'கவிதைகள் பழகுபவன்'
"நமக்குத் தொழில் கவிதை…
நாட்டிற்கு உழைத்தல்…
இமைப் பொழுதும்
சோராதிருத்தல்…"
-என்றார் முண்டாசுக் கவி 'பாரதி'.
"பாரதியின்' கவிதை...
பார்க்கும் பார்வையில்…
வெள்ளையனை நுழையவிடாது முறுக்கிய அவரது கரிய மீசையில்…
தலைக்குக் கட்டிய
முண்டாசுத் துணியில்…
நெற்றியின் திலகத்தில்…
-என சகலத்திலும் 'கவிதை' எனும் நெருப்பு கணன்று கொண்டே இருந்தது.
சொற் புதிதாய், பொருள் புதிதாய் சோதி மிக்க 'நவ கவிதையாய்' உருக் கொண்டது 'மீசைக்கவியின்' கவிதைகள்.
" விசையுறு பந்தாக மீளும் வரம் கேட்பேன்" - எனப் பாடினார் மகா கவி 'பாரதி' .
கவிதை போல கவிதை எழுதி தன்னை கவிஞன் என்று சொல்லச் சொல்பவன் அல்ல பாரதி. கவிஞனாகப் பிறந்ததனால் கவிதை எழுதியவன் பாரதி" - என பார(தீ)தியை உயர்த்திப் பிடித்தார் கவிப்பேரரசு 'வைரமுத்து' .
கவிப் பேரரசு. திரு. வைரமுத்துவின் திரைப்பாடல்களில் கவிதைகள் கற்கலாம். திரைப் பாடல்கள் வழி கவிதைப் பாடங்கள் சொல்லியவர் கவிப்பேரரசு. ஒவ்வொரு பாடலும் ஒரு கவிதை.
'மரபுக் கவிதை' எழுத இலக்கணம் அறிதல் அவசியம். 'மாற்றம்' எனும் ஆழிப்பேரலை மரபெனும் கரை உடைத்து புது வெள்ளமாகி புதுக்கவிதையாக மனங்களின் மடை திறந்தது.
இன்று வீட்டிற்கு ஒரு கவிஞரேனும் நிச்சயம் இருப்பார்கள்.
சிறு குழந்தை கை பற்றி நடக்கும் நடை வண்டியாக
'கவிதை' தன் கை கொண்டு நம்மை அழைத்துச் செல்கிறது.
"விழுந்தால் கவிதை…
எழுந்தால் கவிதை…
மறக்க ஒரு கவிதை.
நினைக்க ஒரு கவிதை…
அழ ஒரு கவிதை…
நிமிர ஒரு கவிதை…
சாய்ந்து கொள்ள ஒரு கவிதை!"
சகலமும் கவிதை மயமாக ஊர் கூடி இழுக்கும் தேராக 'கவிதை ' நாளும் கடக்கிறது.
"இன்னைல இருந்து நானும் கவிஞன்" என தமிழை துணைக்கு அழைத்து
" உன்னை விட்டேனா பார்" என 'அ' முதல் 'ஆய்தம்' வரை ஆராய்ந்து 'உயிர் மெய்' கண்டு மெய் மறந்து கவிஒன்றைத் தட்டிவிட்டு முடிவில் ஆச்சரியக் குறியோ, அல்லது கேள்விக் குடையோ விரித்து ( என்னைப் போல) மறக்காமல் மூன்று புள்ளிகள் இட்டு முடித்தால்
" கவிஞன் யான் "எனச் சொல்லிக் கொள்ளலாம்.
இன்று உலக கவிதைகள் தினமாம்.
விடுவேனா! .
ஆச்சரியக் குறிகள்! ,
கேள்விக் குடைகள்? , மூன்று புள்ளிகள்…
எல்லாம் தயார்.
'கவிதை' போல 'கவிதை' எழுதி நடை வண்டி பிடித்து கவிநடை பயிலும் ஒரு குழந்தையாக நானும் தயார்.
'கவிதை' எனப்படும் 'கவிதை 1'
"செக்கு மாடுகளாக
கடிகார முட்கள்.
கனவுகளைப் பிரிக்கிறது…
காலம்.
முட்களின் பாதையில்
பூக்களும் இருக்கலாம்!
எதுவாயினும்…
வாழ்வின் பயணமே அழகு!"
-இருதய். ஆ
'கவிதை' எனப்படும் 'கவிதை 2'
"'நான்' " என்பது
நொடியா?
நிமிடமா?
கேள்விகள்…
கடிகாரப் பெண்டுலமானது.
காது திருகி
ஆசிரியனாக
காதோரம்…
சொன்னது காலம்.
'நீ' என்றும் 'நொடியடா'!
- இருதய். ஆ
உண்மையில் 'கவிதை' என்பது தூண்டிலோ?
என கேட்கத் தோன்றுகிறது. சகலத்திலிருந்தும் மீட்டெடுக்கும் 'தூண்டில்' 'கவிதை' என்றால் மனம் மீனாகத் தூண்டிலில் மாட்டிக் கொள்வதில் மகிழ்வே.
கவிதை என்பது…
' ஆற்றல் மிக்க உணர்ச்சிகள் தாமாகப் பொங்கி வழிவதே "கவிதை" (Spantaneous overflow of powerful feelings)'
ஆங்கிலக் கவி 'வில்லியம் வோர்ட்ஸ்ஒர்த்'.
ஆச்சரியக் குறிகள்!, கேள்விக் குடைகள்?, மூன்று புள்ளிகளோடு கவிதை எனும் தேர் பிடித்து இழுக்க அழைப்பிதழ்கள் தேவையில்லை. அணைமீறும் வெள்ளமாக எண்ணங்கள் எழுந்தால் போதும்."' 'யானும் கவி என்ற கவியே'
என சொல்லிக் கொள்ளலாம்.
- இப்படிக்கு கவிதைகள் பழகுபவன்.
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்…
4 comments:
✨✨✨
Thanks Thomas...
உலக கவிதைகள் தினமான இன்று கவிதைகள் எழுதும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். அருமை.....
வாழ்த்துக்கள். நன்றி...
Post a Comment