரு நீளமான கம்பியில் மாட்டிய குவளையை லாவகமாக தேநீர்குண்டானுக்குள் விட்டு தேநீரை முகந்து சில்வர் குவளைகளில் பரிமாறியது ஒரு அழகியலாகவே எனக்குத் தெரிந்தது. அன்று வருத்தப்படாத முதியோர் சங்கத்தினரை ரசித்தபடி சாப்பிட்ட இஞ்சித் தேநீரும் அக்காட்சிகளும் இன்றும் வெம்மை குறையாத தேநீராக என் மனக்குடுவைக்குள் இருக்கிறது. உங்கள் மனக்குடுவைக்குள்ளும் இப்படி ஒரு தேநீர் நிகழ்வு காட்சியாக விரியலாம். மனம் எனும் பறவை பின்னோக்கிப் பறக்கலாம்.
மனம் பறவையாகும். பழம் நினைவுகள் உண்ணும்...
பறக்கும்...
Irudhy. a
7 comments:
Good to read this.. Realized and visualized it. Nice words
வாசிக்கும் போதே தேநீர் கடைகளுக்குள் சென்று வந்த உணர்வு...
Thanks lot for ur comment cheta...
Thanks for ur valuable comments. Take care...
Your thoughts are not just your experience.that is the reality of life
Thanks lot ur valuable comments. Take care...
Your thoughts are not just your experience. That is the reality of life
Post a Comment