About Me

Friday, March 25, 2022

மல்லிகைப் பூ நெனப்பு...

Fly...
                 
            மனம் கொத்தும் பறவை

ஒவ்வொரு பூக்களுக்கும்  ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பூக்கள் கதைகளோடே  கை கோர்க்கிறது. வாழ்க்கை பூக்களோடு தொடங்கி பூக்களோடு முடிகிறது. 
பூக்கள் மனம் கற்றுக்கொள்ளும் பாடசாலை ஆகிறது. 

பூக்களின் பாடசாலையில்...



பூக்களின் அரசியோடு சரிக்குச் சமமாக மல்லுக்கட்டும் கிளுகிளுப்புக்கார பூவை இவள். 
காதலுக்கு ரோசா... 
களவுக்கு? 
பூக்களின் சபையில் நடந்தது நம்பிக்கை வாக்கெடுப்பு. பூக்களின் அரசி முன் மொழிய அத்துணைப் பூக்களும் மேளம் கொட்டி நாதஸ்வரம் இசைத்து ஜால்ரா தட்டி 
"ஆகட்டும் மகளே உன் சமத்து!" 
பூக்களெல்லாம் 
முன்மொழிந்தன. 

கெத்துக் காட்டி  இதயங்களைக் களவாடி கற்பில் உறவாடி   வாசனை கூட்டி சாமத்தில்
 காமத் தேர் பூட்டி வருவாள்.
 மதி மயக்குவாள். 
சொக்கத் தங்கத்திற்கு 
சற்றும் குறைவில்லாத சொக்கவைக்கும் தங்கம் இவள்!

"டேங் கப்பா சாமி. ஓவர் பில்டப்பா இருக்குடா"... 
பூவோட சகல வரலாறும் தெரிஞ்சிருக்கும். வழக்கமா சொல்ற மாதிரி பூவோட பேர சொல்லிப் புடு. முடியல. 'ஸப்பாடி'... 

பூக்களின் பாடசாலையில்… 
உலா வரும் பூ…
            

'தாவரவியல்' அறிதல் படி 
பூவின் பெயர்… 

    " ஜாஸ்மினம் கிரிபித்தியை" 
ஆகட்டுஞ் சாமி. 

சங்கம் வைத்து வளர்த்த தமிழில் இப் பூவையின் பெயர்… 

மணக்கும் "மல்லிகை"... 


      மல்லிகையின் கதைக்குள் பயணிக்க ஆரம்பித்தால் மயக்கமும், 
கி(ளு)றுகி(ளு)றுப்பும் மனம்  இளைப்பாறும் சாவடிகளாகும். 

பயணத்தின் காட்சி1

காட்சி முழுவதும் கற்பனையே. கற்பனையில் நிசம் உண்டு 
             
    புதிதாகத் திருமணம் முடித்த 
மன்மதன் ஒருவன் மாலை வேளை வேலை முடிந்து வீடு திரும்புகையில்… 

சாலையோரத்து பூக்கடை

"சார்… சம்சாரத்துக்குப் பூ வாங்கிட்டுப் போங்க சார். வாங்க. 'குண்டு மல்லி' அம்சமா இருக்கு." 


மன்மதனின் கால்கள் 'காம்பஸ் கவராயமாக' அரைவட்டமிட்டு' பூக்காரக்கா' கடைக்குத் திரும்ப… 
பூக்காரக்கா மன்மதனிடம் பேசியபடி 
குண்டு மல்லிச் சரம் பிரித்து காணாமலே கைகளால் அளவெடுத்து பச்சிலைக்குள் வைத்து முடியிட்டு மன்மதனின் கைகள் சேர்ப்பார். 
" கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதை மாதிரி" … 
மன்மதன் பூக்காரக்காவிடம்
"யக்கா… சாமி போட்டோக்களுக்கும் வேணும். சேர்த்துக் குடுங்க" என்று சமாளிப்பு சைக்கிள் ஓட்ட… 
பூக்காரக்கா பார்க்காத மன்மதன்களா! எத்தனை மன்மதன்களுக்கு பூ அளந்து கொடுத்திருப்பார். 


" சார். நீங்க ஒண்ணு. சாமிக்குத் தனி. சம்சாரத்துக்குத் தனி. 
அது 
ம்சாரத்துக்கு. 
" இது… சாமிக்கு" 
'மாத்திறாதீங்க. கலர் நூல் கட்டு சம்சாரத்துக்கு. வெள்ள நூல் கட்டு சாமிக்கு".

மன்மதனின் இரு கைகளிலும் "குண்டு மல்லி" விரல் பிடிக்கும். தங்க விலை சொல்லுவார்' பூக்காரக்கா'. அதனாலென்ன? 
" என்ன விலை அழகே"என பாடவா முடியும். பேரமே இல்லாமல் பூக்காரக்காவிடம்' சரண்டர்' ஆவார் மன்மதன். 
பிறகு நடப்பவைகள் 'குண்டு மல்லி' அறிவாள். புதுத் தம்பதியர் வாழ்வில் நிகழும் சிருங்கார நாடகம் இது. அகம் நாடும் கதையும் இது. 

காட்சி 2

 பாடல் "கம்போஸிங்" அறை

இயக்குநர் இசைமேதையிடம் பாடலுக்கான 'சூழலை' கதைக்கிறார்… 
உடன் பாடலாசிரியரும் இருக்கிறார். 
 
"கதா நாயகி புதுசா சமைஞ்சவ.சமைஞ்சு நாட்கள் சென்டு மொத மொறையா வாசற்படி தாண்டி கையில கொடத்தோடு ஆத்துக்குப் போறா. யாருமே இல்ல. ஒரு ஆண் குரல் மட்டும் கேட்குது. சமைஞ்சவ பயப்பட்றா. ஏதேதோ ஒளறி பின்னுக்கப் பார்த்துக்கிட்டே நடக்க சட்டுனு ஒரு பள்ளத்துக்குள்ள விழுந்துட்டா. "

இங்க 'silent' 
சின்ன 'கேப்' . 

