பொத்தி வைத்த
மயிலிறகாக ...
தந்தையின் நினைவுகளை
மனப் புத்தகத்தில்
பொத்தி வைக்கிறேன்"...
எனது தந்தை எனக்குத் தோழனாகத் தான் இருந்தார். அவரை நான் கிண்டலும் கேலியுமாகவே கடப்பேன்.
"போடா.. டேய்… போடா… போடா…"
என 'எசப்பாட்டு' பாடுவார்.
"தாடிய எடுடா. மொகந் தெரியற மாதிரி இருடா. லேசான சட்டையப் போடுறா.போர்வைய போர்த்துன மாதிரி இருக்கு.
ஜீன்ஸ மடிச்சுவிடு. தரையக் கூட்டுது.
இழுத்துகிட்டே திரியற."
என்று அப்பா என்னைக் கலாய்ப்பார்.
எட்டித் தள்ளி நின்று தன் அப்பாவிடம் பேசுகிற நண்பர்களை அறிவேன். அவ்வகை நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வருகையில் நானும் அப்பாவும் பேசுகிற விதம் பார்த்து
" என்ன பங்காளி. அப்பாவ இப்புடி கிண்டலடிக்கிற. அவர் மேல பயம்லாம் இல்லயா!?" என ஆச்சரியம் கூட்டிக் கேட்பார்கள்.
"அப்பா" என்ற உறவு திரிக்கப்பட்ட கயிறு. முறுக்கேறிய கயிறு அல்ல. அதிகம் முறுக்கேறிய கயிறு அறுந்து போகும். "அப்பா" அறுபடாத பாசக் கயிறு. பிடித்துப் பிடித்து முன்னேறினால் அப்பாவின் அருகாமையை அனுபவிக்கலாம்.
கல்லுக்குள் ஈரமாக அன்பை மறைக்கும் அப்பாக்கள் அநேகம். சிநேகமாய் நெருங்கினால்
"அப்பா" கல்லையே "அன்பால்" கரைப்பவர் என அறியலாம்.
நான் அறிந்த எங்களுக்குக் கிடைத்த அப்பா இவ்விதமே. தெய்வத்திற்கு நன்றி.
காலஞ்சென்ற நடிகர்கள் திரு. வி. கே. ராமசாமி, திரு. பாலையா, திரு. தங்கவேலு என்ற மூவரின் கலவையாகத் தான் அப்பா தெரிவார். மிக நெருக்கமானவர்கள் மட்டுமே அப்பாவின் நகைச்சுவையான சாயலைக் காணமுடியும். உணரமுடியும். மற்றபடி 'அப்பா' தனிமை விரும்பி. நான் வேண்டுமென்றே அவரின் தனிமையைக் கலைப்பேன்.
எங்களின் வீட்டுப் படிக்கட்டுகள் தான் அப்பாவின் ஆஸ்தான இருக்கைகள்.
படிகள் அப்பாவின் முதுகில் முட்டுக்கொடுக்க, சாய்ந்து சற்றே கால்கள் சரித்து எதிர் நுழைவாயிலில் தோரணம் கட்டி நிற்கும் காகிதப் பூக்களைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பார் அன்புடை அப்பா…
தோளில் கத்தரித்த வெள்ளை பனியன் துணி அமர்ந்திருக்கும். சில நிமிட இடைவெளியில் பனியன் துணி எடுத்து தன் மேல் தட்டிவிடுவார். ஒரு சுழற்று சுழற்றுவார். "கொல கொலயா மந்தரிக்கா" விளையாட்டு விளையாடுவது போலத் தெரியும். பனியன் துணி மீண்டும் தோளில் சாய்ந்து அமரும்.
பிறகு, இடம் வலம் நோக்குவார். அன்னார்ந்து மேல் நோக்குவார். எங்கள் வீட்டெதிரில் பாலத்தின் மீது நடந்து செல்பவர்களைக் கவனிப்பார். மீண்டும் காகிதப் பூக்களுக்கு பார்வை திரும்பும்.
இவை அத்தனையையும் அவர் அறியாத படி வாசற் கதவின் பின் இருந்து கண்டிருக்கிறேன்.
