About Me

Friday, February 25, 2022

பூக்களின் பாடசாலையில் வெள்ளை ரோசா ...

Fly...


            மனம் கொத்தும் பறவை 

காற்று அலம்பிவிட்ட வானத்தில் நீலநிறமும், வெண்மையும் மாறிமாறி 'ஸ்விட்ச்' தட்ட மனம் ஆகாசத்தில் வெண் பஞ்சுக்
கூட்டம் போல பறக்க ஆரம்பித்தது. 

வானம் எப்பொழுதும் போதி மரம் தான். 'என்ன...! போதிமரத்தடியில் ஆசுவாசமாக அமரத்தான் முடிவதில்லை' - என மனம் முணுமுணுக்கும். மனதுடன் ஒர் ஒப்பந்தமிட்டு இரவில் போதிமரத்தடியில் அமர்ந்து விடுவேன். 
"நான்... 
போதி மரம்... 
நிலா" ...

 'டிசைன் டிசைனாக' படம் காட்டும் மேகக் கூட்டங்கள். ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு சித்திரம் திரை விலக்கும். 

       நேரம் கடக்கும். சமீபமாக நான் விரும்பிக் கேட்கும் பாடல்
' 'Hallamithi Habibo' என்று நீங்கள் எண்ணியிருந்தால்...
'ஸப்பாடி... முடியல. 'தாறுமாறு தக்காளி சோறாக' இப்பாடலை பரிமாறிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வயதான பாட்டி அவரது பேரனுடன் (' யூ டியூபரோ? ) இப்பாடலுக்கு ஆடியதைக் கண்டவுடன் ' கண்டா வரச் சொல்லுங்க. பாட்டிய கையோட கூட்டி வாங்கனு' சொல்லத் தோன்றுகிறது. 
'தாறு மாறு தக்காளிச் சோறு தான் போங்க' . சரி என் விசயத்துக்கு வருகிறேன்.

அடிக்கடி கேட்கும் பாடல்... 
     ' உனை மெது மெதுவாய் ஒரு              பயணம் போல... 
                தொடங்கிடவா' ... 
' salmon-3d'-ல் 'sid sriram' பாடிய பாடல். கேட்டுப் பாருங்கள். 
மெதுமெதுவாக நான் 'உலாப் பூக்கள்' பயணத்திற்குள் உங்களுடன்  நுழைகிறேன். 

தேநீர் தருணம்...


'ரோசா' இந்தப் பதிவிலும் தொடர்கிறது. ரோசா ராணி ஆயிற்றே!...
           ரோசா முட்களுக்கு மத்தியில் தான் தன் மொட்டவிழ்க்கிறது. ஆனால் ?...
 தாவரவியல் கோட்பாடுகள் மறுக்கிறது. 
'ரோசாவை சூழும் முட்கள் முட்களல்ல. அவை திருத்தி வளரும் கிளைகள், தண்டுப் பகுதிகள்' என்கிறது தாவரவியல். 

அடப்போங்க சாரே...

     "முட்களுக்கு மத்தியில் பூக்கும் ரோசா!
கன்னித்தீவுல வில்லன் மூசா...
கவலை வேணாம்... 
நான் உன் ராசா...
உனக்காகத் தூக்குவேன் கூசா!...
ரோசான்னா லேசா? 
பூக்கும் என்றும்' மாஸா'! " 
    என்றெல்லாம் பாட வேண்டியிருக்கிறது. 'இப்ப போய்க்கிட்டு தண்டு. திருத்தப்பட்ட கிளைன்னு சொல்லிக்கிட்டு' செல்லாது. உங்கள் பாடமெல்லாம் அறுந்த பட்டமாகப் பறந்து போகும். 

 அப்புறம், 

ரோசாவே... 
    முள் உனக்கு க்ரீடமா?         வேலியா? "
என்றெல்லாம் தத்துவ விசாரங்களில் பெருக வேண்டியிருக்கிறது.

 அதனால்
' உங்க பேச்சு கா'... செல்லாது. செல்லாது. 

ரோசாவுக்கு இருப்பது முள்ளே. முள்ளே. முள்ளே. உள்ளே மனம் தீர்ப்புச் சொல்லிவிட்டது. 

      " ரோசாவுக்கு முட்கள் 
வேலியோ! 
          இருக்கலாம். 
'வேலி தாண்டாமல் ரசி' 
பாடம் சொல்கிறாள். 
மலர்களின் அரசி. 



வேலி தாண்டாத ரசனை பூக்களின் பாடசாலையில் மட்டுமல்ல பூவுலகிலும் அதுவே வேதாந்தம். 

மலர்களின் அரசி பற்றிய நினைவுகள்,  அனுபவங்கள் அத்தனையையும் ஒரே ஒரு பூக் கூடைக்குள் அள்ளிவிட முடியாது.


 உலகெங்கும் பூக்கும் ரோசாக்களில் நூறு வகைகளும், நிறைய வண்ணங்களும் இருப்பதாக தாவரவியல் 'டக்ளஸண்ணே' சொல்கிறார். அப்படியிருக்கையில் இரண்டு பதிவாக ரோசா உலா வருவதில் மகிழ்ச்சி தான். 
இப் பதிவில் சிகப்பு ரோசாவை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிட்டு 'வெள்ளை ரோசா' தனி ஆவர்த்தனம் செய்கிறார்.

        
தனித்த அழகில் 'வெள்ளை ரோசா' !


 ரோசாக்களில் சிகப்பு ரோசா காதலில் கெட்டிக்காரி. சாட்சியின் காட்சிகளாக சிகப்பு ரோசாக்களை கூந்தலில் செருகி நடைபோடும் பாவையர்களை அதிகம் காணலாம். அதிலும் பிற பூக்களை விட ரோசாக்கள் பெருவாரியாக பூவையரின் காதோரமாகவே தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்கிறது. 

ஏனோ?..... 


'ரோசா' பூவையரின் காதோரமாக ரகசியம் பேசுமோ! 
இருக்கலாம். அதனால் தானோ! ஏனோ! காளையர்கள் காதலியிடம் காதல் சேதி உரைக்க ரோசாவைக் கரம் பிடிக்கிறார்கள். 
'காதோரம் தான் நான் பேசுவேன்' இது ரோசாக்களின் குரலாக இருக்கலாம். 

"வெள்ளை ரோசா" மனசுக்கு நெருக்கமாக இருப்பதற்கு என் சிறு பிராய நினைவுகளே காரணம். கதையல்ல நிசம். சில பல நினைவுகள் எப்படி எனக்குள் வேர் பிடித்தே கிடக்கிறது. கிளை பரப்புகிறது! கேள்விகள் கேட்டுக் கொள்கிறேன். 
மனம் ஒரு' விசித்திரப் பறவை' . நெருக்கமான நினைவுகளை  அப்படியே மனக் கூட்டுக்குள் வைத்து அடை காக்கும். 

அன்று... 

மதுரை 'காஜிமார் தெருவில்' மாடிவீட்டில் குடியிருந்த காலம். எத்தனையோ நினைவுகள் அலையடித்தாலும் இன்றும் மனதை நனைத்தபடியே இருக்கும் ஒர் அலை அற்புதமானது. என் சகோதர்களுக்கு நினைவில் உள்ளதா? தெரியவில்லை. 

நான் மூன்றாவது படித்துக் கொண்டிருந்தேன். 
 'சகாயமாதா நடுநிலைப்பள்ளி' 'வெள்ளை ரோசாவை' எனக்கு அறிமுகப்படுத்தியது. 


"வெள்ளை ரோசாவும், லக்ஷ்மி டீச்சரும்" ... 