அப்புறம் அன்னார்ந்து பார்க்குறா! மரத்து மேல நம்ம கதாநாயகன் சிரிச்சிக்கிட்டே பள்ளத்துக்குள்ள இருக்க மாமன் பொண்ணுக்கு கயித்த விடறான். புதுசா சமைஞ்சவ குமைஞ்சு குமைஞ்சு வெட்கத்தோட கயித்தப் புடிக்க… 
நம்ம கதா கயித்த மேல மேல மேல தூக்கித் தூக்கி அவள கெரக்கத்தோடயே பார்த்துச் சிரிக்கிறான். 

"Now the Romantic situation will open. Song started." 


    "பொத்தி வச்ச மல்லிக மொட்டு… 
   பூத்திருக்கு வெட்கத்த விட்டு… 
    பேசிப் பேசி ராசியானதே… ஏ… ஹே.. 
  மாமன் பேரச் சொல்லிச் சொல்லி ஆளானதே!
  ரொம்ப நாள் ஆனதே!... 
 ம்.. கூம்…"

கவிஞர் யோசிக்கும் முன்னமே பேனாவின் முனை வழி கீழிறங்கி தாள் தொடுவாள் மல்லிகை. 

பாடலாசிரியர்களின் 'கைப் பாவை' என்றும் இம் மல்லிகைப் பூவை. எவ்வளவு பாடல்கள். அத்தனையிலும் காதல், களவு, கற்பு என முப்புள்ளியிட்டு ஆய்த எழுத்தாக மனசுக்குள் போர் நடத்தும்.மல்லிகைப் போரில் வென்றவர், தோற்றவர் என யாரும் இல்லை. போர் முடிந்தால் தானே வெற்றி, தோல்வி விளங்கும்.

 'மல்லிகைப் போர்' 
இடைநில்லா பேருந்து போல தொடர்ந்து கொண்டே இருக்கும். இலக்கு அடைந்தாலும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பும். 
  "செத்துச் செத்து வெளையாடுவமா?" 
என்ற 'வைகைப் புயல்' வடிவேலு அவர்களின் காமெடிக் காட்சி போல 'மல்லிகைப் போர்' நிகழ்ந்தேறும். 

"ஜாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே! 
ஆசையின்னா ஆசையடி! அவ்வளவு ஆசையடி…" 
  'அழகன்' திரைப்படப் பாடல் 
காதுகளுக்குள் ஒலிக்கிறது. 

" மல்லி… மல்லி… 
செண்டு மல்லி ஆள அசத்துதடி!" 
மல்லிகைப் பாடல்கள் திரைகளெங்கும் விரிந்து படர்ந்திருக்கிறது. 

காட்சி - 3

சமயம் வாய்க்கும் போதெல்லாம் தாய் வீடு திரும்பும் 'மணமுடித்த மங்கையரைப் போல' என் 'மனப் பறவை' சில விஷயங்களை 
அசைபோடுகையில் சிறகடித்து '80' -களின் மத்திமத்தில் கால் ஊன்றி விடுகிறது. 



அன்று… 

ஜெய்ஹிந்துபுரத்தில் குடியிருந்த வீட்டிற்கு எதிரில் ஒரு கல்யாண மண்டபம் இருந்தது. 

"கே. எஸ். எஸ். கல்யாண மஹால்" 
        அந்தி சாய்ந்து சாமக்காரன் கைகளில் கொடியோடு தயாராக நிற்கும் நேரம். 
கல்யாண மகாலில் வண்ண வண்ண குட்டிக்குட்டி தொடர் 'பல்புகள்' கண்சிமிட்டிச் சிரிக்க மகால் நுழைவிற்கு அருகில் பெரிய சட்டகத்தில் கண்ணைக் கவரும் தொடர் பல்புகள் நின்று அமர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருக்கும். 
"பொன் மகள் வந்தாள். பொருள் கோடி தந்தாள். 
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக…!" 
நடிகர் திலகம் 'சிவாஜி கணேசன்' பாடல் காதுகளைக் குடையும். 

காதுகளைக் குடைந்து கொண்டே வீதி நோக்க வெண் குதிரை ஒய்யாரமாக நடந்து வரும்.


 குதிரையில் சுக்கிரனாட்டம் ஒரு மன்மதன் முகம் தெரியாதபடி மல்லிகைப் பூச் சரங்கொண்டு மறைத்து தோள்கள் சாய்த்து சாய்த்து கண்கவர்' ஜிகு ஜிகு தக தக"' ஆடை உடுத்தி வீதி வருவார். 


கேட்ட மாத்திரம் ஆட்டம் போட கால்கள் எத்தனிக்கும்." ஆரவார பேண்டு" இசையுடன் வாத்தியக் குழு முன்னெடுத்து நடந்துவர "நிக்காஹ்" ஊர்வல "பெட்ரோமாக்ஸ்" ஒளிகளின் மஞ்சள் வண்ண கசிவுகளினூடே வெண் குதிரை மீதமர்ந்த மல்லிகைப் பூக்களால் முகம் மறைத்த சுக்கிரன் அருகாமை வர வர சாமக்காரன் கொடியசைப்பான். 

இரவு கவிந்து காற்றோடு மயக்கும்' மதுரை மல்லிகைச் சரங்களின்' கிறக்கவாசனை நாசிகளில் ஏறும். 

  "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா!" 
    பாடல் காதுகளைக் குடையும். 
 மல்லிகையை நினைத்த மாத்திரம் ஏதேனும் ஒரு மல்லிகைப் பாடல் உங்கள்  காதுகளைக் குடையலாம். மல்லியின் மயக்கும் வாசனை நாசிகளுக்குள் குடை விரிக்கலாம். விரிக்கட்டும். 

