About Me

Sunday, September 26, 2021

வேர்கள் நோக்கும் காலம்...

Fly...


குடும்ப விளக்கு 

"அதிர்ந்திடும் இளமைப் போதில்
ஆவன அறங்கள் செய்து
முதிர்ந்திடும் பருவந்தன்னில்
மக்கட்கு முடியைச் சூட்டி
எதிர்ந்திடும் துன்பமேதும்
இல்லாமல் மக்கள், பேரர்
வதிந்திடல் கண்டு நெஞ்சு
மகிழ்வதே வாழ்வின் வீடு"

              - புரட்சிக் கவிஞர் பாவேந்தர்                                     பாரதிதாசன் 

பாவேந்தரின் பாடல் வரிகள் முதுமை வாழ்வின் உன்னதங்களை உலகிற்குச் சொல்கிறது. 

வாழ்வின் தேடல்களின் வழி பயணப்பட்டு கிட்டிய வரை கண்டுணர்ந்து இறுதியில் எல்லோரும் ஏறி அமர்ந்துகொள்ளும் பேருந்து முதுமை. சிறுபிராயங்களில்  நான் என் அண்ணனுடனும்,  தம்பியுடனும் எங்கள் வீட்டு  முதுமை காண மிக்கேல் பட்டணம் செல்வது வழக்கம். மே மாதம் முதல்வாரத்தில் எங்கள் பயணம் அமையும். துவக்கத்தில் அம்மா எங்களுடன் வருவார். பிறகு 'வெத்தலப் பேட்ட' யில் 'SNR' - ல்  அமரவைத்து   நடத்துனரிடம் சொல்லிவிட்டு குச்சிமிட்டாய், குருவி ரொட்டியெல்லாம் வாங்கிக் கொடுத்து 'டாட்டா' காட்டிச் சென்று விடுவார். நடத்துனர் பேருந்தில் எங்களைக் கடந்து நீந்துகையில் ஒரு பார்வை பார்த்துக் கடப்பார். சில கடத்தல்களில் கொய்யாப்பழங்களையோ, வெள்ளரிக்காய்களையோ எங்கள் மடிகளில் தவழ விட்டுக் கடப்பார். 'அண்ணே! பிள்ளைகளைப் பத்திரமா ஊர்ல விட்றுங்க' - என்ற எங்கள் அம்மாவின் ஒற்றை வார்த்தைகளுக்குத் தான் அவரின் இத்தனை அலப்பறைகளும். 'அன்பு அளப்பறியது' - என்பதை உணர்ந்த தருணங்கள் அவை. நாங்கள் காக்கா கடி கடித்து பற்களால் மாவரைத்தபடி பயணிப்போம். நாங்கள் மட்டுமல்ல. இன்னும் சிலரும் அப்படித்தான் பயணிப்பார்கள்.


எங்களின் மிக்கேல் பட்டண வருகை கடிதம் வாயிலாக  பத்து நாட்களுக்கு முன்னமே எங்கள்  அம்மாச்சிக்கு தெரிவிக்கப்படும். 


பத்துநாட்களுக்குள் அம்மாச்சி தடல்புடலாகத் தயாராகிவிடுவார். முள்ளு முருங்கையிடம், அவரைப்பந்தலிடம், நுங்கு வண்டிகளிடம் நாங்கள் வரவிருக்கும் தகவல் சொல்லுவார். மிக்கேல் பட்டணத்துத் தங்கம் '
சந்தியா மடம்' கண்மாய்க்கு காற்றைத் தூதனுப்பி தகவல் சொல்லுவார். அம்மாச்சியின் பழைய சீலை கிழிபட்டு மூன்று 'கௌபீனங்கள்' (கோவணங்கள்) தயாராகும். வீட்டின் தாழ்வார ஓட்டில் கசிந்து படரும் புகை, காற்றுவழிக் கலந்து அம்மாச்சி தயார் செய்யும் தின்பண்டங்களின் வாசனைகளை, எண்ணிக்கைகளை  ஒளிவு மறைவில்லாமல் பக்கத்து வீடுகளுக்குக் கடத்தும்.

" என்ன சொர்ணாத்தா மெர்சி மக்க வர்றாகளா?"

விசாரிப்புகள் பலப்படும். 

      'அதிதூதர் மிக்கேல் சம்மனசு'  தேவாலய உபதேசியார் (ஆலயத்தில் ஊழியம் செய்பவர்) எங்கள் அம்மாச்சியிடம் 'படவாஸ். வர்றானுங்களா? வரட்டும். பூசை சமயத்துல பேசட்டும். இருக்கு அவனுங்களுக்குப் பூசை. போன தடவ வந்தப்ப செப மந்திரங்கள படிச்சிட்டு வரச் சொன்னேன். இந்த மொற பார்ப்போம்'- என்று முஷ்டிமடக்கி தயாராவார். (நாங்கள்லாம் அப்பவே அப்புடி ! இப்ப சொல்லவா வேணும்) எங்களைப் பொறுத்தவரை அச்சமயத்தில்  உபதேசியார் எங்களுக்கு நம்பியாராகத் தான் தெரிவார். அவரின் முகம் இன்றும் புதிதாக வரைந்த ஓவியம் போல ஈர்ப்புடனும் வண்ணம் காயாமலும் மனசுக்குள் ஈரத்துடன் இருக்கிறது.  

எங்களின் வயதொத்த  சில குசும்பர்களும் அங்கு இருப்பார்கள். எங்கள் 'டிரவுசர்' சட்டைகளைக் கிண்டலடிப்பார்கள். டவுசர்ல போஸ்ட் பாக்ஸ் போட்றலாமா?' என்பார்கள். பட்டப் பெயர்கள் வைத்துக் கூப்பிடுவார்கள்.

நாங்கள் அம்மாச்சியிடம் புகார் மனு கொடுப்போம். அம்மாச்சி சிரித்தபடி 'கொசப்பயலுக இங்குன வரட்டும். முதுகுல டின்னு கட்டுறேன்' என்பார். குறைந்தது பத்து அல்லது  பதினைந்து நாட்களாவது ஊரில் நாங்கள் 'டேரா' போடுவோம். டின்கள் கணக்கில் வைக்கப்படும். நாங்கள் ஊர் விட்டுக் கிளம்பும் நாளில் அம்மாச்சி அனைத்து டின்களையும் காந்திக் கணக்கில் எழுதிவிடுவார். டின்னுக்கு சொந்தக்கார குசும்புக்காரர்கள் நாங்கள் ஊரை விட்டுக் கிளம்பும் நாளில் கதாநாயகர்களாகி பாசத்துடன் வழி அனுப்பி வைப்பார்கள். 'மறுக்க வாங்கடா...'- என்பார்கள். 'பின்னே பாசம் இருக்காதா? என்ன!...' அவர்களுக்கு மே மாதப் பொழுது போக்கே நாங்கள் தான். எங்களுக்கும் நன்றாய்ப் பொழுது போகும். 

இதோ... நன்றாய்ப் பொழுதுகள் கடக்க மதுரை கடந்து மிக்கேல் பட்டணம் வந்து விட்டோம். 

