About Me

Friday, April 8, 2022

மதுரை மல்லிகை...

Fly...

 
மனம் கொத்தும் பறவை 

காஞ்சி 'பட்டு' 
திண்டுக்கல் 'பூட்டு'
மணப்பாறை 'முறுக்கு'
ஸ்ரீ வில்லிப்புத்தூர் 'பால்கோவா'
கோவில் பட்டி 'கடலை மிட்டாய்'
திருநெல்வேலி 'அல்வா'... 

           இன்னும் நீளும் பட்டியலில் மதுரை என்றால்...?

"ஒன்றா இரண்டா எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா?" 
என பாட்டாவே படிக்கலாம்.

' மதுரைக்காரன் 'என்பதால் கொடிப் பிடிக்கவில்லை. மதுரைக்கு நெடிய வரலாறு உண்டு. அறிந்ததே. 

'மதுரை' என்றதும் சட்டென ஒன்றை மட்டும் சொல்லிவிட முடியாது. 

இராணுவத்தில் உயரிய பொறுப்பில் இருப்பவரின் சீருடைச் சட்டையில் ஒட்டிக் கொண்ட நட்சத்திரங்களையும், வண்ணங்களையும் போல மதுரை மண்ணோடு ஒட்டிக் கொண்டிருக்கும் வண்ணங்கள் ஏராளம்.


எங்கு சுற்றினாலும் அவரவர் மண்ணுக்குத் திரும்புகிற தருணத்தில் மனசுக்குள் தங்கச்சுரங்கங்கள் வாசல் திறக்கும். 


ஊரின் வாசம் நாசிகளில் வீசும். எப்பொழுது ஊர் திரும்பினாலும் மதுரை மண்ணைத் தொட்டவுடன் முதலில் தேநீர் கடைக்குத் தான் செல்வேன்.



அதிகாலை நேரமாக இருக்கும். 


தேநீர் தருணம்..



விடிந்தும் விடியாத காலை…



காட்சிகள் கடவுளின் இயக்கத்தில் உணர்வுக் கலவையாக விரியும்.

https://www.facebook.com/reel/5170821419644033?fs=e&s=cl

மதுரை உங்களை வரவேற்கிறது. பேருந்து மதுரைக்குள் நுழையும். 



திறந்த வாசல் 1


ஊருக்குள் நுழைகையில் மஞ்சள் நிற விளக்கொளி படர தேநீர்க் கடைகளில் குவியல் குவியலாக 'ஆம' வடைகளும், உளுந்த வடைகளும், வாய் மறையும் படியான சைஸில் உள்ள முட்டைக்கோசுகளும் (ரவை, மைதா கலவையில் தயாரான இனிப்பு போண்டா ) தட்டை நிறைக்கும். நேரம் கடந்தாலும் சூடு குறையாத படி சூரியன் பார்வை படும்படியாக வடைத் தட்டுக்கள் ஒரு வலையிட்டு மேசை மீது அமர்ந்திருக்கும். 


"ஸ்ட்ராங்கா', லைட்டா, சீனி கம்மியா, அரைச்சீனி போட்டு, சீனியில்லாம" தலைசுற்றும் படியாக பல விதங்களில் தயாராகும்.



 ' டீ மாஸ்டர் 'கை வண்ணத்தில்' 'தேநீர்' கண்ணாடிக் குவளைகளைச் சூட்டோடு தழுவும். 


திறந்த வாசல் 2

    

 "தேநீர், வடை"

' காம்போ 'முடிந்து பேருந்து நிலைய வளாகத்தைக் கடந்தால் கூடை கூடையாக பூக்கள் நடையோரம் வரவேற்கும். 



" வாங்க சார். ஆட்டோ வேணுமா?" நெடு நாள் நண்பன் போல ஆட்டோக்காரர் அருகாமை வருவார். 

"ஆட்டோ வேணுமா சார்" 

"ஆட்டோ வாங்குற ஐடியாலாம் இப்ப இல்ல. வேண்டாம்னே. கவர்மெண்டு கார் வந்துடும்."

     குசும்பான பதில் காதுகளில் விழும். 


