About Me

Thursday, October 28, 2021

வீடு... வாசல், வாழ்வு... (மிக்கேல் பட்டணம்)

Fly...


மழையின் அருமை கோடையில் விளங்கும். கொடையின் அருமை கொடுத்தலில் புரியும். 

                         கோடை... 
                             மழை....
                               கொடை!

எப்படியோ தொடங்க நினைத்து கட்டக் கடைசியாக அழைக்காமல் வீடு வந்த விருந்தாளி கணக்காக இப்படியொரு தொடக்கம் இப்பதிவிற்கு அமைந்தது.

 தொடங்கி விட்டது மழைக்காலம்.

கறுப்புக்குடை விரிக்காமல்
பூக்குடை விரிப்போம்!
மழை மண்ணின் பூக்காலம்.
மனம் பூக்கும் காலம்!

மழை விட்ட பின்னும் விடாத தூறல்... சாரல் போல சொந்த ஊர் குறித்த நினைவுச்சாரல்கள் மனசுக்குள் சதா தூறிக் கொண்டே, மனம் காய்ந்துபோகாதபடி  சொந்த ஊர் மண்ணின் வாசனைகள் மூக்கின் நாசிகளில் கர்ணனின் கவசகுண்டலம் போல ஒட்டிக்கிடக்கிறது. இவ் வாசனையை யாசகமாக எவராலும் கவர்ந்து செல்ல முடியாது. 

  "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" - 
              என்றார் மீசைக்கவி பாரதி. 

'எல்லோரும் மன்னர்' என்றால் அனைவருக்கும் ஆளும் தேசம் ஒன்று உண்டு என்று தானே அர்த்தம்.
ஆள ஒரு தேசமிருக்கிறதோ இல்லையோ ஆசுவாசமாக அமர்ந்து பழம் நினைவுகளை உண்டு அசை போட எல்லோருக்கும் சொந்த ஊர் உண்டு. காலந்தோறும் மண் மீதான வன்முறைகள் வளர்ந்தபடிதான் உள்ளன. பளபளக்கும் சாலைகள் மலைப்பாம்பு போல ஊர்ந்து பசுமைகளை கபளீகரம் செய்ய கிராமங்கள் தன் இயல்பைத் தக்க வைக்கமுடியாமல் 
காலமாற்றத்தில் தன் இயல்முகம் மறந்து பல்வேறு ஒப்பனைகளை இட்டுக்கொண்டு அரிதாரம்பூசி உள்ளுக்குள் மட்கிக் கிடக்கும் தனது இயல்பை மறைத்து இறகு உதிர்த்தபடி பறக்கும் பறவை போல கிராமங்கள் நகரங்களாகி  ஒவ்வொரு நொடியாக நரகம் நோக்கி அடிஎடுத்தபடி கடக்கிறது.

சிறு பிராயத்தில் நான் எனது ஊரில் கண்ட காட்சிகளை தற்பொழுது ஊர் சென்றபொழுது காணமுடியவில்லை. ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இதுதான் இன்றைய சூழலின் நிதர்சனம். ஆனால்,தற்பொழுது  நான் மிக்கேல் பட்டணத்தில் கண்ட  சில காட்சிகள் ஆச்சரியங்களைத் தான் எனக்கு ஏற்படுத்தின.

மனசுக்குள் மத்தாப் பூ.... 

வடிவம் மாறாத சில வீடுகள், 



சில தெருக்கள்... 


குறைவில்லாது சுற்றித் திரிந்த கோழிகள்... 




பஞ்சாரக் கூடை... 

மழைக்கு ஒண்டி நிற்க இடமளித்த ஓட்டுத் தாழ்வாரங்கள்... 


மாற்றமில்லாத என் அம்மாச்சி வீடு... 


இப்படிச் சில காட்சிகள் மனசுக்குள் மத்தாப்பூ கொளுத்தின.

மனப்பறவை பின்னோக்கிப் பறந்தது... 

கீழ்இறங்காதபடி தோளுடன் பிணைக்கப்பட்ட கயிறுடன்(நாடா) கூடிய 'டவுசர்' அணிந்து நுங்கு வண்டி உருட்டி கருவேல மரங்களின் ஊசி முனை கால்களில் தைக்க எருக்கம் பூப் பாலை சூடு குறையாது சட்டென கால்களில் ஊற்றி தட்டிவிட்டு முள் கொடுக்கும் 
வலியோடு வீதி வழி விளையாடி ஓடித் திரிந்த நாட்கள் ஒரு வரைபடம் போல மனசுக்குள் விரிந்தது. உங்களிடம் பகிர்ந்து கொள்ள பாதை காட்டுகிறது. பாதைகள் பழம் நினைவுகளை விதைக்கின்றன. அறுவடை செய்கிறேன். 

