Praise the Lord...
"மனம் கொத்தும் பறவையில்"
இது 50 - வது பதிவு. பூக்களோடு ஐம்பதாவது பதிவில் பயணிப்பதும் தொடர்வதும் 'தேவனின் கிருபை' என்பதை விசுவசிக்கிறேன்.
'ஐம்பது' என்பதை நான் எண்ணிக்கையாகப் பார்க்கவில்லை. ஐம்பதை நீள் வட்டப் பாதையாகப் பார்க்கிறேன். முதலும் முடிவுமற்ற வட்டப்பாதையில் முதல் சுற்றைக் கடப்பதும், தொடர்வதும்... தொடர்ந்த உங்களது வாசிப்பினால் தான் என்பதில் சந்தேகமே இல்லை.
தொடர்ந்த வாசிப்பிற்கு 'நன்றிப் பூக்கள்'.
தொடரும் பயணத்திற்கு வரவேற் பூக்கள் தந்து 'உலாப் பூக்களை' தொடர்கிறேன்.
தொடரும் 'நீள வானம் போல' ... பூக்களும் பிறப்பு முதலே நமது ஒவ்வொரு முக்கிய தருணங்களிலும் நிகழ்வுகளிலும் ப்ரியமுள்ள... தோழனாகவோ, தோழியாகவோ நம் தோளோடு தோள் சேர்ந்து பயணிக்கிறது.
பூக்களோடு உலாவியதில் பெற்ற நினைவுகளை மனசுக்குள் சேகரம் செய்து வைத்துள்ளேன். பூக்கள் பரிமாறிய பல்சுவை அனுபவங்களைப் பகிர்கிறேன். பூக்கள் தந்த சுகந்த வாசனைகளை உங்களுக்குக் கடத்துகிற போது இதே போன்ற ஒரு சுகந்த வாசனையை நீங்களும்... அனுபவித்திருக்கலாம். விரும்பினால் உங்கள் அனுபவத்தைப் பகிரலாம்.
தேநீர் உபசரிப்(பு) பூ...
சுகந்த வாசனை
எனது நினைவில் இன்றும் கமகமத்துச் சிரிக்கும் பூக்கள் சில உள்ளன. அப்பூக்களை... எப்பொழுதும் விரும்பிக் கேட்கும் 'பாக்கள்' போல மனசுக்குள் பாமாலைகளாகக் கட்டி வாடாப்பூக்களாக வைத்திருக்கிறேன்.
முதலாவதாக...
'நான் வெள்ளை நிறமா அல்லது இளம் மஞ்சள் நிறமா?' - என்ற பட்டிமன்றம் நடத்தியபடியே
ஒவ்வொரு நாளும் பூக்கும்
இந்தப் 'பூ' ...
'எளியவர்களின் பூ!
வாசல்கள் தோறும்
தோரணம் கட்டும்
வெள்ளைநிறப் பூ...
தோரணம் கீழ் நிற்கையில்
காற்றில் அசைவாடி... அசைவாடி
சக்கரமாகச் சுழன்று
வான் ஊர்தி போல...
தலைமேல் இரங்கும் பூ... !
அன்னார்ந்து பார்த்து
கண் நோக்கினால்
இந்தப் பூவையின் அழகில்...
மனம் கிறங்க தரை இறங்கி...
மயிலாகத் தோகை விரிக்கும்!
இந்தப் பூவிற்கு
சங்கத் தமிழில் வரலாறு உண்டு!
வரலாற்றில்...
ஒரு "மணிமுடி" உண்டு.
என்ன பூ அது?...
நீங்கள் கடந்துவந்த பாதைகளில் ஏதேனும் ஒரு பூவில் மேற்கண்ட அனுபவங்களை அடைந்திருப்பீர்கள். அறிந்திருப்பீர்கள்.
அந்தப் பூ எளியவர்களின் பூ.
'அன்பு' என்கிறீர்களா! சரியான விடை தான். பூங்கொத்து உங்களுக்கு.
இதோ...
பூ மொட்டவிழ்க்கிறது.
முகம் மலர்கிறது...
நறுமணம் கடத்துகிறது...
பூக்கடை விரித்து புன்னகைக்கிறது
அந்தப் பூ... ...
"முல்லைப் பூ" ...!
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...
விடியும் பூமி அமைதிக்காக விடியவே...
- 'கன்னத்தில் முத்தமிட்டால்'
படப் பாடல் வரிகளுக்கு படப்பிடிப்பு நடத்தினாற் போல வெள்ளை வெள்ளையாக, அவிழா மொட்டுக்களாக... அரும்பும் மொட்டுக்களாக... மலர்ந்து மணக்கும் பூக்களாக... நான் எனது பள்ளிக் காலத்துப் பருவங்களில் பெரும்பாலான வீட்டு முன்புறத் தோட்டத்து பரப்புகளில் படர்ந்து கொடிப் பிடித்து அசைவாடும் முல்லைப் பூக்களைக் கண்டிருக்கிறேன்.
