கடக்கும் நொடிகளில், கடக்கும் நிமிடங்களில்,
கழியும் பொழுதுகளில் நமது ஒவ்வொரு நகர்வும் நாளைக்கான தொடக்கமாகவோ, நல்ல நினைவுகளாகவோ ஏன் மறக்க நினைக்கும் சில சூழல்களையோ விதைக்கும்.
"காலம்" வெவ்வேறு நிறங்களில் நம் கண் முன் சில பல வரைவுகளை இட்டு முடிக்கும்.
கடந்தவைகள் எல்லாம் நினைவுகளாக சிறகசைக்கும். பழம் நினைவுகள் உண்ணும். மீண்டும் மனம் பறக்கும்.
மே-1
https://www.facebook.com/reel/682535933073419?fs=e&s=cl
உழைப்பின் நினைவுகளில் சிறகசைக்கும் மனம்.
உழைப்பின் நிறம்
சிவப்போ? கறுப்போ?
உழைப்பின் சுவை
கரிப்போ?
உழைப்பின் நெடி எதுவோ?
பதில்கள் எதுவாயினும்
"நகர்வே"
உழைப்பின் மையம்.
உழைப்பின் வேர்களுக்கு
வியர்வை தான் நீர் ஆதாரம்!
வியர்க்காத உடலில் அழையா விருந்தாளியாக உப்பு வந்து தங்கும்.
உழைப்பு, வியர்வை, உப்பு
மூன்றும்
உடற் கூறின்
"ஆய்த எழுத்துக்கள்" .
உழைப்பின் நிறம் உணரும்
"மே" தின
நல் வாழ்த்துக்கள்…
நகர்தலின் குறியீடு 'நதி'
நதி நிற்காது ஓடிக்கொண்டே இருக்கும். கரையோர வேர்களின் தாகம் தீர்க்கும்.
"உழைப்பு" வாழ்வின் தாகம் தீர்க்கிறதா?
நிகழும் காலத்தில் இதற்கான விடை தேடினால் முடிவற்ற பாதையாக பயணம் நீளும்.
உழைக்கும் வர்க்கத்தில் நிறைய வண்ணங்கள் உண்டு.
எண்ணுபவர்கள் 'முதலாளிகள்'.
எண்ணங்களை
ஈடேற்றம் செய்பவர்கள் 'தொழிலாளிகள்'. -
இரண்டு நிறங்கள் தான். உழைப்பின் நிறங்களோ?
அன்று…
பணியிடங்களில்
ஒரு நாளின்
பெரும்பான்மையான கணங்களை பணியிலேயே கனத்த மனச்சுமையுடன் கடந்திருக்கிறார்கள்.
உழைப்பின் வாசம் சுகந்தமாக இல்லாமல் நாசி மறுக்கும் நெடியாகப் பொழுதுகள் கரைந்திருக்கிறது.
உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தினரின் கைகள் உயர்ந்தது. உயர்ந்த கைகள் அனைத்தும் உழைப்பிற்கு எதிரானவைகள் அல்ல.
இலாப நோக்க எண்ணங்களால் அழுத்தும் முதலாளித்துவத்திற்கு எதிரானவைகள். வரலாற்றில் அறியலாம்.
வரலாற்றின் பக்கங்கள் மயிலிறகால் எழுதப்பட்டவைகள் அல்ல. அறிவோம்.
பணியைச் சுமையாக்கிய கணங்களை வென்ற நாளின் அடையாளமாக 'மே தினம்' கொண்டாடப்படுகிறது.
ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தை "மூன்று எட்டுக்களாக" பிரித்தார்கள்.
"முதல் எட்டு"
பணிப் பொழுது.
"இரண்டாம் எட்டு"
பொழுதை இனிமையாக்கும் பொழுது.
"மூன்றாம் எட்டு"
ஒய்ந்திருக்கும் பொழுது.
"எட்டுக்கள்" நம்மை விடுவதாக இல்லை.
இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற பிசிறின்றி கால் ஊன்றாது, தடங்கல் இல்லாது
இரு சக்கர வாகனத்தில் முன் விரிந்த எட்டைக் கடந்தது அன்று ஆகப் பெரிய சாதனையாகத் தெரிந்தது.
மே-1 மறக்க முடியாத நாள்.
உழைக்கும் வர்க்கத்தினர் எட்டு மணி நேர பணிப் பொழுதை மீட்டு வென்று வென்ற எட்டுக்குள் நுழைந்த கணங்கள் உண்மையில் மனித வாழ்வின் உன்னதங்கள்.
அன்று, உழைப்பின் வாசனையை நுகரவிடாது பணியின் காலச் சுமை அழுத்தியது.
இன்று
பணியிடங்களில் வேறுவிதமாக சுமைகள் மனதை அழுத்துகின்றன.
"எதையும் பேசாதே" .
"எதையும் எதிர்க்கேள்வி கேளாதே"
"நடக்கும் உள் அரசியல் எதையும் பாராதே"
என புதியதொரு 'வரையறுக்கப்படாத கோட்பாடுகள்' பெரும்பான்மையான பணியிடங்களில் வரைபடமாகி விரிகின்றன.
காலந்தோறும் கண் இமைகளாகும் சுமைகள். மூடித் திறந்துதான் ஆக வேண்டும்.
நிகழ் களத்தில்…
நாள்தோறும் அடிப்படைப் பயன்பாடு முதல் ஆடம்பரம் வரை அத்தனையிலும் ஏறும் விலைவாசி ஏற்றங்கள் உழைப்பின் மூலம் ஈட்டுதலை புற்றுக் கரையான்களாக அரித்துக் கொள்கின்றன.
நேர்மையாகவே உழைத்து எவ்வளவு ஈட்டினாலும் காதற்ற
ஊசியாகிறது வாழ்வு.
"எட்டு எட்டா
மனுச வாழ்வ பிரிச்சுக்கோ…
எந்த எட்டில் இப்ப இருக்க
நெனச்சுக்கோ…
நெனப்பு எதுவாயினும்
கனவுகளைக் கைப்பிடிக்க
எட்டும் உயரத்தையேனும்
எட்டிப் பிடிக்க…
எட்டு மேல எட்டு வச்சு
முன் நகர்தலே…
வாழ்வின் அழகு!"
உழைப்பின் நிறம் எதுவாயினும் மனதின் நிறம்
'வெண்மை' தானே.
வெண்மை அனைத்து வண்ணங்களையும் இரு கை விரித்து ஏற்கும். இறுக்கி அணைத்து ஒர் 'உம்மா' கொடுக்கும்.
உண்மை தானே…
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்…
4 comments:
மே தின வாழ்த்துகள்...அருமை..
வாசித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள். தொடர்ந்திடுங்கள்.
மே தின வாழ்த்துக்கள்.....அருமை.
உழைப்பின் வேர்களுக்கு வியர்வை தான் நீர் ஆதாரம
வியர்க்காத உடலுக்குள் உப்பு வந்து சேரும்.
உங்களின் சிந்தனை துளிகள் ,சிந்திக்கவும் தூண்டியது. அருமை....
மிக்க நன்றி...
Post a Comment