About Me

Sunday, June 19, 2022

சொல்லித் தரும் வானம்...

Fly...


      மனம் கொத்தும் பறவை 


"வானம் எனக்கொரு போதிமரம்... 
நாளும் எனக்கது சேதி தரும்"        


           மதிப்பிற்குரிய 'கவிப் பேரரசு வைரமுத்து' அவர்களின் வரிகள் மனசுக்கு எப்பொழுதும் நெருக்கமாக இருக்கும். 

 வீட்டுக்குள் முளைத்த போதிமரமாக!... 
சொல்லித் தரும் வானமாக நீளும் உறவைக் கொண்டாட ஒரு தினம்!

" ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா? "
பாடத் தோன்றுகிறது. 

அன்னையின் வழியில் அன்னை மொழியில் 

நாம் அறிகிற

 உன்னதமான உறவு 'தந்தை'


அப்பான்னே சொல்றேன்.  அப்பான்னு சொல்றது தான் மனசுக்கு மிக நெருக்கமா இருக்கு.



அன்புடை 'அப்பாக்களுக்கு' … 


மரியாதை நிமித்தமாக…


'தந்தையர்' 

தின 

     நல்வாழ்த்துக்கள்…. 



 தன் பிள்ளைகளின் உயரத்தையே 

தன் உயரமாகவும் 

தன் உயர்வாகவும் எண்ணுகிறவர் 'தந்தை'


அன்பின் மொழி உணர்ந்தும்

அறிந்தும், அறியாமலும்

அகிலம் கடக்கும் 

உன்னத உறவு "அப்பா"... 

உறவுகளில் ஓர் அதிசயம்! 


அறிதலில் "அப்பா" 


' தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை'

உண்மை தான். 

என்னைப் பொறுத்தவரை

"தந்தை"

என்ற சொல்லே மந்திரம் தான். ஒப்புக்கொள்வீர்கள். 


குழந்தை தரை தவழுகையில் தன் உயரம் குறைப்பார். 

 குழந்தையோடு குழந்தையாகி 

தரை தவழ்வார்! 

             

இரு கைகளும் கால்களாகும். 

கைகளும் சேர்த்து

கால்களின் கணக்கு நான்காகும். 

முதுகில் அம்பாரி முளைக்கும்.

        தந்தை தன் குழந்தைக்காக

யானையாக உருமாறுவார்.



"யானை" எப்பொழுதுமே பிரமிப்பின் உச்சம். 

"அப்பா" உறவுகளில் உச்சம். 


ஒரு குழந்தை அறிகிற முதல் யானை தகப்பனோ! 

தந்தையின் முதுகில்

 யானை சவாரி போகாத குழந்தைகள் உண்டோ? 


 யானையாக… 

சமயத்தில் குதிரையாக மாறி

குழந்தையோடு தன் உலகத்தில் சுற்றி வருபவர் "அப்பா".



அப்பாவின்  விரல் பிடித்தோ, தோள்களில் அமர்ந்தோ குழந்தை செல்லும்

 'உலா'... 

வாழ்வில் என்றும் மறக்க இயலா

 இன்பச் சுற்றுலா… 


தன் பிள்ளைகளின் உயரத்தை தன் உயரமாகக் கொண்ட தந்தையின் கண் எதிரே பிள்ளைகள் உயர உயர "அப்பாக்கள்" ஏனோ தூரம் போய் விடுகிறார்கள். 


அப்பாக்களின் அகராதியில் 'அன்பு இலை மறை காயாக' ஒளிந்து கொள்கிறது. 


ஆரம்பத்துல நெருக்கமா இருக்க இருந்த  "அப்பா" என்கிற உறவ பின்னாளில் ஏனோ 'கொரோனா' காலத்து சமூக இடைவெளி மாதிரி கொஞ்சம் தள்ளிப் பார்த்து மனசுக்கு அருகாமை இல்லாம கடந்து போயிடுறோமோ? 


 மரியாதை காரணமா இருக்கலாம். இல்லைனா பய உணர்வு காரணமாக இருக்கலாம். 


எனக்கு என் அப்பா மேல பயம் இருந்ததே இல்ல. சின்ன வயசுல கொஞ்சம் இருந்துச்சு. அதுவும் மதிப்பெண்களின் அட்டையில் கையொப்பம் வாங்கும் பொழுது மட்டுமே பயம் இருந்தது. காரணம் லட்சணமாக மதிப்பெண்கள் பல் இளிக்கும். சிவப்புக் கம்பள விரிப்பில் தான் எனது மதிப்பெண்கள் அந்நாட்களில் அமர்ந்திருக்கும். அப்படி இருந்தும் கொஞ்சம் சடுகுடு ஆடி கையொப்பம் இட்டு 'என்னடா நீ?' என வருத்தப்படுவார் 'அப்பா' .


