About Me

Saturday, December 18, 2021

டிசம்பர் உலா...

Fly...


"வாம்மா மின்னல்" ... - மாயி திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு பெண்பார்க்கும் காட்சியில் புதுப் பெண் சட்டென மின்னலாகக் கடப்பாரே! அப்படிக்  கடந்துவிட்டன 'டிசம்பரின்' பாதி நாட்கள்.

அடித்துப் பிடித்து ஓடிவந்து  கடைசிப் பேருந்தைப் பிடித்து ஊர் சென்று சேர்வதைப் போல... 
நிறைகளுடனும்,குறைகளுடனும் மூட்டை கட்டி ஆன மட்டும் கடந்து படிகளில் தொற்றி சூதானமாகக் கைப்பிடி பிடித்து  வருடத்தின் கடைசி மாத 'டிசம்பர்' பேருந்தைப் பிடித்தாகிவிட்டது. 


  இருக்கையைக் கைப்பற்றி அமர்ந்தவுடன் கடந்து போகும் சன்னலோரக் காட்சிகள் போல "2021"-ஆம் ஆண்டுக் காட்சிகள் கண் முன்னே 'பயாஸ்கோப்' காட்சிகளாக விரிகின்றன.

இறுகப் பற்றிக்கொண்ட கரங்களுக்குள் கரைந்து துளித்துளியாக வெளியேறும் 'பனித்துகள்கள்' போல "2021" -ஆம் ஆண்டும்  தன்னைக் கரைத்து ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு பாடம் நடத்திக் கடந்தபடி இருக்கிறது. 

 இச்சூழலில்... வண்ணமருந்து ரசாயனம் பூசி அழகு கொண்டையிட்டு மெல்லிசான தேகத்துடன்  கரங்களுக்குள் அடங்கும் பண்டிகைக்கால மத்தாப்புப் பெட்டி ஞாபகத்திற்கு வருகிறது.


 உரசிப் பார்த்த '
மத்தாப்புக் குச்சிகளாக' நாட்கள் கடந்திருக்கின்றன. சில குச்சிகள் உரசியதும் பற்றிக் கொண்டன. சில இரண்டு மூன்று உரசல்களுக்குப் பின் பற்றிக் கொண்டன. இன்னும் சில உரசுகையில் 'நமநமத்து' பற்றாத குச்சிகளாகக் கை நழுவின.    இன்னும் மீதமான குச்சிகள்
 "உரசிப் பார்க்குறயா?"எனக் கேள்வி கேட்டுப் பல் இளித்தன. இளிக்கின்றன. பெருமழையில் காணாமற்போன சாலைகள் போல வருடத் துவக்கத்தில் எடுத்த உறுதிமொழிகளில் பல காணாமற் காற்றோடு பறந்தன. காற்றில் பறந்த உறுதிமொழிகளை விரட்டிப் பிடிக்கவா முடியும். 

"போனால் போகட்டும் போடா...
இந்தப் பூமியில் புதிதாகப் பிறக்கலாம் வாடா..." 

  என - "2022" குரலெடுத்து மெட்டெடுத்து ... 
"எட்டுவைத்து வாடா..."-
நடனமாடி அழைக்கிறது. 

'கிளம்புடா ... புழுதி கிளம்ப
அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து...?' 
   " ஹலோ... ஹலோ... ஒரு நிமிஷம். 'டிசம்பர் உலா'  ன்னு சொல்லி டிக்கெட் போட்டுட்டு  வண்டியக் கெளப்பாம கூவிக்கிட்டே இருந்தா எப்புடி. இன்னும் 'கப் டீ' கூட வரல. 
   " Time is Gold"... சட்டுபுட்டுனு டிசம்பர் பஸ்ஸக் கெளப்புப்பா. உலாப் போலாம்" . 
    "தம்பி எல்லாருக்கும் 'டீ' சொல்லுப்பா...

Have your cup of 'tea'... 


'டிசம்பர் உலா' 'up coming' - னு 
'status' - ல பதிந்த அடுத்த நாள் பதிவை முடித்து கிறுக்கல்களை இடைச் செருகலாம் என எத்தனிக்கையில் மனம் முருங்கையில் ஏறியது. முருங்கை பாரம் தாங்காதே. சட்டென ஒடிந்தது. ஏனோ?முடித்த பதிவை பதிவிடாமல் முற்றிலும் நீக்கினேன். நன்கு யோசித்து திட்டமிட்டு எழுதிய பதிவு அது. அதனாலோ என்னவோ மறுபடி படித்தபோது பிடிக்காமல் போனது. திட்டமிட்டு எட்டு வைப்பதை நான் நிறுத்தி வெகு நாட்கள் ஆகிவிட்டது. 