அம்மாச்சியும் 'நான் ரெடி. நீங்க ரெடியா?' ... என்றபடி படிய வாரி         ' Salt & pepper look'- ல் வந்து மிக்கேல் பட்டணப் பேருந்து நிறுத்தத்தில் எங்களுக்காகக் காத்திருப்பார். 

தற்சமயம் என் மனம் உங்களைச் சந்திக்க அடுத்த பதிவு வரை என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு சிறகடிக்கிறது. 


  ங்களின் சிறகுகள் விரிந்து மனப்பறவை தன் வேர்கள் படர்ந்த மரம் நோக்கி மண் நோக்கிப் பறக்கலாம். பறக்கட்டும்... 

மனம் பறவையாகும்... 

மனம் கொத்தும். 

பழம் நினைவுகள் உண்ணும்




பறக்கும்... 


                        Irudhy. a 






Saturday, September 18, 2021

'SNR' வேர் வழிப் பயணம்-6

Fly... 


Have your Cup of  palm sugar tea...

'SNR' திருப்பாச்சியை விட்டுப் புறப்படத் தயாரானது... 


"கரம் சிரம் புறம் நீட்டாதீர்கள்" 

 'தம்பி ஒரு நிமிஷம். கரம் சிரம் புறம் யாரும் நீட்டமாட்டாங்க. எல்லாரும் தூங்கியாச்சு. வெத்தலப் பேட்டயில காரு கெளம்பி பல நாளாச்சு. ஏறுன எடமே மறந்துரும் போல . எங்க போறோம்கிறது மட்டும் ஞாபகத்துல இருக்கு. 
அதுவும் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே வர்றதுனால நெனப்புல இருக்கு. ஏறுன இடத்துலயே எறங்கி நடையக் கட்டியிருந்தாக் கூட இந்நேரம் மிக்கேல் பட்டணம் போயிருக்கலாம். எப்ப தம்பி ஊரக் காட்டுவ? '
-மேற்கண்ட மனக் குரல் வேறு யாருடையதுமல்ல.
' சாட்சாத்' அவை அடியேனுடைய மனக் குரல் தான். உங்களுக்கும் இந்த எண்ணம் தோன்றியிருந்தால்
' we are sailing in the same boat'. இதன் இன்னொரு வடிவம் தான் நகைச்சுவைப் புயல் வடிவேலு அவர்களின் "why blood? Same Blood! "comedy dialogue. Ok சமாளிச்சது போதும்னு நினைக்கிறேன். 'SNR' - க்கு வந்துட்டேன். 

உங்களைக் காக்கா பிடித்துக் கொண்டிருந்த 'cycle gape' -ல் 'SNR' பச்சேரியில் இருவரை இறக்கி விட்டுவிட்டு சிட்டுப் போல பறந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மணித் துளிகளில் மிக்கேல் பட்டணத்துக்குள் நுழைந்து விடலாம். வெயில் காய்ந்து வெளியில் உறைந்து 
     காகமாய்க் கரைந்து 'ஒண்ணு மண்ணாய்' வாழும் கிராமத்து மனங்களுடன் கலக்கலாம்.

    'SNR' - In'

'நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு. ஒன்று மனசாட்சி' 

                 - என்ற பாடல் நடத்துனரின் குட்டி 'டிரான்ஸிஸ்ட்டர்' ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது. 

பாட்டைக் கேட்டபடி 
பேருந்து நடத்துனர் ஆசுவாசமாக காலியாகக் கிடந்த கடைசி இருக்கையில் அமர்ந்து கைகளின் விரல்களுக்குள் சிறைப்பட்டுக் கிடந்த அழுக்கேறிய ரூபாய் நோட்டுக்களுக்கு விடுதலை கொடுத்துக் கொண்டிருந்தார். 

ஓட்டுனர் 'ஸப்பாடி ஊருக்குள்ள நுழைஞ்சாச்சு' - எனும் தோரணையில் கறுப்புக் கரைபடிந்து காய்ந்து கோட்டோவியம் இட்ட  உப்புப்படிந்த சட்டைக்  'காலரை' கழுத்துக்குப் பின்புறம் சற்றே இழுத்துவிட்டுக் கொண்டு  'Trade mark Horn" இசையைக்  கரும்புக் காட்டுக்
காற்றில் கசிய விட்டு 'SNR' - ன் வருகையைக் காற்று வழி ஊருக்குக் கடத்தினார்.  


கொஞ்சம் கரடு முரடான மண் சாலையைக் கடந்து பள்ளம் மேடுகளுக்குத் தக்க  இடம் வலமாக தலையை ஆட்டியபடி 'SNR'  'இந்தா வந்துட்டம்ல' - என்கிற தோரணையில் மிக்கேல் பட்டணம் வந்து சேர்ந்தது. 



கரும்புக் காடுகள் வழி கசிந்து வந்த காற்று கொஞ்சம் வெக்கையோடு 'SNR' கைப்பிடிகளைத் தழுவி பின்பக்கமாக நுழைந்து உறங்கியவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பியபடி
 ஓட்டுனரின் முதுகில் ஒரு தட்டு தட்டிவிட்டு முன்பக்க படிகள் வழி இறங்கி ஊருக்குள் கடந்து போனது கரும்புக் காற்று.

தோசை வார்ப்புகள் முடிந்த கல்லில் தண்ணீர் தெளித்தவுடன் ஓர் ஓசை எழுமே அது போல பயணம் முடித்த களைப்பில்...
'SNR' ஓர் உறுமல் சத்தத்தை உறுமி தன் உஷ்ணக் காற்றை தரைக்குக் கடத்த கீழிருந்து 'தூசு துப்பட்டைகள்' வெளிக் கிளம்ப உள்ளிருந்த பயணிகள் மிக்கேல் பட்டணத்து மண் தொட்டனர். 

'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்றார் மகாத்மா காந்தியடிகள். 
'அது அப்போ! 
இப்போ கிராமங்களின் வாழ்வே அஸ்தமிச்சுப் போச்சு' என்பது தான் நிதர்சனம். கிராமங்கள் நகரங்களாகிவிட்டன. நகரங்கள் நரகங்களாகிக் கொண்டிருக்கின்றன. 

நான் எழுபதுகளில் பிறந்தவன். கிராமத்தின் வாசனையை நுகர்ந்து, ஊறுகாய் அளவேனும் தொட்டுச் சுவைத்தவன். என்னைப் போல எழுபதுகளிலோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்களும் கிராமத்து விலாசம் அறிந்திருக்கலாம். எண்பதுகளுக்குப் பிறகு கிராமங்கள் தன் வாசற்படிகள் தாண்டி ந(க)ரகத்திற்குள் அடி எடுத்து வைக்க அண்டம் கிடுகிடுக்க ஆரம்பித்தது. 

'கொரோனா'க் கொடி தேசமெங்கும் பறக்கும் இன்றைய சூழலில் மனம் கிராமத்தின் வேர்கள் நோக்கிப் பறக்கிறது. 

மிக்கேல் பட்டணம் உங்களை இனிதே வரவேற்கிறது. 