            என் அம்மாவை விட  வயது குறைந்தவர். ஆனாலும் அம்மாவின் நெருங்கிய தோழியானார் 'லக்ஷ்மி டீச்சர்'. அம்மாவின் வகுப்பறைக்கும் 'லக்ஷ்மி டீச்சரின்' வகுப்பறைக்கும் ஊடாக ஒரு நடைபாதை இருக்கும். நான் என் அம்மாவிடம் '3c'வகுப்பில் படித்தபோது (?) 'லக்ஷ்மி டீச்சரை' தினம் காணும் சூழல் அமைந்தது. 

'இருக்காங்க. ஆனா இல்ல' - என்கிற வடிவில் தான் இருப்பார் 'லக்ஷ்மி டீச்சர்' . 'மலேயா சேலை' கட்டிவருவார். அப்பொழுது 'மலேயா சீலைகள்' கொஞ்சம் 'ஒசத்தி'. இப்பொழுது நினைத்தாலும் 'லக்ஷ்மி டீச்சர்' குறித்த நினைவுகள் மறக்காமல் ஒளிப்படமாக ஞாபகத்தில் ஓடுகிறது. 

காரணம்... 

'ஒற்றை வெள்ளை ரோசா'... 

'லக்ஷ்மி டீச்சரின்' காதோரம் மென்மை பூத்துச் சிரிக்கும் வெள்ளை ரோசா . ஒற்றை ரோசாவைக்  தான் காதோரம் கூந்தலில் செருகியிருப்பார். உடன்  அடர் பச்சையில் சில
இலைகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.
அதிர்ந்து பேசிக் கண்டதில்லை. சத்தமிட்டுச் சிரித்துப் பார்த்ததில்லை. எப்பொழுதும் புன்முறுவலோடு இருப்பார். ஒரு மெளனம் அவரது கூந்தலில்  அமர்ந்திருக்கும் 
 'வெள்ளை ரோசாப் பூ' போல புன்முறுவலுக்குள் உறைந்திருக்கும். சிகப்பு ரோசா வைத்து வந்ததாக என் நினைவில் இல்லை. வெள்ளை ரோசாவை ஏன் தேர்ந்து கொண்டார்? ஒற்றை ரோசாவாக இல்லாமல் இன்னும் ஒரு ரோசாவைச் சேர்த்து சூடியிருக்கலாமே? இப்பொழுது கேள்விகள் முளைக்கிறது. பதில் ஒற்றை வெள்ளை ரோசாவுக்குத் தெரிந்திருக்கலாம். 


பூக்குடை தான் விரிப்பார். ஆனால் மற்ற வண்ணப் பூக்களைச் சூடிக் கண்டதில்லை. இப்பொழுதேனும் வண்ணப் பூக்கள் சூடுவாரா? சத்தமிட்டுச் சிரிக்கும் வழக்கிற்கு வந்திருப்பாரா? 

திருமணம் முடிந்து பிள்ளைகள் இருக்கலாம். கணவர் அதிர்ந்து பேசுபவராக அமைந்திருக்கக் கூடாது. என் அம்மாவிடம் கேட்டால் 'லக்ஷ்மி டீச்சர்' பற்றிய ஏதேனும் தகவல்களை அறியலாம். ஆனால், நான் கேட்கப் போவதில்லை. 'லக்ஷ்மி டீச்சரின்' ஞாபகங்கள் புதிய வடிவங்களுக்குள் பிரவேசிக்க என் 'மனப் பறவை' அனுமதிக்கவில்லை. 



ஒற்றை வெள்ளை ரோசா நினைவுகள் என்றும் இளமையாகவே இருக்கட்டும். 

ரோசாக்களின் வண்ணங்கள் எதுவாயினும் மனசுக்குள் படரும் எண்ணம் ஒன்று தான். 
அது அன்போ! காதலோ! எதுவாயினும் இருக்கலாம். 
ரோசாவின் மீதான அன்பும், காதலும் தீர்ந்து போகாத பேச்சுக்கள் போல என்றைக்கும் தொடர்ந்திருக்கும். 

 சிறு பிராயத்தில் என் அம்மாவும், இப்பொழுது என் மனையாளும் ஒரு விசயத்தில் ஒன்றுபட்டிருத்தலை அநேக முறை கண்டிருக்கிறேன். சில நாட்களுக்கு முன் கூட கண்டேன். 

கண்ட ஒற்றுமை

  இருவரும் 'ரோசாப் பூவை' குப்பையில் இட்டுக் கண்டதில்லை. 
என் கண்கள் குப்பையில் கிடக்கும் ரோசாவைக் கண்டதே இல்லை. இதே போன்ற அனுபவங்களை நீங்களும் கடந்திருக்கலாம். 
நான் இப்பொழுது பகிர்ந்திருக்கும் ரோசாவின் புகைப்படம் மூன்று நாட்கள் வரை பொறுத்திருந்து நான் எடுத்தது. 


காய்ந்த பின்னும் ஒய்யாரமாக அமர்ந்திருந்தது. "சிகப்பு ரோசா"

காய்ந்து போன ரோசாவின் இதழ்களில் பாவையரின்
ரோசா மீதான காதல் காய்வதே இல்லை. 
 
காய்ந்து போன ரோசா
இப்பொழுது அங்கில்லை. எங்கே சென்றது. ஆராயவில்லை. ஆராய்ந்து தீர்க்க முற்பட்டால் பூக்களை ரசிக்க முடியாது. பூக்களின் தேர்வுக்கும் மனதின் ஆளுமைக்கும் நிறைய சம்பந்தங்கள் இருப்பதாகவே மனம் சொல்கிறது. 

பூக்கள் என்ன சொல்கிறது?.... 

 எல்லாவற்றையும்  ஆராயாமல் கடத்தலே வாழ்க்கை பூக் காடாக  இருப்பதற்கான சாத்தியங்கள்.

 சத்தியமாக கொஞ்சம் கடினம் தான். 'ஆராய்ந்து அறிதலே அறிவு'. கற்றலில் அறிந்தது. கல்லாமலேயே அறியும் அறிவு ஒன்று உண்டு. 

 "எல்லாவற்றையும் ஆராயாதே" . பூக்களின் பாடசாலையில்... 
இதுவே வேதம். 

      "ஆலை இல்லா ஊரில்            இலுப்பைப் பூ சர்க்கரை!" - 
                                - என்பது போல கல்லூரிக் காலத்தில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தரையெங்கும் வாசனையற்ற வெவ்வேறு வண்ணங்கள் நிறைந்த 'தொட்டி ரோசாக்கள்' (Table Roses) கடை விரித்திருக்கும். 


இந்த ரோசாக்களுக்கு முட்கள் இல்லை. ஏன்? 
"படவா ராஸ்கோலு... ஆராயாதே"-
என்கிறாள் 'மனப் பறவை' .

மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்... 


இருதய். ஆ
 
   
 
   
     


     
            









Monday, February 14, 2022

உலாப் பூக்களில் 'ரோசா'...

Fly...


இரண்டு மணி நேரத் தாமதத்திற்கு மன்னிப்(பு) பூக்கள்... 
'7pm எனப் பகிர்ந்து 9pm' ஆகிவிட்டது. 

தொடர்ந்திடுங்கள்...
'வரவேற் பூக்களுடன்' ..... 

"மனம் கொத்தும் பறவை" 

    "பேரம் பேசி... 
அளவினும் கூட்டி அரிந்து... 
  கட்டுப்படி விலையில் கபடி ஆடி 
கைப்பிடித்த பூவை... அவ்விடத்திலேயே நின்று கொண்டு 'கூந்தற் ஊக்கி'யை (hair pin ) பற்களில் கடித்து இழுத்து.... 
பின்னர், லாவகமாக பிண்ணிய கூந்தலில் கண்ணாடி பார்க்காமல் முன்நோக்கி கண்களை இடம் வலம் நகர்த்தி"... 
    முடிவாக   ஒரு வழியாக சரியான இடத்தில் பூவை மையம் கொள்ள வைப்பாள் ஒரு பூவை . நிறைய பாவையர்கள் இக்கலை அறிவார்கள். 