 மயக்கும் 'மல்லிகை' உலா
 'உலாப் பூக்களின்' அடுத்த பதிவிலும் தொடரும். மல்லிகைச் சரம் விலகும். 
விலகாமல் தொடர்ந்திடுங்கள்… 

மனப்பறவை மனம்கொத்தும்! 
பறக்கும்… 


இருதய். ஆ













   


Monday, March 21, 2022

'கவிதைகள் பழகுபவன்' ..

Fly...

           மனம் கொத்தும் பறவை 


'கவிதைகள் பழகுபவன்'


"நமக்குத் தொழில் கவிதை… 

நாட்டிற்கு உழைத்தல்… 

இமைப் பொழுதும் 

      சோராதிருத்தல்…" 

-என்றார் முண்டாசுக் கவி  'பாரதி'. 


"பாரதியின்' கவிதை...

பார்க்கும் பார்வையில்… 

வெள்ளையனை  நுழையவிடாது முறுக்கிய அவரது கரிய மீசையில்… 

தலைக்குக் கட்டிய 

முண்டாசுத் துணியில்… 

நெற்றியின் திலகத்தில்…

-என சகலத்திலும் 'கவிதை' எனும் நெருப்பு கணன்று கொண்டே இருந்தது. 

       


சொற் புதிதாய், பொருள் புதிதாய் சோதி  மிக்க 'நவ கவிதையாய்' உருக் கொண்டது 'மீசைக்கவியின்' கவிதைகள். 


" விசையுறு பந்தாக மீளும் வரம் கேட்பேன்" - எனப் பாடினார் மகா கவி 'பாரதி' . 


கவிதை போல கவிதை எழுதி தன்னை கவிஞன் என்று சொல்லச் சொல்பவன் அல்ல பாரதி. கவிஞனாகப் பிறந்ததனால் கவிதை எழுதியவன் பாரதி" - என பார(தீ)தியை உயர்த்திப் பிடித்தார் கவிப்பேரரசு 'வைரமுத்து' . 


கவிப் பேரரசு. திரு. வைரமுத்துவின் திரைப்பாடல்களில் கவிதைகள் கற்கலாம். திரைப் பாடல்கள் வழி கவிதைப் பாடங்கள் சொல்லியவர் கவிப்பேரரசு. ஒவ்வொரு பாடலும் ஒரு கவிதை. 


'மரபுக் கவிதை' எழுத இலக்கணம் அறிதல் அவசியம். 'மாற்றம்' எனும் ஆழிப்பேரலை மரபெனும் கரை உடைத்து புது வெள்ளமாகி புதுக்கவிதையாக மனங்களின் மடை திறந்தது. 


இன்று வீட்டிற்கு ஒரு கவிஞரேனும் நிச்சயம் இருப்பார்கள். 


தேநீர் தருணம்... 


 சிறு குழந்தை கை பற்றி நடக்கும் நடை வண்டியாக

'கவிதை' தன் கை கொண்டு நம்மை அழைத்துச் செல்கிறது. 


"விழுந்தால் கவிதை… 

எழுந்தால் கவிதை… 

மறக்க ஒரு கவிதை. 

நினைக்க ஒரு கவிதை… 

அழ ஒரு கவிதை… 

நிமிர ஒரு கவிதை… 

சாய்ந்து கொள்ள ஒரு கவிதை!" 

சகலமும் கவிதை மயமாக ஊர் கூடி இழுக்கும் தேராக 'கவிதை ' நாளும் கடக்கிறது.


"இன்னைல இருந்து நானும் கவிஞன்" என தமிழை துணைக்கு அழைத்து

" உன்னை விட்டேனா பார்" என 'அ' முதல் 'ஆய்தம்' வரை ஆராய்ந்து 'உயிர் மெய்' ண்டு மெய் மறந்து கவிஒன்றைத் தட்டிவிட்டு முடிவில் ஆச்சரியக் குறியோ, அல்லது கேள்விக் குடையோ விரித்து ( என்னைப் போல) மறக்காமல் மூன்று புள்ளிகள் இட்டு முடித்தால்

" கவிஞன் யான் "எனச் சொல்லிக் கொள்ளலாம். 



இன்று உலக கவிதைகள் தினமாம். 

விடுவேனா! . 

ஆச்சரியக் குறிகள்! , 

கேள்விக் குடைகள்? , மூன்று புள்ளிகள்… 

         எல்லாம் தயார். 

 'கவிதை' போல 'கவிதை' எழுதி நடை வண்டி பிடித்து கவிநடை பயிலும் ஒரு குழந்தையாக நானும் தயார்.



'கவிதை' எனப்படும் 'கவிதை 1'


   "செக்கு மாடுகளாக

       கடிகார முட்கள். 

      கனவுகளைப் பிரிக்கிறது… 

        காலம். 

       முட்களின் பாதையில் 

       பூக்களும் இருக்கலாம்! 

         எதுவாயினும்… 

  •         வாழ்வின் பயணமே அழகு!"           

              -இருதய். ஆ

   

'கவிதை' எனப்படும் 'கவிதை 2'

   

   "'நான்' " என்பது

         நொடியா? 

          நிமிடமா? 

           கேள்விகள்… 

           கடிகாரப் பெண்டுலமானது.

         காது திருகி

ஆசிரியனாக

      காதோரம்… 

       சொன்னது காலம். 

  •            'நீ' என்றும் 'நொடியடா'!          

                        -   இருதய். ஆ


உண்மையில் 'கவிதை' என்பது  தூண்டிலோ?

