( Have your cup of tea )
- - - ☕ - - -
'திருப்பாச்சேத்தி'-யை நோக்கி 'SNR' வேகமெடுத்தது. கொஞ்சம் கரடுமுரடான சாலையில் 'SNR' கங்காருவைப் போல குதித்துக்குதித்துப் பயணித்தது. அமர்ந்து பயணிப்பவர்களின் மனநிலையும், நின்று கொண்டு பயணிப்பவர்களின் மனநிலையும் வெவ்வேறானவை. நிற்பவர்களின் கண்கள் பெரும்பாலும் அமர்ந்திருப்பவர்களை நோக்கியே இருக்கும். இருக்கை எப்பொழுதும் வசீகரமானது. அதனாலோ என்னவோ காலந்தோறும் இருக்கைச் சண்டைகள் நம்மைக் கைப்பிடித்தபடியே வீரநடை போட்டுத் தொடர்கின்றன.
- - - - - 'நிற்கிறவுகள்ல திருப்பாச்சியில இறங்கறவுக இருந்தா நகந்து முன்னுக்குப் போயிருங்க. டிக்கெட்டுப் போடாதவுக
போட்டுக்கங்க'- நடத்துனரின் குரல் பேருந்துக்குள் ஒலித்தபடியே இருந்தது. ஆசிரியப் பெருமக்களுக்குப் பிறகு அதிகம் தொண்டைத் தண்ணீர் தீரக் கத்திக் கொண்டிருப்பவர்கள் பேருந்து நடத்துனர்களாகத்தான்
இருக்க முடியும். இப்பொழுது கொஞ்சம் மாறியிருக்கிறது. பேருந்து ஓட்டுனர்களோ மழைக் காலங்களில் சாலையோரங்களில்
' இது பள்ளம்' என்று காட்ட நட்டுவைத்த கம்பு போல அமர்ந்திருப்பார்கள்.
ஓட்டுனர்களின் மனநிலையை 'கார்' ஓட்டக் கற்றுக்கொண்ட பின் என்னால் உணரமுடிந்தது. வண்டியில் பூட்டிய குதிரை போலத்தான் ஓட்டுனர்கள். சக்தியின் குறியீடு குதிரை என்பது நாம் அறிந்தது. அமர்ந்த நிலையில் உள்ள குதிரையை இதுவரை நான் கண்டதே இல்லை. குதிரைக்கு
உ றக்கம் கூட நின்ற நிலையில் தான். உட்கார்ந்திருக்கும் குதிரையை யாரேனும் கண்டிருந்தால் சொல்லுங்கள். ஓட்டுனர்களின் மனம் குதிரைக்கு ஒப்பானது. சிறுபிராயத்தில் 'மிக்கேல் பட்டணம்' செல்லும் பொழுதெல்லாம் நான் கண்ட ஒரு விஷயம் ஆச்சர்யப்பட வைக்கும். காரணம் அப்பொழுது கிராமங்களுக்குப் பயணிக்கும் பேருந்துகளின் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் கிராமத்து மக்களின் குடும்ப உறுப்பினர்களைப் போலவே நடந்துகொள்வார்கள். கிராமத்து மக்களும் அப்படித்தான் அவர்களை எண்ணுவார்கள்.
இப்பதிவில் இந்த விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளக் காரணம் சில தினங்களுக்கு முன் 'சன்' செய்திகளில் ஒரு செய்தியைப் பார்த்தேன்.
'பேருந்துப் போக்குவரத்து இல்லாத ஓர் ஊர் முதன்முதலாக பேருந்துப் போக்குவரத்து வசதியைப் பெற்றது'- என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. ஊர் பெயர் சொல்லியிருப்பார்கள். நான் கவனிக்கவில்லை. காலம் நவீனத்துவமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலிலும் ஓர் ஊர் இப்பொழுது தான் பேருந்து வசதியை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது. இன்னும் இது போல நிறைய குக்கிராமங்கள் இருக்கலாம். அங்கெல்லாம் பேருந்துப் போக்குவரவுகள் வேர்களின் தாகம் தீர்க்கும்
நதியாகப் பரவிப் பயணிக்கட்டும்.
