மனம் கொத்தும் பறவை...
பூக்களோடு பேரம்
எப்பொழுதும் இல்லை.
பூக்களுக்குள் பேதங்கள்
முப்பொழுதும் இல்லை.
நான்கு மறைகளோடு
சேர்ந்து பேதமில்லா பூக்கள்...
ஐந்தாம் மறையாகுமோ!
இறை பாதம் சேராப் பூக்கள்
ஏதேனும் உண்டோ?
இறை பாதம் சேரும் பூக்களில்
முதல் வரிசையில் முந்தி இடம் பிடிக்கும் கதம்பத்தோடு எப்பொழுதும் போட்டியிடும் ஒரு பூ பூவுலகில் உண்டு. அந்தப்
பூவிற்கென்று தனிக் குளம் உண்டு. தனித்ததோர் குலமும் உண்டு.
இக்குலத்திற்கு மதச் சாயங்கள் ஏதுமில்லை. அழுக்காறுகள் கடுகளவும் இப் பூவையின் இலைகளில் ஒட்டாவே ஒட்டா! காரணம் அறிவீர்கள்.
தன் சூழ் வழியில் அழுக்காறுகள் நிறையினும் வழக்காறுகள் ஏதுமின்றி பசுமை சூழ் உலகாக தன் அகத்தே மாசுகளின்றி இன்முகம் காட்டிச் சிரிப்பாள் அந்தப்' பூ' எனும் 'பூவை' ...
தேநீர் தருணம்....
பூவுலகில் பூவையின் பெயர்
"தாமரை" ...
'தாமரை...
நீ அவ்வளவு அழகு!
' பாரதத் தாய்' தன்னகத்தே தேர்ந்து கொண்ட தேசத்தின் மலரே!
இரவில்...
குவியும் உன் முகம்
காண்கையில்...
அலையடிக்கும் மனமும் உன்முகம் கண்டு...
தன் முகமாய்...
ஒரு மனமாய் உன் முகமாய் குவியும்!'
'மனம் தனை கிட்டக் குவிய வைக்கும்...
'குழிநிறைக் கண்ணாடியா' 'தாமரை!' ...
எட்டத்தில் நின்று ரசித்தாலும் கைகளுக்குக் கிட்டும் கண்களுக்கு எட்டும் அதிசயமாவாள்
இந்தப் பூவை 'தாமரை!'
மற்ற பூக்களுக்கு இல்லாத தனித்தன்மை தாமரைக்கு உண்டு. மனித உடலின் தட்ப வெட்ப தகவமைப்பைப் போலவே தாமரையும் சீதோஷண நிலைமைக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. இரவில் தன் முகமாய் குவிந்து குவிதலின் உட்புறம் சூழலுக்கேற்ப வெப்பநிலையை தன்னகத்தே தக்க வைப்பதால் இரவில் குவிதலுக்கு உள்ளே வண்டுகள் குடி கொண்டு விடிகையில் தாமரை தன் இதழ்கள் விரிக்க இரவெல்லாம் தேன் உண்ட வண்டு மயக்கத்திலேயே சிறகு விரித்து தாமரையின் குலம் செழிக்க தூதனாகிப் பறக்கும்.
தாவரவியல் பாடத்தில் இப் பூவையின் பெயர்
"நெலும்போ நூசி பேரா" (Nelumbo nucifera)
'அப்படியே ஆகட்டுஞ் சாமி. எனக்கு அறிவுப் பூர்வமெல்லாம் ஆகாது. கடைசி அல்லது நடுப் பெஞ்சு மாணாக்கன் யான். வகுப்பறையில் இருந்தாலும் மனம் மட்டும் பெரும்பான்மையாக பசுமை போர்த்திக் கிடந்த சன்னலோர மரக்காட்சிகளிலேயே தங்கியிருக்கும். அதனால் உணர்வில் கலந்து உரையாடுவதே விருப்பம்.
