About Me

Friday, December 31, 2021

நம்பிக்கைப் பூக்கள்...





மனம் கொத்தும் பறவை... 

பனிவிழுந்த இரவில்... 
   மீட்பராம் "பாலன் இயேசுவின்வின் பிறப்பை  உற்சாகத்துடன் கொண்டாடி முடித்து
நினைவுகளைச் சுமந்தபடி மதுரையிலிருந்து சென்னை புறப்பட்டதிலிருந்து வருகிற வழியெல்லாம் நல்ல மழை. இந்தப் பதிவை மதுரையில் தயார் செய்தேன். முடிக்கையில் விடிந்தே விட்டது. 

புதியதொரு விடியலை நோக்கிய வருடம் குறித்த பதிவென்பதால் பதிவின் முடிவும் விடியலில் தான் முடிந்தது. "கொக்கரக்கோ... கோ"... சேவல் கூவியது. சேவல் விழித்துக் கொள்ள "இனி ஆவுறதில்ல. பேஜாம(பேசாமல்) படுத்துத் தூங்கிட்டு பொறவு கிறுக்கல்களுக்குத் தயாராகலாம்"-என்றெண்ணி பென்சில், அழிப்பானைப் பார்த்தபோது 'ஆகட்டும். நாங்களும் தாயார் (தயார்) தான்' என நகைச்சுவை மன்னர்  கவுண்டமணி கணக்காக பென்சிலும், அழிப்பானும் கவுண்டர் கொடுத்தன. " (அழிரப்பர்-இப்படித்தான் நான் சொல்லுவேன். என் மகன் கிண்டல் பண்ணியதால் 'எரேசர்' என அவன் சொல்லியதை தமிழாக்கத்தில் அழிப்பான் என பதிந்துவிட்டேன்) சரி விஷயத்துக்கு வருகிறேன். எல்லாம் முடித்து சின்னச்சின்ன 'நகாசு' வேலைகள் மட்டும் மீதமிருந்தன.

 இதற்கிடையில் எங்கள் வீட்டிற்கும் எனது 'வூட்டுக்காரம்மா' ஊரான 'ராசகம்பீரத்திற்கும்' 'கால்டாக்ஸியை'ப் போல எங்கள் காரை 'ட்ரிப்' அடித்தேன். 'Upcoming-நம்பிக்கைப் பூக்கள்' 'status' இட்டு பூக்களெல்லாம் காய்ந்தே போயிருக்கும். இரண்டு நாட்கள் கடந்தது. இடையில் ஒருநாள் எனது பற்களில் பராமரிப்பு வேலை நடந்தது. 'சும்மா இரண்டரை  மணி நேரமா பற்கள ஒராசி ஒராசி. இப்ப நெனச்சாலும் ஸப்பாடி... முடியல. வாய் விட்டுச் சிரிக்க மட்டுமில்ல. பேசக் கூட முடியல. டபக்குனு (உடனே) ஒரு முடிவு பண்ணி என் வூட்டம்மாவுக்குப் போன் பண்ணி இதபாரு... நம்ம "gabree'அப்புறம் உன்  தங்காச்சி (தங்கச்சி) புள்ளைக சாரா, சாண்ட்ராவ பூக்குடை புடிச்சாமாதிரி சோக்கா படம் வரையச்சொல்லு.


 கலர் சங்கதிகள் எம் பொறுப்புனு சொல்லி போனை' வைத்து முடிக்க சுடச்சுட' வாட்ஸ் ஆப்' வழி மூன்று படங்களும் வந்துசேர்ந்தன. (சாரா, சாண்ட்ரா ரெண்டுபேரும் எங்க புள்ளைக தான்.சிறுசில இருந்து எங்கள அம்மா, அப்பான்னு தான் கூப்புடுவாக. எப்புடிக் கூப்புடுவாக தெரியுமா? 'எட்டம்மா','எட்டப்பா'. எனது' வூட்டம்மா'வின் பெயர் 'எட்விடா'. அதனால் 'எட்டம்மா'என அன்புடன் அழைக்கப் பெற்றார். நான் 'எட்டப்பா'வானது என் அறிவிற்கு எட்டாத விந்தை. என்னை எட்டப்பனாக்கிய பெருமை அவர்களையே சாரும்.  சரிதான் விட்டா கதைபேசிக்கிட்டே இருப்பேன். விஷயத்துக்கு வர்றேன். முடிவாக மழையோடு சென்னை வந்து வீடு வந்ததும் 'மறுபடியும் மொதல்ல இருந்து பதிவின் சில பகுதிகளை மாற்றினேன். ஒரு வழியாக நம்பிக்கைப் பூக்களை கட்டி முடித்தேன். 
    
வழக்கம் போல இந்த ஆண்டிலும் 'டிசம்பர்' பனியையும், மழையையும் ஒரே வண்டியில் பூட்டி கடகடவென ஓடி நம்மைக் கடந்து போகப் போகிறது.  இதை நீங்கள் வாசிக்கிறபோது  'டாட்டா' காட்டியபடி கடந்தே போயிருக்கும். 


"கிறிஸ்துமஸ்" உற்சாகத்தின் தொடரியாக "புதுவருடம்" நம்மைத் தொட்டுத் தொடரக் காத்திருக்கிறது. தொட்டதெல்லாம் பொன்னான நீதிக் கதையை அறிந்திருப்பீர்கள். அப்படியான பேராசைகள் எதுவும் இல்லை. தொடுவதெல்லாம் பூக்களாக விரிந்தால் போதும். விரியும்  நம்பிக்கைப் பூக்களை வண்ணப்பூக்களின்  குடையாக்கி  புதுவருடத்தை பூக்குடையின் கூடாரத்திற்குள் வசப்படுத்துவோம். 




Have your cup of "tea"...


Who is the " Hero?"... 


கடந்த பதிவை  who is the" Hero"என்ற கிறிஸ்துமஸ் தாத்தாவின் கேள்வியோடு முடித்திருந்தேன்.  மனமுடிக்குள் முடிந்து வைத்துள்ள "ஹீரோ" முடிச்சை இப்பதிவில் அவிழ்க்கிறேன்... 

  ஒளிந்துபிடித்து விளையாடி அவ்வப்போது கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் 'நம்பிக்கை ஒளி' தான் நமக்குள்  உருக்கொண்டிருக்கும்    
 "ஹீரோ"... 

  நமக்குள் இருக்கும் நம்பிக்கை 'ஹீரோ'வைத் தேடிக் கண்டுகொண்டால் தொட்டதெல்லாம் பூக்களாக விரியும். வண்ணங்கள் நம் வழியாகும். நல் எண்ணங்கள் நம் மொழியாகும். விழி காணும் வழியெல்லாம் ஒளியாகும். 

எல்லா மறைகளும் நம்பிக்கைகளையே தங்கள் கரங்களாக்கி நம்மை அரவணைக்கின்றன. 

"நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு" 
- என்பதனை அறிந்திருப்போம்.

 'நம்பிக்கை' குறித்த ஒரு நிகழ்வை நான் அறிந்த மறை வழியே பகிர்கிறேன்.
வேதாகமத்தில் 'புனித பேதுரு' தேவகுமாரன் 'இயேசு' வின் சீடராக மாறின வரலாறு அறிந்தபோது 'நம்பிக்கையும், விசுவாசமும்' எவ்வளவு ஆழமானது  என்பதனை உணர முடிந்தது.

