About Me

Saturday, October 9, 2021

அது ஒரு வெயிற்காலம்...

Fly...


புனித மிக்கேல் அதிதூதரின் சிறகுகளின் அரவணைப்பில் 
செட்டைகள் தட்டி கண் விழிக்கும் சேய்ப்பறவையாக மிக்கேல் பட்டணத்தின் பொழுதுகள் புலரும்... 

 அது ஒரு வெயிற்காலம்... 

அதிதூதரின் பெயரைக் கொண்டது எனது கிராமம். அதிதூதர் எப்பொழுதும் எனக்கு மட்டுமல்ல. நம்புகிற அனைவருக்கும் அடைக்கலப் பறவையாகி  தீமைகள்  ஏதும் சிறைப்பிடிக்காதபடி சிறகுகள் விரித்துப் பறந்து வந்து தன் செட்டைகளுக்குள் அரவணைத்துக் கொள்வார். இது நிதர்சனம். இதற்கு இருத்தலின் சாட்சியாக நான் ஜீவிக்கிறேன். இதை நான் ஒரு சாட்சியமாகவே பகிர்கிறேன். நான் எனது வாழ்வின் விளையாட்டுக் களத்தில் இரண்டாவது 'இன்னிங்ஸ்' விளையாடிக் கொண்டிருக்கிறேன். முதல் 'இன்னிங்ஸ்' முடிந்து விளையாட்டைத் தொடரமுடியாமல் போக இருந்த ஒரு சூழலில் இருந்து மீண்டு  மீண்டும் தொடர்ந்து களத்தில் இருக்கிறேன். வெற்றி, தோல்விகள் பற்றி எப்பொழுதும் கவலைகள் கொண்டதில்லை. வாழ்க்கை வாழ்தலில் இருக்கிறது. வான் பறக்கும் பறவை இதை அனுதினமும் என் மனசுக்குள் விதைத்துக் கொண்டே பறக்கிறது. 

பறவையின் வாழ்வு பறத்தலில் இருக்கிறது. 

நான் சாட்சியாக மாறியதன் சூழல் பகிர்கிறேன். 

சொல்லுதல் உண்மை

2012-ஆம் ஆண்டின் நல்ல வெயிற்காலத்தில் ஏப்ரல் என்று நினைக்கிறேன். 'தனியார் தொலைக்காட்சியின் திரைப்பிரபலங்களின்
 விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக தொடர் பயணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை தொலைக்காட்சிக் குழுவினரோடு   பயணமானேன். ஒரு வாகனம் புதியது. அரங்க மேடை போல வடிவம் மாற்றப்பட்ட  இவ்வாகனம் சந்தித்த முதல் நிகழ்ச்சியே அது தான். 
2012-ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமான நட்சத்திரங்களில் (various category) சிறந்த மூவரை மக்கள் வாக்களித்து
தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியாக  அந்நிகழ்ச்சி அமைந்தது. 

பகல் முழுக்க பயணம். மக்கள் சந்திப்பு, வாக்கெடுப்பு என ஒவ்வொரு நாளும் திருவிழாவாகவே பொழுதுகள் கடந்தன. மாலை 6 மணிக்குள் படப்பதிவுகளை முடித்துக் கொண்டு அடுத்த ஊருக்குப் பயணமாவோம். அங்கு தங்கல். இரவு முடிவதற்குள் சென்று விடுவோம். விடிந்தவுடன் கிளம்பிவிடுவோம். மாலை 6 வரை மக்கள் சந்திப்பு நடக்கும். இப்படியே 12நாட்கள் கடந்தது. திருவிழாவில் தொலைந்துபோன சிறுவன் போல உடல் அழுது ஆர்ப்பரிக்கும். இருப்பினும் பிடித்த வேலையைச் செய்கிற பொழுது மனம் எப்பொழுதும் ஒரு பறவையாகும்.

'அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்' 

 சில பறவை இனங்கள் கால மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள வெவ்வேறு இடங்களுக்கு வெகு தொலைவுகள் சிறகு தட்டிப் பறந்தே கடக்கும். ஆயினும் பறவையின் சிறகுகள் ஒரு போதும் தளர்வதில்லை. பறவை பறந்து கொண்டே இருக்கும். நான் என்னைப் பெருமைப்படுத்திக் கொள்ள இதைச் சொல்லவில்லை. வேலை என்று வந்துவிட்டால் நான் அதில் தீவிரமாவேன். உணவு, தூக்கம் மறுதலிப்பேன். தேநீர் மட்டும் எடுத்துக்கொள்வேன். தேநீர் உண்ணும் தேனீ நான். இன்றுவரை அப்படித்தான். என்னைப் போல தன் வேலைகளில் தீவிரமாகப் பலர் இருக்கலாம். 
என் போன்ற துறை சார்ந்தவர்களுக்கு அமையும் ஒவ்வொரு வேலையும் அமையப்பெற்ற இன்னொரு வாழ்வு போன்றது. நிச்சயமற்ற சூழல் எப்பொழுதும் சாளரத்தின் வழி நம் விழிகள் பார்த்தே அமர்ந்திருக்கும். 

