குலம் காரணமாக உதாசீனப்படுத்தப்பட்ட சூழலில் சுழலிலிருந்து கர்ணனை மீட்க நீண்டது கெளரவர்களின் மூத்தோனாகிய துரியோதனது நட்பின் கரம்.
இன்னொரு சூழல்…
துரியோதனது அந்தப்புரம்
துரியோதனன் மனைவியுடன் கர்ணன் தாயம் விளையாடிக்கொண்டிருக்க அங்கு துரியோதனன் வருவதைக் கண்ட அவனது மனைவி எழுகிறாள். கர்ணன் துரியோதனன் வருவதை அறியாது அவளது இடையில் இருந்த முத்துக் கொடியைப் பற்றிப் பிடிக்கிறான். முத்துக்கள் அறுபட்டு சிதறி ஓடுகின்றன.
காலடிகளில் தஞ்சமடைந்த முத்துக்களை அள்ளிய கர்ணனின் நண்பன் துரியோதனன் தன்னைக் கண்டு தயக்கமுற்ற நண்பன் கர்ணனிடம் கேட்ட கேள்வி…
" எடுக்கவோ…
கோர்க்கவோ…"
நட்பின் ஆழம் பார்த்த வரிகள் இவை. மனக்கண் முன் விரிகிறது.
"கர்ணன்" திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகளில் ஆகச் சிறந்த காட்சி இனிய நட்பின் சாட்சி என்பதை அறிவோம்.
"செம்புலப் பெயல் நீர் போல…
அன்புடைய நெஞ்சம் தான்
கலந்தனவே"
-எனும் குறுந்தொகைப் பாடல் நட்பிற்கும் பொருந்தலாம்.
"உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
-வள்ளுவம் உரைக்கும் நட்பின் வெண்பா இலக்கண வரிகள் நட்பின் இலக்கணம் சொல்லுகிறது.
கண்ணன் குசேலன் மீது கொண்டிருந்த " நட்பு "தலைக்கனமற்ற எளிமையின் இலக்கணம்
அதியமான் மீது ஔவைப் பாட்டி கொண்ட "நட்பு" பேரன்பின் வரைபடம்.
வள்ளல் 'பாரி' மீது 'கபிலர்' கொண்ட நட்பு பறம்பு மலை நாட்டு செழிப்பும் வளமையையும் விட நிறைந்தது என்பதற்கு சங்கத் தமிழே சாட்சிக் கையொப்பம் இடலாம்.
மூழ்காத" ship" ஏ "Friendship"
ஆதர்ச கவிஞர் அமரத் திரு. 'வாலி' அவர்கள் எழுதிய பாடல் வரிகள்
வானவில்லாகி நட்பின் வெளியில் விரிகிறது.
வார்த்தைகளுக்குள் வளைக்க முடியாத 'நட்பு' எனும் நற் 'பூ" நிசத்தில் வாழ்வில் வில்லுறுதியாகிறது.
உறுதியில் இரு வகை உண்டு.
ஒன்று' வில்லுறுதி'.
மற்றொன்று' கல்லுறுதி'
' வில்லுறுதி' உடையும் வரை வளையும்.
' கல்லுறுதி' வளையாது உடைந்து சிதறும்.
உறுதியின் நிறம் தண்ணீரைப் போல சேருமிடத்தைப் பொறுத்தே அமைகிறது.
ஒப்பனைகளற்ற வெளியில்
பிரதிபலிக்கும் கண்ணாடியாக மனச்சுவரில் சட்டமாகிறது 'நட்பு'.
விலகினாலும் வலிக்காது
பிரியும் கண்ணாடிப் பிம்பமாகிறது 'நட்பு' .
"தேயும்…
வளரும்…
முழுமதியாக
மனவானில் உலா வரும்
இனிமை
நற்'பூ' எனும்
நட்பு!"
நட்பின் தின வாழ்த்துக்கள்…
நட்புடன்…
இருதய். ஆ
மனப் பறவை
மனம் கொத்தும்!
பறக்கும்…
4 comments:
அருமை....
Super
மிக்க நன்றி...
மிக்க நன்றி தாமஸ்...
Post a Comment