 தேவன் 'இயேசு' வால் சீடராகத் தெரிந்துகொள்ளப்பட்ட மீனவர் 'பேதுரு' புனிதராகும் முன் மீனவராக அறியப்பட்டார். மீன்பிடி தொழிலில் அதன் அடி ஆழம் கண்டவராக விளங்கினார். 
மீன்வலை விரிப்பதில் வல்லவர். இவர் விரிக்கும் வலைகளின் கண்களுக்கு மீன்கள் தப்ப முடியாது. எல்லா மீன்களும்  மீனவர் 'பேதுரு' வின் வலைகளுக்குள் வளையவந்து சரணாகதி அடைந்துகொள்ளும்.

 இச்சூழலில் ஒருநாள் மீனவர் 'பேதுரு' வழக்கம்போல கடலில் வலைவீசினார். கணங்கள் கடலில் கரைந்தும் வலைக்கண்களில் ஏனோ! மீன்கள் கண் வைக்கவில்லை. இரவெல்லாம் வலைவிரித்து சோர்ந்த கணத்தில் தேவன் 'இயேசு' மீனவர் 'பேதுரு' வின் படகில் ஏறினார்.


 சோர்ந்துபோயிருந்த மீனவர் 'பேதுரு' வின் நிலைமை அறிந்தார் தேவன் இயேசு. பேதுருவை மீண்டும் கடலில் வலை விரிக்கச் சொன்னார் தேவகுமாரன் 'இயேசு'.

நம்பிக்கை வலை விரித்தார் மீனவர் 'பேதுரு'...


மீனவர் 'பேதுரு' தேவனின் வார்த்தைகளைக் கேட்டவுடன் மறுமொழி பகிராமல் கடலில் வலை விரித்தார். கணநேரம் கடந்தது. கடல்மீன்கள் தேவனின் விருப்பத்தை அறிந்தன.ஒவ்வொரு மீன்களும் 'நான் முந்தி நீ முந்தியென' பிந்தாமல் நீந்தி மீனவர்' பேதுரு' வின் வலைக்குள் வலை அறுபடுமளவிற்கு  தஞ்சம் புகுந்தன.

இந்த இடத்தில் ஆழமாக "விசுவாசம், நம்பிக்கை" எனும் இரண்டு உண்மைகளை உணர முடிந்தது.  

மீன்பிடித்தலில் கரைகண்ட மீனவர்
' பேதுரு' தேவன் வலைவிரிக்கச் சொன்னவுடன்... 

'நான் இரவெல்லாம் வலைவிரித்து அகப்படாத மீன்கள். நீங்கள் சொன்னவுடன் விரித்தால் மட்டும் மீன்கள் கிடைக்கவா போகிறது?'  - என நாவெனும்  நாணில் பதில் அம்பு தொடுக்காமல் 'நான் பெரிய மீனவனாக்கும்' என்ற 'நான்' எனும் அகந்தையற்று தேவகுமாரனின் வார்த்தைகளை விசுவசித்து  நம்பிக்கையுடன் உடனே வலை வீசினதாலேயே வலைஅறுபடுமளவிற்கு மீன்கள் கிடைத்தன. பின்னர் மீன்களைப்பிடிப்பதை விட்டுவிட்டு
இயேசுக் கிறிஸ்து'வின் சீடராக மாறி மனித மனங்களைப் படிக்க
 பின்னாளில் எல்லோருக்கும் பிடிக்கும்  புனிதர்  ஆனார். 


வேதாகமத்தில் அற்புத நிகழ்வுகளின் விவரிப்பில்
'உடன்' என்ற சொற்பயன்பாடு இடம்பெற்றிருக்கும். 'உடன்' என்ற சொற்பயன்பாட்டிற்குள் நம்பிக்கை உருக்கொண்டிருக்கும். தேவன் "இயேசுக் கிறிஸ்து " அற்புதங்கள் நிகழ்த்திய தருணங்களிலெல்லாம் 'தன்னால் தான் அற்புதம் நிகழ்ந்தது' 
என்று எப்பொழுதும் காப்புரிமை மொழிந்ததில்லை. மாறாக... 
 "உன் விசுவாசத்தாலும் நம்பிக்கையாலும் அற்புதம் நிகழ்ந்தது" 
        என்றே மொழிந்திருக்கிறார் தேவகுமாரன் 'இயேசுக் கிறிஸ்து'.

"இயேசுக் கிறிஸ்து" மட்டுமல்ல எல்லா மறைகளும் முன்மொழியும் வேதமொழிகள் இவைகளே.
"நம்பிக்கை" , "விசுவாசம்" 
இரண்டும் இரு விழிகள். 

 கடக்கும் வழியெல்லாம் விசுவாசத்துடன் 'நம்பிக்கைப் பூக்கள்' உயர்த்தி பாதைகள் கடப்போம்.  


வரும் காலம் 'பூக்காலமாக' 
மலர வேண்டி பிரார்த்தனை
செய்வோம்.
விசுவாச நாற்றில் நம்பிக்கைப் பூக்கள் தொடுத்து 'புதுவருடத்தை' வரவேற்கலாம். 
 அன்பிற்கு இனிய... அனைவருக்கும்   "புதுவருட" வாழ்த்துக்களை மகிழ்வுடன் பகிர்கிறேன்... 


பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 




' மனப் பறவை'  மனம் கொத்தும்! 
பறக்கும்... 

"சுய பலத்தினாலும், பராக்கிரமத்தினாலும் அல்ல.  தேவ கிருபையினால் எல்லாம் கூடும்". 
ஆமென். 
Irudhy. a

Wednesday, December 22, 2021

அது ஒரு பனிக் காலம்...


Fly...

'டிசம்பர் உலா' தொடர்வதால் 'மகுட ராசா' கதையும், கடந்த இரண்டு ஞாயிறாக இடம்பெறாத 'காதல் உலாப் போகும் காலமும்' டிசம்பர் உலா' முடிந்தவுடன் தொடரும் என்பதை தாழ்மையுடனே பகிர்கிறேன். 

தொடர்வது...
டிசம்பர் உலா-பகுதி-2
                 
 அது ஒரு "பனிக் காலம்"... 

          ஏழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு காடு. அந்தக் காட்டினுள் ஒரு குகை. குகைக்குள் ஓர் ஓடை. ஓடைக்குள்   இறங்கி கண் மூடினால் கைவரும்  தங்க மீன்.


 'அம்புலிமாமா' கதை  'டிசம்பர்' மாதத்தில் மனக்கதவைத் தட்டும். டிசம்பரில் "கிறிஸ்துமஸ் தாத்தா"
தானே கதவு தட்டவேண்டும்!? "Why?" 'அம்புலிமாமா'? 

       Have your cup of "tea" ... 


1980 களின் மத்தியில் 'அம்புலிமாமா' கதைகள் மிகவும் பிரபல்யம்.  ஐந்து பைசா கொடுத்தால் கடையிலேயே அமர்ந்து' காமிக்ஸ்' புத்தகங்கள் படித்து வரலாம். 

எனது மூத்த சகோதரர் வெறித்தனமான வாசிப்பாளர். சிறுகதைகள் புனைவதில் கெட்டிக்காரர்.   'நெல்லுக்குப் பாயும் நீர் சிறு புல்லுக்கும் பாய்வது போல' அவராலேயே நானும் வாசிப்புப் பழக்கத்துக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன். 'கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்' - என்ற சொற்பதம் அறிந்திருப்பீர்கள். எனது சகோதரர் நல் உதாரணம்.

