About Me

Thursday, January 6, 2022

மகுட ராசா கதை முடிவும், தொடங்கும் நீதியும்...

Fly...


தீர்ந்து போகாத பேச்சுக்கள் போல பழங்கதைகளும் தீராப் பக்கங்களில் தன் கதைகளை கதைத்தபடியே கடகடக்கின்றன.   கதைசொல்லிகளால் மட்டுமே கதை உலகம் தன் நீள்வட்டப் பாதையில் தொடர் வண்டியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. 


நம் முன்னோர்கள்  தங்கள் நெஞ்சுக் கூட்டுக்குள் அடைகாத்த பழங்கதைகளை கூடுமளவும் 
கூடு விட்டுக் கூடு  கடத்தியிருக்கிறார்கள். பழங்கதைகள் ஏதேனும் ஒரு நீதியை 'கடுகின் விதையாக' சின்னதாக மனசுக்குள் விதைக்கும். சிறிய கடுகுவிதைக்குள்
 உருக்கொண்டிருக்கும் 'பெரு மரம்' போல பழங்கதைகளுக்குள் ஒளிந்து கிடக்கும் நீதியும் மலையளவு யோசிக்க வைக்கும். 

எங்கள் அம்மாச்சி சிறந்த கதை சொல்லி.  என் சிறுபிராயத்தில் எங்கள் அம்மாச்சி  விதைத்த ஒரு நீதிக் கதை தான் "மகுடம் மறவா மகாராசா". அம்மாச்சி கதைத்த மூலக்கதையின் சாரத்தில் நின்று கொண்டு நான் திரைக்கதை கூட்டி மூலக்கதையின் சாரம் சரிந்துவிடாமல்   கவனத்துடன்  அடிவைக்கிறேன். 

Have your cup of "tea" ... 


"மகுட ராசா" கதையில் இதுவரை... 
                 
' ஒரு ஊர்ல ஒரு ராசா' ... 
'ராசா தலையில ஒரு மகுடம்' . ராசாவென்றால் மகுடம் இருக்கத் தானே செய்யும். இதில் என்ன ஆச்சரியம்? இதில் தான் ஆ... ஆச்சரியம்! அணையா விளக்காக கனன்று கொண்டிருக்கிறது.  அந்தப்புரத்து மகாராணிகள் கூட மகுடம் அற்ற தலையோடு ராசாவைக் கண்டதில்லை. இதனால் ராசாவிற்கு "மகுடராசா" என்று  இன்னொரு பெயரும் உண்டு. 'பெயர்போன ராசா'... தலைக்குள் அப்பிக்கிடந்த இருள் நீக்கி உள் ஒளியேற்ற மண்டைக்குள் கம்பளிப்பூச்சிகளாக நெளியும் சுருள் முடிகளை நீக்க எண்ணி அரசவை 'அம்பட்டனை' தனியே தன் இடம் வர உத்தரவிடுகிறார். தனியொருவனாக வந்து நிற்கும் அம்பட்டனை மானாவாரியாக எச்சரித்து தன் மகுட ரகசியம் கழட்ட அம்பட்டன் ராசாவின் 'மகுட ரகசியம்' அறிந்து அலறுகிறான். 

"ராசா காது கழுதக் காது...! ராசா காது கழுதக் காது???" 

   - அம்பட்டனால் பட்டத்து ராசாவின் 'மகுட ரகசியம்' காற்றில் பட்டமாகப் பறக்குமா??? 

இனி... 
 
"மகுட ராசா" கதை முடிவும், தொடங்கும் நீதியும்... 


அம்பட்டன் சென்ற பின்பும் அவனைக் குறித்த எண்ணங்கள் ஓர் அச்ச உணர்வுகளாகி... 'சுனாமி' அலைகளாக எழுந்து ராசாவின் மனசுக்குள் பேரலைகளாக மோதியபடி இருந்தன. அம்பட்டன் தன் காது ரகசியத்தை 'காதும் காதும் வைத்தமாதிரி' எங்கேனும் சொல்லிவிடுவானோ?... 

ராசாவின் மனசுக்குள் கத்திச் சண்டை தொடங்கியது. 
 தலையில் தறி நெய்த அவஸ்தையை விட மனசுக்குள் நடக்கும் கத்திச் சண்டை மகுட ராசாவிற்கு படு அவஸ்தையாக இருந்தது. 

            சில நாட்கள் கடந்தன... 
   அம்பட்டன் அக்கம்பக்கம் பேசுவதையே தவிர்த்தான். 'மகுட ராசாவின்' காது ரகசியத்தை அடைகாக்க முடியாமல் தவியாய் தவித்தான்.


 தன் நடவடிக்கைகளில் வித்தியாசம் உணர்ந்த மனைவியிடம் வேறு வழியில்லாமல்' ராசா'வின் மகுட ரகசியத்தை போட்டு உடைத்தான். அம்பட்டனின் மனம் 'இலவம் பஞ்சாகி' பறக்க   மனைவியின் இதயமோ 'திண்டுக்கல் பூட்டாக' கனத்தது. மனையாளின் மனதில் எடை கூடியது. 

