About Me

Sunday, November 14, 2021

கண்ணடிக்கும் காதல்...கண் சிவக்கும் கண்ணாடி!

Fly...

மனம் கொத்தும் பறவை...

உலகின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு கண்ணாடி
உயிர்களின் புவிஈர்ப்பு விசை காதல்...

கண்ணாடியோ காதலோ முன்நின்றால் தான் முகம் காட்டும். 
உடைபடுவது எதுவாயினும் மீண்டும் முன் உருவில் மீளாது. 
'கண்ணாடி' நிஜத்தின் நிழல்... 


'காதல் இரண்டின் பிரதிபலிப்பு... 
காதலும், கண்ணாடியும்... 
களவியலில் கைகோர்க்கும்
ரகசிய சிநேகிதம்! 

"உன் பிம்பம் விழுந்தே 
கண்ணாடி உடைந்து போகும்!"
   - 'இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல' கவிப் புத்தகத்தில் கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்கள், காதலில் விழுந்த உயிரின் நாடிபிடித்து காதல் நடை அமைத்திருக்கிறார்.

சரியோ?... 
ஏகபோகமாக காதல் விளையாட்டில் களவு போனவர்களுக்கு நிதர்சனம் விளங்கும்.
இன்னும் விளங்கலாம். விலங்குகளிடமும் காதல் உண்டு... 
எங்கும் பாரபட்சமின்றி விழுந்து எழும் மழைத் துளி போல காதலும் எவ்வுயிரிலும் விழுந்து வீழ்ந்து உண்டு உயிர்க்கும்! 
'காதல்' நேசமுள்ள இதயங்கள் உடுத்திக் கொள்ளும்... 
அழகிய சீருடை! 
அழகிய சீருடை உடுத்தி ரகசிய சிநேகமான... 'கண்ணாடியின்' முகத்தில்
 தன் முகம் கண்டு புறச்சீர்படுத்தி அகமனதிற்கு சிறகுகள் முளைக்க இறக்கைகள் விரிக்கிறது...

இது "உலாப் போகும் காலம்" ... 


னிய உலாவில்-


கண்ணடிக்கும் '
காதலும்' ...
கண்சிவக்கும் 'கண்ணாடியும்' !


'கண்ணாடியை' யார் கண்டார்? - கேள்வியோடு உலாவுகையில் கிமு. 4000- ஆண்டுகளுக்கு முன்னமே கண்ணாடி தன்னை பிரதிபலித்ததை அறிய முடிந்தது. எகிப்து, சீனா, இத்தாலி  போன்ற  நாடுகள் கண்ணாடியை பிரதிபலித்ததில் முக்கியப்பங்கு வகித்திருக்கின்றன. துவக்கத்தில் தொடக்கமும் முடிவும் அறிய முடியா வட்டவடிவத்தில் தான் கண்ணாடி உலகில் சுற்றிச் சுழன்றிருக்கிறது. பின்னரே, அறிந்தவரை இத்தாலி நாட்டின் 'வெனிஸ்' நகரத்தில் தட்டை வடிவக் கண்ணாடி தன் உரு மாறி புதிய வடிவில் தன்னைத் தடம் பதித்திருக்கிறது. 
மற்றபடி கண்ணாடியைக் கண்டது இன்னார் தான் என்ற தகவல் அறிந்தவரை ஏதுமில்லை. 

தண்ணீரில் மனிதன் தன் முகம் கண்ட நொடியே...


'க
ண்ணாடியின்' பிறப்பிற்கும் பிரதிபலிப்பிற்கும் காரணமாக இருந்திருக்கலாமோ? 
எதுவாயினும் 'கண்ணாடி' உலகின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு என்பதில் ஐயமில்லை. 

கண்ணடிக்கும் 'காதல்' ... 


'காதல்' யாரது கண்டுபிடிப்பு? கேள்வி கேட்கலாமா...

தேவையில்லை.

 ஓங்காரமாக ஒலிக்கிறது குரல்கள்.
காதலின் காப்புரிமை
 எந்த வரையறைகளுக்குள்ளும் சிக்காது. 
ஜீவராசிகளின் 
ஜீவிய உரிமையே 'காதல்' ...

சரி, கண்ணாடி எப்போது காதலுடன் கை கோர்த்தது?

இதயம் இடம் மாறித் துடித்து - இதயம் 'இடமா? வலமா?' எனும் ஐயம் வந்து ஐம்புலன்களும் ஆராயாது அறிவு கடந்த
இனம்புரியா ஓர் உணர்வில் ஐக்கியமாகி இருவேறு பாலினம் தன்னை ஒன்றாய்க் காணும் தருணத்தில் கண்ணாடி கண்சிவந்து இருபாலினத்துடனும் ரகசிய சிநேகமாய் கை கோர்க்கிறது. 

"உன் பிம்பம் விழுந்தே 
கண்ணாடி உடைந்து போகும்
கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்கள் வரிகளின் அர்த்தம் விளங்குகிறது. 

கண்சிவக்கும் '' கண்ணாடியில்' 
சில துளிகள்... 


ஒரு நாளைக்கு இருநூறு முறை... 
கண்ணாடி பார்க்கிறான்! 
அறுநூறு முறை அவளின் வரவை எதிர்நோக்கி...! 
தலைவாரியின் பற்கள் உடைபட 
முடிதிருத்தி முகம் சிரித்து
முன் நிற்கும்
'கண்ணாடி' சிவக்க
நெஞ்சோடு பேசி...
அவள் வருகையில்... 
அவள் விழியே கண்ணாடியாகும்
அவள் விழி தனில்
தன் முகம் கண்டு !
நாவு கதவடைக்க...
தன் வயம் இழந்து 
உதடுகள் நடத்தும் 
மௌன ஊர்வலத்தில்...
இரு இதயங்கள் இடம்மாறி
விழிகளே கண்ணாடியாகி!... 
எதிரெதிர் தன்முகம் காண்கையில்
'காதல்' கண்ணடிக்கும்!
விழியெனும் 'கண்ணாடி' கண்சிவக்க... 
நடந்து முடியும் 
முதல்... 
"காதல் லா"


கண்ணாடிக்கு வலிக்காது பிரியும் பிம்பம் போல...காதலில் வாழ்வோ வீழ்வோ இருந்துவிட்டால் 'காதல் உலாவில்' களங்கங்கள் என்றும் இல்லை. 
மனப் பறவை காதல் வானில்... 
சிறகு விரிக்கும்...
மனம்கொத்தும்! 
பறக்கும்... 

இது காதல்...
" உலாப் போகும் காலம்"


                       Irudhy.a 



4 comments:

Unknown said...

கண்ணாடி நம்ம மனசாட்சி

Irudhy.a said...

காதலில் கண்ணாடியின் கட்சி எதுவோ? மனசாட்சி சில சமயங்களில் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொ(ல்)ள்ளும். கண்ணாடிக்கு முன் விழும் பிம்பம் ஓடவோ, ஒளியவோ முடியாது. வாசிப்பிற்கு நன்றி.

JOHN A said...

வரலாற்றுப் பின்னணியோடு உள்ள உங்களின் கண்ணாடித் தேடல் அருமை...காதலின் நிறம் என்னவோ ஆனால் ரோஜாக்கலரில் எழுத்தின் வண்ணம் அருமை...வாழ்த்துகள்...

Irudhy.a said...

கண்ணாடியின் வரலாறு நெடியது. நான் பகிர்ந்தது நுனிப்புல் அளவு தான். வாசித்து விமர்சித்தமைக்கு மிக்க நன்றி...

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...