 சிறு பிராயத்தில் துப்பறியும் 'பாக்கெட் நாவல்' தொடங்கி 'இரும்புக் கை மாயாவி' வரை எல்லாவற்றையும் படித்து முட்ட உண்ட வயிற்றுக்காரன் போல 'ஏப்பம்' விடுவார்.  நானும் எனது மூத்த சகோதரரும் பாடப் புத்தகத்திற்குள் 'பாக்கெட் நாவல்' வைத்துப் படித்த பண்பாளர்கள்.  

இப்பொழுது "அம்புலிமாமா" கதைக்கு வருகிறேன். ஏழு கடல் ஏழு மலை தாண்டிய கதைகள் போல சிறுவயதில் "கிறிஸ்துமஸ்" கொண்டாட்டத்திற்கு குறுக்கே அரையாண்டுத் தேர்வுகள் வந்து நிற்கும். 'ஸப்பாடி' இந்தப் பரீட்சைகளத் தாண்டித் தான் "கிறிஸ்துமஸ்" கொண்டாடணுமா? பேசாம 'jesus' 'June'  இல்லைனா 'july' -ல பிறந்திருக்கலாம். பரீட்சை இல்லாம இருந்திருக்கும். சிறிய வயதில் மனம் கூப்பாடு போடும். 

 'டிசம்பர்' மாதம் ஒரு கையில்  'கூடைக் கேக்கு'களையும் மற்றொரு கையில் அரையாண்டு பரீட்சைக்கான வினாத் தாள்களையும் சுமந்தபடி கதவு தட்டும். 'கூடைக் கேக்'கிற்குள் கிறிஸ்துமஸ் சந்தோசங்கள் வாசம் பண்ணும். வினாத் தாள்கள் அச்சந்தோசங்களைக் கேள்விக் கொக்கிபோட்டு பரீட்சைக்கு இழுத்துச் செல்லும். பரீட்சை எனும் ஏழு மலை ஏழு கடலைத் தாண்டினால் தான் 'கிறிஸ்துமஸ்' எனும் 'தங்க மீனான' தங்கத் தருணங்களை அடைய முடியும்.


' சவாலே சமாளி' என்றபடி நாட்கள் கடக்கும். டிசம்பர் 22 அல்லது 23 தேதிகள் வரை பரீட்சை இருக்கும். பரீட்சை முடியும் நாளும் 'கிறிஸ்துமஸ்' புத்தாடையை தையற்கடைக்காரரிடம் பெறும் நாளும் ஒன்றாகவே இருக்கும். 

80 களின் மத்தியில் புத்தாடை அணிவது 'புதுப்பட ரிலீஸ்'போல படு 'த்ரில்லாக' இருக்கும்.  துணி எடுத்து 'மேட்சிங் கால்சராய்' நிறம் தெரிந்து தீபாவளி தினத்தில் புத்தாடை அணிந்த 'தோஸ்த்துகளில்' யாரின் உடை சிறப்பாக இருந்ததோ அந்த தோஸ்த்திடம் தைத்த 'டெய்லர்' கடை  அறிந்து அங்கு கிறிஸ்துமஸ் புத்தாடை தைக்க கொடுப்போம். 


 ' சும்மா "குடை ராட்டிணம்" கணக்கா டெய்லர் நம்மள சுத்து சுத்துனு சுத்தி அளவெடுப்பாரு. நோட்டுல எழுதறப்ப நான் அளவை மறு மதிப்பீடு செய்வேன். கடைசில என் கெரகம்  alteration பண்ணித்தான் அதை அணியணும். இருப்பினும் அந்நாட்களில் அணிந்த உடைகளின் தருணங்களை எப்பொழுது நினைத்தாலும் மனசைத் தைக்கும். சரி. பனிக்காலத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.

அன்று எனக்கு புத்தாடையின் வாசனையைத் தவிர பரீட்சை குறித்த எந்த யோசனைகளும் தோன்றாது. 'எப்படா... பரீட்சை முடியும்' என்று 'ட்ரிகரை' விட்டு வெளியேறத் துடிக்கும் தோட்டா போல மனம் காத்திருக்கும். 
"80-களின்" மத்திய தீபாவளிக் கொண்டாட்டங்களைப் போலத் தான் 'கிறிஸ்துமஸ்' பண்டிகையும்   மனதை "80களின்" மத்திய வருடங்களுக்கு இழுத்துச் செல்லும்.

"1980" களின் மத்திய வருடக் "கிறிஸ்துமஸ்" காலங்கள்


            மதுரை 'தூயமரியன்னை' மேல்நிலைப் பள்ளிப்படிப்பு நாட்கள் எனக்கு வனவாசம் போலவே கழிந்தன.  தேர் ஊர்வலத்தில் 'மண்டபப் படிகள்' இருக்குமே அப்படி பள்ளிக்கால நாட்களில்  'தீபாவளி' , 'கிறிஸ்துமஸ்' போன்ற பண்டிகைகள் மண்டபப் படிகள் போல வந்து மனத்தேரின் ஓட்டத்தை நிறுத்தி இளைப்பாற வைக்கும். இப்படிக்கும் எங்கள் வீடு பள்ளிக்கூடம் போலத் தான் அப்பொழுது இருந்தது. அப்பா நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர். அம்மா ஆசிரியை. அம்மா எனக்கு '3-c டீச்சராக்கும்'. ஆசிரிய வீட்டுப் பிள்ளை 'மக்கு' என்ற சொல் வழக்கு உண்டு. வழக்குகள் இல்லாமல் வழக்கமாகப் பல வேளைகளில் நிரூபித்து நெஞ்சு நிமிர்த்தி நடந்தவன் யான். அந்தக் கதைகளைப் பின்னொரு சூழலில் பகிர்கிறேன். 

சுவாரஸ்யங்கள் நிறைந்த கதைகளை மனப் பறவையாக உங்கள் மனக்கூட்டிற்குக் கடத்துவேன். என் கதைகளில் உங்கள் கதைகளும் கிளைகள் விடலாம்.

ஒரு வழியாக அரையாண்டுப் பரீட்சை முடியும். மனசுக்குள் "கிறிஸ்துமஸ்" சந்தோசக் குடில் கட்ட ஆரம்பிக்கும். மதுரை ஜெய்ஹிந்துபுரத்து வாழ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கும் பின்னர் 90களில் மதுரை அண்ணாநகரில் கொண்டாடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கும்  நிறைய வித்தியாசங்களை உணர்ந்த காலங்கள் அவை. இரண்டின் ஞாபகங்களும் 'டிசம்பரில்' மனசுக்குள் அலையடிக்கும். 
ஜெய்ஹிந்துபுரத்தில் 'தீபாவளி' களை கட்டும்.  'கிறிஸ்துமஸ்' எங்கள் வீட்டில் மட்டும் வாழைமரம் கட்டும். எங்கள் தெருவில் மூன்று கிறிஸ்தவக் குடும்பங்கள் இருந்தன. அதுவும் அந்தக் கடைசியில் ஒன்று. இந்தக் கடைசியில் ஒன்று. நடுவில் ஒன்று என்ற விகிதாச்சாரப்படி கிறிஸ்தவ வீட்டுப் படிகள் இருக்கும். ஆரம்பத்தில் அங்கிருந்த  எங்களை ஆங்கிலேய நாட்டிலிருந்து வந்தவர்களைப் போல பாவித்தார்கள் அங்கிருந்த பயலுகள். 