அப்போ மதுரைனா 'குசும்பா!' 

 

திறந்த வாசல் 3


ஒரு காலத்தில் விடியவிடிய திறந்திருக்கும். எந்நேரமும் எல்லாமும் கிடைக்கும். 'All in madurai' எனச் சொல்லலாம். 
'தூங்கா நகரம்' என்ற பெயரும் உண்டு. 



அதிரிபுதிரி உணவகங்கள்  வீதியெங்கும் தோரணம் கட்டும்.  

இரண்டு இட்லிக்கே!

அருகாமையில் சாம்பார் வாளி பல் இளிக்கும். தேசியக் கொடியை நினைவுபடுத்தும் வகையில் 'பச்சை நிற புதினா' அல்லது 'மல்லிச் சட்னி' ,உடன் 'செந்நிற மிளகாச் சட்னி' , அப்புறம் வல்லிய வெள்ளை நிற 'தேங்காய் சட்னி' மூன்றும் இரண்டு இட்லிகளை அணைக்கட்டும். சென்னைக்கு வந்த புதிதில் உணவகத்தில் பரிமாறும் நபர் ஓடி ஒளிந்து கொள்வார். சாம்பார், சட்னி வாளி புது மனைவி போல  அவரின் கைப்பற்றியே இருக்கும். சரி அது கெடக்கட்டும். 


' பன்புரோட்டோ' உடன்' குடல் குழம்பு'

கோனார் கடை' கறிதோசை' .

பிறகு...

'குளுகுளு ஜிலு ஜிலு ஜிகர் தண்டா' . இன்னும் ஒரு கிளாஸ் கொண்டா. 'டி. ஆர்.' போல வசனம் பறக்கும். 

மதுரை கடந்து எவ்வளவு தொலைவு சென்றாலும் மதுரை உணவின் சுவை நாவின் மொட்டுக்களில் மலர்ந்தபடியே இருக்கும்.


அப்ப… 

மதுரைனா' சாப்பாடா? '


திறந்த வாசல் 4


'நேத்துப் பாத்த மனுசனா இவரு? பக்திப் பழமா பழுத்து நிற்கிறாரே! 

கையில்பூக்கூடை, பூசைத் தட்டு, நெய்யிட்ட விளக்கு, ஊதுவர்த்தி, தேங்காய் உடன்  வீட்டம்மாள் நிற்க பக்திப் பழம் அருகில் நிற்பார். 


"ஜன்ம சாபல்யம் நீக்கிவிடு இறைவா" பக்திப் பழங்கள் கனிந்து சாறாகி கோயில் நடை கடந்து ஓடும். மதுரை கோயில்களுக்குள் நுழைந்தால் போதும். பக்திப் பழமாக உருமாறி மனம் மெருகேறும். 

பக்தி மணம் கமழும் திருக்கோயில்கள் மதுரை எங்கும் சூழ்ந்திருக்கும்.   


குறிப்பாக

'மீனாட்சியம்மன்' திருக்கோயில்

'மூக்குத்தி பூஜை'-யில் 'மல்லிகை' முக்கியஸ்தராகும்.


அப்ப மதுரை 'கோயில்' மாநகரமா? 


கேள்விகள் 'கூட்சு' வண்டியாக மனமதைக் கடக்கும். 

'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்பது போல ஒன்றின் நினைவுகள் மற்றொன்றையும் உடன் அழைத்தே வரும். இது இயல்பு. ஆனால் மதுரையின் ஞாபகங்கள் ஒரு கூடைப் பூக்களாக மனசுக்குள் வாசம் பண்ணும். 


இதோ திறந்த வாசல்களின் வழிப் பயணித்து மதுரை எங்கும் வீசும் ஒரு பூவின் வாசத்திற்கு வந்துவிட்டேன். என்னோடு நீங்களும் வந்திருப்பீர்கள். 


மதுரைனா…?. 

பட்டி தொட்டியெங்கும் பதில் வரும். 


மதுரைனா…?.....


நெறைய இருந்தாலும் எப்பவும் 

மல்லிகை தாங்க…

மதுரையோட வாசம். 