 என கேட்கத் தோன்றுகிறது. சகலத்திலிருந்தும் மீட்டெடுக்கும் 'தூண்டில்' 'கவிதை' என்றால் மனம் மீனாகத்  தூண்டிலில் மாட்டிக் கொள்வதில் மகிழ்வே. 


கவிதை என்பது… 


    ' ஆற்றல் மிக்க உணர்ச்சிகள் தாமாகப் பொங்கி வழிவதே "கவிதை" (Spantaneous overflow of powerful feelings)' 

  • ஆங்கிலக் கவி 'வில்லியம் வோர்ட்ஸ்ஒர்த்'


ஆச்சரியக் குறிகள்!, கேள்விக் குடைகள்?, மூன்று புள்ளிகளோடு கவிதை எனும் தேர் பிடித்து இழுக்க அழைப்பிதழ்கள் தேவையில்லை. அணைமீறும் வெள்ளமாக எண்ணங்கள் எழுந்தால் போதும்."' 'யானும் கவி என்ற கவியே'

என சொல்லிக் கொள்ளலாம்.


- இப்படிக்கு கவிதைகள் பழகுபவன்.


மனப் பறவை மனம் கொத்தும்! 

பறக்கும்… 

           


இருதய். ஆ

Friday, March 18, 2022

பறக்கும் பாவைகள்...

Fly...
             
            மனம் கொத்தும் பறவை...


"திறந்த வானம்
திறக்கும் மனம்...
முளைக்கும் சிறகு!
தடங்களற்ற வெளியில்
விரிந்தது மனச் சிறகு! 
பறவைகளாக..
பறக்கும் பாவைகள்!"


"உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்?" 

   - இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் பொழுதில் மனம் சட்டென வெண்திரையில் இருந்து 'நயன்தாராவையோ, த்ரிஷாவையோ' அல்லது மனசுக்குள் விரியும் கதாநாயகியின் பெயரையோ சொல்லும். அது ஒரு மனநிலை.




 இயல்நிலை தேடினால் நம்மைச் சுற்றி நிறைய' கதாநாயகிகள்' இருப்பார்கள். இவர்களுக்கு 
"ஹல்ல மித்தி ஹபி போ" நடனம் ஆடத் தெரியுமா? தெரியாதா? கேள்விகள் மத்தாப்புக் குச்சியாக மனம் உரசுகையில் சட்டென பற்றிக் கொண்டது வண்ண மயமான நெருப்பு. 
                    எந்தச் சாயலும் எந்தச் சாயங்களும் இல்லாத  ஒப்பனைகளற்ற முகங்கள் தான் நான் பகிர இருக்கும் நிச கதாநாயகிகள். சிறகு முளைத்த 'பறக்கும் பாவைகள்'  இவர்கள்.


 ஒப்பனைகளற்ற முகங்களை நான் வார்த்தைகளின் ஒப்பனைகளின்றி பகிருகிறேன். பகிர்தல் உண்மை. 
 
  "உன் எண்ணம் உன் வண்ணம்" 



             "ஹோலிப் பண்டிகை" நல்வாழ்த்துக்கள்... 

'ஹோலிகா' எனும் 'அரக்கி' தீயில் அழிந்த புராண கதையை நினைவூட்டுவதாகவும், கோடையை வரவேற்கும் விதமாகவும் "ஹோலிப் பண்டிகை" கொண்டாடப்படுவதாக இப் பண்டிகையின் வரலாறு கூறுகிறது. வடமாநிலங்களில் பிரசித்தமாகக் கொண்டாடப்படுகிற 'ஹோலி" தமிழகத்திலும் வண்ணங்கள் இறைத்துக் கடக்கிறது. 

தேநீர் தருணம்... 


வாழ்க்கையை வண்ணங்களால் நிறைப்பவள் பெண்.' பெண்'என்ற சொல்லின் வேர் ஆளுமை நிறைந்தது. 
  
      'பிணா' என்றால் 'பிளவுபட்ட' என்று பொருள்.
     'பிணா' என்ற சொல் பின்
' பெண்' என மாறியது. பிளவுபட்ட பிறப்புறுப்பைக் கொண்டவள் என்பதை உணர்த்தும் சொல் தான் 'பிணா' எனும் பெண்'.  ஆதர்ச எழுத்தாளர் மரியாதைக்குரிய திரு. 'பிரபஞ்சன்' எழுதிய' பூக்களை மிதிப்பவர்கள்' புத்தகத்தில் படித்தது.

' பெண்' 
பிளவுகள்  விரும்பாதவள்.
பிரிவினைகளுக்கு 
பிரிவு உபச்சாரம் நடத்துபவள். 
' பரிவு' என்ற பரிசல் ஏறி
மனங்களைக் கடப்பவள். 
பரிசல் துறையில் 
அன்பின் ஆழம் அறியலாம். 
பரிசல் ஏறி கரை கடக்கலாம்.

சின்னத்திரைத் தொடர்களை வாடிக்கையாகக் கண்டால் பெண்கள் மீதான பார்வையே மாறிவிடும். "இந்த பொம்பளைங்களே இப்படித்தான்" என மனம் ஓட்டம் பிடித்துவிடும்.
கதைகள் கதைகளாகவே இருக்கட்டும். 

நிஜத்திற்கு வருகிறேன். பஞ்ச 
பூதங்களின் கலவையே 'பெண்' என்று சொல்லுவார்கள். நானும் பறக்கும் பாவையராக ஐந்து பேரைப் பற்றி பகிருகிறேன்.  



ஐவரின்  சாயல்களில் ஏராளமான மங்கையர் இருக்கலாம்.  அவர்களும் பறக்கும் பாவையரே! 
பகிரும் ஐவரும் கூட இப்பதிவை கண்ணுறலாம். முக ஸ்துதிகளின்றி வார்த்தை ஜாலங்கள் இன்றி பகிர்கிறேன். குறை இருப்பின் தண்ணீரில் எழுதியவைகளாகக் கடந்து விடுங்கள்.

