About Me

Sunday, September 25, 2022

சித்திர உலாவில் "யானை" ...


நீளும் வானமாக வாழ்வு... 

நினைவு இரு சிறகு.... 


      "தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" … 

  • பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் பாருக்குள்ளே பைந்தமிழாகப் பெயரெடுத்த பெருமை மிகு மொழியின் சிறப்பைச் சொல்லுகிறது.

உரக்கச் சொல்ல உதாரணங்கள் ஏராளம் உண்டு. 


" களிறு " - 

என்ற  சொல்லை உச்சரிக்கும் போது ஒரு திமிறு மனசுக்குள் திமிலேற்றும். 



"களிறு" - ஆண் யானையைக் குறிக்கும் சொல். அறிவீர்கள். 


அடுத்து… 

சோடி சேர்கிறது… 



"பிடி" 

-என்ற சொல்லை உச்சரிக்கும் போது மனசுக்குள் மயக்கம் வரும். 

"இந்தா பிடிச்சுக்கோ" … 

  • என காதலாகிக் கசிந்து  துதிக்கை நீட்டி 'களிறு' பற்றும் பெண் யானையைக் குறிக்கும் சொல்லே 'பிடி'. அறிவீர்கள். 


சங்க இலக்கியங்களில் அதிகம் பேசப்படும் பெருமை மிகு விலங்கு 'யானை'. 



ஏன்? 

????? 

கேள்விகள் யானையின் துதிக்கையாக உயர்ந்தன.  


"ஒன்றா… இரண்டா… 

எல்லாம் சொல்லவே…

ஓர் நாள் போதுமா?" ... 


சித்திர உலாவில்… 



"டொன்டாய்ங்… டொன்டாய்ங்… 

டொன்டாய்ங்" …


'யானை உலா' தொடங்குகிறது. 


'மணியோசை வரும் முன்னே… 

யானை வரும் பின்னே' -   

என்பது போல யானை குறித்த "மனச் சித்திரம்" பின்னே அசைந்து அசைந்து இசைவாய் வரும். 


முதலில் மணிமணியாக யானை பற்றி சில விஷயங்களைப் பகிர்கிறேன். பகிரும் செய்திகளை நீங்களும் அறிந்திருக்கலாம். 

"We are sailing in the same boat" என சொல்லிக் கொள்ளலாம். 


அறிந்ததில் அறிவிற் சிறந்த "யானை" 



"யானை" என்றாலே  வீரம் மனசுக்குள் வெயிலெனப் படரும். இது புறநிலை. 


"யானை" என்றதும் ஒரு மகிழ் மனம்  'உள்ளேன் ஐயா' என கை உயர்த்தி  குதூகலத்தை மனம் குத்தகைக்கு எடுக்கும்.


இந்நிலை 'யானை' என்றதும் தோன்றும் அகநிலை. 


புறத்திலிருந்தே  தொடங்குகிறேன்.   


சிற்றிலக்கிய   நூலான 

கலிங்கத்துப் பரணி". 


போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற ஆண்மகனின் பெருமை பாடுகிறது.



 "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மாணவனுக்கு வகுப்பது பரணி"

என்பது பரணியின் இலக்கணம் பற்றிய கூற்று. 


முதலாம் குலோத்துங்க சோழனின் 'கலிங்கப் போர்' வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. பாடியவர் செயங்கொண்டார். 


ஒரு யானையின் தோற்றமே கண்களுக்குள் பிரமிப்பைக் கடத்தும். பரணியில் ஆயிரம் யானைகளைக் கொன்றவன் என புலவர் பாடியது பாடுபொருட் தலைவனின் பெருமை சொல்லவே என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 


ஓர் ஆண் மகனின் வீரத்தை  வானளவு விரித்து உயர்த்த சங்கப் புலவர்கள் பெரும்பாலும் யானை கட்டி சொற்புகழ் கூட்டி உதாரணத் தோரணங்கள் கட்டியிருக்கிறார்கள். 


மன்னர்கள் புரவலனிடத்திலும், பகைவரிடத்திலும் எவ்விதம் நடந்துகொள்வார்கள் என்பதனை  அதியமான் குறித்து ஓளவை பிராட்டியார் பாடிய பாடலின் மூலம் அறியலாம். 


யானை குளிக்கும் போது அதன் மீது சிறுவர்கள் ஏறியும், அதன் துதிக்கை பற்றியும் விளையாடுவார்கள். அவ்விதமே யானையின் பலம்மிக்க அதியனும் புலவர்களிடத்தில் இருப்பதாக ஔவை சொல்கிறார். அதே யானை போர்க்களம் புகுந்தால் சொல்ல வேண்டுமா? அதகளம் தான். அப்படியே அதியனும் போர்முனையில் வாள் முனை சுழற்றுபவன் என யானையை ஒப்புமைபடுத்துகிறார் ஔவையார். 



