"மனம் கொத்தும் பறவை"
"மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்...
மண்ணுக்குத் திரும்புவாய்...
மறவாதே. மறவாதே...
மனிதனே...... "
கிறிஸ்தவர்களின் தவக் கால தொடக்க நாள் பாடல் இது. கேட்கும் நிமிடங்களில் மனம் புதியதொரு பாதைக்குத் தன்னைத் தயார் படுத்தும்.
"தவத்தின் காலம்...
தாழ்ச்சியின் தொடக்கம்"...
நல்லன தேடலில் 'நான்'
தொலைந்து....
'நாம்' என்பதை உணரும் களம்...
சமாதானத்தில் சமன்படும்
மனம்! "
"பழையன கழிதலும்...
புதியன புகுதலும்..."
இக் கணங்களில் நிகழும். நிகழ்தல் ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் இச்சூழலை மனம் எதிர்கொள்ளும்.
'நாற்பது நாட்கள்' தவமாய் தவமிருத்தல் அவசியம் என
' திரு அவை' அறிவுறுத்தும்.
தவத்திற்கான தேடலின்
நுழைவு வாயில்களை மனதின் எல்லாத் திசைகளிலும் ' தவக் காலம்' திறந்து வைக்கும்.
திறக்கப்பட்ட வாசல்கள் ஒன்றும் விசாலமான வழிகள் அல்ல.
தவக் கால வாயில்களின் வழி பிரவேசித்து பயணப்படலுக்கு மனதை நிறையப் பழக்க வேண்டும்.
"தவம்" எல்லா மார்க்கங்களிலும் உண்டு. இதற்கென ஒரு காலத்தையும் மார்க்கங்கள் அமைத்துக் கொடுக்கும்.
"விதைக்க ஒரு காலம்...
அறுக்க ஒரு காலம்...
அறுவடையானவைகளை களஞ்சியங்களில் சேர்க்க ஒரு காலம்" ...
- என எல்லாவற்றுக்கும் ஏற்ற வேளைகள் உண்டு.
'தபசின் காலம்' வீரியமுள்ள மரபுசார் விதை மணிகளை மனசுக்குள் விதைக்கும். விதைக்கப்பட்ட விதைகள் கனிகள் தருவதும், தராமல் தரிசாய்ப் போவதும் அவரவர் மனம் சார்ந்தது. வேளாணின் கடைசி நம்பிக்கை போல மிகவும் உயிர்ப்பானது இக் காலம்.
' நம்பிக்கை பொய்க்காமல் காத்துக் கொள்ளுதலில் கவனமாய் நடந்து கொள்'
மனம் தினம் பாடம் நடத்தும்.
தினப்பாடம் கற்கும் தவக் காலத்தின் தொடக்க நாளே...
கிறிஸ்தவர்களின்
'திருநீற்றுப் புதன்' .
தேவாலயத்திற்குள் நுழைகையில் காண்கிற முகங்களில் தன்னைத் தேடி அலையும் சாயல் பூமத்திய ரேகையாக விரியும்.
கடந்த வருட குருத்து ஞாயிறன்று செபவேளைகள் முடிந்து கைவரப் பெற்ற 'குருத்தோலைகளை'
கிறிஸ்தவர்கள் சிலுவைமரமாகச் செய்து தத்தம் இல்லங்களில் கண்கள் காணும்படியாக நிறுத்தி வைப்பார்கள்.
கண்கள் சிலுவை அடையாளத்தைகாண்கையில்
"அவனவன் தன் சிலுவைகளைச் சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும்"
- என்ற
'வேதாகம திருவசனங்கள்' நினைவுகளில் நிழலாடும்.
நிஜத்தில் ஏற்கும் சிலுவைகளைச் சுமக்க 'பெலன்' தரும்.
"சுய பெலத்தினாலும், சுய பராக்கிராமத்தினாலும் அல்ல. தேவனுடைய கிருபையினால் எல்லாம் ஆகும்... "
மனசுக்குள் தைரியம் துளிர்க்கும்.
தவக் கால 'திருநீற்றுப் புதன்' தொடக்க நாளுக்கு முன் வீடுகளில் வைத்திருந்த 'குருத்தோலையின் சிலுவைகள்' தேவாலயத்தில் ஒப்படைக்கப்பட்டு எரியிட்டு
சாம்பலாக்கப்படும்.
சிலுவை மரத்தின் சாம்பல்கள் மந்தரிக்கப்பட்டு 'திருநீற்றுப் புதனன்று' செபவேளையின் மத்தியில் பங்குபெறும் மக்களின் நெற்றியில்' சிலுவை அடையாளமாக' வரையப்படும்.
"மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்...
மண்ணுக்குத் திரும்புவாய்...
மறவாதே. மறவாதே...
மனிதனே"...
பாடல் இசைவாய் காதுகளுக்குள் நுழைந்து இதயத்தின் தாழ் திறக்கும்.
"மனத்தாழ்ச்சியே தவத்தின் தொடக்கம்"...