'முல்லைப் பூக்கள்' குறித்த தரவுகளைத் தர முடியும். ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. எனது ஆர்வம் பூக்களை உணர்வின் அடிப்படையில் அணுகுவதிலேயே இருக்கிறது. 'முல்லை குறித்த தரவுகள் வலைப் பூக்களில் ஏராளமாக மலர்ந்து கிடக்கின்றன. நீங்களும் அறிவீர்கள். அதனால் 'கூறியது கூறல்' எனும் இலக்கணப்பிழையை
பெரும்பாலும் தவிர்த்து எழுதவே விரும்புகிறேன்.
சாலை வழியே கடந்து போகையில் மேல் மாடியின் 'கூசா' கிராதிகளில் படர்ந்து கிடக்கும் முல்லைக் கொடிகளிலிருந்த வாசம் காற்றோடு பேசும். காற்று நம் பக்கம் வீசும். முல்லையின் வாசம் நாசியெல்லாம் நாளும் வீசும்.
காலையிலும், மாலையிலும் கொடிப் பூக்களை கொடி வீட்டின் அண்ணனோ, தம்பியோ, அப்பாவோ யாரேனும் ஒருவர் கைகளில் ஒரு அகன்ற குவளையை வைத்துக் கொண்டு கொடியின் அனுமதியோடு மெளனமொழியில் விழி கூடி உறவாடி கொடிக்கு வலிக்காத வழியில் விரல் சுருக்கி ஒவ்வொரு பூவாகக் கொய்து குவளையில் சேகரிக்கும் காட்சிகளைக் கண்டிருக்கிறேன். சில மணிகள் கரைந்தால் கொய்த பூக்களில் 'முதற் பூக்கள்' சாமிக்கு மாலையாகும். மீதீயானவைகள் மிகுதியான அன்போடு வீட்டுப் பூவையர்களின் கூந்தல் கூடும்.
கூந்தலில் சூடிய முல்லைப் பூக்களோடு அப் 'பூவையர்' வீதி நடந்தால் காணும் விழிகள் எல்லாம் விழாக் கொண்டாடும். 'பூவையர்' முல்லைப் பூக்கள் சூடி தேராட்டம் நடந்து கடக்க வீதிகளில் 'முல்லைப் பூவையரின்' தேரோட்டம்' நடந்துமுடியும். திரு விழாக் கூட்டத்தில் தொலைந்த சிறுவன் போல மனம் சில நிமிடங்கள் அடங்கி அமரும்.
"பூக்களும்...
பூவையரும்...
பூவுலகத்தின் பெருஞ்சுவர்கள்!"
'முல்லை' தந்த அனுபவத்தில் மனம் வரிகள் வடிக்கும். முல்லை எல்லோருக்கும் பிடிக்கும். அவை நம் தோட்டத்துப் பூக்கள். நம் வீட்டுப் பெருஞ்சுவற்றுக்குள் வெள்ளை அடித்து பசுமை போர்த்தி காற்றோடு வாசம் சேர்த்து கடப்பவர்களின் மனசுக்குள் அமைதிப் புறாக்களைப் பறக்கவிடும்.
"வெள்ளை நிறம் தேசத்தின் தூய்மை...
வெள்ளை நிறம் மனங்களின் இறையான்மை...
வெள்ளை நிறம் கபடமற்ற
மனங்களை...
பிரதிபலிக்கும் கண்ணாடி!"
"கருணை, இரக்கம், அன்பு" என கணங்களுக்கு ஏற்ப வெள்ளை நிறம் தன்
குணங்கள் மாற்றும். எல்லாம் நல்லதெனக் காண கற்றுக் கொடுக்கும்.
'முல்லைப் பூ' ஒரு வள்ளலை நினைவு படுத்துகிறது.
ஒரு வள்ளல் முல்லைப் பூவை ஞாபகப்படுத்துகிறார். இந்நிகழ்வு என்றும் அற்புதங்களின் அகரவரிசையில் முதலிடம் பிடிக்கும்.
'முல்லை' எனக்கு மட்டுமல்ல பலருக்குப் பிடித்த பூ. பிடிக்கும் பூ...
கடையெழு வள்ளல்களில் ஒருவரான வீரவேள் 'பாரி' தனது பறம்பு நாட்டு மலையடிவாரத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது படரமுடியாது தரை கிடந்த 'முல்லைக் கொடி'யைக் கண்ணுற்று கடுகளவு கூட யோசிக்காமல் தன் தேரை முல்லைக் கொடி படர தாரை வார்த்திருக்கிறார். இது சங்க காலத்து நிகழ்வென அறிவோம். இக்கணம் வரை இரக்கத்திற்கு இலக்கணமாகிறது அந்நிகழ்வு.
வள்ளல் 'பாரி' அறியப்படும் போதெல்லாம் மனதை அள்ளும் 'முல்லையும் விசாலமாக நம் மனதில் கொடிப் பிடித்து வளரும்.
வாய்ப்பும், சூழலும் அமையப் பெற்றவர்கள் தங்கள் வீட்டு முன் தோட்டத்தில் முல்லையைப் பதியமிட்டு வெள்ளைப் பூக்களைப் படர விடுங்கள்...
விடியும் பூமி அமைதிக்காக விடியட்டும்...
அன்பில் வேண்டுகோள்...
' முல்லைப் பதிவு' மனம் பிடித்து படர்ந்திருந்திருந்தால் அறிந்தவர்களுக்குப் பகிருங்கள்...
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்...
இருதய். ஆ