"திறந்த வானம்
திறக்கும் மனம்...
முளைக்கும் சிறகு!
தடங்களற்ற வெளியில்
விரிந்தது மனச் சிறகு!
பறவைகளாக..
பறக்கும் பாவைகள்!"
"உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்?"
- இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் பொழுதில் மனம் சட்டென வெண்திரையில் இருந்து 'நயன்தாராவையோ, த்ரிஷாவையோ' அல்லது மனசுக்குள் விரியும் கதாநாயகியின் பெயரையோ சொல்லும். அது ஒரு மனநிலை.
இயல்நிலை தேடினால் நம்மைச் சுற்றி நிறைய' கதாநாயகிகள்' இருப்பார்கள். இவர்களுக்கு
"ஹல்ல மித்தி ஹபி போ" நடனம் ஆடத் தெரியுமா? தெரியாதா? கேள்விகள் மத்தாப்புக் குச்சியாக மனம் உரசுகையில் சட்டென பற்றிக் கொண்டது வண்ண மயமான நெருப்பு.
எந்தச் சாயலும் எந்தச் சாயங்களும் இல்லாத ஒப்பனைகளற்ற முகங்கள் தான் நான் பகிர இருக்கும் நிச கதாநாயகிகள். சிறகு முளைத்த 'பறக்கும் பாவைகள்' இவர்கள்.
ஒப்பனைகளற்ற முகங்களை நான் வார்த்தைகளின் ஒப்பனைகளின்றி பகிருகிறேன். பகிர்தல் உண்மை.
"உன் எண்ணம் உன் வண்ணம்"
"ஹோலிப் பண்டிகை" நல்வாழ்த்துக்கள்...
'ஹோலிகா' எனும் 'அரக்கி' தீயில் அழிந்த புராண கதையை நினைவூட்டுவதாகவும், கோடையை வரவேற்கும் விதமாகவும் "ஹோலிப் பண்டிகை" கொண்டாடப்படுவதாக இப் பண்டிகையின் வரலாறு கூறுகிறது. வடமாநிலங்களில் பிரசித்தமாகக் கொண்டாடப்படுகிற 'ஹோலி" தமிழகத்திலும் வண்ணங்கள் இறைத்துக் கடக்கிறது.
தேநீர் தருணம்...
வாழ்க்கையை வண்ணங்களால் நிறைப்பவள் பெண்.' பெண்'என்ற சொல்லின் வேர் ஆளுமை நிறைந்தது.
'பிணா' என்றால் 'பிளவுபட்ட' என்று பொருள்.
'பிணா' என்ற சொல் பின்
' பெண்' என மாறியது. பிளவுபட்ட பிறப்புறுப்பைக் கொண்டவள் என்பதை உணர்த்தும் சொல் தான் 'பிணா' எனும் பெண்'. ஆதர்ச எழுத்தாளர் மரியாதைக்குரிய திரு. 'பிரபஞ்சன்' எழுதிய' பூக்களை மிதிப்பவர்கள்' புத்தகத்தில் படித்தது.
' பெண்'
பிளவுகள் விரும்பாதவள்.
பிரிவினைகளுக்கு
பிரிவு உபச்சாரம் நடத்துபவள்.
' பரிவு' என்ற பரிசல் ஏறி
மனங்களைக் கடப்பவள்.
பரிசல் துறையில்
அன்பின் ஆழம் அறியலாம்.
பரிசல் ஏறி கரை கடக்கலாம்.
சின்னத்திரைத் தொடர்களை வாடிக்கையாகக் கண்டால் பெண்கள் மீதான பார்வையே மாறிவிடும். "இந்த பொம்பளைங்களே இப்படித்தான்" என மனம் ஓட்டம் பிடித்துவிடும்.
கதைகள் கதைகளாகவே இருக்கட்டும்.
நிஜத்திற்கு வருகிறேன். பஞ்ச
பூதங்களின் கலவையே 'பெண்' என்று சொல்லுவார்கள். நானும் பறக்கும் பாவையராக ஐந்து பேரைப் பற்றி பகிருகிறேன்.
ஐவரின் சாயல்களில் ஏராளமான மங்கையர் இருக்கலாம். அவர்களும் பறக்கும் பாவையரே!
பகிரும் ஐவரும் கூட இப்பதிவை கண்ணுறலாம். முக ஸ்துதிகளின்றி வார்த்தை ஜாலங்கள் இன்றி பகிர்கிறேன். குறை இருப்பின் தண்ணீரில் எழுதியவைகளாகக் கடந்து விடுங்கள்.