சட்டென அவரின் மெளனம் கலைத்து அருகே அமர்வேன். அப்புறம் அவர் தலையில் தாளமிடல், கைகளில் எறும்புக் கடியாகக் கிள்ளுதல், காதுகளை விரல்களால் தட்டல்,
அப்புறமாக…
"இருக்கு. ஆனா… இல்ல" என்றவகையில் அவர் மூக்கின் கீழ் முறை செய்யும் மீசையைக் கிண்டல் செய்து அப்போதைய முறைவாசல் முடித்து
மதியச் சாப்பாட்டிற்குள் அப்பாவோடு நுழைவேன்.
அம்மா அடுக்களையில் சமையல் அலப்பறைகள் முடித்து
"நீங்க. சாப்பிடுங்க. என்னால இப்ப முடியாது" என்ற தினப்படி வசனங்கள் முடிக்க
அப்பா எந்தச் சலனமும் இல்லாமல் "உப்பு, புளி, காரம்" எது குறித்த விமர்சனமும் இல்லாமல் மதிய உணவு முடிப்பார்.
முன் வாசல் வந்து
"மறுபடியும் மொதல்ல இருந்தா! " என எண்ணும்படியாக ஒரு நோட்டமிட அம்மா ஏறெடுத்து வசப்பாட்டு பாட
பிறகென்ன.. மதியத் தூக்கம் ஆரம்பமாகும்.
மாலை ஆறு மணி' சன் செய்திகள்' முடிய அப்படி இப்படி கடந்து கடிகார முட்களை நகர்த்துவார்.
கடிகார முட்கள் துரத்த ஓடிய காலங்களை விட கடிகார முட்கள் நகராதா? என முட்களைத் தள்ளுகிற காலம் வலி மிக்கது. வலிக்காமல் கடக்க வயதான காலத்தை ரசனை மிக்கதாக மாற்றிக் கொள்பவர்களுக்கு வயோதிகம் யோகமாகவே இருக்கும்.
"அப்பா" நான் அறிந்த வரை சமீப காலங்களாக கடிகார முட்களைக் கடக்க சிரமப்பட்டார். வீடு செல்லும் போது காண்கையில் மனம் சலனப்படும். மாலை முடிந்து இரவு தொடங்கும். சிறிய கிண்ணத்தில் 'மிக்சர்' வந்து அப்பாவின் கை சேரும். 'மிக்சரை' தனித் தனி தீவுகளாக்குவார்.
ஒமப் பொடி, காரா பூந்தி, கடலை, பொட்டுக் கடலை எல்லாம் கூட்டணி பிரிந்து தனி ஆவர்த்தனமெடுத்து அப்பாவின் வயிற்றுக்குள் இடம் பிடிக்கும்.
"ஏம்பா இப்படி மிக்சர பிரிச்சு லைன்ல நிப்பாட்டுறீங்க?" எனக் கேட்டால் சிரித்தபடியே
"பொழுது போகணும்ல" என்பார் அன்புடை அப்பா.
இரவு உணவு…
மேம்போக்காக உப்புக்குச் சப்பாணி விளையாட்டாக "அப்பா, அம்மாவின்" இரவு உணவு நடந்து முடியும். பின் இரவுத் தூக்கம் ஆரம்பமாகிவிடும். இவைகள் தான் எங்கள் அன்புடை அப்பாவின் ஓய்வுக்கால தினப் படிகள்.
சென்னையிலிருந்து வீடு செல்லும் போதெல்லாம் இக்காட்சிகள் பிழையின்றி பொய்க்காத மழையாக மனம் நனைக்கும். நனைந்து, நினைந்தபடியே மீண்டும் சென்னை திரும்புவேன்.
நான் இருக்கும் மனநிலையில் எழுதிக் கொண்டே போவேன் என நினைக்கிறேன். இம்முறை கூடுதலாகவே உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்வேன் என நினைக்கிறேன். மன்னிக்கவும்.