பின்னர் "! அடேய்! பயலுகளா... நாங்களும் புரத்துல இருந்து தான் வந்திருக்கோம். நாங்களும் உங்க சரகம் தான்டாஅடேய்" என பேச்சுவார்த்தைக்கு அழைப்போம். மதுரை எம். கே.புரத்தில்  (சுப்ரமணியபுரம் அருகில்) தான் எங்களது ஆரம்பகாலம் அமைந்திருந்தது. எங்களது அதான பிரதான செயல்பாடுகளைக் கண்ணுற்ற பின்னர் ஜெய்ஹிந்துபுரத்துப் பயலுகள் 'எங்கள் இனமடா நீங்கள்' என்று எங்களை ஏற்றுக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் கிறிஸ்துமஸ் தினத்தில் எங்களை வெடி போட விடமாட்டான்கள் அந்தப் படவாக்கள். வெடி வைத்து நெருப்பு மருந்தைத் தொடும் முன் படவாஸின் 'சில்லாக்கு' விளையாட்டுக் கற்கள் எங்களின் வெடிகளைப் பருந்தாகத் தூக்கிப் பறக்கும்.' தீபாவளிக்கு மட்டுந்தான்டா வெடிச்சத்தம் கேட்கணும். நீங்கள்லாம் சர்சுக்குப் போனமா கேக்க தின்னமானு இருக்கனும். மனசுக்குள் திரி கிள்ளுவான்கள் படவாக்கள். நான் அப்பொழுதெல்லாம் மிகுந்த கோபக்காரனாக்கும். 
இப்பொழுது இல்லை. கோபங்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டேன். அவர்களுடன் மல்லுக்கு நின்று பின்னாளில் "மூழ்காத சிப்பே ப்ரண்ஷிப் தான்" - என்று பாடாத குறையாக 

 படவாக்களுடன்.... 
'சில்லாக்கு', 'ஆத்தலக்கடி, பூத்தலக்கடி' , 'கம்புத் தள்ளி' , கிளியாங் கிளியா, 'கல்லா... மண்ணா' ... எல்லாம் விளையாண்டு கழிக்க '' டிசம்பர்" 'கிறிஸ்துமஸ்' தினத்தன்று எங்கள் வெடிகளின் திரிகளை படவாக்கள் தான் கிள்ளிக் கொடுப்பார்கள்.

 'கிறிஸ்துமஸ்' தினத்தன்று ஜெய்ஹிந்துபுரத்து தெருவில் வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. இந்து மதச் சகோதரக் குடும்பங்களுக்கு நடுவில் தனித் தீவாக இருந்த எங்கள் வீட்டு வாசற்படிகளில் வெடித்த மருந்தின் வாச நெடிகள் , வெடிப்பில் எழுந்த புகைகள்  இப்பொழுது நினைத்தாலும் மனசுக்குள் புகை மூட்டமாக எழும்பும். 

எங்கள் வீட்டின் உள்ளே 'கிறிஸ்துமஸ் கேக்'குகளின் வாசனையை முகர்ந்து சிரித்தபடி படவாக்களுடன் உண்ட தருணங்களும் மனக்குடுவைக்குள் கண்ணாடி மீன்களாக நீந்திக் கொண்டே இருக்கின்றன. 

தினத்தந்தியில் இடம்பிடித்த 'கன்னித் தீவு' கதை போல 'டிசம்பர் உலா'வும் முடிவற்றது. இம்மாதம் முடியும்வரை 'டிசம்பர் உலா' தொடர்வேன். தொடர்ந்திருங்கள். டிசம்பர் தேரை தொடர்ந்து இழுக்கிறேன். 

வரும் பதிவில்...

"who Is The" Hero"*...? 


பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 

மனங்கொத்தும் பறவை பறக்கும்... 


Irudhy.a 




Saturday, December 18, 2021

டிசம்பர் உலா...

Fly...


"வாம்மா மின்னல்" ... - மாயி திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு பெண்பார்க்கும் காட்சியில் புதுப் பெண் சட்டென மின்னலாகக் கடப்பாரே! அப்படிக்  கடந்துவிட்டன 'டிசம்பரின்' பாதி நாட்கள்.

அடித்துப் பிடித்து ஓடிவந்து  கடைசிப் பேருந்தைப் பிடித்து ஊர் சென்று சேர்வதைப் போல... 
நிறைகளுடனும்,குறைகளுடனும் மூட்டை கட்டி ஆன மட்டும் கடந்து படிகளில் தொற்றி சூதானமாகக் கைப்பிடி பிடித்து  வருடத்தின் கடைசி மாத 'டிசம்பர்' பேருந்தைப் பிடித்தாகிவிட்டது. 


  இருக்கையைக் கைப்பற்றி அமர்ந்தவுடன் கடந்து போகும் சன்னலோரக் காட்சிகள் போல "2021"-ஆம் ஆண்டுக் காட்சிகள் கண் முன்னே 'பயாஸ்கோப்' காட்சிகளாக விரிகின்றன.

இறுகப் பற்றிக்கொண்ட கரங்களுக்குள் கரைந்து துளித்துளியாக வெளியேறும் 'பனித்துகள்கள்' போல "2021" -ஆம் ஆண்டும்  தன்னைக் கரைத்து ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு பாடம் நடத்திக் கடந்தபடி இருக்கிறது. 

 இச்சூழலில்... வண்ணமருந்து ரசாயனம் பூசி அழகு கொண்டையிட்டு மெல்லிசான தேகத்துடன்  கரங்களுக்குள் அடங்கும் பண்டிகைக்கால மத்தாப்புப் பெட்டி ஞாபகத்திற்கு வருகிறது.


 உரசிப் பார்த்த '
மத்தாப்புக் குச்சிகளாக' நாட்கள் கடந்திருக்கின்றன. சில குச்சிகள் உரசியதும் பற்றிக் கொண்டன. சில இரண்டு மூன்று உரசல்களுக்குப் பின் பற்றிக் கொண்டன. இன்னும் சில உரசுகையில் 'நமநமத்து' பற்றாத குச்சிகளாகக் கை நழுவின.    இன்னும் மீதமான குச்சிகள்
 "உரசிப் பார்க்குறயா?"எனக் கேள்வி கேட்டுப் பல் இளித்தன. இளிக்கின்றன. பெருமழையில் காணாமற்போன சாலைகள் போல வருடத் துவக்கத்தில் எடுத்த உறுதிமொழிகளில் பல காணாமற் காற்றோடு பறந்தன. காற்றில் பறந்த உறுதிமொழிகளை விரட்டிப் பிடிக்கவா முடியும். 

"போனால் போகட்டும் போடா...
இந்தப் பூமியில் புதிதாகப் பிறக்கலாம் வாடா..." 

  என - "2022" குரலெடுத்து மெட்டெடுத்து ... 
"எட்டுவைத்து வாடா..."-
நடனமாடி அழைக்கிறது. 

'கிளம்புடா ... புழுதி கிளம்ப
அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து...?' 
   " ஹலோ... ஹலோ... ஒரு நிமிஷம். 'டிசம்பர் உலா'  ன்னு சொல்லி டிக்கெட் போட்டுட்டு  வண்டியக் கெளப்பாம கூவிக்கிட்டே இருந்தா எப்புடி. இன்னும் 'கப் டீ' கூட வரல. 
   " Time is Gold"... சட்டுபுட்டுனு டிசம்பர் பஸ்ஸக் கெளப்புப்பா. உலாப் போலாம்" . 
    "தம்பி எல்லாருக்கும் 'டீ' சொல்லுப்பா...

