About Me

Sunday, August 21, 2022

அறி(யும்) முகம்...

Fly...



       "நீளும் வானமாக வாழ்வு… 

              மனம் பறவையாகும்…

    நினைவுகள்  சிறகு தரும்!" 


நினைவுகளின் சிறகசைப்பில்



           78 - ஆவது பதிவு. 


"அறி(யும்)முகம்"

தொடங்கும் முன்… 


'இன்னும் கொஞ்ச நேரம் எழுதுனா தான் என்ன?'

-என மனம் எண்ண கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறேன். அனுமதித்து தொடர்வீர்கள் என நம்புகிறேன். 


எழுதுகையில் தண்ணீருக்குள் இருக்கும் மீன்களின் சந்தோசத்தை உணர்கிறேன்.


தொடர்ந்து எழுதி வந்தது தினம் பூக்கும்  பூக்களைப் போல மனதின் எண்ணங்களை நல் வண்ணங்களாக்கியது.

"எழுத்து" மனசுக்குள் மத்தாப்பூ கொளுத்தியது. 


    "மனம் கொத்தும் பறவை" 

'ப்ளாக்கில்' நான் எழுதியவைகளை தொடர்ந்து வாசித்து உற்சாகம் அளித்த அனைவருக்கும் 'நன்றி' என ஒற்றை வார்த்தையில் சொல்லி முடிப்பது முடியாத கதைக்கு முற்றுப் புள்ளி வைப்பதைப் போன்றது. 


நீளும் வாழ்வில் எதிர்பாராத நிகழ்வுகள் சில வேளைகளில் நிகழ்வதுண்டு. எனது தந்தையின் மறைவுக்குப் பிறகு மனம் சமநிலைக்குத் திரும்ப நாட்கள் ஆனது. எழுத முடியவில்லை. தந்தையின் மறைவுக்குப் பிறகு ஆறு பதிவுகள் மட்டுமே பகிர முடிந்தது. 


தொடர்ந்து எழுத முயற்சித்து 

"நிலாக் காதல்" எனும்

புதிய தொடரை எழுத எண்ணினேன். எழுத முடியவில்லை. எதிர்பாராத வகையில் நெருங்கிய நட்பின் மூலமாக எனது துறை சார்ந்து நல் வாய்ப்பு வந்தது. 



"MGR & SIVAJI" விருதுகள் நிகழ்வோடு நிர்வாக இயக்குநர் "திரு. P. ஆண்டனி தாஸ்" அவர்களின்

 "சசிகலா திரைப்பட தயாரிப்பு நிறுவனம்" தொடக்க நிகழ்வுகளையும் இணைத்து 'ஆகஸ்ட்-14' அன்று 'கலைவாணர்' அரங்கில் நடத்தி முடிக்க ஏற்பாடுகள் தொடங்கின. எல்லாம் இனிதே முடிந்து தற்போது எடிட்டிங் பணி நடக்கிறது. விரைவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. 


இதற்கிடையில் 

"மனம் கொத்தும் பறவை" ப்ளாக்கை 

             "You tube" அலைவரிசையாக மாற்றினேன். தொடர்ந்து "Titling promos" மட்டும் பகிர்ந்து வருகிறேன். 

     
https://youtube.com/shorts/DtvR6GANZUc?feature=share 

செப்டம்பர் மாதம் 

"முதல் பதிவு" இடம் பெறும். 

இன்னும் எந்த நாள்? என முடிவு செய்யவில்லை. 

'முடியும்' என நம்புகிறேன். 


"மனம் கொத்தும் பறவை" காட்சி வடிவ களத்திற்கு மாறினாலும்  எழுத்து வடிவில் தொடங்கிய பயணத்தையும் விட்டுவிடாது  கரை மோதித் திரும்பும் அலைபோல தொடர்ந்து எழுதுவேன். 


ஆகாசமும்,ஆழ்கடலும்… 



"வாழ்வு பெருங்கடல்.  

கரையோரமாய் நடந்து 

அலைமோதும் 

கடல் ரசிக்கலாம்… 

அலையோடு உறவாடி

கால் நனைக்கலாம்… 

காலார நடந்து… 

எதுவுமற்ற மனநிலையோடு

மணல் மீது அமரலாம்" … 


மோதித் திரும்பும் அலைகள்

காதோரம் ஏதேதோ… 

கதைகள் சொல்லலாம்.


கால் நீட்டி அமர்ந்து

கைகளை நாற்காலியின்

பின்னங்கால்களாக்கி… 

சாய்ந்து சாவகாசமாக...

அன்னார்ந்து 

ஆகாசம் நோக்கலாம்… 


கடல் அலையோடு 

கண்ணாமூச்சி ஆடும்

இளசுகளை, சிறுசுகளை

கண்களுக்குள்

 படம் பிடிக்கலாம். 


'புத்தபிட்சுகள்' போல 

அமர்ந்திருக்கும் 

சில மூத்த குடிகளை

மனக் குவளைக்குள் நிரப்பலாம்… 


அருகாமையில்… 


சின்னஞ்சிறுசுகளின் கைவண்ணத்தில் 

சட்டென குவிந்து 

நிமிரும்...