          மை இட்ட கண்கள்... 
     'சரிடியம்மா. கரெக்டா வச்சிட்ட!' 
         - எனச் சொல்லாமல் சொல்வது போல கருவிழி மையம் கொண்டு பச்சைக் கொடி காட்டும். காணும் கண்களுக்குள் "பூங்கொடித்  திருவிழா" நடந்து முடியும். 

பூக்கடைகளில் ... 
      அன்றைய நாட்களில் (80-90 களில்)  கண்ட இக்காட்சிகளை நினைத்தால் இப்பொழுதும்... அட! எப்பொழுதும் நெஞ்சை அள்ளும்! 

"மையம் கொண்டது பூவா? பூவையா? 
 காதோடு சொல்லுங்கள். இதயத்திற்கு கேட்கும்" . 

தேநீர் தருணம்... 

Have your cup of 'tea' ... 


"பூவும்... பூவையும்!" ... 

ஆண்களின் தேசத்தில் பூக்களுக்கு விலையே இல்லை. பூக்களிடம் பேரமும் இல்லை. 
ஏன்?...! 

"பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்தில்லை... 
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்...
இந்த பூமி பூ பூத்தது!" ... 
       என்ற பாடல் வரிகள் நினைவுக் கதவைத் தட்டுகிறது. 

மனம் தராசுத் தட்டு உயர்த்துகிறது.
              "ஒரு தட்டில் பூ... 
               மறு தட்டில் அவள்"...
'அட... அடடடா... அட... அடடடடா...!'
அதிசயம் கணங்களில்....              கண்களில்  நிகழும்!
'பூவும், பூவையும்' சமன்படும்!


தராசின் மையத்தில் நின்ற 
நடு முள் இதயத்துக்குள்
நொடி முள்ளாகி நாடி பிடித்து ஓடும். 

பூக்கள் அவளுக்குப் பிடிக்கும்... 
அவளை  பூக்களுக்குப் பிடிக்கும். 
காளையர்களுக்கு பூவோடு சேர்ந்த பூவையரைப் பிடிக்கும். 

ஆண்களின் தேசத்தில் பூக்களிடம் பேரம் எப்பொழுதும் இல்லை.
        'பூவையர் அறிவீரோ?' 

       பூக்கடையில் பேரம் பேசி பூ வாங்கும் ஆண்களை நான் கண்டதே இல்லை. கண்டால் சொல்லுங்கள். 

'பூக்களுக்குள் பேரங்கள் நடக்கலாம். பூக்களோடு பேரம் நடக்கலாமா?' 

பூக்களை ரசிக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொண்டால் 
'இளமை' என்றும் 'இலவசம்' ...! 
 

'விலையற்ற பூக்கள் அழகு! 
எந்நிலை உற்றாலும்' பூவையர்' அழகு!' 

"இருக்கின்றாள் என்பதே எனக்கின்பம்..." - என்றார் பாவேந்தர். 'பாரதிதாசன்'. 

பூக்களோடு  பூக்களாக பூவுலகில்  நிறைந்திருக்கும் 'பாவையர்களுக்கும்' பூக்களை கண்மலராகப் பாவிக்கும் 'காளையர்களுக்கும்' ... 

   மனம் கொத்தும் பறவையின்... 

'காதலர் தின'    
நல்வாழ்த்துக்கள்... 


" மனம் பிடித்த இதயம்
மனக் கூடு அடைந்தால்... 
நாளெல்லாம் கூடும்! 
" காதல் தினம்" ... 


ஆதி மனிதன் 'ஆதாம்' '' ஏவாளை' கண்ட முதல் நொடியே' காதல் தினம்' தன் தேதிக்கு சேதி சொல்லி அகரம் இட்டது. 

உலாப் பூக்களில்... 

பூக்களின்  சபையில்
பூக்களின் ராணிக்கு 
'சுயம்வரம்'... 


பூக்களின் ராணிக்கேற்ற 'ராசா' 
இன்னமும் அமைந்த பாடில்லை. 
'பூக்களின் ராணி'  இன்னமும்
கன்னியர்களின் ராணி தான். 

கன்னியர்களுக்குப் பிடித்த  பூவும்
இந்தப் 'பூவரசி' தான்! 

பூக்களின் அரசி... 

                        "ரோசா"!


எத்தனையோ பூக்கள் இருக்கையில் 'ரோசா' மட்டும் எப்படி பூக்களுக்கெல்லாம் ராணி ஆனது? 

வீட்டு ராணியிடம் கேட்டேன். அளித்த பதில்களில் இந்தக் 
'கூசாவிற்கு' திருப்தி இல்லை. 
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். 
எது எப்படியோ 'ரோசா' ... ரோசா தான். 

அத்தனை உணர்வுகளையும் தன் முகத்தே கடத்தும் ஒரு பூ 'ரோசா'... மட்டும் தான் என்பது என் எண்ணம். உங்கள் எண்ணமும் இந்த வண்ணம் ஆகலாம். 


"காதல்" 
"கைக்கிளை" 
"அன்பு" 
"கருணை" 
"இரக்கம்" 
"களிப்பு" 
"தனிமை" 
      என எல்லாத் தருணங்களிலும் மனசுக்குள் பூத்துப் பொருந்தும்
 'ரோசாப் பூ...' ! 

 "ரோசா" என்றுமே பூக்களின் வாக்கியத்தில் ஒர் 'ஆச்சரியக் குறி' தான். 

நான்கு கால் பாய்ச்சலாக மனசுக்குள் ஓடும் 'அதிசயப் பரி' என்று சொன்னாலும் தகும். 

ரோசாப் பூவின் முன் நின்றால் 
ஆண் முகமும் நகும்! 

ரோசாவைப் பற்றி எழுத யோசிக்கையில் 'மலர்களின் அரசியை' வருணிக்கவோ அவளின் வரலாறை எடுத்துரைக்கவோ தேவையான சொற்களை மனசுக்குள் கடத்த நினைக்கையில்... 
"அடேய். மக்குப் பையா. நான் கடல். என்னை ஒரு குடுவைக்குள் அடக்க முடியுமா! பேசாமல் எப்பவும் போல உனது நினைவுகளில் நான் எப்படி வாசம் பரப்பினேன் என்பதைச் சொல். அது போதும்." 
            - என்றாள் பூக்களின் ராணி. 'ஆகட்டும் அரசி. அப்படியே செய்கிறேன்'- என்றேன். 

 
'ரோசா' ஒவ்வொருவருக்கும் ஒரு சூழலில் அறிமுகம் ஆகியிருக்கும். 
எனக்கு 'ரோசா' முகம் முகமாக அறிமுகமான சூழலும் நினைவுகளும் வாடாமல் வதங்காமல்  சித்திரங்களாக வயசு மாறாமல்  அப்படியே மனசுக்குள் இருக்கின்றன. 

அன்று...

        எனது சிறு பிராயத்தில் எனது அம்மாவின்' கேசம்' தான் எனக்கு 'ரோசாவை' அறிமுகம் செய்தது. என்  அம்மா நடுநிலைப்பள்ளியில் ஆசிரியை. சனிக்கிழமைகளில் அரைநேரப் பள்ளி தான். நான் பெரும்பாலும் அரைவகுப்பிற்கு 'டேக்கா'(விடுப்பு) கொடுத்துவிடுவேன். 

அம்மா சனிக்கிழமைகளில் சீயக்காய் தூள் தேய்த்து தலைக்குக் குளிக்கும் வழக்கம் கொண்டவர். குளியல் முடித்து கேசத்தில் ஈரம் காயாமல் இருக்கும். துண்டை கேசத்தோடு சுருட்டிக் கட்டியிருப்பார். துண்டையும் மீறி சீயக்காய்த் தூள் வாசனையை  கேசம் நாசிக்குக் கடத்தும். 