அம்மா, மனைவி இருவரும் ஐவர் குழுவில் இல்லை. பறக்கும் பாவையர் பதிவிற்கு முன்னரே இருவருக்கும் பச்சைக் கொடி அசைத்துவிட்டேன். 'நான் கொஞ்சம் வெவரமுள்ளவனாக்கும். Great escape'. 

  முதற் பாவை

எனது தோழியர்களிடமிருந்தே ஆரம்பிக்கிறேன். 
  
செய்திப் பிரிவாக  இயங்கும் தொலைக்காட்சியில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக மூன்று மாதங்கள் அங்கு உள்ளிருந்து சுதந்திர வெளியில்  நிகழ்ச்சியின் இயக்குநராகப் பணியாற்றிய போது 'ஒரு பாவை' அறிமுகமானார். செய்தி வாசிப்பாளராகப்
 பணி புரிந்தார். 

பழமையும், புதுமையும் கலந்த கலவை அவர். நிகழ்ச்சி முழுவதிலும் தொகுப்பாளராகப் பணி செய்தார். செய்தித் தொலைக்காட்சிப் பணிக்கு நான் புதியவன். அங்குள்ள நடை முறைகளை நாட்கள் நகர்வில் அறிந்தவன். ஒரு நாள் பதிவு செய்த காட்சிகளை 'எடிட்டிங்' செய்ய நினைத்த போது பதிவு செய்த  இடத்தில் பதிவுகள் இல்லை. அழிக்கப்பட்டாகிவிட்டது. இரண்டொரு நாட்களில் ஒளிபரப்பாக வேண்டிய சூழல். விசாரிக்கையில் செய்திப் பிரிவில் மூன்று நாட்கள் மட்டும் பதிவு செய்த தொகுப்புகள் இருக்கும் (Rushes) என்பதை அறிந்தேன்.   தொகுத்து வழங்கிய பாவையிடம் தயங்கியபடி சொன்னபோது சிறிதும் தயக்கமோ, எரிச்சலோ இல்லாமல் திரும்பவும் எடுத்துக்குங்க ப்ரகாஷ். இங்க உள்ள 'rules update' பண்ணிக்கோங்க. கவனமா இருங்க. நான் ரெடி ' ஷூட்' பண்ணலாம் என்றார். மொத்தமாக மறுபடியும் எடுப்பதற்கு உடன் இருந்தவர்களும் ஒத்துழைத்தார்கள். காரணம் பாவையே. சகிப்புத் தன்மை என்னை வியப்பில் ஆழ்த்தியது.நிறை மாத கர்ப்ப காலத்தில் கொரோனா அலையில்  எதிர் நீச்சலிட்டு கரை சேர்ந்து ஆண் குழந்தைக்குத் தாயானார் நம்பிக்கைப் பாவை. 'கொரோனா' சூழலில் நேர்மறையான பதிவுகள் வேண்டும் என நான் எனது ஊடக நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பினேன். பாவை உட்பட.

மீண்டும் 'பாவை' ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.. அவரே நேர்மறை பதிவானார்.இதற்கு உறுதுணையாக இருந்தவர் எனது மதிப்பிற்குரிய ஊடகத் தோழர். காரணம் பாவை.. இன்று வரை பாவை எனக்கு ஆச்சரியக் குறி தான். வாழ்த்துக்கள்...

இரண்டாம் பாவை.      

எனது கல்லூரிக்காலத்து தோழி.. எங்கள் குழுவில் முதலில் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தவர். முதல் நாள் இவரைக் கண்ட போது வித்தியாசமாக எனக்குத் தெரிந்தார். நெற்றியில் வட்டமாக பெரிய பொட்டு வைத்திருந்தார். பார்த்தவுடன் நம் கன்னத்தில் போட்டுக் கொள்ளலாம்.  பக்திப் பழம் போல இருப்பார்.  பழகுவதற்கு இனிமையானவர். 
காலம் கடக்க, கடந்த வருடம்தான் அவரிடம் பேசும் வாய்ப்பு அமைந்தது. மும்பை வாசம். பெங்களூர் வாசம் என ஆனபோதும் மண்ணின் மொழி மீதான நேசம் குறையாது பேசினார். 'ப்ரகாஷ் எழுதற எல்லாத்தையும் அனுப்புப்பா.மதுரை ஞாபகத்துக்கு வருது. நான் படிக்கிறேன்' என்றார். மனசுக்குள் இறக்கை முளைக்க வைத்தார் 'கல்லூரிப் பாவை.' 

 கணவர் மும்பையில் இருக்கிறார். ஒரே மகளின் படிப்பிற்காக பாவை மகளுடன் பெங்களூரில் துணை இருக்கிறார். இவர் போல் இன்னும் பலர் இருக்கிறார்கள். பாவையின் மகள்' பியானோ' வாசிப்பதில் கில்லாடி. ஒர் இசைப் பாவை உருவாகிறார். வாழ்த்துக்கள்...