'தாமரை' உச்சரிக்கும் போதே கண்களுக்குள் பூவின் அழகு விரியும். மனம் விசாலப்படும்.
கவிஞர்களின் ஆதர்சம் இந்தப் பூவை.
கவிஞர்கள் வீட்டில் எப்பொழுதும் இவள் தான் 'செல்லப் பிள்ளை' ...
சில நேரம் விரல் பிடித்து உடன் வருவாள்.
சில நேரங்களில் இடுப்பில் அமர்ந்து காதோரம் சிரிப்பில் இசையாகிக் கசிந்து காதலாகி...
கழுத்தோடு கட்டிக் கன்னம் வந்து...
அன்பால் முத்தமிடுவாள்...
இந்தச் செல்லப் பிள்ளை 'தாமரை' !
கவிஞர்கள் கட்டிய பாக்களில்' தாமரை' பூக்களின் பா... மாலைகளின் நீளம் அளந்தால் நிலத்தினும் பெரிதாகும். வானிலும் உயர்ந்ததாகும்.
தெய்வங்களுக்குப் பிடித்த தேவதை
இந்த....
"தெய்வீகத் தாமரை" ...
பூக்கும் பூக்கள் அத்தனையும் தெய்வங்களின் தோள்களுக்கு மாலையாகச் சேர்வதில்லை. விதிவிலக்காவாள் 'தாமரை' . தெய்வங்களுக்கு நேர்ந்து கொண்டது போலவே தன் பிறப்பெடுப்பாள் 'தாமரை' !
உண்மை தான் என்பது போலவே தாமரையை நினைக்கும் கணங்களில் எப்பொழுதும் ஒரு காட்சி உள்ளங்கை ரேகையாக கண்களுக்குள் விரியும்.
"வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்..." -
என்ற பாடல் வரிகள் மனசுக்குள் தட்டச்சு தட்டும். இந்து மதத்தை தழுவியவர்களின் நம்பிக்கையாக லட்சுமி கடாட்சத்தின் அம்சமாகத் திகழும் "மகாலட்சுமி ' வெள்ளைத் தாமரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள்
நினைவுக்கு வரும்.
' தாமரை' லட்சுமி கடாட்சத்தின் அம்சம். தாமரையே உனது பெயரைத் தாங்கி நடமாடும் தாமரைப் பூவைகளாய் பூவுலகில் நிறைய பாவைகள் உண்டு. இந்தப் பாவையர்களை பார்வையில் கண்டு வியந்தது உண்டு.
திரைத்துறையில் கோலோச்சிய ஆண் கவிஞர்களுக்கு மத்தியில்
"ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக!" ...
-என்ற நடிகர் திலகத்தின் பாடல் போல தாமரையே உன் பெயர் சூடி அழகுப் பாக்கள் கட்டி திரைத்துறைக்குள் அடி வைத்தார் ஒரு பாவை. மரியாதைக்குரிய பூவையின் பெயர் 'தாமரை' . இவரின் பாக்கள் மனசுக்குள் தாமரையைப் போல விரியும். குவியும். மாசற்ற வரிகள் கட்டி மனசுக்குள் வாசம் பண்ணும். எப்படி இவரால் இப்படிப் பாக்கள் கோர்க்க முடிகிறது. மனசுக்குள் கேள்விகள் முளைக்கும். பல சமயங்களில் வியக்கும். ஆழ்ந்து யோசிக்கையில் வியப்பொன்றும் இல்லை. அவர் பெயரும் 'தாமரை' என வழி மொழியும்.
மலர்களில் 'தாமரை' என்றும் வியப்(பு) பூ. காணும் கண்களுக்குள் நிலைக்கும் மலைப்பு!...
பழங்காலம் தொட்டு இன்று வரை சிற்பக் கலைகளில் இடம் பெறும் பூக்களில் தாமரை எப்பொழுதும் போட்டிகளின்றி வெற்றி வாகை சூடுகிறது.