நினைத்துச் சிலாகிக்க அப்பாவுடனான நினைவுகள் நிறைய உண்டு. தேநீர் கடையில் அப்பாவோடு தேநீர் அருந்துவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
கால்களை முன் பின் நகர்த்தி முதுகு குனிந்து முகம் தாழ தேநீருடன் சரணாகதி ஆகிவிடுவார். தேநீர் விரும்பும் தேனீ அவர். அடியேனும் அப்பாவின் வழியே.
சமீப காலமாக என் தம்பி மதுரை வரும்போதெல்லாம் அப்பாவின் தலைமுடி சிகையலங்கார நிபுணனாக செயல்பட்டிருக்கிறான். ஏகபோகமாம கத்தரிபோட்டபின்பும்
பத்தும் பத்தாதிற்கு
"சுகுமாரு கையில முடி பிடிபடாத மாதிரி இன்னும் கட் பண்றா" என்பாராம் அப்பா. உண்மையில் இவ்விதம் எல்லோரும் முடி திருத்தினால் ஊரில் முடிதிருத்துவோர் தங்கள் தொழில் மாற்றிவிடுவதே அவர்களது வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக இருக்கும்.
அண்ணன் மதுரையிலேயே இருப்பதால் நேரம் அமையும் போது இல்லம் சென்று அப்பா அம்மாவைச் சந்தித்து வருவார். பெற்றோரின் தேவைகளைக் கேட்டறிவார். அப்பாவும், அம்மாவும் எந்த வகையிலும் தங்களின் தேவைகளை எங்களிடத்தில் சொல்லுவதே இல்லை. குறிப்பாக அப்பா எதிர்பார்ப்புகளற்ற வெளியில் தான் உறைந்திருப்பார்.
எத்தனையோ முறை இடம் மாற்றி எங்களில் யாரேனும் ஒருவரோடு தங்கி விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனக் கேட்டும் தோற்றுத் தான் ஊர் திரும்புவேன். தங்கள் காலம் மதுரையிலேயே கழியட்டும். உங்களுக்குச் சிரமம் வேண்டாம் என அப்பாவும், அம்மாவும் மறுத்து விடுவார்கள்.
தனக்கென எதையும் வாங்கிக் கொள்ளாத மனிதனாகவே வாழ்ந்தார் அன்புடை அப்பா. அசையும் சொத்தாக இருந்த தந்தை அசையாச் சொத்துக்களைத் தேடிச் சேர்ப்பதில் ஆர்வமில்லாதவராகவே இருந்தார். தேடாமலே கிடைத்த குறையாத சொத்தாக சிநேகமுள்ள அப்பா இருந்தார். தெய்வத்திற்கு நன்றி.
நான் அறிந்த அழகியல் எங்கள் "அப்பா"...
அப்பா இறந்த பின்னர் அவர் விட்டுச் சென்ற ஒவ்வொன்றிலும் ஒரு கதை உண்டு. எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி உண்டு.
இது கதையல்ல நிசம்
அப்பா இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு...
துவைத்த துணிகளை உலர்த்த வீட்டு மாடியில் கொடிக் கயிறு கட்ட என் மனைவி கேட்டுக் கொண்டார். நானும் கொடிக் கயிறுகளைத் தேடினேன்.
பொதுவாக நான் ஏதேனும் பொருள்களைத் தவறவிட்டுத் தேடுகிறபோது
"புனித அந்தோணியாரை" வேண்டிக்கொள்வேன். ஆச்சரியமான உண்மை. வேண்டிய சில மணி நேரங்களில் அல்லது ஒரிரு நாட்களில் தவறிய பொருளைக் கண்டடைவேன். அவையெல்லாம் அற்புதமான தருணங்கள். அப்படியொரு அற்புதம் எனது தந்தையிடம் வேண்டிய போது உடன் நிகழ்ந்தது.
கொடிக் கயிறுகளின் தேடல் தொடர்ந்த போது மனசுக்குக்குள் நினைத்தேன்.
"அப்பா கொடிக் கயிறை எங்கே வைத்திருக்கிறீர்கள். தெரியவில்லை. ஆனால் அதை அதற்கென ஓரிடம் ஏற்படுத்தி வைத்திருப்பீர்கள். எனக்குத் தெரியும். நீங்கள் இருந்திருந்தால் இந்நேரம் கொடிக்கயிறுகளை எடுத்துக் கொடுத்திருப்பீர்கள்" .