மணல் வீடுகளை ரசிக்கலாம்… 

கடல் எப்பொழுதும் மனசுக்கு நெருக்கமாகவே இருக்கும். உப்புக் காற்றின் ஈரம் மனசுக்குள் சுவை சேர்க்கும். கைகளோடு ஒட்டிக் கொண்ட மண் துகள்களை தட்டித் தட்டி எழுகையில் மனசுக்குள் ஒட்டியிருந்த கவலைகளும் எட்டிப் பறக்கும். கால்கள் அழுந்த நெகிழும் கடற்கரை மண் திட்டுக்கள் போல மனம் நெகிழும். பறவையின் இறகாகி மனம் சிறகு தட்டும்.


இன்று… 



"சென்னை" தினம். 


சொந்த மண்ணை விட்டு வந்து தஞ்சம் புகுந்தவர்களை சென்னை தாய் மடி சேரும் குழந்தையாக அரவணைத்துக் கொள்ளும். 


"சென்னை" தின நல்வாழ்த்துக்கள்…



 தட்டாமல் கடல் செல்லும் கடல் காணும் மனங்களுக்கு கடற்கரை எப்பொழுதும் கலங்கரை தான்.


2001"ஆகஸ்ட்"-மாதம் சென்னைக்கு திரைக் கனவோடு ஒரு 'சூட்கேஸ்' ஒரு "தோள்பை" சகிதம் வந்திறங்கினேன். திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த போது மனம் கலங்கிய போதெல்லாம் இரவின் நிழலில் நிலாவின் முகம் கண்டு அலையடிக்கும் கரை கண்டு மணிக் கணக்கில் தனியே அமர்ந்திருந்த நாட்கள் நினைவில் நிழலிடுகிறது. முடிவுகளின் மீதான எதிர்நோக்கின்றி பயணிக்க சென்னை வாழ்வு கற்றுத் தந்தது.


'பயணமே அழகு' என உணரவைத்தது. என் துறை சார்ந்து புதிய பயணத்திற்கு தயாராகிறேன்.


ஆகாசமாக  "எழுத்து" … 

எழுதுவது நீளும் வானில் பறக்கும் பறவையின் மனநிலை. 



பெருங்கடலாக "காட்சிக் களம்"... 



காட்சி வடிவ படைப்புகளின் உருவாக்கம் என்பது கடலாடி  கடலோடி பயணப்படுவது போன்றது. 


கடலில் இறங்கி முத்தெடுக்கும் மனநிலையெல்லாம்   எனக்கு இல்லை. 


டற்கரையோரம் அமர்ந்து கரை மோதும் அலைகளை ரசித்து கரை ஒதுங்கும் வண்ணச் சிப்பிகளைச் சேகரிக்கும் மனநிலையோடு… 

"மனம் கொத்தும் பறவை" 

காட்சி வடிவ 

அலைவரிசைக்குத் தயாராகிறேன். 

கடல் அலை ரசிப்பது போல எனது காட்சிப் பதிவுகளை குறும்படங்களை ரசிப்பீர்கள் என நம்புகிறேன். 



முடிவுகளற்ற பயணத்தில் முடியும் வரை தொடர்ந்து பயணிப்பேன். 



    "மீன்களின் முகம்

         நீந்தலில்… 

   முயற்சியின் முகம்

          பயணத்தில்… 

   பயணத்தின் முகம்

         வாழ்வில்… 

    வாழ்வின் முகம்...

          வெற்றியிலுமில்லை. 

           தோல்வியிலுமில்லை. 

    வாழ்வின் முகம்

            வாழ்தலில்!" 



வழக்கேதும் இல்லை. பழக்கத்திலும்,

பழகித் தெளிதலிலும்

வாழ்வு வசமாகி

நீளும் வானமாகும். 

மனம் பறவையாகும்… 

பறக்கும்… 


"மனம் கொத்தும் பறவை"  

காட்சி வடிவப் பதிவுகள்

 (you tube channel) 


செப்டம்பர் முதல்… 


முதல் பதிவு தொடங்கி… முடியும் வரை முடியா பயணமாகத் தொடரும் என நம்புகிறேன். தொடர்ந்திருங்கள். 


எழுத்து வடிவப் பதிவுகள் மனப் பறவையாகி தொடரும். 


தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றிகள்… 


மனப் பறவை… 

சிறகு விரிக்கும்… 

பறக்கும்…



                          இருதய். ஆ 

















8 comments:

Anonymous said...

வாழ்வின் முகம் வாழ்தலில்...
நெஞ்சை சுட்டது.

Anonymous said...

உங்களின் விடா முயற்சிக்கு வாழ்த்துகள்...

Irudhy.a said...

வாசித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்...

Irudhy.a said...

'விடா முயற்சி' எப்போதும் விடாது முயற்சியை. வெற்றியோ, தோல்வியோ பயணமே வாழ்வின் அழகு...
வாசித்தமைக்கு மிக்க நன்றி...

Anonymous said...

எளிய நடை, எதார்த்த வார்த்தைகள்....... மிகவும் அழகு👏👏👏 வாழ்த்துக்கள் அண்ணா

Irudhy.a said...

வாசித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்.

Anonymous said...

முயற்சியின் முகம் பயணத்தில்.....அருமை
உங்கள் துறை சார்ந்த புதிய பயணம் வெற்றி நடை போட என் வாழ்த்துக்கள்.

Irudhy.a said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. வாசித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்...

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...