தாமரை என் மனசுக்குள் முகிழ்த்த தருணங்களை அவிழ்க்கிறேன். இதே போன்ற 'தாமரை'
மொட்டுக்கள் உங்கள் மனங்களுக்குள் முகிழ்க்கலாம்.
அன்று...
சிறு பிராயத்தில் எங்கள் அம்மாச்சியின் ஊரான 'மிக்கேல் பட்டணம்' தான் முதன்முதலாகத் 'தாமரையை' எங்களுக்கு அறிமுகப்படுத்தியது.
"ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே...!"
- என்ற மரியாதைக்குரிய கவிப்பேரரசு 'வைரமுத்து' அவர்களின் பாடல் வரிகள் போல மனம் தாமரை மொட்டுக்கள் கண்டு மெட்டுக்கள் கட்டியது.
அம்மாச்சியின் வீட்டிற்குப் பின்புறம் ஒரு குளம் இருந்தது. குளத்திற்குள் தாமரைகளின் குலம் வீற்றிருப்பதைக் கண்ட காட்சிகள் இன்றும் மனசுக்குள் கூழாங்கல்லின் குளிர்ச்சியாக உறைந்து கிடக்கிறது. குளத்திற்கு அருகில் இந்து மதம் சார்ந்த ஒரு திருக்கோயில் இருந்தது.
கோயில் மண்மேட்டில் உயர்ந்து நிற்கும். எதிரே சரிந்து இறங்கும் மண் பாதையில் சறுக்கு விளையாடி இறங்க சற்றுத் தள்ளி தடாகத்தில் 'தாமரை' வீற்றிருக்கும். கைகள் கொண்டு அளைந்ததில்லை. காரணம், குளம் செல்லும் முன்னர் எங்கள் அம்மாச்சி
"அப்பு... ராசாக்களா... குளத்துல கால் வெச்சிராதீக. சேறும் சகதியும் நெறஞ்சு கெடக்கும். கால உள்ள இழுத்துக்கும். சூதானமா பார்த்துட்டு வாங்கப்பு"...
என எங்கள் காதுகளில் எச்சரிக்கை மணி கட்டி அனுப்புவார் அம்மாச்சி. குளத்திற்குள் கால் நனைக்க மனம் நினைக்க காதுகளில் அம்மாச்சி கட்டிய எச்சரிக்கை மணி ஒலிக்கும். கால் நனைக்காமல் எட்ட நின்று தாமரைக் குளத்தில் தாமரைக் குலம் கண்டு ரசித்தபடியே வீடு வருவோம்.
கைகள் சேர்ந்தாள் 'தாமரை!' ...
ஒரு நாள் எங்கள் அம்மாச்சியின் வீட்டருகே இருந்த 'மைக்கேல்' அண்ணன் எங்கள் உடன் வந்தார்.
"எலேய்... நீங்க அங்குனயே இருங்க. நான் தாமரையக் கொண்டாரேன்"
என்றபடி இலகுவாக இறங்கி இரண்டு கைகளிலும் தாமரைகளை அள்ளி தோளில் போட்டுக் கொண்டு கரை ஏறி எங்கள் கைகளில் தாமரைகளைப் படர விட்டார் மைக்கேல் அண்ணன்.
தரை இறங்கிய ஆகாசமாக தாமரை எங்கள் கைகளில்...!
இப்பொழுது நினைக்கையில்...
'ஆகாயத் தாமரை அருகில் வந்ததே....!"
- நவரச நாயகன் திரு. கார்த்திக் நடித்த' நாடோடிப் பாட்டுக்காரன்' படப் பாடல் காதுகளில் ஒலிக்கிறது.
' தாமரை 'என்றதும் உங்கள் மனசுக்குள் ஏதேதோ பாடல்கள் நினைவுக்கு வரலாம். மனம் நினைவுச் சிறகசைத்து பறவையாகிப் பறக்கலாம்.
தாமரையின் உன்னதம் சொல்ல ஒரு பாடல் போதும்.