என் பெயர் மிக்கேல் பட்டணம். அதிதூதர் மிக்கேல் சம்மனசு ஆண்டவரின் தேவாலயம் என் அடையாளம். பெரும்பான்மையாக கிறிஸ்தவர்களும் சிறுபான்மையாக இஸ்லாமியர்களும் பிற மதத்தவர்களும் கலந்து வசிக்கின்றனர். வெயிலின் நிறம் என் நிறம். வியர்வையின் வாசனை என் மணம். 
   
என் விடியல் பற்றி ஒரு பட்டிமன்றம் நடத்தலாம். 

தலைப்பு

சேவல் கூவிப் பொழுது விடிந்ததா ? 
பொழுது விடிந்து சேவல் கூவியதா? 
கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கும் எனது விடியல். 

குழம்பித் தெளிந்த தண்ணீர் கொள்ளை அழகு! 
அப்படியென்றால் மிக்கேல் பட்டணம் எனும் நானும் அழகு தானே? ... 

மிக்கேல் பட்டணம் ஒர் அழகான கிராமம். கருவேல மரங்கள்  தனது 'ஆக்டபஸ்' வேர்களால் தண்ணீர் உறிஞ்சிய போதும் மலர்ந்து சிரிக்கும் வெம்மை முகம் தான் மிக்கேல் பட்டணத்து மண்  முகம்.
 
தவழ்ந்து எழுந்து நின்று நடந்து ஓடிக் களைத்து அமரும் குழந்தை போல மிக்கேல் பட்டணத்து 
வெயிலும்  தன் நாள் கடக்கும்.

 பெண்ணுக்கு வெட்கம் அழகு. மிக்கேல் பட்டணத்து மண்ணுக்கு வெயில் அழகு!... 
அமரர் கவிஞர். நா. முத்துக்குமார் அவர்களின் 
" வெயிலோடு உறவாடி... 
வெயிலோடு விளையாடி..."
 மனசுக்கு நெருக்கமான பாடல். காதுகளுக்குள் நுழைந்து இதயக்கதவைத் திறக்கிறது. 

அழகைத் தரிசித்த நாட்களுக்குள் திரும்பப் பறக்கிறது மனம். உங்கள் மனமும் பறக்கட்டும். கிராமங்களுக்குள் பிரவேசிக்கட்டும். 

அது ஓர் அழகிய வெயிற் காலம்... 

மனம் கொத்தும் பறவை பறக்கும்... 
மனம் கொத்தும்... 
பழம் நினைவுகள் உண்ணும்! 


Irudhy. A




 
 










  


Saturday, September 11, 2021

பாரதி யார்?...

 


-REWIND - 

மகா கவி பாரதியின் நினைவு தினம்
செப்டம்பர்- 11

 என்றும் 'உமை மறவா மனம் வேண்டும் தினம்' ... 

"நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-அவை நேரே இன்றெனக்குத் தருவாய்..."

   மீசைக்கவி பாரதி    உரிமையோடு பராசக்தியிடம் கேட்கிறார். 

 இன்றைய சூழலில்... 

    எந்தச் செயல் முன்நகர்வாயினும் அந்நகர்விற்கு இடைத்தரகர்கள் தேவைப்படுகிறார்கள்.  ஆனால்  பாரதி பராசக்தியிடம் ' நேரே எனக்குத் தருவாய்' எனக் கேட்கிறார். நாமும் கேட்கலாம். 

 தேவாலயத்திற்குச் செல்லும் போதெல்லாம் யாரேனும் ஒருவர் தனியாக அமர்ந்து தேவனிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆலயங்களிலோ, மசூதிகளிலோ இவ்விதக் காட்சிகளை நீங்களும் கண்டிருக்கலாம். பாரதி என்றுமே ஒரு முன்னோடி தான். 

"தனிமை கண்டதுண்டு. அதிலே சாரம் இருக்குதம்மா" 

        என்று பாடியவர் பாரதி. இன்றைய சூழலுக்கு இந்த வரிகள் பொருந்திப் போவதாகவே இருக்கிறது. 

பாரதி என்றொரு மானுடன் மாநிலம் பயனுற எண்ணி  வாழ்வையும் தன் ஒவ்வோர் எழுத்துக்களையும்  தீப்பந்தம் கொண்டே எழுதினாரோ! என எண்ணத் தோன்றுகிறது. 

பாரதியின் பேனா தாள் தொட்ட தருணங்களிலெல்லாம் தேசம் தலைநிமிர்ந்தது.

தலைகீழாய்க் கவிழ்த்தாலும் மேல் நோக்கியே எழும் தீயாக வாழ்ந்து மறைந்தவர் 

மகா கவி "பாரதியார்!" ... 

பொந்திடை வைத்த நெருப்பாக இன்றும் கணன்று கொண்டுதான் இருக்கிறது... பாரதீ!

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் முன்னமே 

      "ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! 

      ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று"- 

என தீர்க்கதரிசனம் உரைத்தபடி

  சுதந்திர வெளியில் பாடிப் பறந்தார் பாரதி. 

இதோ, காலங்கள் கடந்தும்...  

உமது முறுக்கிய மீசை போல நெஞ்சு முறுக்கி நாங்களும் உம்முடைய நூற்றாண்டு நினைவுகளில் மூழ்கி முத்துக்குளிக்க புறப்பட்டு விட்டோம்.

முத்தெடுக்கிறோமோ இல்லையோ! நிச்சயம் புதிய உயிராகி நல்லன தத்தெடுப்போம். 

மீண்டும் உமது வரிகளில் தொடர்கிறோம்.. 

"புதிய உயிராக்கி...என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய்" 

     என்று தொடர்ந்து பாரதி பராசக்தியிடம் கேட்டது நாம் அறிவோம். 

நம்மை கீழ்நோக்கித் தள்ளும் விசைகளைக் கடந்து மேல் எழும்பும் தீப் போல எழும்பிப் பிரகாசிக்கும் வரம் கேட்டு...

           "கவலையறச் செய்து - மதி

    தன்னை மிகத் தெளிவு செய்து- என்றும்.... 

      சந்தோசம் கொண்டிருக்கச்                           செய்வாய்..." 

என்ற பாரதியின் வரிகளில் முடிக்கலாம். 

விசையுறு பந்தைப் போலே மீளும் வரம் கேட்கலாம். 

பாரதி யார்? 

மகா கவியின் நூற்றாண்டு விழா தொடங்கிய தருணத்தில்.... 

ராஜாவாக மீசை முறுக்கியபடி சிங்கமாக எழுந்து நிற்கும் முண்டாசுக் கவியின் நினைவுகள் ஒரு பக்கமிருக்க - - - 

     மறுபக்கமோ  'நாளைய பாரதம்' என்று நாம்  எண்ணும் நம் பிள்ளைகளோ நம் பழஞ் சமூகத்தை அறியாமலே கடக்கிறார்கள். நாணயத்தின் இரு பக்கங்களாகச் சுழன்று கடக்கிறது வாழ்வு. பிழை அவர்களிடத்தில் இல்லை. நம்மிடத்தில் இருக்கிறதாகவே தோன்றுகிறது. நானும் பிழையைத் திருத்த விழைந்து என் மகனுக்கு இன்று பாரதியாரை அறிமுகம் செய்தேன். இன்னும் அறியச் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. 