Have your cup of 'tea'... 


'டிசம்பர் உலா' 'up coming' - னு 
'status' - ல பதிந்த அடுத்த நாள் பதிவை முடித்து கிறுக்கல்களை இடைச் செருகலாம் என எத்தனிக்கையில் மனம் முருங்கையில் ஏறியது. முருங்கை பாரம் தாங்காதே. சட்டென ஒடிந்தது. ஏனோ?முடித்த பதிவை பதிவிடாமல் முற்றிலும் நீக்கினேன். நன்கு யோசித்து திட்டமிட்டு எழுதிய பதிவு அது. அதனாலோ என்னவோ மறுபடி படித்தபோது பிடிக்காமல் போனது. திட்டமிட்டு எட்டு வைப்பதை நான் நிறுத்தி வெகு நாட்கள் ஆகிவிட்டது. 

 திட்டமிட்டவைகள் பல தருணங்களில் கண் முன்னே சீட்டுக் கட்டாகச் சரிந்து போயிருக்கின்றன. கவலைகள் சூழும் போது  பறவைகளைப் பார்ப்பேன். அப்புறமென்ன. வானமே கூரையாகும்.  நடுச்சாமத்தில் நிலா, நட்சத்திரங்களோடு அளவளாவிவிட்டு   பின்னிரவில் உறங்கிவிடுவேன். மன்னிக்கவும். இது என் அனுபவம். நீங்கள் 'பிளான் பண்ணாம எதுவும் பண்ணீடாதீங்க. ஓகே.

 விஷயத்துக்கு வர்றேன். 

"Time is Gold" ... 
' December' is' cold'... 

       மப்ளர் சுற்றித்தயாராகுங்கள். டிசம்பர் பேருந்தின்
  சன்னல்கள் திறந்தே இருக்கட்டும். 
       "போலாம் ரெய்ட்" ... 



மறுவீட்டுக்கு அனுப்பும் புதுமணப்பெண்ணை சகல சௌபாக்கியங்களோடு அனுப்பி வைப்பார்களே! அதுபோல "ஆண்டவன்" சகல சௌபாக்கியங்களோடு நிறைவாக டிசம்பரைத் தொடங்கி ஆண்டை நிறைவு செய்கிறார். 


'டிசம்பரில்' அப்படியென்ன நிறைவுகள்? 

 'சுனாமி, ' பெருமழை',' புயல்' இதெல்லாம் டிசம்பர்ல தானப்பா வந்திருக்கு. வரலாறு தெரியாம பேசுறதப் பாரு. வரலாறு முக்கியம் அமைச்சரே. குரல் கேட்கிறது. 
 பேரிடர்கள் காலத்தின் எச்சரிக்கை சமிக்ஞை. நம்மைச் சரி செய்து கொண்டால் ஆண்டவன் தரும் ஆண்டில் குறைகள் காணாமற் போகும். இது எனது தாழ்மையான எண்ணம். உங்கள் எண்ணமும் இந்த வண்ணத்தில் இருக்கலாம். 

மற்றபடி.... 
'டிசம்பர்' பலதரப்பிலும் சிறப்பான நாட்களைப் பூக்களாகக் கட்டி வண்ணமிகு கதம்ப மாலையாக நம் கரங்களில் கொடுக்கிறது. 


"உலக அடிமைத் தொழில் ஒழிப்பு தினம், உலக மாசு தடுப்பு தினம், ஊனமுற்றோர் தினம்(physically challenge persons) , தேசிய கடற்படை தினம், உலகத் தன்னார்வலர் தினம், கொடி நாள் தினம், சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம், உலக மனித உரிமைகள் தினம், உலக அமைதி தினம்" (இன்னும் வரிசை நீள்கிறது) 
     - தினம் ஒரு நல்தினமாகக் கடக்கிறது 'டிசம்பர்.'

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 
" கி. மு & கி. பி "எனும் காலப் பகுப்பிற்குக் காரணமான தேவனின் மைந்தன் பிறப்பெடுத்த மாதம் 'டிசம்பர்' என்பது உலகு அறிந்த வெளிச்சம். 


இரவின் விடியலாக பனி விழும்
இரவில்....

உறைபனியிலும் வெண்மையான "இயேசு பாலன்" பிறப்பு நிகழ்வின் அழகான தருணங்களை இரு வேறு காலச் சூழல்களோடு விவரிக்கிறேன்.   


தொடரும் 'டிசம்பர் உலா'வில்... 


"பனிவிழும் இரவு" ... 

 கண்துயிலாமல் 
விழித்தே நிற்கும்... 
கிறிஸ்தவர்களின் வீட்டுக் கதவுகள்!
"வானத்து விண்மீன்கள்" 
 ஒளி விரிக்கும்! 
முழுமதி கிறிஸ்தவ வீடுகளின் 
விலாசம் காட்டும்! 

ஏன்? 

தொடரும்.... 
பனிவிழும் இரவில்' 
விசித்திரங்கள் விழித்திருக்கும் நேரத்தில் உறங்காத விழிகளோடு தொடங்கும் "கிறிஸ்துப்பிறப்பின் இசை உலா" ... 

பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 
நன்றி... 

மனப் பறவை...
மனம்கொத்தும்! பறக்கும்.... 


Irudhy.a 




   

 

Saturday, December 11, 2021

ராசா கதை - முடியும்... முடிவும்...

Fly...

 

'மகுடம் மறவா மகாராசா' டிசம்பர் குளிரின் 'அப்டேட்' முடித்து ஒரு முடிவோடு தன் முடிமகுடம் குறித்தும் தறியடிக்கும் தலைமுடி
 குறித்தும் தீர ஆலோசித்து  ஒரு தீர்க்கமான முடிவெடுத்தார். 


என்ன முடிவு? 

Have your cup of  "tea"


அன்று.. 
எங்கள் அம்மாச்சி கதைகள் சொல்லும்போது கொக்கிபோட்டு கொக்கிபோட்டுத் தான் கதைகள் சொல்லுவார்.  கதை பிடிக்க கேள்விக் கொக்கிகள் ஏதுவாக இருந்தன. தொடர்பு முறைகள் ஒரு வழிப்பாதையாக இல்லாமல் இருவழிப்பாதையாக இருந்தால் போக்குவரவு சிறப்பாக இருக்கும். குறிப்பாகக் கதை சொல்லலில் இந்த உத்தி சிறந்த கொக்கியாகி கதை பிடித்துப் பயணிக்க உதவும்.

 கதைகள் பேசியும் கதைகள் கேட்டும் பறந்து திரிந்த காலங்களில் கதை சொல்லிகளால் கதைகள் சொல்லளவு நின்றுபோகாமால்  பேசும் பொருளாகவே இருந்தன.

 இப்பொழுது 'ராசா' கதையின் போக்கிற்குச் செல்லலாம். 

'ராசா'வின் முடியும், முடிவும்!

      
  'மகுட ராசாவால்' எதிலும் ஒன்ற முடியவில்லை. எண்ணமுடியா தலைமுடியால் சொல்லமுடியா அவஸ்தைகளை நம் ராசா அனுபவித்தார். அந்தப்புரத்தில் 
'மயிலாட்டம்' கண்டு வந்தபின்னர் தலையாட்டம் அதிகமானது. கடந்த இரண்டு நாட்களாக அந்தப்புரம் கூட செல்லாது தவிர்த்தார். தலையில் தறி நெய்து தவியாய் தவித்தார்.தறி நெய்வதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும் என்றெண்ணி

 'பொறுத்தது போதும். பொங்கி எழு மகாராசா!' 
           எனச் சூளுரைத்து அரச சபையில் முடி திருத்தம் செய்யும் அம்பட்டனை தன் தனியிடத்திற்கு வரவழைத்தார். அம்பட்டனும் வந்தார். 


