மனம் கொத்தும் பறவை...
"நோக்குவ எல்லாம் அவையே போறல்"
-தமிழிலக்கண தொல்காப்பியக் 'களவியலின்' கூற்று ஞாபகத்திற்கு வருகிறது. 'காதல் உலாப் போகும் காலத்தில்' ஏன் தொல்காப்பியர் வருகிறார்? கேள்விகள் எழலாம். எழும் கேள்விகளை அப்படியே மடை மாற்றி மேற்கண்ட கூற்றுக்குத் திருப்பி கேள்வியுடனே மீண்டும் தொடர்கிறேன்.
'நோக்குவன எல்லாம்
அ(எ) வையே போறல்? கேள்விக்கான பதிலைத் தேடினால் ஒரு நாயகனும் ஒரு நாயகியும் ஒளிந்திருப்பார்கள். இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் நாயகனையும் நாயகியையும்
' காதல் 'எனும் வெளிச்சக்கீற்றில் கண்டுகொள்ளலாம்.
' காதல்' வெளியிடை...
பார்க்கும் சினிமா, படிக்கும் கதைகள், குறும், நெடும்தொடர்கள் எங்கும்' காதல்' தன் வண்ணங்களைக் காற்றில் விசிறி மனசுக்குள் 'ஹோலிப் பண்டிகை' கொண்டாடிக் கடக்கிறது.
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவனாக மனம் 'காதல்' என்ற மாயக் கண்ணாடிக்கு முன் நிற்கையில் மீண்டும் மனசுக்குள் கேள்விகள் முளைக்கின்றன.
எது காதல்?
எது... முதல்... காதல்... ?
எதுமுதல் காதல்?
எதுவரை காதல்?
கல் விழுந்த குளத்தில் எழும் வட்ட வட்ட அலைகள் போல மனம் முன் ஒய்யாரமாக நிற்கும் மாயக் கண்ணாடியில் ஒரு பிம்பம் அலையாகி விரிகையில் காதலின் முத்துக்கள் எடுக்க
மனம் அலைக்குள் மூழ்கும். மூச்சுப்பிடித்து சிறு மீன் போல பழம்நினைவுகளில் நீந்தும்.
a
V your cup of 'tea' ...
எது 'காதல்' ?
இருபாலினத்துக்கும் இடையிலான இடைவெளியை வெற்றிடம் இல்லாமல் இட்டு நிரப்பும் உயிர்க்காற்றை மட்டுமே 'காதல்' என்று மனம் ஏனோ ஒருவித கற்பிதம் செய்துகொள்கிறது. 'காதல்' எனும் புவிஈர்ப்புவிசைக்குள் ஈர்க்கப்படாமல் நாடோடி போல அலைந்து திரிவது அண்டவெளியில் ஒன்றும் இல்லை.
இலைகள் துளிர்த்து கிளைகள் பரப்பி பறவைகள் வந்து இளைப்பாறும் அளவிற்கு விருட்சமாகும் மரம் ஒன்று சின்னஞ்சிறிய கடுகு விதைக்குள் இருப்பது போல... 'காதல்' எனும் விசும்பிற்குள் இருபாலின ஈர்ப்பு மட்டுமே காதல் கோட்டை கட்டுவதில்லை. இன்னும் சிலபல தருணங்களும் காதல் வெளியிடையில் தோரணங்கள் கட்டும்.
ஏழு ஸ்வரங்களுக்குள் இழையோடி வெளியிடை தழுவும் காற்று...
எத்தனையோ ராகங்களை உருவாக்கும் ரசவாதம் போலவே
'அன்பு, கருணை, இரக்கம், நேசம், விருப்பம், ப்ரியம்' ... என நீளும் பட்டியலின் ஒவ்வொரு கட்டத்திலும் 'காதல்' தன் தொட்டில் கட்டி மனங்களைத் தாலாட்டுகிறது. காதல் தாலாட்டைக் கேளா உயிர்கள் உலகில் இல்லை. ஓர் உயிரின் காதல் இன்னொரு உயிரில் தான் பிறக்கும் என்ற எந்தவித வரையறையும், கற்பிதங்களும் காதலுக்கு இல்லை. உயிரற்ற பொருள்களின் மீதும், மனம் லயித்துக்கிடக்கிற விஷயங்கள் மீதும் 'காதல்' கடை விரிக்கும். அப்படி காதல் கடை விரிக்கும் ஒவ்வொரு படிகளிலும் மனம் ஏறி இளைப்பாறும்.
எது... முதல்... காதல்?
ஏகமாக விழும் மழைத்துளிகளில் எது தன்னைத் தொட்ட முதல் துளி என்பது மண்ணுக்குத் தெரியும். மண்ணைப் போலவே தன்னைத் தழுவிய 'முதல் காதலை'யும் மனம் அறியும்.
மனம் அறிந்த 'முதல் காதல்'
சக உயிரணுக்களோடு போட்டியிட்டு முட்டி மோதி வீரியத்துடன் வெற்றிவாகை சூடி பெண்மையின் கர்ப்பப் பைக்குள் தன்னை விதைத்து புதிய உயிராக்கி ஒவ்வொரு நாளும் வளர்ந்து சதைப்பிண்டமாக உருவெடுக்கும். குறித்த நாளில் வீறிட்டு அழுது அண்டம் கண்டு தன்னை ஓர் உயிராக வார்த்தெடுத்த பெண்மையின் முகம் காணும் முதல் நொடியில் தாய்மையின் மீதான 'முதற்காதல்' பிறக்கிறது.
'அன்னை' என்று அறிமுகமாகி தன் மார் சேர்த்து பாலூட்டுகையில் அன்னையின் அரவணைப்பில் 'முதற்காதல்' புத்துயிர் பெறும்.
புதிய உயிரை அள்ளி எடுத்து முத்தமிட்டு தோளில் சுமந்து வேடிக்கை காட்டுகையில்....
அப்பாவின் நேசத்தில் 'முதல்காதல்'
தோள் பற்றி கிளை பரப்பும்.
மொழிஅறியா புதிய உயிரின் மொழி அறியும் அன்னையின் விழிகள் மீது புதிய உயிரின் 'முதற்காதல்' படர்ந்து விரியும்.
புதிய உயிரின் உறக்கத்திற்காக
உறக்கம் தொலைத்த விழிகளோடு அன்பெனும் மொழி பேசி காதோடு கதைகள் சொல்லி இசைபாடி பூவாய் விரியும் அன்னையின் வாய் உதிர்க்கும் மொழியின் மீது 'முதற்காதல்' மையல் கொள்ளும்.
இரவில் நிலவு காட்டி அன்பு கூட்டி அன்னை உணவூட்டுகையில் நிலவின் ஒளியில் மிளிரும் அன்னையின் அன்பில் 'முதற்காதல்' பூப்பூவாய் பூக்கும்.
காதல் வெளியிடையில் ஒர் உயிரின் 'முதல்காதல்' ஊற்றெடுக்கும் சுனையாகிறாள் 'அன்னை' என்பதில் துளியளவும் ஐயம் இல்லை. சுனைநீரில் தாகம் தீர்க்கும் புதிய உயிர் காதல்வெளியிடையில் காதலின் வெவ்வேறு பரிமாணங்களில் தன்னை பட்டைதீட்டிப் பயணிக்கும்.
மனப் பறவை மனம் கொத்தும்.
பழம் நினைவுகள் உண்ணும்!
பறக்கும்...
Irudhy.a