இன்னும் சில நாட்கள் கடக்க... 

        இதயத்தைக் கத்தரிப்பது போல அம்பட்டனின் மனசுக்குள் ஒரு நச்சரிப்பு இரைச்சலாகக் கத்தியது.  

'மகுட ராசா'வின் ரகசியத்தை மனையாள் மனசுக்குள்  பூட்டிக் கொள்வாளா? அல்லது ரகசியங்களை வண்டியில் பூட்டி ஊருக்குள் அனுப்பி தன்னைக் கொல்வாளா???' 
தன் மனைவி குறித்த அச்ச உணர்வு அச்சாணியாகி அம்பட்டனின் மனச் சக்கரத்தைச் சுழல வைத்தது. 

ஒவ்வொரு நாளும்' ராசா' ரகசியம்  உருமாறும் 'கொரோனா' போல அம்பட்டனையும் மனைவியையும் அச்சுறுத்தியபடியே கடந்தன.

 அம்பட்டனின் மனைவியால் ரகசியத்தைக் காக்க முடியவில்லை. அவள் வயிறு உப்பலானது. அம்பட்டன் அதிர்ந்தான். வயிற்று உப்புசத்தின் காரணம் கேட்க மனைவி 'ராசா ரகசியத்தை மென்று மென்று வயிற்றுக்குள் வைத்திருக்கிறேன்' என்றாள். ரகசியத்தை எங்கேனும் சொல்லாவிட்டால் வயிறு வீங்கி செத்துவிடுவதாக அரற்றினாள். பிதற்றினாள். 

அம்பட்டன் முடிவாக ஒரு முடிவெடுத்தான். நடுச் சாமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டிற்குள் மனைவியுடன் பிரவேசித்தான் அம்பட்டன். முழுநிலா தன் தோழமை நட்சத்திரங்களுடன் அம்பட்டனையும், அவன் மனையாளையும் கவனித்துக் கொண்டிருக்க... 


 அம்பட்டன் யாருமற்ற சூழலை அறிந்து மண்வெட்டியால் ....??? 

Extra One minute please...
 
'ராசா கதை' முடிக்க எனக்கு இன்னும்  இரண்டு 'பாராக்கள்' (Two paragraphs) போதும். கதை முடிந்துவிடும். அந்த இரண்டு 'பாராக்களை' ஊர் பதிவின் தொடரும் பதிப்பில் பறக்க விடுகிறேன். கதை உலகின் பயணங்கள் நெடியது.நெடியதாகிலும்  அலுப்புத் தட்டாது. 

அம்பட்டன் மனைவியை ஏன் காட்டிற்குள் அழைத்துப் போனான்?

'தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாள்' என்ற அச்சத்தால் காட்டினுள் வைத்து அம்பட்டன் தன் மனைவியை கட்டம் கட்டியிருப்பானோ?'
                         - கேள்விகள்...????? மனசுக்குள் பிறக்கட்டும். கேள்விகளால் தானே விஞ்ஞானம் பிறந்தது.  

 சுவாரஸ்யங்களைச் சட்டென முடிக்க மனமில்லாமல் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கிறேன். அடுத்த ஏழு நாட்களுக்குள் 'மனம் கொத்தும் பறவை'யில் மற்றுமொரு புதிய அத்தியாயம் மலர இருக்கிறது. புதிய அத்தியாயம் தொடர்ந்தவுடன் 'மகுடராசா' கதையை முடிக்கிறேன். 

தொடர்ந்து வாசித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்... தொடர்ந்திருங்கள்... 

-பணிவுடன் ஒரு வேண்டுகோள்-

பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 

மனப் பறவை மனம் கொத்தும்! 
பறக்கும்... 


Irudhy.a 





4 comments:

Maria said...

'மகுட ராசா' கதையின் தலைப்பு மிக அருமை..���������� வாழ்த்துகள்..������ மகுட ராசாவின் கதைகளை நீங்கள் கூறிய விதம் மிக மிக அருமை...������ கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்று மனதில் எழும் பல கேள்விகளோடு ஆவலுடன் காத்திருக்கிறேன்.... வாழ்க வளமுடன்...������

Irudhy.a said...

வாசிப்பிற்கு நன்றிகள். கதையின் முடிவு நல் நீதியைச் சொல்லும். அதை மட்டும் இப்பொழுது சொல்லிவிட்டேன். தொடர்ந்திருங்கள். விமர்சனத்திற்கும் நன்றிகள்...

JOHN A said...

கேட்ட கதை என்றாலும் reversion அருமை...வாழ்த்துகள்...

Irudhy.a said...

கதையின் விதை வீரியமானது. காலங்கள் கடந்தாலும் கதையின் வீச்சு என் மனசுக்குள் ஆழமாக வேர் பிடித்திருப்பதால் பிடிக்கும்படி எழுதுகிறேன். அம்மாச்சி கதைத்த கதையை இத்தளம் மூலம் பகிர்வதில் மகிழ்ச்சி. தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றி சேட்டா...

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...