'ராசா' சற்றே மூர்க்கத்துடன் அம்பட்டனிடம்

"அம்பட்டா இது முதற்கொண்டு நீ என்னிடத்தில் கண்ட கேட்ட எல்லாவற்றையும் உன் மனசுக்குள் உண்டு உயிர்த்து விடு. மண் தோண்டிப் புதைத்துவிடு. புதைத்துப் புதிதாகப் பிறந்துவிடு. கடந்தவற்றை, நடந்தவற்றை மறந்துவிடு. இல்லையெனில் நீ மண்ணில் புதைவாய்."      
    - - - எச்சரிக்கை மணி அடித்து தன் முடி மகுடம் அகற்றி அம்பட்டனிடம் தன் தலையில் மண்டிக்கிடந்த தலை முடியைக் கத்தரிக்கச் சொன்னார்.
 மகுடம் அற்ற மகாராசாவைக் கண்ட அம்பட்டன் பிறவிப் பயன் அடைந்ததைப்
 போல மகிழ்ந்தான். 

One minute please... 

'மகுடம் இல்லா மகாராசா'வை நான் என்  கிறுக்கலில் வெளிப்படுத்தவில்லை. நல்ல வேளை தப்பித்தார் நம் மகாராசா! கிறுக்காமல் விட்டதன் காரணம் சொல்லிவிடுகிறேன். தொடரும் சூழல்களில் 'ராசா' குறித்த கழுதக் காது உருவத்தை உங்கள் கற்பனைக் குதிரையில் அமர்த்தி உலவ விடுங்கள். கதை உலகின் ஆகச் சிறந்த வசதி இது. 

இனி உங்கள் கற்பனையில் 'ராசா' உருவம்....   
     கழுத்துவரை நீண்டு காதுகளை முற்றிலும் மறைத்து இருந்தன சுருள்முடிகள். பாம்பு போல வளைந்து நெளிந்த தலைமுடியின் கத்தரிப்பை அம்பட்டன் உச்சந்தலையிலிருந்து தொடங்க ராசாவின்  மண்டைக்குள் 'பல்பு' எரிந்தது. 

 ராசாவின் சுருள்முடி தரை விழுந்து காற்றில் பறந்தது.

 இதோ... 
ராசா இதுவரை காத்து வந்த ரகசியமும்  காற்றில் பறக்கப்போகிறது. காதுகளின் முடியை நறுக்கென்று கத்தரித்த அம்பட்டனை ஒர் உண்மை சுருக்கென்று தைத்தது. 




'அப்படியே ஷாக் ஆயிட்டாரு?' அரச சபை அம்பட்டன். 

'ராசா'வின் காதுகளைக் கண்ட அம்பட்டனுக்கு அவரை விட்டு காத தூரம் ஓடிவிட வேண்டும் எனத் தோன்றியது. 

                    காரணம்.......? 

"ராசாக் காது.... கழுதக் காது....!? ராசாக் காது.... கழுதக் காது...?! 
ராசாக் காது... கழுதக் காது...!?" 
         
அன்று...

            எங்கள்  அம்மாச்சி...
'ராசாக் காது... கழுதக் காது' 
       - என்று 'ராசா'வின் ரகசியத்தை உடைத்த போது எங்கள் முகத்தில் அம்பட்டனின் அதிர்ச்சி ரேகைகள் காட்சிகளாக விரிந்தன.

 அம்மாச்சியின் முகபாவனைகளும், கதைசொல்லலின் தோரணைகளும் கதைப்பேச்சில் உச்சம் தொடும். இறுக அழுத்தித் தேய்த்த உள்ளங்கைகளில் வேர் விடும் சூட்டைப்போல கதைக்களம் சூடு பிடிக்கும். இருவழிக் கதைப்பயணத்தில் எதிர்வழி எங்கள் வழியே கேள்விகள் புறப்படும்.

 'அம்மாச்சீ ! ...' ராசா'வுக்கு ஏன் கழுதக் காது இருந்துச்சு?' 

             - எதிர்நோக்கிக் காத்திருந்த கேள்வி தன் அருகே வந்ததும் அம்மாச்சி  எங்கள் பாதைக்குத் தாவுவார். 

"ராசாக்களா... பெத்தவுக செஞ்ச
பாவ புண்ணியமெல்லாம் புள்ளைங்கள வந்து சேரும். நம்ம ராசாவப் பெத்தவுக... செஞ்ச பாவத்துக்கு ராசாவுக்கு கழுதக் காத குடுத்துட்டாரு சாமி'. 
கதையின் ஊடாக பாவத்தின் வீச்சை அதன் பயத்தை மனதில் விதைப்பார் அம்மாச்சி.  'பாவம்' மனசுக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்தும்.

 "பாவத்தின் சம்பளம் மரணம்"


       - என்பது வேதாகமக் கூற்று. 

' ஆத்தாடி! பாவமே செய்யமாட்டோம்பா'
              கன்னத்தின் இருபுறமும் கைகளால் தட்டிக் கொள்வோம். 

எங்கள் அம்மாச்சி சிறந்த கதை சொல்லி. உங்கள் தாத்தா பாட்டியும் சிறந்த கதை சொல்லிகளாக இருந்தால் எனது இக் கூற்றை ஏற்றுக் கொள்வீர்கள். 
உங்கள் மனசுக்குள் அப்படி உங்களின் தாத்தா பாட்டியிடம் கேட்ட கதைகள் ஏதேனும் இருப்பின் முடியுமானால் எனது 
'இ-மெயிலுக்கு' உங்கள் மெயில் வழி விரல் தட்டி அனுப்புங்கள். வழித்தடத்தில் காத்திருக்கிறேன். கதை உண்ணும் சிறுபறவையாக.... 

கதைகள் ஏறவேண்டிய இரயில்
     Prakashaxavier@gmail.com

பேச மறந்த கதைகள்
                  நம் பாட்டன்கள் 
பாட்டிகள் சொன்ன கதைகளை அவரவர் முகப்புத்தகத்தில் களமேற்றுங்கள். பழங்கதைகளின் முகம் அறியும் காலமிது... 
பேச மறந்த கதைகளைப் பேசும் கதைகளாக்க நம்மால் முடியும். 

'ராசா'வின் கதையில் மையமுடிச்சு அவிழ்ந்துவிட்டது. இனி கதையில் சுவாரஸ்யம் இருக்குமோ? ஐயம் வேண்டாம். டிசம்பர் குளிருக்குச் சூடு பறக்க... தொடரும் பதிவில் தொடர்ந்து 'ராசா' கதை பிறக்கும்... 
திருப்பங்களுடன்....! 
காத்திருக்கிறேன். 

மூலக்கதை
அம்மாச்சி'சொர்ணம்மாள்' 
திரைக்கதை, கிறுக்கல்கள்
                         இருதய்.ஆ

பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 

மனப் பறவை மனம் கொத்தும்...
பழம் நினைவுகள் உண்ணும்! 
பறக்கும்... 


Irudhy.a 



 
  

Tuesday, December 7, 2021

டிசம்பர் பூக்களும், ஒரு கதையும்...

Fly...