மிகச்சரியாக சனிக்கிழமைகளில்  வழக்கமாக எங்கள் வீடு வருவாள் ஒரு 'பூக் காரிகை' . 


அவள் பெயர் ஞாபகத்தில் இல்லை. இன்றுவரை அவளின் பெயர் என்னைப் பொறுத்தமட்டில்... 
       " ரோசாப் பூ கூடைக் காரி" 
அப்படித்தான் மனக்கூடையில் அமர்ந்திருக்கிறாள் அந்த 'ரோசாப் பூ காரிகை'... 

      "டீச்சராக்கா... ரோசாப் பூ..."
என்ற குரல் வாசற் கதவு தட்டும். தட்டாமல் சட்டென 'வராந்தா' வந்து விடுவேன். 

'டீச்சரக்கா' என்ற விளிப்பிற்கு ஒரு காரணம் உண்டு. அதை பூக்காரிகையே அம்மாவிடம் சொல்வாள். 
'நீங்க பவுசா பதவிசா ரோசாவ எடுப்பீங்க. கோழி மாறி கெளற மாட்டீங்க. அதாங்கா... உங்களயே எடுக்க வுட்றுவேன்.' 
கோழி மாறிக் கிளறுபவர்களை கழுவிக் கழுவி ஊற்றுவாள் 'பூக்காரிகை' . 

ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. பூக்களை மதித்தால் மரியாதையும் மல்லுக்கட்டாமல் நம் முன் வந்து நிற்கும். பூக்களை மட்டுமல்ல. பூவையரையும் இவ்விஷயத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

'ரோசாக் காரிகை' தன் இடுப்பிலிருந்த வட்டமான நார்க்கூடையை வாசற் நிலைச் சுவற்றில் முட்டுக் கொடுத்து வைத்திருப்பாள். நான் கட்டமிட்ட வெள்ளை நிற தகரக் கதவின் சட்டக வழியே விழி விரிப்பேன். 

நார்க் கூடைக்குள்... 
பூக்களின் 'இளவரசிகள்' பச்சையும் மஞ்சளும் கலந்த  வண்ணத்தில்  இருக்கும் இலையால் தங்களின்  முகங்கள் மூடி மறைந்திருப்பார்கள். 


அம்மா வந்ததும் பூக்காரிகை இலைமறைவை நீக்க திரைமறைவை விலக்கிக் கொண்ட ராணிக்களாக அத்தனை இளவரசிகளும் முகம் முகமாக பூத்துச் சிரிப்பார்கள். கண்டவர்கள் சிலிர்ப்பார்கள்.

 பூக்கூடைக்குள் இருக்கும் இளவரசிகள்-   ' இளஞ்சிவப்பு,மங்கல கர மஞ்சள், அடர் சிவப்பு, வெளிறிய சிவப்பு'            - என வண்ணங்கள் குழைத்து  கண்களை நிறைப்பார்கள். 


அம்மா 'மங்கல கர மஞ்சள் நிறத்திலும், இளஞ் சிவப்பு நிறத்திலும் உள்ள ரோசாக்களை எடுப்பார்.  அடர் பச்சை நிறத்தில் உள்ள சில ரோசா இலைகளை காம்புடன் சேர்த்து அம்மாவிடம் தருவாள் 'ரோசாப் பூ காரிகை' .    முன்னமே ஈரப்பதத்துடன் தயார் படுத்தி வைத்திருந்த வெள்ளைத் துணி கொண்டு ரோசாக்களை அதன் இதழ்கள் அழுந்தாதவாறு பத்திரமாகப் போர்த்தி ஒரு சில்வர் தட்டில் வைப்பார் அம்மா. 


வெள்ளைத் துணி கொண்டு தங்களின் முகங்கள் மறைத்திருக்கும் இளவரசிகளின் மலர்ந்த முகங்களும்  சூடிக் கொண்ட எனது அம்மாவின் முகமும், ரோசாப் பூக்கள் செருகியிருந்த கேசமும் பார்க்க அத்தனை அழகாக இருக்கும். 

என்னைப் பொறுத்தமட்டில் 'பூவையர்' மீதான ரசனை அறிவது ஆண்களுக்கு  அன்னையிடம் இருந்தே ஆரம்பமாகிறது. பல தருணங்களில் இணையிடம் அன்னையின் வாசனையை அறிவார்கள். அல்லது தேடுவார்கள். அடியேனும் தான். 

'ரோசாப் பூ' வின் ஆரம்பப் பாடசாலை நினைவுகள் அடுத்து வரும் பதிவிலும் மீண்டும் பூக்கும். தொடரும். 

  நிசங்களால் நிறைந்த பூக்கள் அரசியின் கதைகள் இன்னும் இருக்கிறது. தொடர்ந்திருங்கள்... 

அன்பில் விண்ணப்பம்... 

'ரோசாப் பூக் காரிகை' -'பூக்களின் அரசி' பிடித்திருந்தால் பகிருங்கள்... 

நன்றிப் பூக்களுடன்... 


மனப்பறவை மனம் கொத்தும்! 
பறக்கும்... 


இருதய். ஆ
 
  











 

Friday, February 11, 2022

'இதுவும் கடக்கும்'...

Fly...

இறைவன் தாம் படைத்த எல்லாவற்றிலும்  நல்லவற்றையே கண்டார். 
நல்லன கண்டடைவதே 
வாழ்வின் வழி. 

"வெற்றிகள், தோல்விகள், பிரச்சினைகள், சிக்கல்கள்" இவைகள் எல்லாம் வாழ்க்கைப் பயணத்தில் நம் உடன் பயணம் செய்யும் பயணிகள். நிறுத்தம் வருகையில் எல்லாம் விடை கொள்ளும். பயணங்கள் மட்டும் முடிவதே இல்லை. 

"பறத்தலே பறவையின் வாழ்வு" 

            மனம் கொத்தும் பறவை... 

உலாப் பூக்களில் ...

கதம்பம், முல்லை, தாமரை என   முப் பூக்களின் உலா முடிந்து தொடரும் ' பூ நெனப்பில்' இருக்கையில் கடந்த பூக்களின் திட்டமிடா வரிசை போலவே இந்தப்பூவும் நூல் பிடித்து வந்தது. 
நூல் பிடித்த' பூ' மலர்களின் அரசி "ரோசா"... 

வெள்ளி மலரில் "ரோசா" எனப் பகிர்ந்தேன். ஆனால்...? அதே நாள் இரவில் மனம் மாறியது. 

தேநீர் தருணம்... 


'ரோசாப் பூவின்' நினைவுகளை மொட்டவிழ்க்கும் சூழல் இப்போது இல்லை.

 "ரோசாப் பூ" பிப்ரவரி - 14 ஆம் நாளில் உலா வரும். "ரோசாப் பூ" தன் உலாவை 
'காதலர்கள் தினத்தில்' அமைத்துக்கொள்வது எனது திட்டத்தில் அல்ல. அதுவாகவே அமைந்தது. மனம் செய்யும் மாயம் இது. 

பாவையரை பூவையராகப் பார்க்கும் சமூகம் நம் சமூகம். அதே போல பூவைப் பாவையாகப் பார்ப்பதும் நம் இயல்பு. 
'பெண் வைக்கிற இடத்துல பூ வைக்கணும்' எனச் சொல்லக் கேட்டதுண்டு. கடந்த சில நாட்களாக செய்திகளில் இடம்பெறும் "ஹிஜாப்"  என்ற சொல் நிறைய விஷயங்களை யோசிக்க வைத்தது. 

எதிர்பாரா எதிர்ப்பு... 