சம்பவம் நடந்தது! 

        தொடர் பயணம் முடிந்து அதே இரவில் திருநெல்வேலியில் அல்வா பார்சல்களும் எங்கள் வாகனங்களில் ஏறிக்கொள்ள 
 சென்னை புறப்பட்டோம்.  மனம் ஏனோ எனக்கு சஞ்சலமாகவே இருந்தது. என் நண்பர்  "நீங்க வேணும்னா 'rushes' (exposed tapes) எடுத்துக்கிட்டு பஸ்ல போறீங்களா? நாளைக்கு 'evening editing' இருக்கு" என்றார். இருப்பினும் நான் உடன்படாமல் உடன் வந்தவர்களுடன் தான் சென்னை செல்வேன் என்று அவர்களுடனே பயணப்பட்டேன். வாகன ஓட்டுநர் நண்பர்  கொஞ்சம் களைப்பாக இருந்ததைப் பார்த்து கொஞ்சம் தூங்குங்கள். பிறகு செல்லலாம் என்றேன். காட்டுவழியில் ஓர் ஓரமாக வாகனம் நிறுத்தப்பட்டது. நான் மட்டும் வாகனத்தை விட்டு இறங்கி தனித்து நின்றபடி சூழல் குறித்து யோசித்தேன். பிரார்த்தனை செய்தேன். 

     "கால்கள் கல்லில் மோதாதபடிக்கு தூதர்கள் தங்கள் சிறகுகளால் தாங்கிக் கொள்வார்கள்" 
     - எனும் வேதாகம வசனத்தை தியானித்தேன். எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விண்ணப்பம் செய்யவில்லை. புறச்சூழல்கள் நாம் எதிர்பார்க்காத ஒன்றைச் சில சமயங்களில் நிகழ்த்திவிடும். தவிர்க்க முடியாதவைகள் 
புறச்சூ(சு)ழல்கள். "எது நடந்தாலும்
' jesus' உங்கள் தூதர்களை  உடன் இருக்கச் சொல்லுங்கள்' என்று சொல்லிவிட்டு எப்பொழுதும் நான் ஆதர்சமாக நினைக்கும் அதிதூதரிடம் " எங்கள் பயணத்தில் உடன் வாருங்கள்" என்றபடி வாகனத்தில் ஏறிப் புறப்பட்டேன். 
அதிகாலை 4.30மணி இருக்கும் என்று நினைக்கிறேன். பயணத்தில் பெரும்பாலும் நான் உறங்குவதில்லை. மீண்டும் ஒரு தேநீர் நிறுத்தம் முடித்து பயணம் தொடங்கிய சில மணிகளில் ஒரு நீளமான 'கண்டெய்னரை' கடந்தபோது ஒரு நொடி வாகனம் 'கண்டெய்னரின்' சக்கரத்தினை ஒட்டிச் சட்டென விலகியது. நான் ஓட்டுநர் நண்பரைப் பார்த்தேன். கவனம் என்றேன். அடுத்த பத்து நிமிடங்களில் எங்கள் வாகனம் இடம் வலமாக கபடி ஆடி எதிர்ப்பட்ட தடுப்பு வேலிகளில் மோதியபடி தறிகெட்டு ஓடியது. முன் 'டயர்' வெடிக்க வாகனம் 'ஸ்கூபா டைவ்' அடித்துத் தலைகீழாகத் திரும்பி தரையில் சில அடி தூரம் சறுக்கல் விளையாட்டு விளையாடி இறுதியில் ரங்க ராட்டிணம் சுற்றி தலைகீழாக நின்றது. தலைகீழாகக் கிடக்கும் கரப்பான்பூச்சி எழுந்து கொள்ள முயற்சிக்குமே அப்படித்தான் நாங்கள் 
முயன்றோம் . வாகனத்தின் பெருமூச்சு புகையாகக் கசிய ஆரம்பித்தது. இந்த அத்தனை விதிவிளையாட்டுக்களையும் என் கண்கள் கண்டன.  வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தபொழுது எங்கள் தலை ஏன் எதிலும் மோதவில்லை. அதிதூதர் தாங்கி இருக்கிறார். உடன் தங்கி இருந்திருக்கிறார். இதுவே உண்மை. விசுவசிக்கிறேன். சறுக்கித் தரை தேய்த்து தலைகீழாக வாகனம் பயணித்து நின்றபோது நான் முழங்காலிட்டபடி இருந்தேன். 
  வெளியே செல்ல கதவைத் திறக்க கதவு திறக்கவில்லை. பின் இருக்கையில் இருந்த நண்பர் அவரது கதவைத் திறந்து வந்து என் பக்கத்து கண்ணாடியை உடைக்க நான் வெளியேறினேன். அவ்விதமே பின் இருந்த மற்ற இருவரும் வெளியேறினர். ஒருவருக்கு பின் குதிங்கால் நரம்பில் பெரிய அடி. இன்னொருவருக்கு கைகளிலும் கன்னங்களிலும் சிராய்ப்புகள். ஓட்டுநர் நண்பர் நிலையை விளக்க விரும்பவில்லை. சில பல சர்ஜரிகள் செய்யப்பட்டன. எனக்கு முழங்காலில், முழங்கையில் கண்ணாடிச் சில்லுகள் குத்திய காயங்கள். அவ்வளவே. நான் இருந்த பகுதி என் தலைப்பகுதி வரை நசுங்கி அதோடு நின்று ஒரு குகை போல இருந்தது. மருத்துவமனையில் 'முன் இருந்தவர் என்ன ஆனார்?' - என்று என்னிடம் கேட்டார்கள். நான் 'நான் தான் முன் இருந்தேன்' என்றேன். ஆச்சரியப்பட்டார்கள். எல்லாம் கடந்தது. 
இதில் இன்னமும் எனக்கு ஆச்சரியமாக இருப்பது எது தெரியுமா? 
நாங்கள் அனைவரும் உயிரிழப்பின்றி தப்பினோம். விபத்து நடந்து நாங்கள் வாகனத்தை விட்டு வெளியேறும் வரை எங்களைக் கடந்தோ எங்களுக்கு எதிரிலோ எந்த வாகனமும் கடக்கவில்லை. 
இப்படிக்கும் விபத்து நடந்த இடம் வாகனங்கள் பறக்கும் திருச்சி பாடலூர் தேசிய நெடுஞ்சாலை அது. 
இந்த நிமிடம் வரை நான் அதிதூதர் எங்கள் உடன் இருந்ததாகவே விசுவசிக்கிறேன். 
மனித இயல்பில் தவறுகள் நிகழ்ந்தாலும் கடவுளை விசுவசித்தால் எதுவும் கடக்கலாம் என்பதை உணர்ந்த தருணங்கள் அவை. வடிவங்களில் வேறு வேறாக தெய்வங்கள் இருக்கலாம். ஆனால் விசுவசித்தல் ஒன்றே. 
இந்த சம்பவத்தைப் பகிரக் காரணம் மிக்கேல் பட்டணத்தின் பாட்டுடைத் தலைவன் அதிதூதர் புனித மிக்கேல் சம்மனசே காரணம். 