"யானை" என்ற சொல் பெருமையின் உச்சம். பிறகு மன்னர்களின் கொடையில் 'யானைக்கொடை' வெண் கொற்றக் குடையின் உச்சமாக இருந்திருக்கிறது. 

தன்னைப் பெரிதினும் புகழ்ந்த புலவர்களை 

"பெரிதினும் பெரிது கேளும்"

என மன்னர்கள் உசுப்பேற்ற புலவர்கள் பெரிதினும் பெரிதாகக் கேட்ட பரிசில் என்ன தெரியுமா? 

'யானைகள்'...!!! 

என்றால் நம்புவீர்கள் தானே. 

சங்கப் பாடல்களின் வழி அறிந்த போது 

யானையின் புகழ் உச்சத்தை உணர முடிந்தது. 


"யானை கட்டிப் போரடித்த பரம்பரை "

-எனும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளை சினிமாக்களில் பார்த்திருப்போம். 


அப்புறம்… 

"யானைப் பசிக்கு சோளப் பொரியா?" - என்கிற சொற்பதங்களை

அறிந்திருப்போம்.

யானை குறித்த ஞாபகசக்தி கதைகளை சிறுவயது முதல் கேட்டிருப்போம். 


"யானை" உண்மையில் அபார ஞாபகசக்தி கொண்டது. 


யானையின் தோல் காணத் தான் கரடு முரடு. தொட்டால் 

"என்னப்பா கணேசா… இம்புட்டு சாப்ட்டா (மிருதுவாக) இருக்க. தொட்டவுடன ரியாக்ட் பண்ற! "என அமர்ந்து எழும் யானையின் அழகாக ஆச்சரியங்கள் எழும். 


உணர்வதில் யானையார்

"distinction pass"பண்ணியிருப்பார் போல.  சட்டுனு எதையும் உணரும் திறன் யானையாருக்கு உண்டு. 


யானையின் பின்புறம் நின்றுகொண்டு 

'சும்மா காச்சுக்கும் தொட்டாலே போதும். "who is that disturbance" - என யானையார் திரும்பி ஒரு சைடு பார்வை பார்ப்பார். 


தோலின் மென்தன்மை (உணரும் திறன்) காரணமாக யானையின் உடல் எளிதில் சூடாகும். இதனாலேயே யானை தன் மேல் சேற்றினை அள்ளி பூசிக் கொள்ளும். நீர் நிலைகளைப் பெரிதும் விரும்பும். 


சில வருடங்களுக்கு முன்  தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக குருவாயூரில் இரண்டுவாரங்கள் தங்கியிருந்தேன். அப்பொழுது ஓர் நாள் அங்குள்ள யானைகளின் சரணாலயம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கேரளத்து யானைகள் பிரமிப்பின் உச்சம். 


யானைகள் குறித்து நிறைய விசயங்களை அறியமுடிந்தது. யானைகள் குளிப்பதை கூச்ச நாச்சம் இல்லாமல் கண் கொள்ளாக் காட்சிகளாகக் கண்டோம். 

இதப் படிங்க முதல்ல.. 

குளித்த யானைகள் அத்தனையும் 'களிறுகள்'. 

"பிடி யானைகள்" 'பப்ளிக் place' - ல குளிக்க மாட்டாங்க போல. 


சரி விசயத்துக்கு வர்றேன். யானை பற்றிய

மிச்ச சொச்சங்களையும் பேசலாம். யானை குறித்த கட்டுரையாக இருந்தால் இன்னும் நிறைய பேசலாம். நான் எப்பவும் போல 

இப்புடிக்கா போயி அப்புடிக்கா வந்துருவேன். 


யானை பற்றிய அறிவுப்பூர்வ செய்திகளை 'long jump' ஆக எகிறித் தாண்டி 

யானையின் மனச் சித்திரத்துக்குள் பிரவேசிக்கிறேன். என்னுடன் வருகிறீர்கள் தானே. வாருங்கள். யானையின் மனச் சித்திரம் காணலாம். 


மன யானை… 

மனம் ஒரு யானை. மறுக்கத் தான் முடியுமா?

மறக்குமா நெஞ்சம். யானை பற்றிய நினைவுகளில் மனம்  குளத்து மீன்கள் போல துள்ளித் தவ்வுகிறது. 



யானையின் ஞாபகசக்தி போலவே மனசுக்குள் நிறைய ஞாபகங்கள் யானை மேல் அமர்ந்த அம்பாரியாக அமர்வில் இளைப்பாறுகிறது. யானை மீது ஏறி அம்பாரியில் அமர்ந்தால் உடன் யானையார் நடந்தால் அண்டமே கிடுகிடுப்பதாக மனம் உணரும். 


பிரமிப்பு, பயம், சிரிப்பு கலந்த மிரட்சி எல்லாம் கலவையான அழகியல் முகத்தை யானை மீது அமர்ந்து பயணிக்கும் குழந்தைகளின் முகங்களில் அறியலாம். 


