About Me

Sunday, April 17, 2022

பேரன்பின் சிறகு...

Fly...

        மனம் கொத்தும் பறவை 

 பிறருக்காகத் தன்னையே 'அர்ப்பணம்' செய்கிற அன்பிற்கு எல்லை உண்டோ? 


"இல்லை" என இரு கை விரித்த படி சிலுவை மரத்தில் பிறருக்காகத் தன்னைக் கையளித்த பேரன்பு காலங்காலத்திற்குமான அன்பின் சாட்சி. 


பாவச்சேற்றில் விழுந்தாலும் மீண்டும் எழுந்து நடக்க சிலுவை மரத்தால் பாலம் அமைத்து தன்னையே வெறுமையாக்கிய பேரன்பு மதங்கள் கடந்தது. 



 சிலுவை மரத்தில் இரு கை விரித்த படி இருக்கும் கிறிஸ்துவை உற்று நோக்கியபடி தேவாலயங்களில் பிற மதச் சகோதரர்கள் பக்தியோடு மண்டியிட்டுப் பிரார்த்திப்பதைக் கண்ணுறும் பொழுது ஆச்சரியப் பந்து பூமிப்பந்தாகச் சுழலும். சுழலும் மையத்தின் ஈர்ப்பு விசையில் எல்லையற்ற அன்பு உயிர்க்காற்றாகப் பரவிக் கடக்கும். 


பாவத்தின் சாபங்களும், தவறான தீர்ப்புகளும், எதிர்மறையான குற்றச்சாட்டுகளும் தன்னை பாதித்துவிடக்கூடாது என்கிற  பேரச்சமே கைநெகிழ்வதற்கும், கை கழுவுதலுக்குமான முதல் தொடக்கம். 

தொடங்கி வைத்தது 'பிலாத்து' என்கிற மன்னன். 

இயேசுவின் மீது எண்ணற்ற குற்றப்பழிகள் சுமத்தியதைக் கேட்டு

   "நான் இவரிடத்தில் எந்தக் குற்றமும் காணவில்லையே. இவரை விடுவித்து விடலாமா?" 

           என கூட்டத்தினரிடையே கேள்வி எழுப்பியவுடன் 'பிரியாணிப் பொட்டலத்திற்காகவும், அன்றைய தேவைகளின்  கைக்காசிற்காகவும் கூடும் கூட்டக்காரர்களைப் போல' அங்கு அன்றும் ஒரு கூட்டம் இருந்தது. 


"இவனைச் சிலுவையில் அறையும். சிலுவையில் அறையும். சிலுவையில் அறையும்"

 பேரன்பிற்கு எதிராக எழுந்த குரல்கள் அவை. இன்றும் இப்படியான குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. 


பதவி ஆசை' பிலாத்து' மன்னனை தீமைகளுக்கு ஏதுவாக நன்மைத் தனத்தைக் கைகழுவ வைத்தது. 

கைகழுவினான். 


இன்றும், தீமைகளுக்கு ஏதுவாக நன்மைத் தனங்களைக் கைகழுவி கழுவிய  ஈரத்தினை தீமைகளின் சூட்டில் உலர்த்திக்கொள்கிறார்கள். 


"பிலாத்து" தீமைகளுக்கு ஏதுவாக நன்மைத் தனங்களைக் கைகழுவி பேரன்பைச் சிலுவைச் சாவிற்குக் கையளித்தான். 


பேரன்பே இயேசுவைச் சிலுவையைச் சுமக்க வைத்தது. பாரம் அழுத்த மூன்றுமுறை விழுந்தாலும் மீண்டும் எழுந்து நடந்தார். 



சிலுவைவழியே குருதி படிந்த சுவடுகளால் கல்வாரிப் பயணத்தின்

நிலத்தைச் சிலுவை மரத்தால் உழுது குருதி தெளித்து அன்பை விதைக்க வைத்தது 'இயேசுக் கிறிஸ்து' வின் எல்லைகளற்ற பேரன்பு. 



"தந்தையே இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள். 

இவர்களை மன்னியும்! " 

   பகைவரையும் மன்னித்தது பேரன்பு. 


பேரன்பின் வரைபடங்கள் எல்லா மறைகளிலும் உண்டு. நீளும் வரலாற்றிலும் பேரன்பின் எச்சங்கள் உண்டு. 

சிவனடியார் வேடமணிந்து தன்னைக் கொல்லவந்த முத்தநாதனைத் தாக்க வந்த தன் காப்பான் 'தத்தனை' தடுத்து

 " தத்தா தமர் இவர்"

என முத்தநாதனைக் காத்தது 

பெரியபுராணத்து "மெய்ப்பொருள் நாயனாரின்" பேரன்பு. 

"அன்பே சிவம்"

நிதர்சனம் ஆனது. 


தேசத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க காரணமாக இருந்தது 'மகாத்மா' என்றொரு பேரன்பு.



தோட்டாக்களை இதயத்தில் வாங்கினாலும் பகைவனை மன்னித்தது. தேசப்பிதாவாக விரிந்தது. 


"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? "

தாழ்நிலை வரினும் அன்பிற்கில்லை அடைக்கும் தாழ் என்பதன் சாட்சியமாக...

" எல்லாம் நிறைவேறியது" 

என இரு கை விரித்தபடி 

தன் ஆவியைத் தன்னை அனுப்பிய தந்தையிடம் ஒப்படைத்து உயிர் துறந்தது எல்லைகளற்ற "இயேசு" எனும் பிறரன்பு. 



"அன்பு தன்னையே வெறுமையாக்கும். 

தன்னலம் துறக்கும். 

அனைத்தும் சுமக்கும்! 

எதையும் எதிர்பாராமல்

எதிர்நோக்கில் 

அன்பை மட்டுமே விதைக்கும்!

இன்னுயிர் துறப்பினும்

மீண்டும் துளிர்க்கும்!"



பிறருக்காகத் தன்னுயிர் துறந்த கடவுளின் மகன்" மூன்றாம் நாள்" பாதாளத்திலிருந்து உயிருடன் எழும்பினார்.



விண்ணகம் அடைந்தார். தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்.

வாழ்வோருக்கும், இறந்தோருக்குமிடையே தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். 


அன்பு விசையுறு பந்தாக மீளும். 


"பகைவருக்கும் அருள்வாய் நல் நெஞ்சே…" 

-மகாகவி 'பாரதியாரின்' ஞானப்பாடலும் இதைத் தானே வலியுறுத்துகிறது. 


தன்னை எரித்த சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்க்கும் 'பீனிக்ஸ்' பறவை உயிர்ப்பின் வலிமையை உணர்த்துகிறது. 


தீமைகள் சாம்பலாகி உதிரட்டும். நன்மைகள் 'பீனிக்ஸ்' பறவைகளாக சிறகு விரிக்கட்டும். 

அனைவருக்கும்

 கிறிஸ்துவின் "உயிர்ப்புத் திருநாள்" 

வாழ்த்துக்கள்… 


"வெய்யோன்" முகம் நோக்கி மலரும் 'சூரியகாந்திப் பூக்களாக' மனம் நன்மைகள் நோக்கி விரியட்டும். 

மனப்பறவை மனம்கொத்தும்!


பழம் நினைவுகள் உண்ணும்.

பறக்கும்… 


இருதய். ஆ












2 comments:

JOHN A said...

ஈஸ்டர் வாழ்த்து பகிர்ந்த விதம் அழகு... வாழ்த்துகள்...

Irudhy.a said...

மிக்க நன்றி. வாழ்த்துக்கள்...

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...