சமீபத்தில் வெளியான இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களின் 'கர்ணன்' திரைப்படக் கதைக்கருவும் பேருந்து வசதியற்ற ஒரு கிராமத்தைப் பற்றியதாகவே இருந்தது. இதனூடே வர்க்க ரீதியான விஷயங்களும் பேசும் பொருளாக இருந்தது. சிறப்பான படம். பார்க்காதவர்கள் பாருங்கள்.
'SNR' திருப்பாச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது.
இறைவன் படைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஓர் அர்த்தம் இருக்கிறதைப் போலவே ஒவ்வோர்
ஊருக்கும் சில தனித்துவங்களும் பெருமைகளும் உள்ளன. இதில் சிறப்பு என்னவென்றால் ஊரின் பெருமைமிகு விஷயங்களில் உணவு முக்கியப்பங்கு வகிக்கிறது. இதற்குப் பின்னரே மற்ற அடையாளங்கள் பிடிபடுகிறது.
திருநெல்வேலி என்றால் 'அல்வா',
மணப்பாறை 'முறுக்கு', பழநி 'பஞ்சாமிர்தம்'
கும்பகோணம் 'வெற்றிலை'
திருப்பதி 'லட்டு'
- எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
மதுரைக்கு நிறைய அடையாளங்கள் உண்டு. உணவைப் பொறுத்தவரை வானத்து நட்சத்திரங்கள் போல அளவிட முடியா சிறப்புகள் உண்டு.
இருப்பினும் திண்டுக்கல்லுக்குப் 'பூட்டுப்' போல மதுரைக்கு 'மல்லி' எனும் அடையாளம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
'ஆரியக்கூத்தாடி என்றாலும் காரியத்தில் கண்ணாயிரு'
- என்கிறது 'Mind voice'. திருப்பாச்சிக்கு வருகிறேன்.
திருப்பாச்சி என்றதும் பெரும்பாலும் எல்லோரது மனதிலும் அரிவாள் தான் மையமிட்டு நிற்கிறது.
அரிவாளுக்குப் பெயர் போன திருப்பாச்சிக்காரர்கள் மீது
' கோவக்கார மனுஷங்க' - என்கிற பொதுப்பார்வை இருந்தாலும் அரிவாள் மட்டுமல்ல அறிவால் சிறந்த மனிதர்களும், வெள்ளந்தியான உள்ளம் கொண்டவர்களும் திருப்பாச்சேத்தி யில் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
நான் கோபக்காரன் என்றே பெயரெடுத்தவன். மூக்கின் சுவாசம் போல கோபமும் என் மூக்கு நுனியில் வாசம் செய்துகொண்டே இருக்கும். நீங்கள் எப்படி? என்று தெரியாது. அவசியமற்ற இடங்களில் கொட்டும் கோபம் தரிசுநிலங்களில் விழுந்த மழையாகும். கோபம் அளவறிந்து இடும் உப்பைப் போன்று இருந்தால் சாரத்துடன் இருக்கும். இப்பொழுதெல்லாம் சாரத்துடன் தான் இருக்கிறேன். இருப்பினும்,
'கோவம் இருக்குற இடத்துல தான் குணம் இருக்கும்' - என்று முன்னோர்கள் முன்னர் சொல்லியதும்,
'ரௌத்திரம் பழகு' - என்ற மீசைக்கவி பாரதியின் வரிகளும் மனதிற்குள் நிழலிடுகின்றன.
'SNR' திருப்பாச்சேத்திக்குள் நுழைந்தது.
திருப்பாச்சிக்குப் பின் பச்சேரி. பச்சேரிக்குப் பின் மிக்கேல் பட்டணம் தான்.
நிழலின் அருமையை வெயிலில் தான் உணரமுடியும் என்பதை மிக்கேல் பட்டணத்து மக்கள் நன்கு அறிவார்கள்.
வெயில் விளையாடிக் களைத்த மண்ணில் கருவேல மரங்களும், கரும்புக்காடுகளும், கொடிக்கால் வேர்களும் பரவிப் படர்ந்த மிக்கேல் பட்டணத்திற்குள் பயணிக்கலாம். பறக்கலாம்.
மனம்கொத்தும் பறவை பழம் நினைவுகள் உண்ணும்.
பறக்கும்...
Irudhy. A
Next post after one week. Please wait and support.
Thanks all for being with me...