மிக்கேல் பட்டணம் தற்பொழுது...
16-10-2021 - (சனிக் கிழமை) அன்று மிக்கேல் பட்டணம் சென்றேன்.
மிக்கேல் பட்டணத்தின் மண் வாசனை நுகர்ந்து 37 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்னமும் எனது சுவாசக் காற்றில் அம்மண்ணின் வாசமும், கண்கள் முழுவதும் அப்பிக் கொண்ட வெயிலின் வெளிச்சமும் நெஞ்சுக் குழிக்குள் வேர்கள் பிடித்துப் பரவிக் கிடக்கிறது. எனது 10வது வயதோடு ஊரின் தொடர்பு விட்டுப்போனது. எனது 47-வது வயதில் மீண்டும் மண் தொட்டேன். மதுரை செல்லும் போதெல்லாம் மிக்கேல் பட்டணம் செல்ல நினைப்பேன். ஆனால் சென்றதில்லை. என் தந்தையின் ஊர் 'இடைக்காட்டூர்'. புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் தேவாலயம் இங்கு தான் உள்ளது.
நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் 'இடைக்காட்டூருக்கு' முதன்முதலாகச் சென்றேன். சென்னை வந்த பிறகு மதுரை செல்லும் போதெல்லாம் பெரும்பாலும் இன்றுவரை இடைக்காட்டூர் செல்லாமல் சென்னை திரும்பியதில்லை. ஆனால், சிறுவயதில் அறிந்து தெரிந்து ஓடி விளையாடிப் பழகிய 'மிக்கேல் பட்டணம்' தொடர்பு விட்டுப் போனது. சிறுவயதில் அறியாத கண் காணாத 'இடைக்காட்டூர்' வாழ்வின் பின் பாதியில் முழுமையாக ஒட்டிக் கொண்டது. வாழ்வின் விசித்திரங்கள் வரையும் காலச் சித்திரங்கள் இவை. ஆனால்,
இம்முறை மனம் சிறகு தட்டிப் பறந்து மிக்கேல் பட்டணத்தின் மண்ணில் கால் ஊன்றியது.
வேர்கள் நோக்கிய காலம்
'ஆக்டோபஸ்' கரங்களோடு விரிந்து பரந்த கருவேலங்காடுகள் சாலையோரங்களில் விரிந்திருந்தன.
பச்சைத் தோகை விரித்தாடிய கரும்புக் காடுகளையும், மண் உயர்த்திப் பிடித்த ஒட்டடைக் கம்புகளாகப் பனைமரங்களும்
உயர்ந்து நிற்க ஒற்றை வழிப் பாதைகளில் ஒளிக் கற்றைகளாகக் கடந்த காலக் காட்சிகளும் மனசுக்குள் நிழலிட வெயில் பூத்துக் கிடக்கும் மண் நெருங்கினேன்.
சாலையோரம்
'நான் இங்கின தான் இருக்கேன்' - என்றபடி சுவரில் ஒட்டிக்கிடந்தது 'மிக்கேல் பட்டணம்' ஊர்ப் பெயர்ப்பலகை.
சிமிண்டுக் கலவை பூசிக் கொண்ட சாலைகள் அன்று 'SNR' நின்று இளைப்பாறிய தடங்களைத் தடயமே இல்லாமல் தரை துவட்டியிருந்தன. 'குருசடி' ( க்ரூஸ் அடி) மட்டும் இருந்தது. அன்று 'குருசடி'யில் மாதம் ஒரு முறை பிரார்த்தனை நடக்கும். மற்றவேளைகளில் ஊரின் வருத்தப்படாத முதியோர் சங்கத்தினர் அமர்ந்து அரட்டை அடித்துக் கிடக்கும் அரட்டை அரங்கமாக 'குருசடி'
களை கட்டிக்கிடக்கும். தற்பொழுது கடந்த போது வர்ணம் பூசப்பட்ட கம்பி வலைக்குள் மணம் வீசாத வண்ணம் நிறைந்த காகிதப் பூப் போல குருசடி பூத்துக்கிடந்தது. இரண்டு மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். 'குருசடி' கடந்து மிக்கேல் பட்டணத்தின் நுழைவு வாயிலைக் கடக்கையில் வான் நிமிர்ந்து பார்க்க...