முன்பு ஒரு முறை தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைக் கண்டேன்.   நிகழ்ச்சியின் நடத்துனர்  ஒரு புகைப்படத்தைக் காண்பித்து  இவர் யார்? எனக் கேட்கிறார். அதற்கு வெவ்வேறு பதில்கள் வருகிறது. நான் பார்த்தபோது பாரதியாரின் புகைப்படம் இடம் பெற்றது. பலர் சரியாகச் சொன்னார்கள். ஆனால் அதில் இடம்பெற்ற சில பல சிறுவர்களும் சிறுமிகளும் சொன்ன பதில் சிரிப்பை வரவழைத்தாலும் அதிர்ச்சியாக இருந்தது. 

பதில்கள்

 1. டிவி-ல பார்த்திருக்கேன். 'Name' தெரியல. 

 2. திருவள்ளுவரா? (கேள்விக்கு கேள்வியே பதிலாக வந்தது) 

 3. படத்துல வருவாரா? 

 4. தலைல துண்டு கட்டியிருக்கதுனால அடையாளம் தெரியல... 

        இப்படி பதில்கள்  நீண்டு கொண்டே போனது. இதை நான் பார்த்து  முடித்து எப்படியும் ஐந்து ஆண்டுகளாவது கடந்திருக்கும். 

இப்பொழுது என் மகனிடம் மகா கவியின் படத்தைக் காண்பித்து 'இவர் யார்?' என்று கேட்கலாமா? என்று தோன்றியது. நான் கேட்க முயலவில்லை. எதற்கு விபரீதம். நேரடியாக பாரதியாரை அவனுக்கு அறிமுகம் செய்தேன். (இன்றேனும்) 

ஒரு வேளை  ஆர்வக்கோளாறில்    இவர் யார்? எனக் கேட்டிருந்தால்??? 

'இவரா?... Nick junior - ல பத்துலு கூட வர்ற மோட்டு தான!' - என்று சொல்லியிருப்பான். மோட்டு  கடா மீசையுடன் வலம் வருவார். அதனால் அப்படிச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. அல்லது அவன் பார்க்கும் கார்ட்டூன் கதாப் பாத்திரங்களை (பெயர்களைை)  உருட்டிச் சரித்து தலையில் போடுவான். எதற்கு இந்த வினை. அதனால் நான் கேட்கவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வீட்டில் கேட்டுப் பாருங்கள். சரியான பதில் தந்தால் தலையில் முண்டாசு கட்டுங்கள். 

"ஜெய பேரிகை கொட்ட டா!" - என்று பாடிய பாரதி போல ஜெய பேரிகை கொட்டுங்கள். 

'கறுப்புக் கோட்டு' அணிந்து வெள்ளை மனம் கொண்டு நெற்றி சிவக்க செந்திலகம் இட்டவராக... 

        முறுக்கிய மீசை வளர்த்து ஆசைகளை வேரறுத்த பாரதி மீசையிலும் வெள்ளையனை நுழையவிடாது நரை கூடாமல் கிழப்பருவம் எய்தாமல் தனது 39-வது வயதில்  இறை எய்தினார். 

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது கவிராஜன் கதையில் 

'மீசை முளைத்த அளவிற்கு ஆசை முளைக்காத கவிஞன் பாரதி'  என்கிறார். 

அப்பேற்பட்ட பாரதியின் இறுதி  ஊர்வலத்தில் அவரது உடலைச் சுற்றிய ஈக்களின் எண்ணிக்கையை விட மகா கவியின் இறுதியாத்திரையில்  கலந்துகொண்ட மனிதர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததாக வருந்திப் பதிவிடுகிறார். 

கடுகளவிலும் அச்சம் இன்றி வெள்ளையனை துச்சமென எண்ணிய பாரதீ... காலனையும் விட்டதாகத் தெரியவில்லை. 

          " காலா என் காலருகே வாடா-சற்றே உனை மிதிக்கிறேன்" - என்று காலனை எச்சரித்தார் பாரதி.  இன்றைய சூழலில் அனைவரும் கொரோனா அச்சமின்றி உச்சரிக்க வேண்டிய 'பஞ்ச் டயலாக்' இது.  

உச்சரிப்போம். 'கொரோனா' வை எச்சரிப்போம். 

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே..." 

               - என்று உச்சிதொட இடியாக முழங்கிய பாரதியின் நூற்றாண்டில் அடி எடுக்கும் நாம் நம் சந்ததிகளின் மனதில் நம் பழம் பெருமைகளைப் பதியமிடுவோம். 

மரம் வளர்ந்து கிளை பரப்பினும் அதன் சுவாசம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் தன் வேர்களை நோக்கித் தானே இருக்கிறது. அது போல நாமும் நம் ஆணி வேர்களை அறிவோம். அறிவிப்போம். 

வேர்கள் பி(ப)டிப்போம். கிளை விடுவோம். பூவாகிக் கனி தந்து பறவைகள் வந்தடையும் கூடுகளாவோம். 

நம் மனமும் ஒரு பறவை தானே! 

பறக்கலாம். 

மனம்கொத்தும் பறவை பறக்கும்...


       பழம் நினைவுகள் உண்ணும்!

         

            Have your cup of tea....   


"கொரோனா" குறித்த பதிவும் "ஆசிரியர் தினம்"  குறித்த பதிவும் 'level crossing' - ல் கடக்கும் இரயிலாக வர 
"SNR" கொஞ்சம் இளைப்பாறியது. மீண்டும் புறப்படும். வேர்களை நோக்கியே பயணம் தொடரும். தொடர்ந்திருங்கள். தங்களின் தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றி... 

                                        Irudhy. A
                          



           


Sunday, September 5, 2021

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்...


ஆசான்களின் விரல்களில்
தூரிகை ஆனோம்...
எழுதப்படாத 
வெள்ளைத் தாள்களில்
 வாழ்வின் வண்ணங்கள் சேர்த்து... 
சித்திரங்களாகத் தீட்டி
உயர் நட்சத்திரங்களாக்கி! 
அழகு பார்க்கும்-
ஆசான்களுக்கு***
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... 


"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"... 
-கொன்றைவேந்தனில்  
இடம்பெற்ற அவ்வையார் பாடிய பாடலும், 

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" 
   - வெற்றிவேற்கையில்  இடம் பெற்ற அதிவீர ராம பாண்டியர் பாடிய பாடலும்...
அனைவர் வாழ்விலும் அடி நாதங்களாக அமைந்துவிட்டன.  இது நிதர்சனமான உண்மை. 

புறக்கண்களுக்குப் புலப்படாத இறைவன் நம் அகமும், புறமும் அறிய தன் சாயலாகத் தாயையும், தந்தையையும் நமக்குக் கொடுத்ததால்
 அன்னையும் பிதாவும் நாம் 
 முன் அறியத்தக்க தெய்வங்களாகினர்.

இரண்டு தெய்வங்களும் கூடி நம்மைப் புதிய உயிராகத் தெளிந்து  உணவில் அன்போடு அறம் சேர்த்து வளர்த்தெடுத்தனர்.  
நம் மனச்சிறகு முளைத்ததும்... 
அன்னையும் பிதாவும் 
நாம் எண்ணும், எழுத்தும் 
அறிய வேண்டி  இன்னொரு தெய்வத்திடம் நம்மை ஒப்படைக்கிறார்கள். 
எழுத்தறிவித்த ஆசான்களும் நம் கண்கள் காணும் கடவுளர்கள் ஆகிறார்கள். 