"ஹிஜாப்" என்பது அரேபியச் சொல். "ஹிஜாப்" என்றால் 'திரை' , 'தடுப்பு' , 'மதில்' என்று பொருள்.   பொது வெளிகளில்  குறிப்பாக ஆண்கள் முன்னிலையில் இஸ்லாமிய மகளிர் அணியும்  கலாச்சார ஆடை தான் "ஹிஜாப்" . இஸ்லாமிய மகளிரைக் கட்டுப்படுத்தும் ஆடை அல்ல. பிறரைக் காயப்படுத்தும் அடையாளமும் அல்ல.  "ஹிஜாப்" அணிதல் இஸ்லாமிய மகளிரின் உரிமை. 
இது முகமதியர்களின் பொது நியதி. முக மறுப்புகள் இல்லை. 

அறிந்த வரை... 

பணி செய்யும் இஸ்லாமிய மகளிரோ அல்லது   கல்வி பயிலும் இஸ்லாமிய சகோதரிகளோ பொது வெளிகளில் 'ஹிஜாப்' அணிந்து வருவார்கள். பணிசெய்யும், கல்வி பயிலும் களம் வந்தவுடன் அங்கு அணியவேண்டிய உடை மீதான சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு  தாங்கள் ஏற்கும் 'பாத்திரங்களுக்குத் தக்க வடிவம் கொள்ளும் தண்ணீர் போல' இஸ்லாமிய மகளிரும் "ஹிஜாப்" விஷயத்தில் தங்களை தக்கமுறையில் தகவமைத்துக் கொள்ளுகிறார்கள். பணிபுரியும், கல்வி பயிலும் இடங்களுக்கு ஏற்ற உடைகளை அங்கு சென்றதும்  அணிந்து கொள்கிறார்கள். பொது வெளிக்குத் திரும்பியதும் 'ஹிஜாப்' அணிந்து கொள்கிறார்கள். இவ் வழக்கத்தைக் கைக் கொண்ட இஸ்லாமிய சகோதரிகளை, தோழிகளை மதுரையில் கல்லூரியில்  பயின்ற காலங்களில் நேரில் கண்டிருக்கிறேன். இன்றும் இம்முறைமை தொடர்கிறது. நீங்களும் அநேக முறை கண்டிருக்கலாம்.  

 இச்சூழலில் " ஹிஜாப்" எப்படி பிரச்சினையாக உருவெடுத்தது? சில பிரச்சினைகள் சமூகத்தில் திடீரென முளைப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால், கவலைகள் கொள்ளத் தேவை இல்லை. 


சிறு மழைக்கு குடை விரித்த விஷக் காளான்களுக்கு வேர்களின் ஆயுள் குறைவு. 
புழுதிக்  காற்றுக்கு சிறு செடி அசைவாடும். படபடக்கும்.

 'இந்தியா' சிறு செடி அல்ல. உரமேறி வேர்கள் பரப்பி விழுதுகள் கண்ட பல்லாண்டு 'ஆலமரம்' 


"ஹிஜாப்" பிரச்சினையை பொது வெளிகளில் காரசாரமாக விவாதிக்காமல் அமைதியாகக் கடப்பதே  நல்லதெனத் தோன்றுகிறது. நானும் முதலில் வீரா வேசமாக 'ஹிஜாப்' உடை மீதான தடை உடை என்றெல்லாம் பகிர்ந்தேன்.
பின்பு யோசிக்கையில் மனம் ஒரு பாடம் சொன்னது. 

       கர்நாடகத்தில் ஒரு கல்லூரியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஊதி ஊதி  தீப்பொறியாகி மாநிலம் கடந்து பரவி விட்டது. 'நெருப்பு' சேர்ந்தாரையும் எரிக்கும். அறிந்ததே. ஒரு குறிப்பிட்ட மதவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தேசியக் கொடியை இறக்கி  காவி நிறக் கொடியை ஏற்றுகிறார்கள். செய்திகளில் கண்ணுற்ற போது  அந்நியர்களிடமிருந்து தேசத்தை மீட்டு சுதந்திரக் கொடியைப் பறக்க விட்ட 'தியாகச் செம்மல்கள்' நினைவிற்கு வந்தார்கள். இந்திய சுதந்திரம் அந்நியர்களிடம் இரந்து பெறவில்லை. தியாகிகள் உயிர்கள் துறக்கப் பெற்றோம். இனி துறக்க எதுவுமில்லை. 

வாய்மையில் தூய்மை காத்தலும், பொறுமையோடு இருத்தலும் தான் எல்லாம் சிறக்க வழி. இவ் வழிகள் கைக்கொள்ள முயன்று பல முறை தோற்று கோப வழிகளிலே விழிகள் விரிய நடந்திருக்கிறேன். இப்பொழுதும் கோபம் கடக்க முயன்று கொண்டே தான் இருக்கிறேன். 'கோபம்' இரு முனைக் கூர் கத்தி. அனுபவம் உண்டு. 

 'அகிம்சை' தான் 'மார்க்கம்' என்றார் தேசப்பிதா 'மகாத்மா காந்தியடிகள்'. தேசக் கொடியின் மையச் சக்கரம் அகிம்சையால் தான்  சுழல்கிறதோ! 

'அகிம்சைச் சக்கரம்' எல்லாச் சுழல்களையும் கடக்கும் தோணியாகும். 
'இதுவும் எதுவும் கடக்கும்'  என்றது மனம்.   " ஹிஜாப்" பிரச்சினையின் அடிவேர்கள் தேடிப் புறப்படத் தேவையில்லை. எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிவேர்கள் தேட ஆரம்பித்தால் பூவுலகம் 'பூக்காடாகவோ' , 'பூந் தோட்டமாகவோ' இருக்க முடியாது. 

பூக்களை பாவையாகவும், பாவையரை பூக்களாகவும் காணும் சூழலெல்லாம் மாறிப் போகும். 

பூவுலகை பூக்களாகப் பார்ப்பது  பாவையருக்கு மட்டுமல்ல எல்லா மாக்களுக்கும் அது தான் அழகு. 

"பூக்களுக்குள் பேதங்கள் எப்பொழுதும் இல்லை. 


பூக்களே வேதங்களானால்
பூவுலகின் எல்லைகளுக்குள் பேதங்கள்  இல்லை" 
-என உரக்கச் சொல்லலாம்.  

சப்தங்களின்றிப் பூக்கும் பூக்களைப் போல  மனம் ஒவ்வொரு நாளும் பூக்கட்டும். 
 
போர்க்களத்திற்குள் நுழையத் தான் ஆயுதங்கள் வேண்டும். 'பூக்களம்' திரும்ப ஆயுதங்கள் தேவையில்லை.  யோசிக்காமல் உதடுகள் உதிர்க்கும் சொற்களும் வலிமை மிகு ஆயுதங்கள் தான். அறிவீர்கள். 

'வேதாகமத்தில்' எனக்கு மிகவும் பிடித்தமான வரிகளைப் பகிர்ந்து பதிவை நிறைவு செய்கிறேன். 


" உதடுகளுக்கு காவலாளிகளை வைத்துக் கொள்".
-ஆமென்.

அன்புடை வேண்டுகோள்.... 
      
  விருப்பம் இருப்பின் அறிந்தவர்களுக்குப் பகிருங்கள்... 
               
மனம் பறவையாகும்... 
மனம் கொத்தும்! 
பறக்கும்.... 


இருதய். ஆ





  
 






Sunday, February 6, 2022

இசைக் குயில் 'லதா மங்கேஷ்கர்' (Indian's Nightingale 'Lata Mangeshkar')


Fly...


  இந்தியாவின் இசைக்குயிலாக (Indian's musical Nightingale) இசை வானில் பறந்த "இசைப் பறவை" தன் சிறகசைப்பை நிறுத்திக் கொண்டு விட்டது. பிரபஞ்சம் முழுக்க நிறைந்து கிடக்கும் காற்றோடு இசையாகக் கலந்துவிட்டது. காற்றைச் சுவாசிக்கும் வரை ஆகாசம் மறையும் வரை இசைக் குயிலின் கானங்களை... 
மறக்க முடியுமா? 

