"மங்கள இசை" உங்கள் செவிகளுக்குள்...
சுற்றிச் சுழலும் பூமியும் புவனம் போற்றும் தாய்மையும் வேறு வேறல்ல. இரண்டும் ஒரு மரத்தின் வேர்கள்.
அன்பும், நேசமும்
மண்ணின் மொழி!
நெஞ்சைப் பிளந்த போதும்
அன்னமிடுகிற அன்னையாக உயிருக்குள் உருக்கொள்ளும்
பூமித் தாய்க்கு நன்றிப் பூக்கள் தொடுத்து...
" நல்லன தந்தாய்...
நாளும் நல்லது அருள்வாய்....
நல் நஞ்சே! போற்றி...
நவில்கிறோம் நன்றி...
அல்லவை தீய்ந்து நல்லவை அருள்வாய்...
அன்பின் மொழி அறிவாய் அரிவை உனை அண்டிய திசைதனில் அன்னையாக அரவணைப்பாய்!
நல் நெஞ்சே போற்றி...
வாழும் நாளெல்லாம் உடன் வருவாய் எங்கள் வழி...
விழிகள் கூடி கரங்கள் கூப்பி குரலெடுத்து
கைகள் கொட்டி கும்மியடிக்கிறோம்.
குலவையிடுகிறோம்.
"பொங்கலோ.... பொங்கல்...
பொங்கலோ...பொங்கல்....
பொங்கலோ...பொங்கல்!"
அன்பிற்கினிய அனைவருக்கும் மனம் கொத்தும் பறவையின்
'தமிழ்த்தாய்' திருநாள் வாழ்த்துக்கள்...
புதிய மண் பிசைந்து நம்பிக்கை பிடித்து உருவாக்கிய புதுப்பானையில் பொங்கி வழியும் பொங்கலைப் போல வையகம் தனில் நல்லன பொங்கிப் பிரவாகமெடுக்க பிரார்த்திக்கிறோம்.
பெருந்தொற்று நீங்கி பூக்களின் பாதைகளுக்கு பார் திரும்ப பறை இசைக்கிறோம். பறையின் ஒலியில் பள்ளிஎழுச்சி கொண்டு பகலவனாக எழுவாய். இருள் நீங்கட்டும். விழிகள் வழி ஒளி நிறையட்டும். ஒளி கண்டு மொட்டவிழ்க்கும் மலர்களாக மனங்கள் விரியட்டும்...
"பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்" ...
" தைப் பிறந்தால் வழி பிறக்கும்"
தைமுதல் பூக்களின் வழி தெரிந்து தினம் ஒரு பூ அறிந்து உங்களோடு பகிர விரும்பினேன். 'தினப்பூ நெனப்பில்' இருக்கையில் மனம் பின்னுக்கு இழுத்தது. தினத்தை வாரம் ஒரு முறையாக முறை செய்து மாற்றச்சொன்னது.
மாற்றம் ஒன்றே மாறாதது. மாறியது என் முடிவு. காரணம் நான் பகிரும் பதிவுகளைக் கண்ணுற்று தொடர்ந்து வாசித்து வருபவர்களின் நேரத்தை தினமும் என் கடிகாரத்தோடு இணைக்க மனம் விரும்பவில்லை.
சராசரியாக ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகளை எனது வலைப் பூவில் பகிர்ந்து வருகிறேன். ஒவ்வொரு பதிவையும் ஏறக்குறைய 150 முதல் 200 பேர் வரை வாசித்து வருகிறார்கள்.
அவரவர்களுக்குத் தக்க நேரத்தில் வாசித்து முடிக்க ஒரு பதிவிற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேவைப்படுகிறது. எல்லோருக்கும் அவரவர் சார்ந்த பணிகள் இருக்கும். இதற்கு மத்தியிலும் எனது பகிர்வுகளை தொடர்ந்து வாசித்து வருவதை மதிக்கிறேன்.
புலிப் பாய்ச்சலாகப் பாய்ந்து தினம் ஒரு பதிவைத் தரலாம்.
ஆனால் 'புலிப் பாய்ச்சல்' வாசிப்பவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்துவிடுமோ பாய்ச்சல் எரிச்சலை ஏற்படுத்திவிடுமோ? என்றெண்ணி தினப்பதிவில் பின் வாங்கிவிட்டேன். புலிப்பாய்ச்சலில் வேட்கை இருக்கும்.
வேட்கை தவிர்த்து செம்மறியாட்டுக் கிடா போல கால்களைப் பின்னெடுக்கிறேன். கிடாக்கள் பின்னெடுப்பது முன்நோக்கிய விவேகத்திற்கே என்பதை அறிவீர்கள்.
சமயங்களில் பின்னெடுப்பதும் அழகாகும். விவேகம் கொடுக்கும்.
விவேகத்தோடே பூக்களுடனான பயணத்தை வாரம் ஒரு முறையாக மாற்றி ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று பூக்களின் உலாவைத் தொடர்கிறேன். தொடர்ந்திடுவீர்கள் என நம்புகிறேன்.
அடுத்த வார வெள்ளி முதல் பூக்களின் உலா தொடங்கும்.
'வண்ணமும் வாசனையும்
பூக்களின் மொழி!'
"எதை நினைக்கிறாயோ... அதுவாகவே மாறுவாய்"- எப்பொழுதோ அறிந்தது.
வாடாத அன்பும், சுருங்காது உதடுகளில் விரியும் புன்சிரிப்பும், சக மனிதர்களுடனான நட்பும் பூக்களோடு நேசம் கொள்கையில் மனசுக்குள் பூக்கிறது.
பூக்களின் மென்மை உணர்ந்தால் மனமும் மேன்மையாகுமோ?...
தேநீர் நிறைவுடன்...
மனப்பறவை மனம் கொத்தும்!
பறக்கும்...
கனிவுடன் வேண்டுகோள்-
பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்...
இருதய்-ஆ
8 comments:
வாசகர்களின் எண்ணத்துடிப்பை அறிந்து எழுதும் எழுத்தாற்றல்.. வார்த்தைகளில் வண்ணக்கோலம்.அருமை..பொங்கல் வாழ்த்துகள்...
பூக்களில் மனங்களின் வாசம்.....
மலரட்டும் புத்தொளிர் சுவாசம்.
தமிழ்த்தாய் திருநாள் வாழ்த்துகள்...������ அருமையான பதிவு..����
ஒரு சிறந்த படைப்பாளனின் வெளிப்பாடு தன் வாசகர்களின் மனமறிந்து உருவாக்குவது.
'சுற்றிச் சுழலும் பூமியும் புவனம் போற்றும் தாய்மையும் வேறல்ல' அருமை..அருமை..������
பூக்கள் மலரும் பொழுதிற்காய் காத்திருக்கிறோம் வண்டுகளாய் நாங்கள்...
வாழ்க வளமுடன்...������
தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி. நல் விமர்சனங்களுக்கும் நன்றி... தமிழ்த்தாய் திருநாள் வாழ்த்துக்கள்...
வாசித்தமைக்கு மிக்க நன்றி. தமிழ்த்தாய் திருநாள் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சேட்டா... தமிழ்த்தாய் திருநாள் வாழ்த்துக்கள்...
பூக்களில் மனங்களின் வாசம்....
மலரட்டும் புத்தொளிர் சுவாசம்
மிக்க நன்றி.
Post a Comment