அப்புறம் நான் வளர வளர அப்பாவின் அருகாமையும் அன்பும் மனசுக்குள் இட்ட மருதாணியாக சிவந்தது. 


விரல்களோடு ஒட்டிப்பிடித்துக் கொண்ட 

மருதாணிச் சிவப்பாக

 அப்பாவின் நினைவுகள் மனசோடு ஒட்டிக்கிடக்கிறது. 

அழியாத கோலங்கள் ஒன்று இட முடியுமானால் அது நினைவுகளால் மட்டுமே இயலும். 


அப்பாவுக்கு அருகில உட்கார்ந்து நிறைய பேசியிருப்போம். 


அவரோட ஆசைகள கேட்டுருக்கமா? நான் கேட்டதே இல்ல. பெரும்பாலும் கேட்கிறதே இல்ல. 


அப்பாக்களும் தன்னோட ஆசைகள வீட்டுல இருக்கவங்ககிட்ட பெரும்பாலும் சொல்றதே இல்ல. 


பொதுவாவே ஆம்பள அழக்கூடாதுனு சொல்லுவாங்க. கேள்விப்பட்டுருப்போம். 


அப்பாக்கள் தன் சுமைகள, வலிகள வெளிய காட்டிக்க மாட்டாங்க. 


 விழிகளின் வாசல் தொடாத கண்ணீர தன் இதயத்துக்குள்ள தேக்கி வச்சுக்கிற தகப்பன்கள் தான் அதிகம். "கல்லுக்குள் ஈரம்னு" சொல்லலாம். 


ஒரு குழந்தை அறிகிற முதல் "யானை" அப்பா தான். திரும்பவும் சொல்லத் தோணுது.


 'கூறியது கூறல்' இலக்கணப்படி  குற்றமாக இருப்பினும் தலைக்கனம் இல்லா தந்தையருக்கு முன்னே இலக்கணம் எக்கணம் செல்லுபடியாகும். 


"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்!" 

உண்மை தான. 


 யானைய எப்ப பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் பிரமிப்பா இருக்கும். அதன் தோல் கடினமா இருக்கும். துதிக்கை உயர்த்தி பிளிறும் போது பயம் கலந்த ஆச்சரியம் கண்களுக்குள் நிறையும். யானை மேல அமர்ந்து ஊர்வலம் போனா உலகமே நமக்குக் கீழ சுழல்வது மாதிரி இருக்கும். 


அப்பாவின் கைகள் பிடிச்சு  நடந்தா  உலகம் நம்மோட கைகள பிடிச்சுக்கிற மாதிரி இருக்கும். அப்பாவின் கை எப்பொழுதும் நம்பிக்கை கொடுக்கும். 


"அப்பா" என்கிற பிரமிப்பான

யானைய  தனித்தனியா பிரிச்சுப் பார்க்க முடியாது. யானைய முழுமையா பார்த்தா

தான் பிரமிப்பா இருக்கும். 


அன்பின் முகமாக அப்பாவின் முன் நின்றால் அன்பின் முழுமையை அம்மாவில் மட்டுமல்ல. அப்பாவிடம் இருந்தும் கைகள் நிறைய அள்ளலாம்.


உலகில் அதிசயங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் வரலாம். 

 

உறவுகளின் உலகில் 

என்றைக்கும் மாறாத  மறுக்கமுடியாத அதிசயம், பிரமிப்பு என்றைக்கும் "அப்பாக்கள்" தான்… 


கடற்கரையில் கால் நனைக்க வரும் கடல் அலை கண்டு

மகிழ்வு,

அச்சம்,

கூச்சல்

மூன்றும் ஆய்த எழுத்துக்களாக கூடிவர… 

ஓடி கரை சேரும் சிறு குழந்தை. பார்த்திருப்போம்.


கடல் புறம் கண்ட காட்சி "அப்பா, பிள்ளை" விளையாட்டை உறவை நினைவுபடுத்தி மனதை நனைத்துத் திரும்புகிறது… 



'மனப் பறவை' 

 மனம் கொத்தும்

பறக்கும்...



இருதய். ஆ



அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...