தாயின் கருவறையில்
 விதையாக விழுந்து... 
தந்தையின் தோள்பிடித்து, எழுந்து
கல்வியறைகளில் விரிந்து... 
வளர்ந்து.... 
மரமாகி, மொட்டாகி, பூவாகி, கனியாகி... 
உலகறிய
 விருட்சங்களாக விரிந்தோம்! 
நாம் வேர்கள் பிடித்து வளர
தங்களை உரமாக்கி... 
நம் வாழ்வில் நல் வண்ணங்கள் சேர்த்த ஆசான்களுக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருத்தலே நம் வாழ்வின் பயன்... 


         நம் எண்ணம் நம் வண்ணம்... 
பயணங்கள் தொடரும்..

மனம் கொத்தும் பறவையின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்....

Rewind
 
என் மனம் எனது முதல்வகுப்பின் ஆசிரியை குறித்த நினைவுகளை நோக்கிப் பறக்கிறது.  என் அன்னை எனக்கு மூன்றாம் வகுப்பின் (3c) ஆசிரியையாக  இருந்தார். இது எனக்குக் கிடைத்த ஒரு பேறு. 

பள்ளி
சகாயமாதா நடுநிலைப்பள்ளி
எம். கே. புரம்
மதுரை. 
முதல் வகுப்பு - 1A





எனது  முதல் ஆசிரியை
மதிப்பிற்குரிய 
திருமதி. பத்மா
            அவர்கள்... 
எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்துடன் தான் இருப்பார். அதிராத பேச்சு. ஆழ்கடலுக்குள் இருக்கும் அமைதி. இவைகளே மதிப்பிற்குரிய எனது முதல் வகுப்பு ஆசிரியையின் அடையாளங்கள்.

அடையாளங்களை அடைகாத்த உங்கள் மனப்பறவையும்  இப்போது பறக்கலாம். பழம் நினைவுகள் உண்ணலாம்... 

மனம் பறவையாகும்! பறக்கும்...


            Irudhy. A. 








Friday, September 3, 2021

குட்டிக் கதையும் நம்பிக்கை வாழ்வும்...

             Fly... 

       


  "God Is Love" 

                   Faith Never Fails...
              

Believe Be Live...

       "ஒரு கதை சொல்லட்டா..." 

          - என்ற வசனம் 'விக்ரம் வேதா' 
திரைப்படத்தில் இடம் பெற்று 'popular' ஆனது. காரணம் கதை கேட்டு கேட்டு வளர்ந்த சமூகம் நம் சமூகம். அப்புறம் எப்படி வசனம் 'popular' ஆகாமல் இருக்கும். 

இப்ப நான் 'ஒரு கதை சொல்லட்டா'
 
                Have your cup of tea... 
                   
Kutty Story... 

    நான் சொல்லவிருக்கும் கதை பலருக்குத் தெரிந்திருக்கலாம். 
இது ஒரு நீதிக் கதை. 'Remake' திரைப்படங்கள் போல நீதிக் கருவை எடுத்து  இக்கதைக்கு கொஞ்சம் திரைக்கதை சேர்த்துச் சொல்கிறேன். இக்கதைக்கும் தொடரும் பதிவிற்கும் சம்பந்தம் உண்டு. 

Open பண்ணா.... 

ஒரு அழகான கிராமம். 


பாலாறும் தேனாறும் ஓடிய கிராமம் என்று வருணிக்க முடியாவிட்டாலும்
 பஞ்சம், பட்டினியே பார்க்காத ஊர் என்று சொல்லலாம்.
 ஒரு 'Generation' விடைபெற்று அடுத்த 'Generation' தலையெடுத்த காலம். கிராமம் கொஞ்சம் அலங்கோலமானது. பொய்களும் புரட்டுகளும் கிராமத்தில் குடியேற ஊரில் முன்பு இருந்த செழிப்பும் வளமும் கொஞ்சம் கொஞ்சமாக ஊரைக் காலி செய்து வெளியேறின.
                                 கிராமம்...
            அன்று!...                        இன்று? 

 பொய்களும், புரட்டுகளும் கிராமத்தை குத்தகைக்கு எடுக்க ஊரில் மழை பொய்த்தது. நிலங்கள் வறண்டன. 

பொதுவாகவே, வீட்டில்  கொஞ்சம் கோபம்  இருந்தால் அதை உணவின் வழியே வெளிக்காட்டுவோம். ஆண்கள் உணவை மறுதலிப்பார்கள். Conditions apply. (உணவகத்திற்கு சென்று...? 'Company secrets' சொல்லக்கூடாது) பெண்கள் உணவில் சுவை குறைத்துக் காரம் கூட்டுவார்கள். (salt included) 
 அல்லது சமைக்கமாட்டார்கள். இது பொது நியதி. 

குறிப்பு

      'அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா பெண்கள குறை சொல்லிக்கிட்டு,
நாங்க கோபத்தை குப்பையில போட்றுவோம்' - என்று சொல்பவர்களுக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்கள். சரி விஷயத்துக்கு வருகிறேன். சீக்கிரம் கதை சொல்லிவிட்டு கடவுளைக் காணச் செல்லவேண்டும். கடவுளைக் காக்க வைக்கக் கூடாது. கடவுள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தயாராக இருக்கிறது. 
குட்டிக்கதையில், 
               கிராமத்தின் மீதான தன் கோபத்தை கடவுள் மழையை நிறுத்தி வெளிப்படுத்தினார். கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் கடவுள் இப்படித்தான்  வெளிப்படுத்துவார். விண்ணை மூடுவார் அல்லது மொத்தமாக வானைத் திறப்பார்.

'சும்மாவா சொன்னாங்க...' 

      "கடவுள் திறந்தத யாராலும்                     அடைக்க முடியாது. கடவுள்                   அடைச்சத யாராலும் 
           திறக்க முடியாது".

 உண்மை தான். 

       கதையில் கடவுள் கிராமத்தில் பசுமையே இல்லாதபடிக்கு வறட்சிக் கதவுகளைத் திறந்து வைக்க மக்கள் புலம்பித் தவித்தனர். அவரவர் இஷ்ட தெய்வங்களிடம் மழை வேண்டி மனுக்கொடுத்தனர். பூஜை பரிகாரங்கள் செய்தனர். பயன் இல்லை. கடவுள்  'lockdown' போட்டுக்கொண்டு தன் 
வீட்டுக்குள்ளேயே இருந்தார். 

        கிராமத் தலைவர் ஊர் நிலை குறித்து விவாதிக்க கிராமக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். 