பூக்களின் பாடசாலையில்… 



மதுரை மல்லியின் 

உதிரிப் பூக்கள்


மல்லிகை பற்றி இரு பதிவுகள் முடிந்து இது மூன்றாவது பதிவு. இப்பதிவுடன் மல்லிகை நடை முடிவு பெறும். 



மல்லிகைப் பூக்கள் மனதின் மனநிலையைப் பிரதிபலிக்கும். எல்லாச் சூழல்களிலும்  மல்லிகை உடன் வரும். முறுக்கேறிய வயதில் மல்லிகை மயக்கம் தரும். 

தோல் சுருக்கங்கள் விரிய விரிய மல்லிகையின் மனம் மனசுக்குள் பக்திச் சாமரம் வீசும். இருவேறு அனுபவங்களை மல்லிகை மனசுக்குள் கடத்தும். 


மல்லிகையின் முதல் பதிவில் ஒரு 'மன்மதன்' பூக்கடையில் அறிமுகமானாரே.



ஞாபகம் இருக்கலாம்.

அதே 'மன்மதன்' கொஞ்சம் வயது கூடி மீண்டும் வருகிறார். 


பணி முடிந்து வீடு திரும்பும் நேரம்...
 

'என்னங்க. வர்ற வழியில பூக்கடையில ஒரு  முழம் மல்லிகைப் பூ வாங்கிட்டு வந்துருங்க'. 


'ஒரு முழம் போதுமா?' 

வயது கூடிய 'மன்மதன்' கேட்பார் 


'சாமிக்குத் தான. போதும். மொட்டு மல்லியா வாங்கியாங்க.' 

'உனக்கு?'.

மீண்டும் கேட்பார் வயதான மன்மதன். 


'எனக்கென்னத்துக்கு.

சாமிக்குப் போட்டா போதும்'.


கலர் நூல் கட்டிய மல்லிகைப் பூ இலைக்கட்டு கழண்டு கொள்ளும். 


வயது கூடக் கூட மல்லிகையின் வாசம் நினைவுகளாக புத்தகத் தாளுக்கு இடையில் வைத்த மயிலிறகாகி ஒளிந்து கொள்ளும். 

மல்லிகையின் நினைவுகள் அலாதியானவை. 





மலர்ந்த மல்லி ஒர் அனுபவம். குண்டு மல்லி ஒர் அனுபவம். மலராத வாசமுள்ள மொட்டு மல்லி ஒர் அனுபவம். 


மல்லிகையின் நினைவுகளில் உதிரி மல்லியின் ஞாபகங்கள் அற்புதமானவை. 


அன்று… 



மதுரை வீதிகளில் மாலை நேரத்தில் சைக்கிளின் பின்புறம் உள்ள 'கேரியரில்' அமர்ந்தபடி அகன்ற நார்க் கூடையில் உதிரி உதிரியாக ஈரத் தலை துவட்டாது வாசம் சுமந்து வரும் 'உதிரி மல்லிப் பூக்களின்' அழகு மனசுக்குள் உறவின் பிணைப்பை சரம் சரமாகக் கோர்க்கிறது. 

மலராத மல்லிகை மொட்டுக்களுக்கு மவுசு அதிகம்.


மல்லிகைப் பூக்காரர் சைக்கிள் நிறுத்தி இறங்கி சேவலாட்டம் ஒரு கூவு கூவுவார். 



'உதிரி மல்லியப் பூ…' 

சைக்கிளைச் சுற்றி மங்கையர் கூடுவர். சிலரது கைகளில்' சில்வர் டவரா' இருக்கும். சிலரது கைகளில் எதுவும் இருக்காது. தனது முந்திச் சேலை விரித்து பூக்களை வாங்கிக் கொள்வார்கள்.

பின்னர் நிகழும் காட்சிகள் அழகானவை. 