என் மனைவி பணி புரியும் பள்ளியில் பணி செய்யும் சக ஆசிரியர் 'எல்லாம் கற்பனையா எழுதுறாரா மிஸ்?' - என்று கேட்டிருக்கிறார். அவர் கேட்டதில் தவறேதும் இல்லை. நான் உங்களிடம் பகிரும் எனது ஊர் குறித்த விஷயங்கள் அத்தனையும் நான் அனுபவித்தவைகள். வார்த்தைப் பதங்களை ஒவ்வொரு பூவாக எடுத்துக்  கட்டி ஒரு மாலையாக்கி உங்களுக்குத் தருகிறேன்.  வாசமற்ற வாடாத வண்ணம் நிறைந்த செயற்கைப் பூக்கள் அல்ல நான் தரும் பூக்கள். என் பூக்கள் அத்தனையும் விடியலில் மலர்ந்து மணம் வீசி மாலையில் வதங்கும் உயிருள்ள பூக்களே.
எனது அம்மாவிடம் ஊர் பற்றி எழுதிவருவதாகச் சொன்ன பொழுது 'உனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கா?' - என்று கேட்டார். நான் சொன்ன சில விஷயங்களைக் கேட்டு மகிழ்ந்தார். 'பரவாயில்ல உனக்கு இன்னும் ஞாபகத்துல இருக்கே!' என ஆச்சரியப்பட்டார்.
உண்மையில் நம் சொந்த ஊர் குறித்த நினைவுகள் எக்காலமும் எவரும் கவர்ந்து போகமுடியாத பொக்கிஷங்கள் தான். அப்புறம் எப்படி மறக்கும்.

                   
   Have your cup of
       "கருப்பட்டித் தேநீர்" 

கோடை கொடை ஆன காலம்! 

மேமாதக் கோடை விடுமுறைகள் சிறு பிராயத்தில் ஒரு கொடையாகவே இருந்தது. சொந்த ஊர் செல்வது இல்லாவிட்டால் திருத்தலமான 'வேளாங்கண்ணி' செல்வது இவை தான் அக்கால எங்களின் வாழ்வு 'அஜந்தாக்கள்'
பெரிய மாற்றங்கள் இருக்காது.
அப்படி என் சொந்த ஊர் மிக்கேல் பட்டணத்தில் கழிந்த பொழுதுகள் இன்றும் பசுமை போர்த்திக் கிடக்கிறது. மிக்கேல் பட்டணத்து சூடும், சூதற்ற மக்களின் முகங்களும் அவர்களின் வாழ்வும் பசுமைக்குள் பொதிந்து கிடக்கும் பொக்கிஷங்கள். 

' ஒண்ணு சொன்னாப்ல ஒண்ணு மண்ணா மண் பூசி சாணத்தின் வாசனையை நீரோடு சேர்த்து தங்களின் முகத்தில் அப்பிக்கொண்டு பள்ளிச்சீருடை அணிந்தாற் போல வரிசை கட்டிச் சிரித்தபடி பெரும்பாலான வீடுகள் அன்று மிக்கேல் பட்டணத்தில் இருந்தன. வீட்டுக்கு வீடு முள்ளு முருங்கைகளும், ஏதேனும் ஒரு பந்தற்கொடிகளும் வீட்டைக் கட்டிக் கொண்டு படர்ந்திருக்கும். 


பார்க்கும் மனங்களை இழுக்கும். 
உணவு சமைக்க எழும் புகை வீட்டிற்குள் ஒளிந்திருக்கும் சாணத்தின் வாசனையை கை பிடித்து இழுத்து வீட்டின் ஓட்டுத் தாழ்வாரத்தில் ஏற்றி முன் வாசல் வழி இறக்கிவிடும். சமையற்புகையோடு கலந்த சாணத்தின் வாசனை நாசிகளில் ஏற கிராமத்தின் வாசனை அறிந்த காலங்கள் அவை. 
வாசனையோடு அம்மனிதர்களின் நேசங்களையும் அடுத்த பதிவில் தொடர்கிறேன்... 

மனப் பறவை மனம் கொத்தும்... 
பழம் நினைவுகள் உண்ணும்! 
பறக்கும்...

                             
    Irudhy.a   


4 comments:

JOHN A said...

சொந்த ஊர் பயணம் எல்லா காலங்களிலும் மணம் வீசும் .....
மணம் பரப்பிய உங்கள் எழுத்துக்களுக்கு மனமார வாழ்த்துகள்...

Irudhy.a said...

தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றி...

Unknown said...

சொந்த ஊர் தான் சொர்க்கம்...

Irudhy.a said...

சொர்க்கமே என்றாலும் நம்ஊரப் போல வருமா? வாசிப்பிற்கு நன்றி...

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...