மூன்றாம் பாவை
         இவர் ஒர் ஆசிரியை. எனது மனைவிக்கும் இவருக்கும் நல்ல நட்பு உண்டு. பாவையின் கணவர் எனது நேசத்திற்குரியவர். தங்கள் வாழ்வை தேவன் கர்த்தருக்கு அர்ப்பணம் செய்தவர்கள். எதிர்பார்ப்புகளற்ற வெளிகளில் பறப்பவர்கள். ஒவ்வொரு மாத இறுதியிலும் முழு இரவுப் பிரார்த்தனை நிகழும். நிகழ்வில் விடியும் வரை ஆராதனை நிகழும். அற்புதமான கணங்களாக நிமிடங்கள் கடக்கும். விடியும் வரை தேவனை ஆராதித்து விட்டு அங்கிருந்து நேராக பணிக்குத் திரும்புவார் "பக்திப் பாவை" . பள்ளி திரும்பி பள்ளி கொள்ளாது உறக்கம் தொலைத்த விழிகளோடு கடமையில் விழிப்புடன் இருப்பார். இவரது அர்ப்பணிப்பு அதிசயிக்க வைக்கும். வாழ்த்துக்கள்… 

நான்காம் பாவை
     இப் பாவை ஒரு 'சின்சியர் சிகாமணி'. என் மனைவியுடன் பணிபுரிகிறார். உள்ளூரிலேயே வீடு. இருப்பினும் பள்ளி தான் இப் பாவையின் கூடு. 'கொரோனா' காலத்தில் சக ஆசிரியைகளை எதிர்பார்க்காமல் முக்கியமான அலுவல்களை எல்லாம் தனிஒருவராக செய்து முடித்திருக்கிறார். 'கொரோனா' காலத்து பேருதவி இவைகள். இன்னமும் இப் பாங்கில் தான் பணி செய்கிறார் இப் பாவை. என் மனைவியின் பள்ளியில் பணி செய்யும் அனைவரும் ஒரு குடும்பத்தார் போலவே பழகிக் கொள்வார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கும் 'செல்ஃபிக்கள்' அதிரி புதிரியாக இருக்கும். வாழ்த்துக்கள்… 

ஐந்தாம் பாவை

 ஒரு காட்சிப் பதிவு வைரலாகப் பரவியபோது இவரை அறிந்தேன். காவல் துறையில் சிங்கப் பெண்ணாக வலம் வருபவர். மழை வெள்ள காலத்தில் தெருவோரம் உணர்வற்றுக் கிடந்த இளைஞரை ஒற்றை ஆளாகத் தன் தோள் மீது போட்டுக் கொண்டு ஒடி தனது பணி வாகனத்தில் ஏற்றி ஏற்ற காலத்தில் மருத்துவமனையில் சேர்த்து பிழைக்க வைத்தார் சிங்கப் பாவை 
 மதிப்பிற்குரிய… 
காவல் ஆய்வாளர் 
'ராஜேஸ்வரி'  அவர்கள். 
பகிர்ந்த ஐந்து பாவையருக்குள் இன்னும் ஏராளமான பாவையரின் சாயல்கள் நிச்சயம் இருக்கும். 


 எதையும் சீர் தூக்கி நல்லன முன்னெடுத்து நாளும் நடை போடும் பாவையருக்குப் பாதங்கள் சிறகுகளாகும். அதிசயம் நிகழும். கணங்கள் உறையும். திறந்த வெளி பாவையரின் பாதைகளாகும்.

பயணத்தில் 'தடங்கள்' இல்லை. 

தடங்கல்களும் இல்லை.

வானமே பறக்கும் பாவையரின் எல்லை!... 


மனப் பறவை மனம் கொத்தும்! 

பறக்கும்… 


                                         இருதய். ஆ



Friday, March 11, 2022

காகிதப் பூ நெனப்பு(2)

Fly...

           ' மனம் கொத்தும் பறவை' 

"வாடாத 
காகிதப் பூக்களைப் போல
சில நினைவுகள் 
காய்ந்து போவதே இல்லை".

      'நோக்குவன எல்லாம் அவையே போறல்' - என்ற கூற்று காதல் வயப்பட்டவர்களுக்குப்  பொருந்தும். தமிழ் இலக்கணம் சொல்கிறது. 

 உயிர்களின் 'புவிஈர்ப்பு விசை' 'காதல்'. காதல் எதன் மீதும் படரும். பாரபட்சம் ஏதும் இல்லை. பூக்களின் மீதான காதல் புன்னகையில் தொடங்கி மெளனத்தில் தொடரும்.  கடக்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் சில நினைவுகளில் நனையும். ஈரம் உலர்த்தியபடி நினைவுகளில் மனம் கோதும்.  சிறகு விரித்துப் பறக்கும். 

    பூக்களைப் பற்றி எழுதலாம் என்றெண்ணி "பூக்களின் பாடசாலையில் உலாப் பூக்கள்" எனப் பெயரிட்டேன். 


உண்மையில் எனக்குப் பாடங்கள் மண்டையில் ஏறாது. அது ஒரு காலம். கல்லூரிக்குள் நுழைந்த போது தான் 'கல்வி' மீதான புரிதல் ஏற்பட்டது. அதற்கு முன்னர் வரை கல்விக் கூடம் செல்வதை 'எனது போறாத காலமாக' நினைப்பேன். 

        வரலாற்றுப் புத்தகங்களில் அச்சிடப்பட்ட அசோகர், பாபர், ஔரங்கசீப், புத்தர், ஜான்சி ராணி அம்மையார், நெப்போலியன், அலெக்சாண்டர் போன்றோரின் முகங்கள் இன்னமும் சுவரில் மாட்டி வைத்த ஓவியச் சட்டகமாக மனக் கூட்டுக்குள் ஊஞ்சலாடுகின்றன.

 ஆனால் வரலாற்று முகங்களின் விலாசங்கள் சொல்லும் வரலாறு மனதில் நிற்கவில்லை.
 பஞ்சாரக் கூடை எடுத்தவுடன் ஓட்டமெடுக்கும் 'நாட்டுக்கோழிகள்'   போல பாடங்கள் குறித்த நினைவுகள் ஓரே ஓட்டமாக மனதை விட்டு ஓட்டமெடுக்கும். 

ஆனால், இன்று பாடங்களை படங்களாக்கி 'செயல்முறைக் கற்பித்தல்' வழி குழந்தைகளுக்கு  கல்வியின் மீதான பிரியத்தை  மனசுக்குள் கடத்துகிறார்கள். 