மக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள கடைசியாக ஒரு சிறுமி வந்தாள். கூட்டத்தார் அனைவரும் சிறுமியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு சிரித்தனர். சிரிப்பிற்கான காரணம் சிறுமி கையில் குடை இருந்தது. சிறுமி சிரித்தவர்களைப் பார்த்துச் சிரிக்காமல் தன் கனவில் கடவுள் வந்தார் என்றாள். கேட்டவர்களில் சிலர் வைகைப்புயல்  வடிவேலு அவர்கள் உச்சரிப்பதைப் போல "அப்பறம்?" - என்று 'chorus' பாட சிறுமி மீண்டும் சிரிக்காமல் கனவில் வந்த கடவுள் என்னிடம்' நீ கூட்டத்திற்குப் போகும் போது குடை எடுத்துப் போ' என்றார். அதனால் குடை எடுத்து வந்திருக்கிறேன் என்றாள். அனைவரும் நகைத்தனர். 

         தலைவர் சிறுமியிடம் 'மழையப் பார்த்து மாசம் பல ஆச்சு. குடைய வெயிலுக்குக் கூட விரிக்கிறதில்ல. பலர் வீட்ல குடை இருக்குமானு கூடத் தெரியல. பூஜை, பரிகாரம் பண்ணியும் வராத கடவுள் உன் கனவுல வந்தாராக்கும்! குசும்பு கடவுளுக்கா? உனக்கா?. இந்தப் பெரிய மனுஷியோட பெத்தவுக கூட்டத்துல இருந்தா கூட்டிகிட்டு வீட்டுக்குப் போங்க. '-என்று சொல்லி இடிஇடியெனச் சிரித்து முடிக்கும் முன் சிறுமி கூட்டத்தைக் கடந்து வெகு தூரம் சென்று மறைந்தாள். 

               அப்போது வானத்தில் கருமேகங்கள் திரண்டன. மரத்தின் அடியில் அமர்ந்திருந்த கிராமத்து தலைவர்  வான் பார்த்து வாய் பிளக்க விண்ணிலிருந்து வந்த மழைத்துளி வாய் பிளந்த தலைவரின் நாக்கில் சொட்டு வைத்தது. மேகங்கள் தரையிறங்கி பெரு மழையாகி ஊருக்குள் எட்டு வைக்க சிறுமி குடை விரித்தாள். 


வானம் திறந்து பெருமழை பெய்தது. குடைச் சிறுமி சந்தோச மழையில் நனைந்தாள். 

கதை சொல்லும் நீதிகள்

        1. கடவுள் கருணைமிக்கவர். 
          2. குற்றங்களை மன்னித்து                       தயை புரிவதில் கடவுள்                             தாராளன். 
                3. நம்பினவர்களைக்                                   கடவுள் ஒருபோதும்
                      கை நெகிழுவதில்லை.

கடவுள் எல்லாம் கடந்தவர். சொன்னநேரம் கடப்பதற்குள் செல்ல வேண்டும். 

இனி வருவது...

          நிஜமல்ல. நிழல். இருப்பினும்            நிழலுக்குள் நிஜங்கள்                                 ஒளிந்திருக்கின்றன. 

கடவுள் நம்மோடு!

கடவுள் தயாராகவே அமர்ந்திருந்தார். விடைகள் தயார் என்றேன். 
ஆண்டவன் அமைதியாகச் சிரித்தார். 

'நீங்கள் கேட்ட கேள்விகளின் வரிசைப்படிதான் பதில்கள் சொல்ல வேண்டுமா? எனக்கு வரிசைகள் ஞாபகத்தில்  இல்லை. ஆனால் எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு'  என்றேன். 
கடவுள் கடுகளவுகூட கோபம் கொள்ளாமல் "எனக்கு 
உன்னிடத்திலிருந்து எந்த பதில்களும் வேண்டாம். எல்லாம் நான் அறிவேன். அனைவரும் அறியவே கேள்விகள் கேட்டேன். கேள்விகளுக்குப் பதில்களை அறிய முயன்றிருப்பீர்கள். பதில்களைத் தேடிக் களைத்திருப்பீர்கள். அறிந்தும் அறியாதவர்களாகவே இருக்கிறீர்கள். நீங்கள் தற்பொழுது பார்த்துவரும் 'கொரோனா' காட்சிகளில் எல்லா பதில்களும் படங்களாக ஓடிக்கொண்டிருக்கின்றன. எதை விதைத்தீர்களோ அதையே அறுக்கிறீர்கள். 

'கொரோனா' காட்சிகளும் & சாட்சிகளும்

காட்சி 1

        1. மரங்களை அழித்தோம். விளைவு
       மருத்துவ மனைகளில் உயிர்க்காற்றுக்காக  (ஆக்ஸிஜன்) 
அல்லாடினோம். 

காட்சி 2
       
     மண்ணுக்குள் மழைநீர் புகமுடியாதபடி 'மட்காத கழிவுகளை (பாலிதீன் பிளாஸ்டிக் பை போன்றவைகள்) 
மண்ணுக்குள் விதைத்தோம். 
விளைவு---
விதைத்தவைகளை அறுவடை செய்து உடல் முழுக்க  (கொரோனா கவச உடைகள்)  சுற்றித் திரிகிறோம்.

காட்சி 3

   எங்கெங்கும் கறை படிந்த கைகள். 
விளைவு 
கைகளைத்  (sanitizers) திரவங்கள் கொண்டு கழுவிக் கொண்டே இருக்கிறோம்.

காட்சி 4

         நல்லன காண இரண்டு கண்கள். நல்லன கேட்க இரு காதுகள். குறைத்துப் பேச ஒரு வாய். ஆனால் நடப்பது வேறு. நல்லன பார்ப்பதில்லை. நல்லன கேட்பதில்லை. அதிகமான பேச்சுக்கள் என்றே நகர்ந்த வாழ்வு. என்னையும் சேர்த்துத்தான்  சொல்கிறேன். 
விளைவு----- 
கண்களை மட்டும் திறந்துகொண்டு காதடைத்து வாய் மூடித் திரிகிறோம். 

காட்சி 5

          மீறுதல்களற்ற வாழ்வைக் கடந்தது அரிது. ஆசைகள் தான் அனைத்துக்கும் அடிப்படை.  அடிப்படை வசதிகள் தாண்டி வீட்டிற்குள் ஆடம்பரங்களைக் குவித்தோம். 
விளைவு 
வீட்டிற்குள்ளேயே முடங்கிக் குவிந்தோம். 
ஓய்வில்லாத உலகம் ஓய்வெடுத்துக் கொண்டது. 

'கொரோனாவைக்' கடிந்து பயனில்லை. கற்றுக் கொண்டால் குற்றமில்லை... 

            கடவுள் மறுமுறை சிரித்தார். 'போய் வா' என்றார். 

        ' கொரோனா' எப்போது? என்று என் மனக் கேள்வியைக் கேட்குமுன்

     "Life Is Beautiful. Be Happy..." 

"எல்லாம் கடந்து போகும்...." 

கடப்பவைகள் நல் வழிகளில் இருக்கட்டும். 
               - என்றபடி ஆண்டவன் மறைந்தார். 

எல்லாம் கடக்கலாம். சிறகு விரித்துப் பறக்கலாம். 

மனம்கொத்தும் பறவை பறக்கும்... 



  

          


Irudhy. A

 

  
 





Thursday, September 2, 2021

சத்தமில்லா யுத்தம்...

Fly...