என நான் எண்ணிய வேளையில் எனது தம்பியின் குரல் கேட்டது.
" பிரகாஷ். கொடிக்கயிறு கிடைச்சிருச்சு. மீட்டர் பெட்டிகிட்ட வச்சிருக்காருடா"
எனச் சொன்னவுடன்
கொடிக்கயிற்றில் எனது மனம் ஊஞ்சலாடியது.
" அப்பா" உங்கள் உடனிருப்பு உண்மை என நம்புகிறேன். நன்றி அப்பா.
வீட்டில் எல்லோரிடமும் தெரியப்படுத்தினேன். அனைவருக்கும் மகிழ்ச்சியே.
அப்பாவின் கதைகளில் என் நிமிடங்களைக் கரைக்கிறேன். மீண்டும் கரை ஏறுகிறேன்.
எனது திருமண வாழ்வைச் சென்னையில் தொடங்கும் முன் நான் தங்கியிருந்த அறையிலேயே என்னுடன் தங்கி "ஆதி முதல் அந்தம்" வரை ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்த தந்தைக்கு நான் எதுவும் செய்ததில்லை. என்னால் செய்யமுடிந்தது ஒன்றே ஒன்று தான். அது அப்பாவுடனான எனது இருப்பு. அப்பாவும் உடனிருப்பைத் தான் விரும்பினார். நானும் விரும்புகிறேன்.
"அப்பா" உங்கள் ஆத்துமத்தால் எப்பொழுதும் உடனிருந்து எங்களை வழி நடத்துவீர்கள் என நம்புகிறேன்.
நீந்திக் கடக்க முடியா அன்பின் கடல் "அப்பா". பெரும்பான்மையான தகப்பன்களுக்கு இவ் வரிகள் பொருந்தும்.
எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி உபத்திரவங்களுமின்றி எவரையும் வருத்தாமல் தன்னிறைவாக தரணிகடந்த அப்பாவின் இறுதிச் சடங்குகள் அத்தனையிலும் எங்கள் நண்பர்கள் தோள் கொடுத்தார்கள். ஆறுதல் அளித்துத் தேற்றிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி.
எங்கள் அன்புடை அப்பாவிற்கு அன்பில் விடை தந்து சென்னை திரும்பிவிட்டேன்.
மனம் மட்டும் அப்பாவின் நினைவுகளுக்குத் திரும்பிக் கொண்டே இருக்கிறது. தந்தையின் நினைவுகளைச் சிறகுகளாக்கி பயணிப்பேன்.
தாய், தந்தை உயிரோடு இருக்கும் போதே அவர்களின் இருப்பைத் தவறவிடாமல் தொலைவில் இருந்தாலும் எண்ணியமாத்திரம் பேசிவிடுங்கள். வாய்ப்பு அமையும் போதெல்லாம் நேரில் சென்று சந்தித்து அன்பின் கூட்டிற்குள் மனச்சிறகை உலர்த்திக் கொள்ளுங்கள். ஆசை தீரும் மட்டும் அள்ளிப் பருகிவிட வேண்டிய அன்புச் சுனை நீரை பெற்றோரிடமிருந்தே அள்ள முடியும்.
பதிவை முடிக்கப் போகிறேன். "அப்பா" உங்கள் நினைவுகளை அவிழ்க்க முடியா முடியிட்டு மனசுக்குள் முடிந்து கொள்கிறேன்.
தேவனின் குடியிருப்பில் நித்தியமாகச் சுவாசம் செய்வீர்கள் என நம்புகிறோம். பிரார்த்தனை செய்கிறோம்.
https://www.facebook.com/reel/266864575616792?fs=e&s=cl
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்…
இருதய். ஆ
4 comments:
தாயுமான தந்தை... அன்பு அப்பா..அமைதியில் இளைப்பாற வேண்டுகிறேன்...
ஆமென்.
Rest In Peace
Amen
Post a Comment