'மராத்தி' மொழியில் பாடிய முதல் பாடல் எல்லாம் இனிதே முடிந்து கடைசித் தருணங்களில் படத்தில் இடம்பெறாமல் போயிருக்கிறது. இசைக்குயில் துவளவில்லை. வீரியமுள்ள விதைமணி எப்படியும் முளைத்தெழும். வீரிய விதையாக முளைத்து இசை வானில் விருட்சமாக எழுந்து நின்றார். தோல்வியை வெற்றிப்படிக்கட்டுகளாக்கி வெற்றிக்கொடி நாட்டியவர் என்றுமே இசை உலகில் அவரது கானங்களால் வாழ்வார் என்பதில் ஐயமில்லை. 



இந்தியாவின் 'இசைக்குயில்' 
ஆதர்ஷ இசைப் பறவை
" லதா மங்கேஷ்கர்" 
அவர்களுக்கு... 

"இதய அஞ்சலி" 


"பறவையின் முகம் 
அதன் சிறகு! 
குயிலுக்கு முகம் 
அதன் இனிய 'கூவல்'...! 

இசை வானில் இசைக்குயில்
'லதா மங்கேஷ்கர்' முகம் அவரது குரலே!... 
 
"இசைக் குயிலின்" பாடல்களைக் கேட்கையில் 
'கற்றலின் கேட்டல் நன்று' என்ற வரிகளின் அர்த்தம் விளங்கும். 

நெடுந்தூரப் பயணங்களில் பயணத்தை சுவாரஸ்யமாக்குவது எவைகள் தெரியுமா? 

பயணிக்கும் வாகனத்திற்கு வெளியே காணும் பூக்களும், பச்சை படர்ந்த மரங்களும், வான் பறக்கும் பறவைகளும் அதனூடே வாகனத்தின் சாளரத்திற்கு உள் கசியும் இசையும் பயணங்களைச் சுவாரஸ்யமாக்கும் தோழமைகள் என்றால் நிச்சயம் ஆம் என்பீர்கள்.

 பயணத்தில் வாகனத்தின் எரிபொருளை நிரப்புகிறதற்கு முன்- பிடித்த இசைத் தொகுப்புகளை  வாகனத்தின் உள் நிரப்பி இசை கசிய இசைவுடன் பயணத்தைத் தொடங்குவோம்.
இசை நம் மூச்சில் இருக்கிறது.
 நம் மூச்சில் இசை இருக்கிறது.


 இசையே மூச்சாக வாழ்ந்த 
                 'இசைப் பறவை' 
 உலகிலேயே அதிகமான பாடல்களைப் பாடிய இசைமங்கை மதிப்பிற்குரிய இசைக் குயில்
'லதா மங்கேஷ்கர்' அவர்கள் என்பது இசை உலகுக்குப் பெருமையே.
இசைக் குயிலின் பாடலுக்கு மயங்காதவர்கள் எவரும் உண்டோ?! 

தமிழ்த் திரை இசைக்கு இசைக்குயில் என்றும்
                       " குறிஞ்சிப் பூ! "... 

இசைக் குயிலின் தமிழ்த்திரைப் பாடல்கள் எண்ணிக்கையில் குறைவே. 
குறையினும்
தமிழ்த் திரைக்கு என்றும் நிறைவே...! 

தமிழில்  1987-  இல் வெளியான 'ஆனந்த்' திரைப்படத்தில்...
ஒரு தாயாக தமிழிசைக்கு அறிமுகமாகி... 

        "ஆராரோ... ஆரிராரோ... 
நீ வேறோ... நான் வேறோ? 
..... ......... 
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும் கண் மூட..." 
      - என்று தாலாட்டுப் பாடி தமிழ்த்திரையில் அன்னையாகத் தொட்டில் கட்டினார். 

தொடர்ந்து இன்றும் நம் மனசுக்குள் வளைய வரும் ஒரு பாடல்... 
மங்கையரின் கைகளில் சிணுங்கும் வளையோசையாக... காதுகளில் இசைக்கும் கசியும்.
பனித்துளியாக மினுமினுக்கும். 
உதடுகளுக்குள் காதல் ஊர்வலம் நடத்தும்.... 
அந்தப் பாடல்....

"வளையோசை கல கல      கலவென.. 
கவிதைகள் படிக்குது குளு குளு 
தென்றல் காற்றும் வீசுது... 
சில நேரம் சிலு சிலு சிலுவென
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்..." 

      - என மனசுக்குள் காதல் தேரோட்டும். 

அமரத்திரு. 'கவிஞர் வாலி' அவர்களின் இரட்டைக் கிளவி இலக்கணப் பாடத்தில் அமைந்த இப்பாடலை இசைஞானி 'மேஸ்ட்ரோ'" "இளையராஜா" அவர்கள் இசையமைக்க இசைக் குயில் பாடியது ஓர் அற்புத நிகழ்வு. இன்றும் அதிகம் பகிரப்படும் பாடலாக மேடைகளில் காதல் தோரணம் கட்டும் பாடலாக இப்பாடல் இசை வானில் சிறகடித்துப் பறக்கிறது. 

பிறகு 1988-இல் தொடர்ந்து இசைக்குயிலின் குரலில் 
  "என் ஜீவன் பாடுது" படத்தில்
இடம்பெற்ற.... 

 "எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்..... 
...... 
சேர்ந்திடுதே மனமே... ஓ... ஓ... 
ஏங்கிடுதே தினமே..." 
         பாடலை மறக்கமுடியுமா? 

 உமது கானக்குயில் குரலில்
      ஏங்கிடும் மனங்கள் 
தினம் உருக... காற்றில்
கலந்த கீதங்களாக... 
 என்றும் நிலைத்திருக்கும். 
          என்பதில் ஐயமில்லை. 


விருதுகளெல்லாம் 
இசைக்குயிலின் இசைவிழுதுகளில் எப்பொழுதும்
ஊஞ்சல் கட்டி இவரின் கைகள் இரங்கும்! 
எத்தனை... எத்தனை... விருதுகள்!
'பாரத ரத்னா'
 பத்ம பூஷன், பத்ம விபூஷன், தேசிய விருதுகள், இன்னும் ஏராளம் உள்ளன. 
        எல்லா விருதுகளும் சேர்ந்து இசைக் குயிலுக்கு விழா எடுத்தன. 
       " வாழ் நாள் சாதனையாளர்" 
 என மொழிந்தன. 

ஏறக்குறைய '36' மொழிகளில்  தனது குரலை இசை உலகில் பதிவு செய்து இசைக் குயிலாகப் பறந்திருக்கிறார். 

இன்று... 
2022-பிப்ரவரி- 6 ஆம் நாள் 
'இசைப்பறவை' தனது சிறகசைப்பை நிறுத்திக் கொண்டுவிட்டது. 


 காற்றின் தீராப் பக்கங்களில்... 'இசைக்குயில்' தன் வாழ்வை எழுதி முடித்துவிட்டது. 

"பறத்தலே பறவையின் வாழ்வு"... 

இசைக்குயிலின்
 நினைவுகள் பறவையாகும்... 
ஆகாசம் உள்ளவரை பறக்கும்! 

               மறக்க முடியுமா?.... 

மனப் பறவை பறக்கும்...
மனம்கொத்தும்!


Irudhy.a 

  




 

Friday, February 4, 2022

உலாப் பூக்களில் தாமரை...

Fly...

மனம் கொத்தும் பறவை...

பூக்களோடு பேரம்
எப்பொழுதும் இல்லை. 
பூக்களுக்குள் பேதங்கள்
முப்பொழுதும் இல்லை. 