"Life is short. Be Happy"..
என்ற வரிகளைக் காலம் 'கொரோனா' உளி கொண்டு உலகத்தின் கல்வெட்டுக்களில் பொறித்துக்கொண்டே இருக்கிறது. 
  
'Life is very short நண்பா! Always Be happy..
 - என்ற பாடல் வரிகள் கொரோனாவுக்கு முன் எழுதப்பட்டது. கொரோனா காலத்தில் 'popular' ஆனது. வரிகளுக்குச் சொந்தக்காரர் திரு. அருண்ராஜா காமராஜ் அவர்கள். இவரோடு பேசும் வாய்ப்பு அமைந்தது. இயல்பானவர். அச்சமயம் 'கனா' திரைப்படத்தினை இயக்கியிருந்தார். 
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  எளிமையாகவே இருந்தார். இவரைப்போலவே
இவரின் பாடல் வரிகளும் எளிமையாக மனசுக்குள் மேடையிட்டு அமர்ந்துகொள்ளும்.
'மாஸ்டர்' படப்பாடல் எழுந்த சூழலைப் பற்றி  இவர் தனது நேர்காணலில் பகிர்ந்தது நினைவில் இருக்கிறது. 

'ஒரு  விபத்து.  எனக்கு எதுவும் ஆகல. கார் கொஞ்சம் டேமேஜ் ஆயிடுச்சு. கார ' toe 'பண்ணி recovery van-ல கோர்த்துவிட்டாங்க. அந்த நேரத்தில் தான் இந்தப்பாடல் எழுதும் வாய்ப்பு வந்துச்சு. மறுநாள்
' lyric 'வேணும்னு சொன்னாங்க. அப்ப இருந்த சூழல்ல முடியுமான்னு மனசு கேட்டுச்சு. இருந்தாலும் நல்ல வாய்ப்ப விட முடியாம சரின்னு சொல்லிட்டேன். அந்த நேரம் விபத்துல இருந்து தப்பிச்ச மனசு 
"life is very short நண்பா" - னு வரிகள எழுதுச்சு"- 
என்று பாடல் உருவான விதத்தை பகிர்ந்திருந்தார். பாடல்  வரிகளைப் போலவே அடுத்து உலகின் போக்கு அமையும் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

" சத்தமில்லாமல் யுத்தம் ஒன்று வருகுது! "என்று ஆண்டவன் உலகிற்குச் சொல்லியிருக்கலாம். ஆனால் சத்தம் நிறைந்த உலகம் சத்தமற்ற யுத்தத்தின் எச்சரிக்கை ஒலியைக் கேட்கவில்லை. 

தற்சமயம் இப்பதிவை வாசித்துக்கொண்டிருக்கும்  உங்களில் சிலருக்கு இப்ப எதுக்கு இந்த விஷயம் ஓடுது? என்ற கேள்வி எழலாம். கேள்வியில் நியாயம் உண்டு. காரணம் 'மனம் கொத்தும் பறவையின்' பயணம் கடந்த காலத்தில் இருந்தது. பதிவுகளின் தொடர்ச்சிப்படி இப்பொழுது மிக்கேல் பட்டணப் பயணம் தொடர்ந்திருக்க வேண்டும். பயணத்தின் தொடர்ச்சியை நிறுத்தி இப்பதிவை தந்ததற்குக் காரணம் நம் எல்லோருடைய வாழ்க்கைப் பயணத்தையும் நிறுத்திப் பார்த்த 'கொரோனா' போர் குறித்துப் பதிவிட மனம் விரும்பியது. ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 

செப்டம்பர் - 1 

நீண்ட நாட்களுக்குப் பின் கல்லூரிகளும், பள்ளிகளும் திறக்க அரசு பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. எனினும் 'கொரோனா' இன்னும் சிகப்புக் கம்பளம்  விரித்து நம்மை வீழ்த்த விரிந்த  கரங்களோடு காத்து நிற்கிறது. நிற்காது பயணிக்க வேண்டிய சூழலில் நாடும், வீடும் சுழல நம் பயணங்கள் தொடங்கி நாட்கள் ஓடிக்கொண்டே 
இருக்கிறது. அவ்வப்போது மூன்றாவது அலை குறித்த கேள்விகளும் மனசுக்குள் எழுந்த வண்ணம் உள்ளன. இச்சூழலில் தற்பொழுது நம்முடன் நம் பிள்ளைகளும் 
சேர்ந்துகொண்டார்கள். தனியாகப் பயணிக்கும் பொழுதைவிட சேர்ந்து கூட்டமாகப் பயணிக்கையில் புற நெருக்கடி ஏற்படலாம். இருப்பினும் அகத்தை நெருக்கடி இல்லாமல் விசாலமாக வைத்துக்கொள்வோம்.

 தற்போதைய சூழலில் நடக்கும் 'கொரோனா' யுத்தம் சத்தமின்றி விழிகளுக்கு அப்பாற்பட்டதாக நடந்து கொண்டிருக்கிறது. போரில் வாள் சுழற்றாமல் முகக்கவசங்கள் அணிந்தபடி  யுத்தத்தை எதிர் கொள்வதே சாலச் சிறந்தது. 

வாழ்க்கையின் முரண்
           'முகமூடிகளை' (Mask) 
குறிப்பிட்ட சில துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமே தங்களின் துறை சார்ந்த பணிகளின் போது அணிந்து பணி செய்தனர். ஆனால் காலம் எல்லாவற்றையும் மாற்றிப்போட்டது. 

முகமூடிகள் முகக் கவசங்களாகின. முகக் கவசங்களின் விற்பனை பெருகியது. முகக்கவசம்  அணிதல் கட்டாயமாக்கப்பட்டது. 

கங்காரு தன் குட்டியை வயிற்றுப்பையில் சுமந்து திரிவது போல நாம் முகக்கவசங்களையும், 'sanitizer'-களையும் சுமந்து கொண்டு திரிகிறோம். 



 
"WEAR MASK PROPERLY...கைப்பேசியில் தொடர்ந்து வரும் குரல் எச்சரித்துக்கொண்டே இருக்கிறது.  'MASK' அணியாமல் வருபவர்களைப் பார்த்தால் 'Where Mask? Please Wear Mask' என்று மனம் எச்சரிக்கத் தூண்டுகிறது 
  
 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதை அறிந்திருந்தும் நாம் (உலகம்) மாறாமல் தொடர்ந்து செய்த பல தவறுகள் இப்பொழுது 'பூமராங்' ஆயுதங்களாகி, விட்டெறிந்த நம் கைகளை நோக்கி வந்த வண்ணம் உள்ளன.

" பலவித problems will come & go. கொஞ்சம் chill panu mame" 
         பாடல் மனசுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. 

        எத்தனை முறை தேய்த்துக் கழுவினாலும் அழிந்துபோகாத உள்ளங்கைகளின் ரேகைகள் போல செய்த தவறுகளும் அழியப் போவதில்லை. இதற்கு சாட்சியங்களாக தற்போது நிகழ்ந்துவரும் 'கொரோனா' காட்சிகள் போதும். உண்மைகள் உணரலாம். 

