T---Tradition...
E------Emotion...
A------ Adiction...
LL is Well...
நிழலாகத் தொடரும் தேநீரை, பருகும் பானமாக மட்டும் நான் எண்ணுவதில்லை. தேநீர் ஒரு குறியீடு. இக் குறியீட்டுக்குள் கூடு கட்டும் ஊர்க்குருவி நான். என்னைப் போல் பலர் இருக்கலாம். சந்திப்புகளின் கூடாரம் தேநீர். சந்திப்புகள் மாறிக்கொண்டே இருக்கலாம். ஆனால், தேநீர் எப்பொழுதும் நீளும் வானில் தொடர்ந்து வரும் நிலாப் போல உலா வந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு உலாவிலும் ஒரு திருவிழாவின் குதூகலம் இருக்கும். தேநீர் பானம் மட்டுமல்ல. உணர்வு, கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் கொண்டது. பிறநாட்டுத் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களின் சந்திப்புகள் எல்லாம் பெரும்பாலும் தேநீர் விருந்திலிருந்து தான் தொடங்குகிறது.
Tea - Good starter like
sachin Tendulkar ...
Tea - successful finisher like M. S. Dhoni...
'சரி சரி... இப்பொழுது தேநீர் கதை எப்படி தொடங்கப் போகிறது? அதைச் சொன்னால் நல்லது...' என்கிற குரல் என் காதுகளில் விழுகிறது. என்ன சொல்லலாம் என யோசிக்கையில் தேநீர் குறித்த கதைகள் (கதையான நிஜம்) ஒரே நேர்கோட்டில் இல்லாமல் முன் பின் மாறி மாறி நகரவைக்கும் படத் தொகுப்பு போல மனம் முன்னும் பின்னும் மாறி மாறிப் பறக்கிறது. இப்பொழுது என் மனம் சிறுபிராயத்துக்குள் பயணிக்கிறது. அன்று நான் அறிந்த தேநீர் சுவை தான் இப் பயணத்தின் நினைவுச் சிறகை விரிக்க காரணமாகவும் அமைகிறது. மனதின் வேகம் மணிக்கு இத்தனை கிலோமீட்டர்! என்று எவராலும் வரையறுக்க முடியாது.
பழம் நினைவுகள் உண்ணும்...
மனப்பறவை
1980-களின் மையத்தில் இருக்கிறது.
அது ஒரு பொற்காலம்!...
(GOLDEN DAYS)
இடம்-மதுரை
மே மாதம்
- "வெத்தலப் பேட்ட"...
வெயில் சூடேறி ஜனநெருக்கடி மிகுந்திருந்த பகற்பொழுது. நேரம் காலை
9 லிருந்து 10.30 க்குள் இருக்கலாம். நான் எனது அண்ணனுடனும், தம்பியுடனும் 'SNR' பேருந்துக்குள் அமர்ந்திருக்கிறேன்.
மேமாதம் பிறந்துவிட்டால் வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடிக் களிக்க சொந்த ஊர் கிளம்பி விடுவோம். இன்றைய தலைமுறைகளுக்கு?.... ' கொஞ்சம் கஷ்டம். அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜா'- என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. கொரோனா காலத்தில் சிறு பிள்ளைகளின் உலகம் கைகளுக்குள் அடங்கும் கைப்பேசியில் தான் விடிகிறது. முடிகிறது. இதில் 'online class' வேறு. என் மகனுடன் சமீப காலமாக நான் அமர்கிறேன். ஒன்றும் புரிவதில்லை. மகன் திட்டுவான். அம்மா correct - ஆ சொல்லுவாங்க. உங்களுக்கு ஒண்ணும் தெரியல'-என்கிறான். உண்மை தான்.
சரி தெரிந்து கொள்ளலாம் என்று அவன் எதிரில் இருந்தபடி கைப்பேசியின்
'லென்சுக்குள்' வந்து விடாமல் கைப்பேசியின் எல்லைக்கு வெளியே இருந்தபடி கிணற்றுக்குள் இருக்கும் சிங்கத்தை பார்த்த கதையாக எட்டிப்பார்ப்பேன். இன்றைய குழந்தைகளுக்கு
'ONLINE CLASS' எடுக்கும் ஆசிரியப் பெருமக்கள் உண்மையில் சிங்கங்கள் தான். என் பள்ளிப்பருவத்தில் நான்' OUT OF CLASS'-ல் தான் இருப்பேன். நான் ஒரு Out Standing Student- ஆக்கும். வைகைப்புயல் வடிவேலுவின் 'முடியல' டயலாக் தான் ஞாபகத்திற்கு வருகிறது. பேருந்துக்குள் ஏறியதை மறந்து ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறேன். என் இருக்கைக்குப் பின் கோழிச்சத்தம். எட்டிப் பார்த்தால் கால்கள் கட்டப்பட்ட நாட்டுக்கோழிகள் இருக்கையில் இருந்தன. அப்பொழுது கறிக்கோழிகள் (பிராய்லர்) கிடையாது. நாட்டுக்கோழிகள் வீடுகளில் கறிக்காகவும் முட்டைக்காகவும் வளர்க்கப்பட்டன. கோழிவாங்கி வந்தவுடன் காலில் கயிறு கட்டி இரண்டு நாட்கள் வாசலில் தான் அதன் எல்லா சகவாசமும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். 'ஏரியா' சேவல்கள் 'யாரது? புதிய வரவோ!' என்பது போல் பார்த்துவிட்டு கொண்டைத்தலையை ஆட்டிக்கொண்டே போவார்கள். (படவா ராஸ்கல்ஸ்...) மூன்றாம் நாள் கால்கட்டு விடுவிக்கப்படும். மாயமிட்டது போல வீட்டைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டு கோழி தானாக வந்து விடும். சில சமயம் வெளிக் கிளம்பிய கோழியார் பொழுது சாய்ந்தும் வீடு வராமல் இருந்தால் நாம் தான் கோழியாரின் தோழர்களிடமிருந்து பிரித்து நம் கைகளை அணை கட்டியபடி கோழி 'Rhymes' (பக்... பக்... பக்) பாடியபடி அழைத்துவர வேண்டியிருக்கும். எனக்கு இந்த அனுபவங்கள் ஏராளம் உண்டு. அது ஒரு கனாக் காலம்.