 அன்று... 
புதுப்புத்தகங்கள் வாங்கியதும் அதன் வாசனை நுகர்வேன். புத்தகங்களுக்குள் நுழைந்து படம் பார்ப்பேன். படிக்கச் சொன்னால் புத்தகம் தலைகீழாகப் பிடித்திருப்பது அறியாமல் 'படிக்கிறேன் பேர்வழி' என வேறு எங்கோ 'பராக்கு' பார்த்தபடி அமர்ந்திருப்பேன்.
பிறகு எங்கள் வீட்டு 'Head master' என்னை மெச்சி புத்தகத்தை நேரே பிடித்து படிக்கச் சொல்லி முதுகில் ஒன்று போட்டுவிட்டு காய்கள் நறுக்க அமர்வார். 
அப்பா நடுநிலைப் பள்ளியின் 'Head master'. அப்போது 'strict officer' . வீடும் அப்பாவிற்கு பள்ளிக் கூடமாகவே தெரியும்.

 அப்பா அம்மாவிற்குச் செய்யும் ஆகச் சிறந்த உதவி காய்கள் நறுக்கித் தருவது தான். தினம் காலையில் நடு நாயகமாக அமர்ந்து காய்கள் நறுக்கியபடி முன் அமர்ந்து படிக்கும் எங்களைப் படித்தபடி காய்கள் நறுக்குவார் எங்கள் அப்பா. அண்ணன் மட்டும் வராந்தாவில் 'என் ஏரியா உள்ள வராதீங்க' என தனி ஆவர்த்தனம் புரிவார்.
இச்சூழல்கள் எங்கள் பள்ளிக்கால நாட்களின் தின அஜந்தாவாக நடைபெறும். இச்சூழல்கள் '80' -களின் மத்திமத்தில் இடம் பெற்றவைகள். 

வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு 'பூக்களின் பாடசாலைக்குள்' இருக்கும் ஞாபகம் மறந்து போயிருக்கும். பூக்களின் மீதான நினைவுகள் தான் '80' -களின் மத்திமத்திற்கு பறந்து வந்திருக்கிறது. 


'காகிதப் பூக்களின்' நினைவில் உறைந்து கிடக்கும் அந்நாள் நிகழ்வுகளை மனம் கொத்திக் கிளறுகிறது. 

'தேநீர்' தருணம்... 


 ஒவ்வொரு பொருளும் ஏதேனும் சில நினைவுகளை மனசுக்குள் கடத்தும். 
'முல்லைப் பூ' வள்ளல் 'பாரியை' நினைவு படுத்தும்.

வள்ளல்  'பாரி' 'முல்லைக்கொடியை' நினைவுபடுத்துகிறார். சில வேளைகளில் நினைவுகள் வண்ணக் கண்ணாடி மீன்களாக மனக்குடுவைக்குள்  நீந்தும். சில வேளைகளில் சிறகு முளைத்த பறவையாகிப் பறக்கும்.

'காகிதப் பூக்களின்' நினைவுகள் எனது பள்ளிக் காலத்து  நினைவுகளுக்கு இழுத்துச் செல்கிறது. 

மதுரை-
' தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளியில்' 10வது வரை படித்த காலங்கள் எனக்கு வனவாசம் போலத் தான் கழிந்தது. ஜெய்ஹிந்துபுரத்து நாட்கள் கொடுத்த சந்தோசங்கள் மட்டும் தான் அந்நாட்களைக் கடக்க தோணியாக இருந்தது.

காலாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளி தொடங்கியவுடன் ஓரிரு நாட்களில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு பட்டியலில் கடைசி இடம் பிடிக்கும் என் போன்றவர்களுக்கு 'தலைமையாசிரியர்' பொறுப்பில் இருக்கும் 'பாதிரியார்' நல்ல பல பரிசுகளை கைகள் நிறைய தந்து அனுப்புவார். பின் மதிப்பெண்
 அட்டையில் தந்தையின் கையொப்பம் பெற்று வருதல் அவசியம். இல்லையெனில் வகுப்பில் அனுமதி இல்லை.  

என் சகாக்கள் சிலர் தந்தை கையொப்பத்தை தாங்களே இட்டுக்கொண்டு வகுப்பிற்கு திரும்பிவிடுவார்கள். நான் இந்த விஷயத்தில் 'கண்ணியம்' காத்து தந்தையின் கையொப்பத்தை அவரிடம் இருந்து பெறும் வரை பள்ளியிலிருந்து வெளிநடப்புச் செய்வேன். அந்நாட்கள் எனக்கு கிடைத்த "இன்பச் சுற்றுலா". 

அப்படியான ஓர் இன்பச் சுற்றுலா நாளில் 'காகிதப் பூக்களின்' அருகாமை எனக்குக் கிடைத்தது.


 "திருமலை நாயக்கர் மஹால்" தெருவிற்குள் நுழைந்து திரும்பினால் சாலையோரம் குதிரை வண்டிகளும், சைக்கிள் ரிக்ஷாக்களும் இளைப்பாறிக் கொண்டிருக்கும். நடையோரம் 'காகிதப் பூக்கள்' வேலியாகப் படர்ந்து பூக்குடை கள் விரித்து நிற்கும். 

குதிரைகள் வாயில் புற்கட்டுக்கள் உள்ள  ஒரு பை தொங்கும். குதிரைகள் பைக்குள் தலை நுழைத்து புற்கள் உண்டு அசைபோடும். ரிக்சாக்கார நபர்கள் பீடி புகைத்தபடி நடையோரம் அமர்ந்திருப்பார்கள். அவர்களைக் கடந்து நாயக்கர் மஹால் சந்து நுழைவேன். 


முன்புறம் உள்ள இடப்பக்க பகுதி எனது ஆஸ்தான இடம். இடப்பக்கம், வலப்பக்கம் என எங்கும் 'காகிதப் பூக்கள்' கொடி பிடித்து வேலிப் பூக்களாகப் படர்ந்து நிற்கும்.