--என அறிவுறுத்தும். மண்ணுக்குச் சொந்தமான உடலை உள் இருக்கும் மனம் பக்குவப்படுத்தும்.
புதிய ஆண்டுக்குள் நுழைகையில் மனம் ஏற்கும் உறுதிமொழிகளைப் போலவே தவக் காலத் தொடக்க நாளிலும் புதிய பயணத்திற்கான உறுதிமொழிகளை மனம் உரக்கச் சொல்லும்.
மனதின் குரலை...
கேட்கத் திறனுடைய செவிகள் கேட்கும். கேளாத செவிகளையும் 'கேட்டல் நன்று' என தவத்தின் காலம் உணர வைக்கும்.
'திருநீற்றுப் புதன்' திருப்பலி முடிவில் எல்லோர் கைகளிலும் ஒரு சேமிப்புக் குடுவையும், தபசின் அடையாளமாக ஒரு துணிப் பையும் கை சேரும். தவத்தின் ஒவ்வொரு நாள் விடியலிலும் வீட்டில் தயாராகும் உணவிற்கான அரிசியில் ஒரு பங்கு தேவாலயத்தில் பெற்றுவந்த தபசின் பை தனில் இடப்படும்.
ஒவ்வொரு நாளிலும் தன் வழக்கமான தேவைகளைச் சுருக்கிச் சேர்த்த தொகைகள் சேமிப்புக் குடுவைக்குள் இடப்படும்.
ஆடம்பரம், அலட்டல்கள், ஒப்பனைகளற்ற வெளிகளை மனம் காண எத்தனிக்கும். வெளி வேடம் மறுக்கும்.
மனமது புதிய பயணத்திற்குள் இடுக்கமான தவக் கால வாயில்களுக்குள் ஒவ்வொரு நாளும் நுழைந்து வெளியேறும். நன்மைக்கான வழிகள் இடுக்கம் என்பதை அறியும்.
தீமைக்கு ஏதுவான வழிகள் விசாலமாக விரிந்து
'வா... வந்து நுழைந்து கொள் '
என கைகள் விரித்து நம் முன் நிற்கும். இக்காலம் மட்டும் ஏனோ! மனம் விழிப்பாய் கடக்கும்.
தவத்தின் சாரமே தீமைகள் கடக்க பலகைகள் அமைக்கும். கைகள் பலகைகளின் சாரம் பற்றும். முன்னேறும்.
'நாற்பது நாட்கள்' நன்மைக்கும் தீமைக்குமான இந்த யுத்தம் நித்தம் நடக்கும்.
யுத்தத்தில் சில நாள் விழலாம். வீழ்தல் இயல்பு. விழுந்து எழுதலே தவத்தின் சார்பு.
'தேவன் கிறிஸ்து' சிலுவையைச் சுமக்கையில் மூன்று முறை விழுந்து எழுந்து கல்வாரிப் பயணத்தை முடித்தார்.
விழுந்தாலும் சிலுவைகளைச் சுமந்து எழ தேவன் கிறிஸ்துவின் 'பெலனே' மனதிற்கு பலமாகும். தீமைகள் கடந்து நன்மைக்கு ஏதுவான பாலத்திற்குள் நுழைய சிலுவை மரம் பாலம் அமைக்கும்.
"என் பெலத்தினாலும் பராக்கிராமத்தினாலும் அல்ல. தேவனுடைய கிருபையினால் எல்லாம் ஆகும்... "
தவக் காலப் பயணம் தொடங்கிவிட்டது. பயணத்தில் மனமதை வீழ்த்த துன்மார்க்கங்கள் மார்தட்டிக் காத்து நிற்கிறது. நிற்கட்டும். தவத்தின் பாதைகளில் முட்கள்இருக்கலாம். இருக்கட்டும்.
'தேவன் கிறிஸ்து' முட்களையே மணிமுடியாக ஏற்றார். தவம் எல்லா முட்களையும் ஏற்கும். கடக்கும். கடக்க மனமதை பழக்கும்.
எல்லா தவக் கால தொடக்க நாளைப் போலவே இப்பொழுதும் மனம் தயாராகிறது. ஒரு விஷயம் மனதை முள்ளாக தைக்கிறது.
கடந்த தவத்தில் ஏற்ற புதிய மனத்தை தவம் முடிந்ததும் ஏன் இழந்தாய்???
"கவலை கொள்ளாதே. மீண்டும் எழுந்து நட. மனம் திரும்பு"...
- தேவன் 'கிறிஸ்துவின்' குரல் மனசுக்குள் புதிய நம்பிக்கைகளை விதைக்கிறது.
" மனம் திரும்பும். எல்லாம் கடக்கும்" ....
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்..
4 comments:
யோசிக்க வைக்கும் கேள்வியோடு தவக்காலத்தை தொடங்கி வைக்கிறது இந்தப்பதிவு... அருமை..முயற்சி தானே வாழ்க்கை...
Thanks cheta...
மனம் கொத்தும் பறவை தவக்காலப்பாதைக்கு அழைத்துச் செல்கிறது��️��
Praise the Lord... Amen
Post a Comment