' SNR' புறப்படத் தயாரானது. எனக்குப் பின் இருந்த கோழிகள் 'owner' - க்கு இடம் கொடுத்துவிட்டு மஞ்சப் பைகளுக்குள் அடங்கின. பேருந்துக்குள் அரை டிக்கெட், முழு டிக்கெட் பேரங்கள் நடந்துமுடிய பேருந்துக்குள் நடக்க முடியாதபடி கூட்டம் முண்டியடிக்கும். நடத்துனர் ஜன்னல் வழியே தலையை நீட்டி எதிரில் பிளாட்பாரக் கடையில் தேநீர் உறிஞ்சிக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரை கைதட்டி சமிக்ஞை காட்ட ஓட்டுனர் அங்கிருந்தபடியே கையால் பேருந்தின் மேல் பாகத்தை சுட்டிக் காட்டினார்.
'எவ்வளவு நேரம்பா சரக்க ஏத்துவீங்க.' - என்று கத்தியபடி நடத்துனர் கீழிறங்க பேருந்தின் மேலே ஒரு பண்டக சாலையே ஏறி இருக்கும். பல்வேறு களேபரங்களுக்கு இடையில் 'SNR' விழிகளை உருட்டி ஒர் இரைச்சலோடு 'Titanic ' கப்பல் போன்று ஆரவாரத்தோடு புறப்பட்டது. என்னோடு நீங்களும் பயணத்தில் இணைந்து கொள்ளுங்கள். முழு டிக்கெட் தான். சில்லறை இருக்கட்டும். நம்மிடம் சில்லறை இல்லாவிடில் நடத்துனரிடம் சில்லறை கிடைப்பது நமக்கு குதிரைக் கொம்பாகிவிடும். 'அப்பறம் தர்றேன்' என்பார். எப்பொழுது தருவார் என்று கணிக்க முடியாது. சில்லறை வாங்கும் வரை நம் பயணத்தை ரசிக்கமுடியாது. அவரையே பார்த்தபடி வரவேண்டியதாகிவிடும். சில்லறை ரொம்ப முக்கியம்.
'SNR' எந்த ஊருக்குப் போகிறது?எவ்வளவு நேரம் பயணம்? என்ற எந்த விவரமும் சொல்லாமல் அழைத்தால் எப்படி? என்று கேட்பது எனக்குப் புரிகிறது.சொல்கிறேன்.
ஒரு முக்கியமான விஷயம். முகக் கவசம் தேவையில்லை. முகக்கவசம் துறந்து நம் வசம் இருக்கும் மனதால் பயணிக்கலாம். மனதிற்கு ஏது கவசம்! அகம் எனும் கூடு விட்டு புறத்தே சிறகு விரிக்கலாம். பறக்கலாம்...
செல்லும் இடம்
மிக்கேல் பட்டணம்....
வழித்தடங்கள்-
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பச்சேரி.
தேநீர் நிறுத்தம் நிச்சயம் உண்டு.
பயணம் தொடரும்....
மனம்கொத்திப் பறவை மனம்கொத்தும்!
பழம் நினைவுகள் உண்ணும். பறக்கும்...
10 comments:
அந்த பயணத்த நெனச்சா இப்பொழுதும் மனம் பறக்கும்.. அருமை..மொழி நடை அருமை..
மனம் பறக்கும். பயணமே மனதின் சிறகு... பறக்கலாம். நன்றி...
Now R u ready to go Michel pattinam?
Wow when i go through tour play refreshments taking place brother hatsoff
Sir really very interesting. When I read, I feel it is a sirukathai but you unfortunately put thodarum. So I was disappointed. Please send next athiyayam
Thanks lot for your valuable comments. Soon I publish. Take care...
வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடலாம்...
மிக்க நன்றி.
போகலாம் Right. படியில் நிக்காம டிரைவர் மடிய மட்டும் விட்டுட்டு எங்க வேணும்னாலும் உட்காருங்க...
தாங்களின் சுகமான சுவாரஸ்யமான நினைவலைகள் அருமை. தொடரட்டும் தாங்களின் நினைவலைகள்......
மிக்க நன்றி. நினைவோ ஒரு பறவை...
Post a Comment