"வெள்ளத் தனைய மலர் நீட்டம்
மாந்தர் தம்
உள்ளத் தனையது உயர்வு"
- வள்ளுவம்
'தாமரை' குறித்த நினைவுகள் நிறைய உண்டு.
காப்பிய நூல் 'சிலப்பதிகாரத்தில்' இடம்பெற்ற 'மாதவி' என்றொரு மங்கை சேற்றில் முளைத்த செந்தாமரையாக இன்று வரை பேசப்படுகிறார்.செந்தாமரையை மாதவியின் கற்புக்கு ஒப்புமைப்படுத்தியது தாமரைக்குப் பெருமையே. கவிகள் கையாளும் ஒப்புமை மலராக தாமரை தடாகத்தில் எப்பொழுதும் வீற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மரியாதைக்குரிய பெண் கவி 'தாமரை' அவர்களின் வரிகளில் நிறைவு செய்கிறேன்.
"ஒன்றா இரண்டா ... எல்லாம் சொல்லவே...
ஓரு நாள் போதுமா?..."
நிறைய பேசலாம். நீங்கள் எனக்குத் தரும் நேரம் பொன்னானது. அதிகப்படியான சொற்கள் நீளும் போதெல்லாம் பட்டிமன்ற நடுவராகும்
என் மனம். நீங்கள் வாசிக்கும் கால அளவு குறித்த எச்சரிக்கை மணிகளை அழுத்தியபடியே இருக்கும்.
'அவ்வளவு தான். இந்தா முடிச்சிட்டேன்.கோச்சுக்காத மனமே!...'
என கணம் கடக்கையில் மனம் கொஞ்சிக் கெஞ்சி ஒரு முடிவுக்கு வரும்.
முடிவில் நிறைவாக...
மதுரை மண்ணில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற 'மீனாட்சி அம்மன் திருக்கோயிலில்' ஒரு குளம் உண்டு. குளத்திற்கு தனித்ததோர் பெருமைகளும் உண்டு. ' பொற்றாமரைக் குளம்' எனப் பெயரும் உண்டு.
குளத்தில் வீற்றிருக்கும் பெருமையைப் பெற்ற பூவை எங்கள் "தாமரை" எனப் பூக்கள் எல்லாம் பெருமை கொள்கின்றன. பூக்களுக்குள் பேதங்கள் எப்போதும் இல்லை.
"நீரின்றி அமையாது உலகு-
நீர் சூழ் வாழ்வே தாமரையின் அழகு!"
'தாமரை' நீண்ட பதிவோ? நீளம் அளக்க மனம் இல்லை. அப்படியே உங்கள் மனப் பூ கூடைக்குள் வைக்கிறேன். ஓய்ந்து இருக்கையில் இப்பக்கம் சாய்ந்து கொள்ளுங்கள்.
சேற்றில் முளைத்தாலும் மாசற்ற செந்தாமரையாகப் பிறப்பெடுக்கும் தாமரைகள் பாடம் நடத்துவதில்லை. பாடங்களாகவே வாழ்கின்றன.
புத்தக மூட்டைகள்
தேவையில்லை. பூக்களின் முன் நின்றால் போதும். புன்னகை பூக்கும். சிறு சிறு பூக்களாக சந்தோச சிரிப்(பு) பூக்கள் மலரும்.
அன்பில் விண்ணப்பம்...
'தாமரைப் பதிவு' உங்களைப் பரவசப்படுத்தியிருந்தால் அறிந்தவர்களுக்குப் பகிருங்கள்...
தொடர்ந்த வாசிப்பிற்கு
'நன்றிப் பூக்கள்' ...
தொடரும் பயணத்திற்கு
' வரவேற் பூக்கள்' ...
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்...
இருதய். ஆ
2 comments:
தொடர் முழுவதும் வார்த்தை ஜாலங்கள்... அருமை...
Thanks cheta. தொடர்ந்த உங்களது வாசிப்பிற்கும், பின்னூட்டப் பகிர்விற்கும் நன்றிப் பூக்கள்...
Post a Comment