             புனித மிக்கேல் அதிதூதர்

... 
பதிவுடைத் தலைவனைப் பற்றி எனது சாட்சியத்துடன் பகிர்ந்து விட்டேன். உங்கள் மனசுக்குள்ளும்
ஒரு  கடவுளர் உருக்கொண்டிருக்கலாம்.

"சிக்கெனப் பிடித்தேன் உன்னை" - என்று மாணிக்கவாசகர் பாடியது போல பிடித்த கடவுளை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். கொடிய 'கொரோனா' கூட ஒன்றும் செய்யாது.
(குறிப்பு. தவறுக்கு மன்னிக்கவும். முன்னர் திருநாவுக்கரசர் என பதிவிட்டிருந்தேன். சந்தேகத்தின் அடிப்படையில் மீண்டும் படித்தபோது மாணிக்க வாசகர் என்பதை அறிந்து தற்போது சரியாகப் பதிவிட்டிருக்கிறேன்) 

         Have your cup of Green tea... 

இனி மிக்கேல் பட்டணத்தின் வாழ்வியலை வடம் பிடித்து இழுக்கிறேன். காத்திருக்கிறேன். கண்ணுறுங்கள்... 

மிக்கேல் பட்டணத்துத் தேர் நகரும்.




 

மனப்பறவை பறக்கும்...
மனம் கொத்தும்!
பறக்கும்...
                 

Irudhy. A

4 comments:

Jeeva said...

Superb pictures.Fantastic post .superb Anna.

Irudhy.a said...

Thanks lot for your feedback தொடர் வாசிப்பிற்கு நன்றி...

JOHN A said...

கடவுளுக்கு நன்றி... படிக்க படிக்க சுவாரஸ்யம்....💐

Irudhy.a said...

Thanks cheta. God's timing is always perfect...

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...