சற்றே நீண்ட பதிவு. உங்களுக்குத் தோதான நேரத்தில் கொஞ்சம் இடைவெளிவிட்டேனும் வாசித்துவிடுங்கள். தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றிப் பூங்கொத்துகள் உரித்தாகட்டும்....

Have your cup of 'tea'... 

       மனமகிழ் 'டிசம்பர்' பதிவை முடிக்கையில் அதன் தொடர்ச்சியை ஊர்பதிவு இட்டவுடன் தொடர்வதாகக் குறிப்பிட்டிருந்தேன். கடந்த ஊர்பதிவில் 'மகுடம் மறவா மகாராசா' 'வின் கதையைத் தொடங்கியிருந்தேன். மையக்கதையின் முடிச்சுக்களை அவிழ்ப்பதற்குள்'டிசம்பர் 'தன் மொட்டுக்களை அவிழ்த்து பூ முகம் காட்டவே டிசம்பரைத் தொடங்கினேன். டிசம்பர் பதிவிற்குப் பின் ராசாவின் மகுட ரகசியத்தை  உடைக்கலாம் என்றெண்ணி டிசம்பர் பதிவை முடித்தேன்.  ஏற்கனவே சொன்னபடி ராசாவைத் தான் அழைத்தேன். ஆனால்... 
 'மகுடம் மறவா மகாராசா' சற்றே 
கறார் பேர்வழியாகி 
 "தம்பி டிசம்பரைத் தொடருங்கள். யான் டிசம்பர் குளிரை கொஞ்சம் 'அப்டேட்' செய்து விட்டு வருகிறேன்." Late - ஆக வந்தாலும்  தம்பி உன்  'ஸ்டேட்டஸ்ல 'superfast' இரயிலாட்டம் வந்து சேருவேன். தற்சமயம் அந்தப்புரத்தில் 'மயிலாட்டம்' தொடங்கவிருக்கிறது. நான் செல்ல வேண்டும். நீங்கள் வேண்டுமானாலும் உடன் வரலாம்" -என்றார். 
சுதாரித்துக் கொண்ட நான் 
' இல்ல ராசா. எனக்கு வேலை கெடக்கு. மயிலாட்டம் கண்டால் என்பாடு திண்டாட்டம் தான். 
நீங்கள் மயிலாட்டம் முடிந்து
விரைவு இரயிலாட்டம் வந்துசேருங்கள். நான் டிசம்பரைத் தொடர்கிறேன்"- என்றேன்." 

லகுடபாண்டி எப்படியும் மகுடம் கழட்டி "ராசா மகுடம் கழண்டுச்சு" - என சிந்து பாடப்போகிறான். நம் மண்டையை உருட்டப் போகிறான். தற்சமயம் 'ஜெகா' (எஸ்கேப்) ஆகலாம். 'mind voice' என்றெண்ணி மகாராசா வாய் உளறலாகவே புலம்பியபடி மயிலாட்டம் காணச் சென்றார். 
இது தான் ராசாவின் தற்போதைய 'அப்டேட்'. இந்த வார முடிவிற்குள் டிசம்பர் குளிரை 'அப்டேட்' செய்துவிட்டு வந்துவிடுவார். இப்பொழுது  'டிசம்பர் பூக்கள்' 
தொடுத்து ஒரு கதையோடு தொடர்கிறேன். 


டிசம்பர் பூக்களுக்காக வலைப்பூ சந்தைக்குள் நுழைந்தேன். அழகான வண்ணங்கள் கண்களுக்குள் 'கலைடாஸ் கோப்பாகி' விரிந்தன. பூக்களின் மொழி அதன் வாசனை தானே. ஆனால் டிசம்பர் பூக்கள் வாசனையற்ற காகிதப் பூ போல வாசனைமொழியின்றி மெளன உதடுகளால் சிரித்து... 
"இளஞ்சிவப்பு, ஊதா, கருநீலம், லாவண்டர், பிங்க், மஞ்சள், வெள்ளை" என பல வண்ணங்களால் விழிகள் நிறைத்தது. 

   ஏன் டிசம்பர் பூக்களுக்கு வாசனை இல்லை? கேள்வியோடு வலைப்பூ சந்தைக்குள் உலாவிய போது... 
வாசனையற்ற பூக்களுக்கான காரணக்கதை கிடைத்தது. மெய்யோ? பொய்யோ? ஆராய்ச்சி இல்லாமல் கதையை ரசிக்கலாம்.

பழங்கதையாக இக்கதை புனையப்பட்டிருந்தது. நான் என்நடையில் இக்கதையை தொடர்கிறேன். கதையின் கைவிரல்கள் பிடித்து உடன் பயணியுங்கள். விரல் பிடித்த கதை கை சிவக்க ஒட்டிக் கொள்ளும் மருதாணியாக மனதோடு ஒட்டிக் கொள்ளட்டும். வாசமற்ற பூக்களின் பழங்கதை உங்கள் மனதை வசப்படுத்தும் என நம்புகிறேன். 

'Open பண்ணா'...

      இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். முன்னர் ஒரு பதிவில் கதை சொன்னபோதும் 'open பண்ணா' - என்று தான் கதையை ஆரம்பித்தேன். அதை வாசித்த என் மனைவியின் தோழியார் 'எதை open பண்ணா' என்று கேட்டிருக்கிறார். 'அடக் கடவுளே!  என்ன இது சோதனை!.' என்று அங்கலாய்த்து பிறகு 'ஓபன் பண்ணா'விற்கு கோனார் விளக்கவுரை அளித்தேன். உங்களில் யாருக்கேனும் இதே சந்தேகங்கள் வரலாம். (why blood. Same blood) 'open  பண்ணா' என்ற சொற்பதத்தை திரையுலகில் கதை சொல்லும் முன் 'open' பண்ணுவார்கள். அடியேனும் அப்படியே. 

 'இப்ப கதைய ஓப்பன் பண்றேன்' 
கதைத் தலைப்பு நானாக வைத்தது. பழங்கதையில் இத்தலைப்பு செல்லுபடியாகாது. 

கதையின் தலைப்பு 

"ஹெலன்&
       அணில்&
              டிசம்பர் பூக்கள் மற்றும் உறவுக்காரத் தெய்வங்கள்!" 

 ' ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு' என்றே தொடங்கும் பல நீதிக் கதைகள். ஆனால் இப்பழங்கதை  ஏழைச்சிறுமியை சந்தோச ராணியாக்கி நடையிட வைத்திருக்கிறது. ஏழைச்சிறுமியின் வாழ்வின் ஊடாக வண்ணமில்லாப் பூக்களுக்கான காரணங்களைக் கோர்த்து அழகான ஒரு மாலையாக்கியிருக்கிறது. 

நான் "ஒரு ஊர்ல ஒர் ஏழைச்சிறுமி
இருந்தாள்" என்றே கதையைத் தொடங்குகிறேன். பெயர் 'ஹெலன்'. மாற்றாந்தாயால் வளர்க்கப்பட்டாள். மாற்றாந்தாய் தன் வயிற்றுப் பிள்ளைகளிடத்தில் பாசம் வைத்து ஹெலன் வசம் பேசும் போது மட்டும் தன் நாவில் விஷம் வைப்பாள்.வந்து விழும் சொற்கள் எல்லாம் ஹெலனுக்கு நஞ்சாகக் கசக்கும். ஹெலனின் ஒரே ஆறுதல் அவளது தோழியார் அணில் தான். மனம்துவளும்போது தோழியார் அணிலிடம் முறையிடுவாள். இதுவே வழக்கம். 