"life is very short நண்பா..." - பாடல் எழுந்தபோது 'கொரோனா' இல்லை. படம் வெளிவரத் தயாராக இருந்தபோது    'கொரோனா'  
' life is very short  நண்பா... " என்று தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. ஆட்டம் கண்ட தேசங்கள் கதவடைத்தன. (lockdown) இருப்பினும்  கொரோனா உயிர்களைக் களை எடுத்த வண்ணம் இருந்தது. வாழ்வின் மீதான நம்பிக்கைகளை 
' கொரோனா 'கை கழுவ வைத்தது. கண்ணுக்குள் இருந்தவர்களை கண்கள் காண முடியாதபடி ' கொரோனா 'கவர்ந்து போனது. 

எழுத்துச் சித்தர் அமரர். திரு. பாலகுமாரன் அவர்களின் 
'கற்றுக் கொண்டால் குற்றமில்லை'
வாசிக்க அருமையான  புத்தகம். வாசித்துப் பாருங்கள். 
             நல்லன அனைத்தும் கற்றுக்கொள்ளலாம் என்று எழுந்தால் சூழல்கள் சில்லரைகளைச் சிதறவிட்டு குனிந்து பொறுக்கச் சொல்லும். இனியும் குனிந்து பொறுக்கிக் கொண்டு தரை தவழ முடியாது. எழுந்து நல்லன கண்டு நட என்கிறது மனம். 
  ' கற்றுக்கொண்டால் குற்றமில்லை'. இது கற்றுக் கொள்ளும் காலம். 
    'காற்றைப் பார்க்கிறவன் விதைக்கமாட்டான்' - என்கிறது வேதாகமம்.  கால நேரம் பார்க்காமல்  நல்லவைகளை
விதைக்கும் காலம். விதைக்கலாம். 

'கொரோனா' நமக்கு நடத்தியுள்ள பாடம் நம்மிடம் கற்றுக்கொண்டது தான். இப்பொழுது நமக்கே தலைமை ஆசிரியராகி தலைமீது ஏறி தடியுடன் அமர்ந்திருக்கிறது. இப்போது அது நடத்துகிற பாடம் அத்தனையும்  'out of syllabus' என்பதுபோல பதில்கள்  தெரியவில்லை. 

அனைத்தையும் படைத்த ஆண்டவன் இருக்கிறாரே!
அவரிடம் கேட்டால் நிச்சயம் பதில் 
கிடைக்கும் என்று தோன்றியது. ஆண்டவனும் வந்தார். ஆனால், கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் திரும்ப கேள்விகளைக் கேட்கிறார்! திருவிளையாடல் (சிவாஜி&நாகேஷ்) பட 'தருமி' போல மனம் கூப்பாடு போடுகிறது.
 
இனி... 

தொடர்வது நிஜமல்ல. நிழல். ஆயினும் நிழலுக்குள் நிஜங்கள் ஒளிந்திருக்கிறது. 

கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பம்

ஆண்டவனுக்கு அஞ்சு நிமிஷம்

ஆண்டவன் என்னிடம் 
கேள்விகளுக்கு முன் கொஞ்சம் பேசலாமா? என்று கேட்டார். 'ஆனது ஆச்சு. ஒரு அஞ்சு நிமிஷம். பேசுங்க' என்றேன். 

         Five minutes only

          Time Starts Now... 


                   ஆண்டவன்
அன்று...... 

நான் உலகைப் படைத்தபோது அனைத்திலும் நல்லவற்றையே கண்டேன். அனைத்தும் படைத்தபின் ஏழாம் நாள் ஓய்ந்திருந்தேன். ஏழாம் நாள் நீங்களும் ஓய்ந்திருக்கிறீர்கள். நன்று. 

( No Choice. Answer all questions.) 

இன்று
கேள்வி 1

உலகை என்றேனும் ஓய விட்டிருக்கிறீர்களா?

                       ஆண்டவன்
அன்று...


















என் சாயலாக உங்களைப் படைத்தேன்.உற்ற துணையும் கொடுத்தேன். இருந்தும் நன்மை, தீமை அறியும் கனியை ஆர்வக்கோளாறில் உண்டு உங்களின் ஆதிப்பெற்றோர் தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக்கொண்டனர். ஆசையும், எல்லை மீறலும் (நன்மை, தீமை அறியக் காரணமான  ஆப்பிள்) ஆப்பிற்குக் காரணமாயின. 

இன்று
கேள்வி 2

ஆசைகளும், எல்லை மீறல்களும் இல்லாமல் வாழ்கிறீர்களா? 

            Three minutes only... 

                     ஆண்டவன்
அன்று...
                                                 ஆதிப்பெற்றோரிலிருந்து அவர்களின் வழி மரபுகள் பலுகிப்பெருக இறுதியில் ஒரு பெரும் ஜனத்திரளாகி பொய்களாலும், புரட்டுகளாலும் நல்லதென்று நான் கண்டு படைத்த அனைத்திலும் நஞ்சைக் கலந்தனர். நஞ்சு கலந்தது அறிந்திருந்தும் நெஞ்சு உரத்துடன் அலைந்தனர். பொறுத்திருந்து பொங்கி எழுந்தேன்.  பெரும் ஜலத்தால் உலகை அழித்தேன். இருப்பினும் நான் ஆண்டவன் ஆயிற்றே.  அப்பொழுது என் பார்வையில் உத்தமனாக இருந்த நோவாவின் வழி மரபை மட்டும் பெரும் பேழைக்குள் அனுப்பி உயிர்பிழைக்க வைத்தேன்.

நோவாவின் பேழை


 நோவா உத்தமனாக இருந்ததால் என் கோபம் குறித்து முடிந்தவரை மற்றவர்களுக்குச் சொல்லி மனம் மாறி தன் பேழைக்குள் பிரவேசிக்க அழைப்பு விடுத்தான். காதுகள் இருந்தும் கேளாதோர் ஆயினர். பெருவெள்ளத்துக்குள் அமிழ்ந்தனர். 

 இன்று
கேள்வி 3
















அன்றைய நோவாவைப் போல நன்மையானதை அறிய உங்களிடையே வாழும் நல்லவர்கள் செல்லும் சொல்லும் பாதைகளை அறிந்து மனம் திரும்பியிருக்கிறீர்களா? அல்லது நான் உலகில் காட்டும் சமிக்ஞைகளை (புயல், பெருமழை, பூகம்பம்) அறிந்து மனம் மாறியிருக்கிறீர்களா? 
இன்னும் நிறைய கேள்விகள் உண்டு. 

                     Times Up'

நீ கொடுத்த ஐந்து நிமிடங்கள் முடிந்துவிட்டது.  நான் எல்லைகள் மீறுவதில்லை என்பதால் முடித்துக்கொள்கிறேன். ஒருநாள் அவகாசம் தருகிறேன். பதில் வேண்டும். 

"இன்று போய் நாளை வா"
                 - என்றபடி ஆண்டவன் மறைந்து போனார். 

ஒரு நாள் அவகாசம் இருக்கிறது. கேட்ட கேள்விகளுக்கு ஆண்டவனிடம்  பதில் சொல்லி 'கொரோனா' எப்போது ஒழியும்? என்று தெரிந்துகொள்ளலாம். 

Oneday countdown starts...


மனம்கொத்தும் பறவை
பறக்கும்...
                                         Irudhy. A                                 


 





















அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...