அம்மா, மனைவி இருவரும் ஐவர் குழுவில் இல்லை. பறக்கும் பாவையர் பதிவிற்கு முன்னரே இருவருக்கும் பச்சைக் கொடி அசைத்துவிட்டேன். 'நான் கொஞ்சம் வெவரமுள்ளவனாக்கும். Great escape'.
முதற் பாவை
எனது தோழியர்களிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்.
செய்திப் பிரிவாக இயங்கும் தொலைக்காட்சியில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக மூன்று மாதங்கள் அங்கு உள்ளிருந்து சுதந்திர வெளியில் நிகழ்ச்சியின் இயக்குநராகப் பணியாற்றிய போது 'ஒரு பாவை' அறிமுகமானார். செய்தி வாசிப்பாளராகப்
பணி புரிந்தார்.
பழமையும், புதுமையும் கலந்த கலவை அவர். நிகழ்ச்சி முழுவதிலும் தொகுப்பாளராகப் பணி செய்தார். செய்தித் தொலைக்காட்சிப் பணிக்கு நான் புதியவன். அங்குள்ள நடை முறைகளை நாட்கள் நகர்வில் அறிந்தவன். ஒரு நாள் பதிவு செய்த காட்சிகளை 'எடிட்டிங்' செய்ய நினைத்த போது பதிவு செய்த இடத்தில் பதிவுகள் இல்லை. அழிக்கப்பட்டாகிவிட்டது. இரண்டொரு நாட்களில் ஒளிபரப்பாக வேண்டிய சூழல். விசாரிக்கையில் செய்திப் பிரிவில் மூன்று நாட்கள் மட்டும் பதிவு செய்த தொகுப்புகள் இருக்கும் (Rushes) என்பதை அறிந்தேன். தொகுத்து வழங்கிய பாவையிடம் தயங்கியபடி சொன்னபோது சிறிதும் தயக்கமோ, எரிச்சலோ இல்லாமல் திரும்பவும் எடுத்துக்குங்க ப்ரகாஷ். இங்க உள்ள 'rules update' பண்ணிக்கோங்க. கவனமா இருங்க. நான் ரெடி ' ஷூட்' பண்ணலாம் என்றார். மொத்தமாக மறுபடியும் எடுப்பதற்கு உடன் இருந்தவர்களும் ஒத்துழைத்தார்கள். காரணம் பாவையே. சகிப்புத் தன்மை என்னை வியப்பில் ஆழ்த்தியது.நிறை மாத கர்ப்ப காலத்தில் கொரோனா அலையில் எதிர் நீச்சலிட்டு கரை சேர்ந்து ஆண் குழந்தைக்குத் தாயானார் நம்பிக்கைப் பாவை. 'கொரோனா' சூழலில் நேர்மறையான பதிவுகள் வேண்டும் என நான் எனது ஊடக நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பினேன். பாவை உட்பட.
மீண்டும் 'பாவை' ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.. அவரே நேர்மறை பதிவானார்.இதற்கு உறுதுணையாக இருந்தவர் எனது மதிப்பிற்குரிய ஊடகத் தோழர். காரணம் பாவை.. இன்று வரை பாவை எனக்கு ஆச்சரியக் குறி தான். வாழ்த்துக்கள்...
இரண்டாம் பாவை.
எனது கல்லூரிக்காலத்து தோழி.. எங்கள் குழுவில் முதலில் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தவர். முதல் நாள் இவரைக் கண்ட போது வித்தியாசமாக எனக்குத் தெரிந்தார். நெற்றியில் வட்டமாக பெரிய பொட்டு வைத்திருந்தார். பார்த்தவுடன் நம் கன்னத்தில் போட்டுக் கொள்ளலாம். பக்திப் பழம் போல இருப்பார். பழகுவதற்கு இனிமையானவர்.
காலம் கடக்க, கடந்த வருடம்தான் அவரிடம் பேசும் வாய்ப்பு அமைந்தது. மும்பை வாசம். பெங்களூர் வாசம் என ஆனபோதும் மண்ணின் மொழி மீதான நேசம் குறையாது பேசினார். 'ப்ரகாஷ் எழுதற எல்லாத்தையும் அனுப்புப்பா.மதுரை ஞாபகத்துக்கு வருது. நான் படிக்கிறேன்' என்றார். மனசுக்குள் இறக்கை முளைக்க வைத்தார் 'கல்லூரிப் பாவை.'