உதிரி மல்லிப் பூக்கள் ஒரு

' நாற்சொளகிற்கு 'மாறும். பூ வாங்கியவரோடு வாங்காதவரும் சேர்ந்து கொள்வார்கள். சிலர் நாரில் உதிரி மல்லியைக் கட்டுவார்கள். விரல்கள் உதிரிப் பூ ஏந்தி பரதநாட்டியம் ஆடும். முடிவில் உதிரிப் பூக்கள் நெருக்கமாக ஒன்றொடொன்று கைகோர்த்துக் கொள்ளும். 

சிலர் ஊசி கொண்டு வெள்ளை நூலில் உதிரிப் பூக்களைச் சரம் சரமாகக் கோர்ப்பார்கள். ஊசிமுனை மறையும் வரை பூக்களைக் கோர்த்துப் பதவிசாக பூக்களின் காம்புகள் அறுந்துவிடாதபடி நூலின் முடியிட்ட பகுதியில் பூக்களை கரை சேர்ப்பார்கள். 


அன்று...


நான் நூலில் உதிரிப் பூக்களைக் கோர்த்திருக்கிறேன்.

அண்ணன் கோர்த்தது,

தம்பி கோர்த்தது, நான் கோர்த்தது என மூன்று தனித் தனி நூல்களில்  வெவ்வேறு அழகில் உதிரிப் பூக்கள் ஒன்று சேரும். சனிக்கிழமைகளில் இக்காட்சிகள் அரங்கேறும். 



ஒரு 'காம்பவுண்டுக்குள்'  உள்ள வீடுகளில் ஏதேனும் ஒரு வீட்டு வாசற் படிகளில் ஒரு கூட்டம் கூடும். உடன் வீட்டுச் சிறுமியரும் சேர்ந்து கொள்வார்கள். 

பொதுவில் 'உதிரி மல்லி' கொட்டிக் கிடக்கும். ஒவ்வொரு கைகளும் பூக்களை எடுக்கும். சில கோர்க்கப்படும்.சில கட்டப்படும். எவ்வகையாயினும் உதிரிப் பூக்கள் ஒன்றுசேரும் தருணங்களில் வெவ்வேறு மனங்கள் இணையும். ஒவ்வொரு கோர்ப்பிலும், ஒவ்வொரு கட்டலிலும் ஒரு கதை கோர்க்கப்படும். கட்டப்படும். பின்னணி இசையாக சிரிப்பொலிகள் சேர்ந்து கொள்ளும். 


வேகமான பூக் கட்டிலில் விரல்களின் வேகத்துக்குத் தக்க  கை வளைகள் ஒன்றோடொன்று உரசி இடித்து ஒலி எழுப்பும். 

எல்லாம் முடிகையில் 'உதிரி

மல்லிப்பூக்கள்' கூட்டுக் குடும்பமாகிக் குதூகலிக்கும். 


மணக்கும், மயக்கும், பக்திச் சரம் பிடிக்கும், மனங்களை இணைக்கும் மதுரை மல்லிகைப் பூக்களைச் சுமந்தபடி வாசமுள்ள இரும்புப் பறவையாக  இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அன்று மதுரையில் இருந்து மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களுக்குப் பறந்திருக்கிறது. இந்த இரும்புப் பறவைக்கு மல்லிகைப் பூக்கார இரும்புப் பறவை என்ற பெயரும் இருந்திருக்கிறது. 


மனப்பறவை மனம்கொத்தும்! 

பறக்கும்… 



இருதய். ஆ




 

4 comments:

Thomas said...

சாருக்கு ஒரு போண்டா டீ + மல்லி

Irudhy.a said...

தாமஸ் அண்ணனுக்கு இஞ்சி டீ ஒரு சொம்புல குடுங்க முந்தா நாள் தந்தி பேப்பர்ல தூசி பார்த்து நாலு உளுந்தவடை, நாலு ஆம வடை கட்டுங்க. கெட்டிச் சட்னிய சட்டப் பையில போட்டு வுட்ருங்க. கணக்குல எழுதியாச்சு தாமஸண்ணே.

JOHN A said...

மாட்டுத்தாவணி பஸ்டாண்டிற்கே சென்று வந்த உணர்வு... அருமை...

Irudhy.a said...

சார்... ஆட்டோ வேணுமா?
வாசித்தமைக்கு நன்றி சேட்டா...

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...