மழைக் காலத் தேநீருடன் மனம் கொத்தும் மையல் காதலோடு....
மழை கண்ட மயிலாக
கண்ட காதலை
மனம்கடந்த காதலை மனப்பறவை தன் சொற்தோகையால் விரித்தாடும்...
ஆடலில் குறை இருப்பின் பொறுத்தருளுங்கள். நிறை கண்டால் பகிருங்கள்.
நிறை இருக்க விரும்பி முனைகிறேன். முயல்கிறேன்.
இனி ஞாயிறு தோ(ன்)றும்... மழைக் காலத் தேநீரோடு
மனம் உண்ணும் காதல் உங்கள் விழி வழி உலா வரும்.
காதல் உலாப் போகும் காலம்...
காதல் செய்வோர்...
காதலில் வென்றோர்.
காதலில் தோற்றோர்.
இம்மூன்றிலும் ஆதி வேராக காதல் மனம் முழுக்க பற்றிப் பரவி படர்ந்திருக்கும்.
பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் காற்றுப் போல கடற்கரை மணலினும் மிகுதியாக நிலத்தினும் பெரிதாக!
வானினும் உயர்ந்ததாக!
காதல் தன் வசீகரக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி...
மனங்கள் தோறும் மன்மதநடை இட்டுக் கடக்கிறது.
காதலைக் கடக்காதவர் எவரும் உண்டோ? காதல் எல்லோர் மனத்திலும் வேர் பிடித்திருக்கும். பிடித்திழுக்கும் காதல் எதன் மீது? என்பதில்தான் வேறுபாடு இருக்கும். மற்றபடி காதல் மனங்களின் 'பொதுவுடைமை' என்பதில் ஐயம் இல்லை.
சிலருக்கு வான்நிலா!
மேலும் சிலருக்கு நட்சத்திரம்!
காதல்...
சிலருக்கு சூரியன்!
மேலும் சிலருக்கு
அன்னார்ந்து பார்க்கும் வானம்!
காதல்....
இன்னும் சிலருக்கு...
கால் நனைத்துக் கடல்சேரும் கடற்கரை அலை!
காதல் கடல் காண கரை செல்லலாம். பாறை மோதிச் சிதறும் அலை கண்டு ரசிக்கலாம். கரை இறங்கிக் கால் நனைக்கலாம். கரையோரமாகவே நடந்து கண்கள் காண கடல் ரசிக்கலாம்.
காதல் ஒரு கடல்!
காதலை மனம் ஏன் கடலாக எண்ணுகிறது? ஆராய்ச்சி தேவையில்லை.
'ஆராய்தல்'
காதலுக்கு எப்பொழுதும் 'அந்நியன்' தான்.
மனம் காதல் கடலின்
ஆழம் அறியாது.
ஆராயாது உள் இறங்கும்.
சில வேளை முத்தெடுக்கும்!
சில வேளை மூச்சறுக்கும்.
கரை ஒதுங்கும்.
காதல் கடல் அலை எப்பொழுதும் ஓயாது.
கடல் ரசிக்கலாம். ஆழ் கடல் அமைதி உணரலாம். ஆராயத் தேவையில்லை.
மூழ்கலாம். முத்தெடுக்கலாம்! மூச்சறுக்கலாம்!
கரை ஒதுங்கும் சிப்பிகளாகலாம்.
ஆதலின் காதல் செய்வீர்!....
காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்...'
-என்றார் மகாகவி பாரதி.
பாரதியின் காதல் தமிழினத்தின் மீதும், தேசத்தின் மீதும், தாய்த் தமிழின் மீதும் தான் இருந்தது. மிகையில்லை.
மற்றபடி...
"செல்லமா! செல்லம்மா...
உன் அங்கம் மின்னும் தங்கமா!" என்றெல்லாம் காதலில் திளைக்கவில்லை மீசைக்கவி.
தேசத்தின் மீதான பாரதியின் காதல் அளப்பறியது.
பாவேந்தர் பாரதிதாசனோ முதுமையின் காதலுக்கு முகவுரை எழுதினார்.
முதியோர் காதலில்...
"காய்ந்த புற்கட்டு அவள் உடம்பு
...... .........
இருக்கின்றாள் என்பதே
எனக்கின்பம்"
-என்று முதுமைக் காதலில் முழுமை கண்டார்.
இனி...
தொடரும் வானில்
காதல்
பிறை நிலவாக...
முழுமதியாக...
தேயும். வளரும். தேயும்...
பின் முழுமதியாகும்!
காதல் கடலா? நீளும் வானமா?
வான் வரும் நிலவா?
ஆராயத் தேவையில்லை.
ஒவ்வொரு ஞாயிறும்....
உதயமாகும் உறக்கம் தொலைத்த காதலும், உறங்க மறுக்கும் விழிகளும் மனம் கொத்தும் பறவையாக காதல் வானில்
உலாப் போகும்.
காதல் கண்கள் உறங்கிடுமா!
காதல் கடலில் சிறு துளிகள்...
உறக்கம் தொலைத்த காதல்...
உறங்கா விழிகள்!
விழித்திருக்கும் இரவின் மடியில்-
முடிவில் விடியலாய் வருவாள்...
விழி திறந்து கூவினான்.
அவளை வரவேற்கும்
சேவலானான்!
கொக்கரக் கோ கோ...
இது காதல் பாட்டு.
காதல் - காதல் செய்வோரை படுத்தும் பாட்டு!
பாட்டெடுக்கும்.
மனம்கொத்தும்! பறக்கும்...
Irudhy.a