நாட்கள் கடக்க டிசம்பரில் ஒரு சோதனை ஹெலனுக்கு வந்தது. அதுவும் மாற்றாந்தாய் ரூபத்தில். சோதனையிலும் ஒரு வேதனை என்னவென்றால் வந்த சோதனை பூவால் வந்தது. 
'பெண் வைக்கிற இடத்தில் பூ வைக்கணும்'என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால் மாற்றாந்தாய் பூவையே புயலாக்கினாள். மாற்றாந்தாய் ஹெலனை அழைத்து 


வண்ணங்கள் நிறைந்திருக்கும் பூக்கள் பறித்து நீ உன் தங்கைகளுக்குத் தரவேண்டும். பூக்களோடு வந்தால் வீடு வா. இல்லையெனில் காட்டோடே போ' என்று புயலைச்சுருட்டி சிறுமி ஹெலனின் சொக்காய்க்குள் வைத்து விரட்டினாள். பிறகென்ன அழுத விழிகளோடு  அணிலிடம் வந்தாள். விஷயத்தைச் சொன்னாள். தோழியார் அணில் மாற்றாந்தாயின் சூட்சமத்தை அறிந்தது. அப்படியென்ன சூட்சமம்?

பழங்கதைப்படி, டிசம்பர் முதல் மார்ச் வரை பூக்களே பூக்காது. மரங்களெல்லாம் இலை உதிர்த்து உரித்துத் தொங்கவிட்ட கறிக்கோழியாட்டம் காட்சியளிக்கும். ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றாமல் மரங்களெல்லாம் பூப்பூவாய் பூக்கும். 'வசந்தகாலம்' இப்படித்தான் 
 தொடங்கும்.  அப்படியிருக்க மாற்றாந்தாய் ஹெலனுக்கு கொடுத்திருக்கும்  சவால் எத்தகைய வஞ்சகமானது என்பதை நினைத்துப்பாருங்கள்.
 சிறு பூவான ஹெலன் வாடிப் போனாள். இனி வீடு திரும்பமுடியாது என்றெண்ணி காட்டில் அமர்ந்திருந்தாள். 

ஏழைச்சிறுமி ஹெலனின் தோழியார் அணில் திரைக்கதையில் ஒரு திருப்பம் சேர்க்கவே..........

கதையில் ஒரு திருப்புமுனை

12மாதத் தெய்வங்களின் வட்டமேசை மாநாடு நாளை நம் காட்டின் எல்லையில் நடக்க இருக்கிறது. நான் உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன். உனது பிரச்சினையை தெய்வங்களிடம் முறையிடலாம். நல்ல முடிவு கிடைக்கும் என்று கூறி அணிற்தோழி மறுநாள் ஹெலனை தெய்வங்களின் முன்னிலையில் நிறுத்தியது. 

ஹெலன் தன் பிரச்சினையை டிசம்பர் மாதத் தெய்வத்திடம் முறையிட்டாள். டிசம்பர் மாதத் தெய்வம் "பாப்பா உனது பிரச்சினைக்கான தீர்வு எனது சரகத்திற்குள் வராது. என்னால் உனக்கு பூக்களைத் தர முடியாது. நான் மழை, பனி, குளிரைத் தரும் அதிபதி. நீ வேண்டுமானால் பூக்களுக்கு அதிபதியான ஏப்ரல் மாத வசந்தகாலத் தெய்வத்திடம் முறையிடு. உன் பிரச்சினை தீர வாய்ப்புண்டு"
-என்று சொல்லி ஹெலனை வசந்தகாலத் தெய்வத்திடம் அனுப்ப...வசந்தகாலத் தெய்வம் சிறுமியின் மாற்றாந்தாயை கடிந்துவிட்டு சிறுமியின் தலைவிதிமாற தனது விதிகளைத் தளர்த்தி 'டிசம்பர் மாதத்தில் இனி முதற்கொண்டு இவ்வையகம் வண்ணமயமான பூக்களை பூக்கட்டும் என்று கட்டளையிட்டு  'conditions apply' என்றபடி வசந்தகால அதிபதி நடையைக் கட்டினார். 

டிசம்பர் பூக்களுக்கான 'condition

டிசம்பர் மாதம் பூக்கும் பூக்களுக்கு வாசனை தர மாட்டேன். சிறுமிக்காக இரங்கி வண்ணங்கள் தருகிறேன். மற்றபடி எனது வரையறையில் ஏப்ரலில் பூக்கும் பூக்கள் மட்டுமே வாசனையோடு பூக்கும்'  "இதுவே என் கட்டளை. என் சாசனம்" - என்று 'பாகுபலி' ரம்யாகிருஷ்ணனாட்டம் கட்டளையிட்டார்  வசந்தகால அதிபதி. 

'கொரோனா' ஊரடங்குத் தளர்வுகள் போல சிறுமிக்காக வசந்தகால அதிபதி விதிகள் தளர்த்தியதால் வாசனையற்ற வண்ணமிகு பூக்கள் டிசம்பரில் பூக்கத் தொடங்கின. 

சிறுமி ஹெலன் மகிழ்வோடு வண்ணமிகு டிசம்பர் பூக்களுடன் வீடு சேர்ந்தாள் என்பதாக கதை முடிந்தது. வாசமற்ற டிசம்பர் பூக்களின் பழங்கதை மனசுக்குள் வேர் பிடித்தது

"அன்பின் வடிவது... 
வாழ்வின் விடிவின் வழியது... 
வழியில் வலி நீக்கும் மருந்தது...
விழிதிறக்க இருளகற்றி
மனம் நிறைக்கும் ஒளிஅது!" 

எல்லாமார்க்கங்களும் சொல்லும் நீதி அது... 
 "அன்பே இறை... 
அன்பில் நிறை... 
அன்பே மறை..." 
 அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை என கைகள் விரித்த படியே கண்களுக்குள் நிறைந்து ஒளியாக எழுந்த தெய்வம் 'இயேசு கிறிஸ்து' மண்ணுலகில் மனிதனாகப் பிறந்ததும் டிசம்பரில் தான். 
ஜெர்மனியில் இன்றும் டிசம்பர் மாதத்தை 'கிறிஸ்துமஸ் மாதம்' என்றே அழைப்பதாக தகவல் படித்தேன். இன்னொரு விஷயம் சொல்லி பதிவை முடிக்கிறேன்.
உலகம் முழுக்க வாழும் காதலர்கள் தங்கள் காதலைத் திறக்கும் சாவியை டிசம்பர் மாதத்தில் தான் அதிகம் கண்டுகொள்கிறார்கள்.
வருடம் முடியும் மாதத்தில் பல 
*காதல் அத்தியாயங்கள்*
 தொடங்குகின்றன. சீனாவில் டிசம்பர் மாதசீஸனில் கிளைகளில் இலைகளின்றி கண்கள்நிறையும் படியாக மரம் முழுவதும் வெண்மையும், இளஞ்சிவப்பும் கலந்த கலவையாக ' பவுலோனியா பார்சினி' எனும் மலர்கள் மலர்வதாக வாசிப்பில் அறிந்தேன். இப் பூக்கள் சீனாவின் அரசி என்றெண்ணப்படுகின்றன.  

வாசனையற்ற பூக்களைக் கொடுக்கும் டிசம்பர் மனம் முழுக்க வண்ணங்கள் நிறைத்தே கடக்கட்டும். 


 நம் எண்ணம். நம் வண்ணம்...

பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 

மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும் ...

Irudhy. A 





அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...