நான்கு மறைகளோடு
 சேர்ந்து பேதமில்லா பூக்கள்... 
ஐந்தாம் மறையாகுமோ! 
இறை பாதம் சேராப் பூக்கள்
ஏதேனும் உண்டோ?

இறை பாதம் சேரும் பூக்களில்
முதல் வரிசையில் முந்தி இடம் பிடிக்கும் கதம்பத்தோடு எப்பொழுதும் போட்டியிடும் ஒரு பூ பூவுலகில் உண்டு. அந்தப்  
பூவிற்கென்று தனிக் குளம் உண்டு. தனித்ததோர் குலமும் உண்டு. 

இக்குலத்திற்கு மதச் சாயங்கள் ஏதுமில்லை. அழுக்காறுகள் கடுகளவும் இப் பூவையின் இலைகளில் ஒட்டாவே ஒட்டா! காரணம் அறிவீர்கள். 

தன் சூழ் வழியில் அழுக்காறுகள் நிறையினும் வழக்காறுகள் ஏதுமின்றி பசுமை சூழ் உலகாக தன் அகத்தே மாசுகளின்றி இன்முகம் காட்டிச் சிரிப்பாள் அந்தப்' பூ' எனும் 'பூவை' ... 

தேநீர் தருணம்.... 


பூவுலகில் பூவையின் பெயர்
"தாமரை" ...

'தாமரை... 
 நீ அவ்வளவு அழகு! 
' பாரதத் தாய்' தன்னகத்தே தேர்ந்து கொண்ட தேசத்தின் மலரே! 


இரவில்... 
குவியும் உன் முகம் 
காண்கையில்... 
அலையடிக்கும் மனமும் உன்முகம் கண்டு... 
தன் முகமாய்... 
ஒரு மனமாய் உன் முகமாய் குவியும்!' 

'மனம் தனை கிட்டக் குவிய வைக்கும்... 
'குழிநிறைக் கண்ணாடியா' 'தாமரை!' ..
எட்டத்தில் நின்று ரசித்தாலும் கைகளுக்குக் கிட்டும் கண்களுக்கு எட்டும் அதிசயமாவாள் 
இந்தப் பூவை 'தாமரை!' 


மற்ற பூக்களுக்கு இல்லாத தனித்தன்மை தாமரைக்கு உண்டு. மனித உடலின் தட்ப வெட்ப தகவமைப்பைப்  போலவே தாமரையும் சீதோஷண நிலைமைக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. இரவில் தன் முகமாய் குவிந்து குவிதலின் உட்புறம் சூழலுக்கேற்ப வெப்பநிலையை தன்னகத்தே தக்க வைப்பதால் இரவில் குவிதலுக்கு உள்ளே வண்டுகள் குடி கொண்டு விடிகையில் தாமரை தன் இதழ்கள் விரிக்க இரவெல்லாம்  தேன் உண்ட வண்டு மயக்கத்திலேயே சிறகு விரித்து தாமரையின் குலம் செழிக்க தூதனாகிப் பறக்கும். 

தாவரவியல் பாடத்தில் இப் பூவையின் பெயர்
"நெலும்போ நூசி பேரா" (Nelumbo nucifera) 
 'அப்படியே ஆகட்டுஞ் சாமி. எனக்கு அறிவுப் பூர்வமெல்லாம் ஆகாது. கடைசி அல்லது நடுப் பெஞ்சு மாணாக்கன் யான். வகுப்பறையில் இருந்தாலும் மனம் மட்டும் பெரும்பான்மையாக பசுமை போர்த்திக் கிடந்த சன்னலோர மரக்காட்சிகளிலேயே தங்கியிருக்கும். அதனால் உணர்வில் கலந்து உரையாடுவதே விருப்பம்.

 'தாமரை' உச்சரிக்கும் போதே கண்களுக்குள் பூவின் அழகு விரியும். மனம் விசாலப்படும்.

 கவிஞர்களின் ஆதர்சம் இந்தப் பூவை.
  
 

கவிஞர்கள் வீட்டில் எப்பொழுதும் இவள் தான் 'செல்லப் பிள்ளை' ... 
சில நேரம் விரல் பிடித்து உடன் வருவாள்.
சில நேரங்களில் இடுப்பில் அமர்ந்து காதோரம் சிரிப்பில் இசையாகிக் கசிந்து காதலாகி... 
கழுத்தோடு கட்டிக் கன்னம் வந்து... 
அன்பால் முத்தமிடுவாள்... 
இந்தச் செல்லப் பிள்ளை 'தாமரை' ! 

கவிஞர்கள் கட்டிய பாக்களில்' தாமரை' பூக்களின் பா... மாலைகளின் நீளம் அளந்தால் நிலத்தினும் பெரிதாகும். வானிலும் உயர்ந்ததாகும். 

தெய்வங்களுக்குப் பிடித்த தேவதை
இந்த.... 

"தெய்வீகத் தாமரை" ... 


பூக்கும் பூக்கள் அத்தனையும் தெய்வங்களின் தோள்களுக்கு மாலையாகச் சேர்வதில்லை. விதிவிலக்காவாள் 'தாமரை' . தெய்வங்களுக்கு நேர்ந்து கொண்டது போலவே தன் பிறப்பெடுப்பாள் 'தாமரை' !

 உண்மை தான் என்பது போலவே  தாமரையை நினைக்கும் கணங்களில் எப்பொழுதும் ஒரு காட்சி உள்ளங்கை ரேகையாக கண்களுக்குள் விரியும்.


"வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்..." - 
என்ற பாடல் வரிகள் மனசுக்குள் தட்டச்சு தட்டும்.   இந்து மதத்தை தழுவியவர்களின் நம்பிக்கையாக லட்சுமி கடாட்சத்தின் அம்சமாகத் திகழும்  "மகாலட்சுமி ' வெள்ளைத் தாமரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள்
நினைவுக்கு வரும்.

' தாமரை' லட்சுமி கடாட்சத்தின் அம்சம். தாமரையே உனது பெயரைத் தாங்கி  நடமாடும் தாமரைப் பூவைகளாய் பூவுலகில் நிறைய பாவைகள் உண்டு.  இந்தப் பாவையர்களை பார்வையில் கண்டு வியந்தது உண்டு.

 திரைத்துறையில் கோலோச்சிய ஆண் கவிஞர்களுக்கு மத்தியில்

"ஆண் கவியை வெல்ல வந்த 
பெண் கவியே வருக!" ...
-என்ற நடிகர் திலகத்தின் பாடல் போல தாமரையே உன் பெயர் சூடி அழகுப் பாக்கள் கட்டி திரைத்துறைக்குள் அடி வைத்தார் ஒரு பாவை. மரியாதைக்குரிய பூவையின் பெயர் 'தாமரை' . இவரின் பாக்கள் மனசுக்குள் தாமரையைப் போல  விரியும். குவியும். மாசற்ற வரிகள் கட்டி மனசுக்குள் வாசம் பண்ணும். எப்படி இவரால் இப்படிப் பாக்கள் கோர்க்க முடிகிறது. மனசுக்குள் கேள்விகள் முளைக்கும். பல சமயங்களில் வியக்கும். ஆழ்ந்து யோசிக்கையில் வியப்பொன்றும் இல்லை. அவர் பெயரும் 'தாமரை' என வழி மொழியும். 

மலர்களில் 'தாமரை' என்றும் வியப்(பு) பூ. காணும் கண்களுக்குள் நிலைக்கும் மலைப்பு!...


பழங்காலம் தொட்டு இன்று வரை சிற்பக் கலைகளில் இடம் பெறும் பூக்களில் தாமரை எப்பொழுதும் போட்டிகளின்றி வெற்றி வாகை சூடுகிறது. 