தரையெங்கும் பூக்கம்பளங்கள் விரித்துக் கிடக்கும். 

நான் அமர்ந்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் கிளி ஜோசியர் அமர்ந்து அவ்வப்போது வந்து அமர்பவர்களுக்கு ஜோசியம் சொல்லுவார்.

எதிர் காலம் உரைப்பார். கிளி லாவகமாக சீட்டுக்களை எடுத்துக் கொடுத்து சட்டகப் பெட்டிக்குள் சென்று வேடிக்கை பார்க்கும்.

ஜோசியம் கேட்க வருபவர்கள் கிளிக்கும், ஜோசியக்காரருக்கும் வாழ்வாதாரம் காப்பவர்களாக இருப்பார்கள். இடைவேளை களில் ஜோசியக்காரர் தன் சிறு டப்பாவைத் திறந்து சிவந்த மிளகாயை விரல்களால் கிள்ளிப் போடுவார். மிளகாய் உண்ணும் கிளி ஆச்சரியத்தைக் கடத்தும். கிளிஜோசியப் பெட்டியின் மேல் 'காகிதப் பூக்கள்' வந்து இறங்கும். காற்றில் கடந்து போகும்.

சில நாட்களுக்கு முன் என் வீட்டிற்கு எதிரில் ஒரு 'கிளி ஜோசியக்காரரை' சாளரத்தின் வழியே கண்டேன்.

ஆச்சரியமாக இருந்தது. கீழிறங்கி சந்திக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கையில் சைக்கிள் ஏறி தன் கிளிப் பெட்டியோடு பறந்து போனார்.

நான் மூன்றாவது மாடியில் சாளரத்தின் வழி பார்த்தபடி சட்டென கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டேன்.

எங்கேனும் எவருக்காவது 'கிளி ஜோசியம்' சொல்லிக் கொண்டிருப்பாரா? இன்னும் அமர்ந்து 'கிளி ஜோசியம்' கேட்கிறார்களா? ஒரு நாளில் எத்தனை பேர் கேட்பார்கள்? கிளிக்கு உணவு சிவந்த மிளகாய் தானா? ஏதேதோ கேள்விகள் மனசுக்குள் கிளைவிட்டன. கிளிஜோசியக்காரர்களைக் கண்டால் 'காகிதப் பூக்கள்' மனசுக்குள் பூக்கும். 


"காகிதப் பூக்களின்" நினைவுகள் அலாதியானது. 'தூயமரியன்னை' பள்ளிக்கு வெளியே நிமிர்ந்து நிற்கும் தேவாலய சுற்றுப் பகுதிகளெங்கும் 'காகிதப் பூக்கள்' வேலியாகப் படர்ந்து கண்களை நிறைக்கும். ஜெய்ஹிந்துபுரத்து வீதிகளில் பெரும்பாலும் 'காகிதப் பூக்கள்' வேலிக்கொடி பிடித்து விழித்திருக்கும். அப்பொழுது 'ஜெய்ஹிந்துபுரம்' பதட்டம் நிறைந்த பகுதியாகப் பார்க்கப்பட்டது.

சர்வ சாதாரணமாக பகற்பொழுதில் 'கத்தி கபடாக்களோடு' தலை தெறிக்க ஓடி வருவார்கள். பதட்டமாக கத்தியபடி கடந்து போவார்கள். கண் எதிரே மனம் பதறும் காட்சிகள் அரங்கேறும். 

இப்பேற்பட்ட பகுதியில் பெரிய வீடுகளில் சம்பளம் வாங்காத காவல்காரர்களாக 'காகிதப் பூக்கள்' முள்ளோடு கொடி பிடித்து படர்ந்து நிற்கும். காகிதப் பூக்கள் வேலிக்காரனாகக் காவல் காக்க காணும் கண்களின் வழியே மனம் கொள்ளை போகும். 

நிறைய பகிர எண்ணுகிறேன். காலம் கருதி 'காகிதப் பூக்களை' இதயத்திற்கு அருகில் மனதளவில் இருத்தி முடிக்கிறேன். 

     ஜெய்ஹிந்துபுரத்து வீட்டைக் காலி செய்து புறப்பட்ட அன்று அங்கிருந்து நேரே பள்ளிக்குச் சென்றுவிட்டோம். பள்ளி முடிந்து மாலையில் நாங்கள் மூவரும்(அண்ணன், தம்பி) நேரே நாங்கள் புதிதாகக் குடி பெயர்ந்த மதுரை அண்ணாநகரின் 'அன்னை வேளாங்கண்ணி நகர்' வீட்டிற்குத் திரும்பினோம்.

 காலையில் ஜெய்ஹிந்துபுரத்தைக் கடக்கும் முன் 'காகிதப் பூக்களின்....

வீட்டு 'காகிதப் பூக்களை' கையோடு எடுத்துக் கொண்டேன்.

மாலையில் 'அன்னை வேளாங்கண்ணி நகர்' சென்றபோது அங்கிருந்த வீடுகளெங்கும் 'முல்லைப் பூக்கள்' கொடி பிடித்து மனம் பரப்பின.

வாசமற்ற 'காகிதப் பூக்கள்' எனது பைகளில் உறைந்து கிடக்க வாசம் மிக்க 'முல்லைப் பூக்கள்' தோரணங்கள் கட்டி வரவேற்றன. 


 'முல்லைப் பூக்கள்' ச்சைக் கொடி அசைத்து எங்கள் வாழ்வின் புதிய அத்தியாயங்களைத் தொடங்கி வைத்தன. 

னப் பறவை மனம் கொத்தும்!

பறக்கும்… 


                             





இருதய். ஆ 

 






அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...