 திட்டமிட்டவைகள் பல தருணங்களில் கண் முன்னே சீட்டுக் கட்டாகச் சரிந்து போயிருக்கின்றன. கவலைகள் சூழும் போது  பறவைகளைப் பார்ப்பேன். அப்புறமென்ன. வானமே கூரையாகும்.  நடுச்சாமத்தில் நிலா, நட்சத்திரங்களோடு அளவளாவிவிட்டு   பின்னிரவில் உறங்கிவிடுவேன். மன்னிக்கவும். இது என் அனுபவம். நீங்கள் 'பிளான் பண்ணாம எதுவும் பண்ணீடாதீங்க. ஓகே.

 விஷயத்துக்கு வர்றேன். 

"Time is Gold" ... 
' December' is' cold'... 

       மப்ளர் சுற்றித்தயாராகுங்கள். டிசம்பர் பேருந்தின்
  சன்னல்கள் திறந்தே இருக்கட்டும். 
       "போலாம் ரெய்ட்" ... 



மறுவீட்டுக்கு அனுப்பும் புதுமணப்பெண்ணை சகல சௌபாக்கியங்களோடு அனுப்பி வைப்பார்களே! அதுபோல "ஆண்டவன்" சகல சௌபாக்கியங்களோடு நிறைவாக டிசம்பரைத் தொடங்கி ஆண்டை நிறைவு செய்கிறார். 


'டிசம்பரில்' அப்படியென்ன நிறைவுகள்? 

 'சுனாமி, ' பெருமழை',' புயல்' இதெல்லாம் டிசம்பர்ல தானப்பா வந்திருக்கு. வரலாறு தெரியாம பேசுறதப் பாரு. வரலாறு முக்கியம் அமைச்சரே. குரல் கேட்கிறது. 
 பேரிடர்கள் காலத்தின் எச்சரிக்கை சமிக்ஞை. நம்மைச் சரி செய்து கொண்டால் ஆண்டவன் தரும் ஆண்டில் குறைகள் காணாமற் போகும். இது எனது தாழ்மையான எண்ணம். உங்கள் எண்ணமும் இந்த வண்ணத்தில் இருக்கலாம். 

மற்றபடி.... 
'டிசம்பர்' பலதரப்பிலும் சிறப்பான நாட்களைப் பூக்களாகக் கட்டி வண்ணமிகு கதம்ப மாலையாக நம் கரங்களில் கொடுக்கிறது. 


"உலக அடிமைத் தொழில் ஒழிப்பு தினம், உலக மாசு தடுப்பு தினம், ஊனமுற்றோர் தினம்(physically challenge persons) , தேசிய கடற்படை தினம், உலகத் தன்னார்வலர் தினம், கொடி நாள் தினம், சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம், உலக மனித உரிமைகள் தினம், உலக அமைதி தினம்" (இன்னும் வரிசை நீள்கிறது) 
     - தினம் ஒரு நல்தினமாகக் கடக்கிறது 'டிசம்பர்.'

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 
" கி. மு & கி. பி "எனும் காலப் பகுப்பிற்குக் காரணமான தேவனின் மைந்தன் பிறப்பெடுத்த மாதம் 'டிசம்பர்' என்பது உலகு அறிந்த வெளிச்சம். 


இரவின் விடியலாக பனி விழும்
இரவில்....

உறைபனியிலும் வெண்மையான "இயேசு பாலன்" பிறப்பு நிகழ்வின் அழகான தருணங்களை இரு வேறு காலச் சூழல்களோடு விவரிக்கிறேன்.   


தொடரும் 'டிசம்பர் உலா'வில்... 


"பனிவிழும் இரவு" ... 

 கண்துயிலாமல் 
விழித்தே நிற்கும்... 
கிறிஸ்தவர்களின் வீட்டுக் கதவுகள்!
"வானத்து விண்மீன்கள்" 
 ஒளி விரிக்கும்! 
முழுமதி கிறிஸ்தவ வீடுகளின் 
விலாசம் காட்டும்! 

ஏன்? 

தொடரும்.... 
பனிவிழும் இரவில்' 
விசித்திரங்கள் விழித்திருக்கும் நேரத்தில் உறங்காத விழிகளோடு தொடங்கும் "கிறிஸ்துப்பிறப்பின் இசை உலா" ... 

பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 
நன்றி... 

மனப் பறவை...
மனம்கொத்தும்! பறக்கும்.... 


Irudhy.a 




   

 

2 comments:

JOHN A said...

இந்த உலா அற்புதமா இருக்கும்போலவே...ஆரம்பமே அற்புதம்...

Irudhy.a said...

மிக்க நன்றி. பனி விழும் இரவில் உலா தொடரும்.

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...