'புனித மிக்கேல் அதிதூதர்'
தன் சிறகு விரித்து காவல் காத்தபடி நின்று கொண்டிருந்த சூரூபம் கண்டேன்.
மிக்கேல் பட்டண நுழைவு முகப்பு
புனித மிக்கேல் அதிதூதர்
வெளியில் இருந்தபடி பார்த்தேன். மாற்றங்கள் தென்பட்டன.
தேவாலயக் கொடிமரம்
தேவாலய உள்பகுதி
புகைப்படங்கள் எடுத்தேன். ஆலய வளாகத்திற்குள் இருக்கும் 'மாதா கெபி' வந்தேன்.
மாதா 'கெபி'
அப்போது ஒரு சேவல் சிறகு தட்டி மதிற்சுவரில் நடந்து 'கொக்கரக்கோ கோ...' - எனக் கொக்கரித்துச் சிறகு தட்டிக் கடந்தது.
அந்தப் பருவம் அப்படி.
மாதாகெபியில் ஜெப மாலை முடிந்தவுடன் சுண்டல் இலையோடு ஓர் ஓரமாக ஆசுவாசமாக அமர்ந்து ஒவ்வொரு சுண்டலாக வாயிற்குள் லாவகமாக வீசி மென்றபடி மற்ற கதைகளும் வாய் வழியே அறைபடும். சிரித்துக் குணுகினாலும் கையிலிருக்கும் சுண்டல்இலை தரை தொடாது. காரணம், சுண்டலுக்கு முன் மண்டைவெல்லப் பச்சரிசிப் பதார்த்தம் தரப்படும். இரு கைகளையும் நீட்டி இடம் வலமாக கொஞ்சம் கொஞ்சம் வாங்கி உள்ளே தள்ள பதார்த்தம் அப்படியே வாயிற் படி தாண்டி வயிறு செல்லும். சுண்டல் பெறும் பொழுது மண்டைவெல்லப் பாகு கைகளில் ஒருவகைப் பிசினாக உருமாறி கைசேர்ந்த சுண்டல்இலையைத் தரை தொடாது பார்த்துக் கொள்ளும். பலமான பிணைப்பு. விழவே விழாது. (Conditions apply)
'மாதா கெபி' யின் நினைவுகள் மனசுக்குள் நிலவாகக் குளிர்ந்தது.
சரி. ஊருக்குள் செல்லலாம் என்றெண்ணி தேவாலயம் விட்டு வெளியே வந்தபோது வெயில் விழுந்த சூழல் மாறி கருமேகங்கள் சூழ்ந்து மண்ணை மழை
தொட்டது விந்தையாக இருந்தது.
மழையில் நனைந்தபடி ஊருக்குள் சென்றேன்.
என் மனம் எனும் கூட்டுக்குள் வெக்கை படர்ந்த ஊராகவே பதிந்து கிடந்த 'மிக்கேல் பட்டணம்' நீண்ட வருடங்கள் கடந்து நேரில் கண்டபோது ஏனோ பகற்பொழுதில் மழையாகி தரையெங்கும் பொட்டு வைத்து மண் மனம் பூசி தண்ணீராகித் தரை கடந்து மனசுக்குள் வெக்கை மறைய குளுமையைக் கொண்டு வந்து சேர்த்தது.
மழையில் நனைந்து பழம் நினைவுகளில் தலைதுவட்டிக்கொள்ள ஊருக்குள் நுழைந்தேன்.
பழம் நினைவுகள் உண்ணும்...
பறக்கும்...
6 comments:
உங்கள் வார்த்தைகளால் மிக்கேல் பட்டண வாசனை இன்றும் மாறாமல் மணக்கிறது.. நன்றி... அருமை...
மிக்கேல் பட்டினத்த பாத்தாச்சு...
மிக்க நன்றி. Thanks cheta...
வாசிப்பிற்கு நன்றி. தொடர்ந்திருங்கள்...
தாங்களின் மலரும் நினைவலைகள் அருமை. தாங்களின் வரவு கண்டு மேகங்கள் கூட மழை பொழிந்து மகிழ்ந்திருக்கின்றது. தொடரட்டும்.....
வெயில் மட்டுமல்ல. மழையும் நானே! என்று உணர்த்தியது மிக்கேல் பட்டணம். வாசிப்பிற்கு நன்றி.
Post a Comment