கணவர் மும்பையில் இருக்கிறார். ஒரே மகளின் படிப்பிற்காக பாவை மகளுடன் பெங்களூரில் துணை இருக்கிறார். இவர் போல் இன்னும் பலர் இருக்கிறார்கள். பாவையின் மகள்' பியானோ' வாசிப்பதில் கில்லாடி. ஒர் இசைப் பாவை உருவாகிறார். வாழ்த்துக்கள்...
மூன்றாம் பாவை
இவர் ஒர் ஆசிரியை. எனது மனைவிக்கும் இவருக்கும் நல்ல நட்பு உண்டு. பாவையின் கணவர் எனது நேசத்திற்குரியவர். தங்கள் வாழ்வை தேவன் கர்த்தருக்கு அர்ப்பணம் செய்தவர்கள். எதிர்பார்ப்புகளற்ற வெளிகளில் பறப்பவர்கள். ஒவ்வொரு மாத இறுதியிலும் முழு இரவுப் பிரார்த்தனை நிகழும். நிகழ்வில் விடியும் வரை ஆராதனை நிகழும். அற்புதமான கணங்களாக நிமிடங்கள் கடக்கும். விடியும் வரை தேவனை ஆராதித்து விட்டு அங்கிருந்து நேராக பணிக்குத் திரும்புவார் "பக்திப் பாவை" . பள்ளி திரும்பி பள்ளி கொள்ளாது உறக்கம் தொலைத்த விழிகளோடு கடமையில் விழிப்புடன் இருப்பார். இவரது அர்ப்பணிப்பு அதிசயிக்க வைக்கும். வாழ்த்துக்கள்…
நான்காம் பாவை
இப் பாவை ஒரு 'சின்சியர் சிகாமணி'. என் மனைவியுடன் பணிபுரிகிறார். உள்ளூரிலேயே வீடு. இருப்பினும் பள்ளி தான் இப் பாவையின் கூடு. 'கொரோனா' காலத்தில் சக ஆசிரியைகளை எதிர்பார்க்காமல் முக்கியமான அலுவல்களை எல்லாம் தனிஒருவராக செய்து முடித்திருக்கிறார். 'கொரோனா' காலத்து பேருதவி இவைகள். இன்னமும் இப் பாங்கில் தான் பணி செய்கிறார் இப் பாவை. என் மனைவியின் பள்ளியில் பணி செய்யும் அனைவரும் ஒரு குடும்பத்தார் போலவே பழகிக் கொள்வார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கும் 'செல்ஃபிக்கள்' அதிரி புதிரியாக இருக்கும். வாழ்த்துக்கள்…
ஐந்தாம் பாவை
ஒரு காட்சிப் பதிவு வைரலாகப் பரவியபோது இவரை அறிந்தேன். காவல் துறையில் சிங்கப் பெண்ணாக வலம் வருபவர். மழை வெள்ள காலத்தில் தெருவோரம் உணர்வற்றுக் கிடந்த இளைஞரை ஒற்றை ஆளாகத் தன் தோள் மீது போட்டுக் கொண்டு ஒடி தனது பணி வாகனத்தில் ஏற்றி ஏற்ற காலத்தில் மருத்துவமனையில் சேர்த்து பிழைக்க வைத்தார் சிங்கப் பாவை
மதிப்பிற்குரிய…
காவல் ஆய்வாளர்
'ராஜேஸ்வரி' அவர்கள்.
பகிர்ந்த ஐந்து பாவையருக்குள் இன்னும் ஏராளமான பாவையரின் சாயல்கள் நிச்சயம் இருக்கும்.
எதையும் சீர் தூக்கி நல்லன முன்னெடுத்து நாளும் நடை போடும் பாவையருக்குப் பாதங்கள் சிறகுகளாகும். அதிசயம் நிகழும். கணங்கள் உறையும். திறந்த வெளி பாவையரின் பாதைகளாகும்.
பயணத்தில் 'தடங்கள்' இல்லை.
தடங்கல்களும் இல்லை.
வானமே பறக்கும் பாவையரின் எல்லை!...
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்…
6 comments:
மகளிர் தின பதிவின் இரண்டாம் பாகம் போல் இருக்கிறது.. அருமை...
Thanks cheta...
அருமை
மிக்க நன்றி தாமஸ். தொடர்ந்திடுங்கள்...
Very Nice
Thank you...
Post a Comment