தாமரை என் மனசுக்குள் முகிழ்த்த தருணங்களை அவிழ்க்கிறேன். இதே போன்ற 'தாமரை' 
மொட்டுக்கள் உங்கள் மனங்களுக்குள் முகிழ்க்கலாம். 

அன்று...

சிறு பிராயத்தில் எங்கள் அம்மாச்சியின் ஊரான 'மிக்கேல் பட்டணம்' தான் முதன்முதலாகத் 'தாமரையை' எங்களுக்கு அறிமுகப்படுத்தியது. 

"ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே...!" 
     - என்ற மரியாதைக்குரிய கவிப்பேரரசு 'வைரமுத்து' அவர்களின் பாடல் வரிகள் போல மனம் தாமரை மொட்டுக்கள் கண்டு மெட்டுக்கள் கட்டியது. 

அம்மாச்சியின் வீட்டிற்குப் பின்புறம் ஒரு குளம் இருந்தது. குளத்திற்குள் தாமரைகளின் குலம் வீற்றிருப்பதைக் கண்ட காட்சிகள் இன்றும் மனசுக்குள் கூழாங்கல்லின் குளிர்ச்சியாக உறைந்து கிடக்கிறது. குளத்திற்கு அருகில் இந்து மதம் சார்ந்த ஒரு திருக்கோயில் இருந்தது. 


கோயில் மண்மேட்டில் உயர்ந்து நிற்கும். எதிரே சரிந்து இறங்கும் மண் பாதையில் சறுக்கு விளையாடி இறங்க சற்றுத் தள்ளி தடாகத்தில் 'தாமரை' வீற்றிருக்கும். கைகள் கொண்டு அளைந்ததில்லை. காரணம், குளம் செல்லும் முன்னர் எங்கள் அம்மாச்சி 
 "அப்பு... ராசாக்களா... குளத்துல கால் வெச்சிராதீக. சேறும் சகதியும் நெறஞ்சு கெடக்கும். கால உள்ள இழுத்துக்கும். சூதானமா பார்த்துட்டு வாங்கப்பு"... 
   என எங்கள் காதுகளில் எச்சரிக்கை மணி கட்டி அனுப்புவார் அம்மாச்சி. குளத்திற்குள்  கால் நனைக்க மனம்  நினைக்க காதுகளில் அம்மாச்சி கட்டிய எச்சரிக்கை மணி ஒலிக்கும். கால் நனைக்காமல் எட்ட நின்று தாமரைக் குளத்தில் தாமரைக் குலம் கண்டு ரசித்தபடியே வீடு வருவோம். 

கைகள் சேர்ந்தாள் 'தாமரை!' ... 

        ஒரு நாள் எங்கள்  அம்மாச்சியின் வீட்டருகே இருந்த 'மைக்கேல்'  அண்ணன் எங்கள் உடன் வந்தார். 
        "எலேய்... நீங்க அங்குனயே இருங்க. நான் தாமரையக் கொண்டாரேன்" 
என்றபடி இலகுவாக இறங்கி இரண்டு கைகளிலும் தாமரைகளை அள்ளி தோளில் போட்டுக் கொண்டு கரை ஏறி எங்கள் கைகளில் தாமரைகளைப் படர விட்டார் மைக்கேல் அண்ணன்.


 தரை இறங்கிய ஆகாசமாக தாமரை எங்கள் கைகளில்...!

இப்பொழுது நினைக்கையில்... 

'ஆகாயத் தாமரை அருகில் வந்ததே....!" 
   - நவரச நாயகன் திரு. கார்த்திக் நடித்த' நாடோடிப் பாட்டுக்காரன்' படப் பாடல் காதுகளில் ஒலிக்கிறது. 

' தாமரை 'என்றதும் உங்கள் மனசுக்குள் ஏதேதோ பாடல்கள் நினைவுக்கு வரலாம். மனம் நினைவுச் சிறகசைத்து பறவையாகிப் பறக்கலாம்.   

தாமரையின் உன்னதம் சொல்ல ஒரு பாடல் போதும். 

  "வெள்ளத் தனைய மலர் நீட்டம்
                                        மாந்தர் தம் 
     உள்ளத் தனையது உயர்வு" 
               - வள்ளுவம்

'தாமரை' குறித்த நினைவுகள் நிறைய உண்டு. 

காப்பிய நூல் 'சிலப்பதிகாரத்தில்' இடம்பெற்ற 'மாதவி' என்றொரு மங்கை சேற்றில் முளைத்த செந்தாமரையாக இன்று வரை பேசப்படுகிறார்.செந்தாமரையை மாதவியின் கற்புக்கு ஒப்புமைப்படுத்தியது தாமரைக்குப் பெருமையே. கவிகள் கையாளும் ஒப்புமை மலராக தாமரை தடாகத்தில் எப்பொழுதும் வீற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


மரியாதைக்குரிய பெண் கவி 'தாமரை' அவர்களின் வரிகளில் நிறைவு செய்கிறேன்.

"ஒன்றா இரண்டா ... எல்லாம் சொல்லவே...
ஓரு நாள் போதுமா?..."
 
நிறைய பேசலாம். நீங்கள் எனக்குத் தரும் நேரம் பொன்னானது. அதிகப்படியான சொற்கள் நீளும் போதெல்லாம் பட்டிமன்ற நடுவராகும் 
  என் மனம். நீங்கள் வாசிக்கும் கால அளவு குறித்த எச்சரிக்கை மணிகளை அழுத்தியபடியே இருக்கும். 
'அவ்வளவு தான். இந்தா முடிச்சிட்டேன்.கோச்சுக்காத மனமே!...'
என கணம் கடக்கையில் மனம் கொஞ்சிக் கெஞ்சி ஒரு முடிவுக்கு வரும். 
முடிவில் நிறைவாக... 

மதுரை மண்ணில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற 'மீனாட்சி அம்மன் திருக்கோயிலில்' ஒரு குளம் உண்டு. குளத்திற்கு தனித்ததோர் பெருமைகளும் உண்டு. ' பொற்றாமரைக் குளம்' எனப் பெயரும் உண்டு.  

குளத்தில் வீற்றிருக்கும் பெருமையைப் பெற்ற பூவை  எங்கள் "தாமரை" எனப் பூக்கள் எல்லாம் பெருமை கொள்கின்றன. பூக்களுக்குள் பேதங்கள் எப்போதும் இல்லை. 

"நீரின்றி அமையாது உலகு-
நீர் சூழ் வாழ்வே தாமரையின் அழகு!" 

'தாமரை' நீண்ட பதிவோ?  நீளம் அளக்க மனம் இல்லை. அப்படியே உங்கள் மனப் பூ கூடைக்குள் வைக்கிறேன். ஓய்ந்து இருக்கையில் இப்பக்கம் சாய்ந்து கொள்ளுங்கள். 

சேற்றில் முளைத்தாலும் மாசற்ற செந்தாமரையாகப் பிறப்பெடுக்கும் தாமரைகள் பாடம் நடத்துவதில்லை. பாடங்களாகவே வாழ்கின்றன.


"பூக்களின் பாடசாலைகளில்" 
 புத்தக மூட்டைகள் 
தேவையில்லை. பூக்களின் முன் நின்றால் போதும். புன்னகை பூக்கும். சிறு சிறு பூக்களாக சந்தோச சிரிப்(பு) பூக்கள் மலரும். 

அன்பில் விண்ணப்பம்... 

'தாமரைப் பதிவு' உங்களைப் பரவசப்படுத்தியிருந்தால் அறிந்தவர்களுக்குப் பகிருங்கள்... 
தொடர்ந்த வாசிப்பிற்கு 
'நன்றிப் பூக்கள்' ...
தொடரும் பயணத்திற்கு
' வரவேற் பூக்கள்' ... 

மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்... 


இருதய். ஆ
   

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...