நிச யானை போலவே சித்திர யானையும் துதிக்கை நீட்டி தூரிகை பிடித்து இழுக்கும். யானைச் சித்திரங்கள் வரையாமல் எவரேனும் சிறார் பருவ நிலை கடந்திருப்போமா? 


 "90" களின் மத்திமக் காலம்… 



அப்பொழுது நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் (இளங்கலை) பயின்று கொண்டிருந்தேன். 


அப்டியே ஷாக் ஆகிட்டீங்களா? என்னது. ஆங்கில இலக்கியம் படிச்சிங்களா? என கேள்வி கேட்கத் தோன்றுகிறதா. இன்று வரை நானும் என்னிடம் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. அது ஒரு போறாத காலம். போகட்டும். ஆங்கில இலக்கியம் கற்கவில்லை. மற்றபடி சும்மா ஜாலியாக நண்பர்களோடு மூன்று ஆண்டுகள் பொழுதுகளைக் கழித்தேன். 


பிறகு மூன்று வருடங்கள் 'ராசுக்குட்டி' திரைப்பட கதாநாயகன் பாக்யராஜ் சார் போல சோக்குக் காட்டி ஊர் சுற்றினேன். 


அப்புறம் என்னத்த பண்றது. சரி. திரும்பவும் கல்லூரிக்கே போகலாம் என முடிவெடுத்து "முதுகலை தமிழ் இலக்கியம்" பயில மீண்டும் அதே கல்லூரிக்குத் திரும்பினேன்.  என் வாழ்வில் அமைந்த திருப்புமுனை இது.

இன்றும் என்னிடத்தில் அதே நட்புடன் தொடரும் தோழர்களையும், தோழிகளையும் இந்தத் திருப்புமுனை தான் எனக்கு அறிமுகப்படுத்தியது.


அப்புறம் 'ஆய்வியல் இளநிலை' ஒரு வருடம் முடித்து சென்னைக்கு வண்டி ஏறினேன். "ஸப்பாடி… நினைத்தால் என் கதை எனக்கே கண்ணைக் கட்டும். என் மனசை கட்டி இழுத்து  மீண்டும் சித்திர உலாவிற்குள் திரும்புகிறேன். 


" 90"-களின் மத்திம காலம்.

காலை நேரம். 

சட்டர் வைத்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஒரு நிகழ்ச்சி அப்பொழுது தினக் காட்சியாக விரியும். 


என்ன காட்சி??? 


சில மனச்சித்திரங்கள்

வெயிலாய்… மழையாய்

எதிர் எதிர் நிலைகளை உணர்வுகளை மனசுக்குள் கடத்தும். 

யானை  குறித்த மனச் சித்திரங்களும் மனசுக்குள் சில மாயங்கள் புரியும். 


முதுகு குனிந்து… 

கைகளைக் கால்களாக்கி

நொடிப்பொழுதினில்

தரையில்… 

யானையென  நிமிரும் 

தகப்பன்களை

மறக்க முடியுமா? 


மறக்குமா நெஞ்சம்? … 

மாயங்கள் காட்டும்

"யானை  உலா" தொடரும்… 


தொடர்ந்திருத்தலுக்கு நன்றிகள். தொடர்ந்திடுங்கள். 


"மனப்பறவை" பறக்கும்...


இருதய். ஆ

Sunday, September 18, 2022

சித்திர உலா...


Praise the Lord...



  மனப்பறவை.com


"நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

… 

நீங்களெல்லாம் சொற்பனந்தானோ

பல தோற்ற மயக்கங்களோ

… 

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே

நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ ki

உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

… 

வானகமே இளவெயிலே மரச்செறிவே

… 

நீங்களெல்லாம் கானலின் நீரோ

வெறும் காட்சிப் பிழைதானோ

… 

போனதெல்லாம் கனவினைப்போல்

புதைந்தழிந்தே போனதனால்

நானும் ஓர் கனவோ

இந்த ஞாலமும் பொய்தானோ

… 

காலமென்றே ஒரு நினைவும்

காட்சியென்றே பல நினைவும்

கோலமும் பொய்களோ

அங்குக் குணங்களும் பொய்களோ

…. 

காண்பதெல்லாம் மறையுமென்றால்

மறைந்ததெல்லாம் காண்பமன்றோ

நானும் ஓர் கனவோ

இந்த ஞாலமும் பொய்தானோ"…

  • -மகாகவி பாரதியார்


வரிக்குதிரையின் மேல் இயற்கை  வரைந்த கோட்டுச் சித்திரம் போல மகாகவி 'பாரதியாரின்' பாடல் வரிகள் மனசுக்குள் எழுத்துச் சித்திரங்களாக விரிந்து 'முண்டாசுக் கவி' பாரதியின் நெற்றித் திலகம் போலவே தீர்க்கமாக மனசுக்குள் பதிந்து விடும்.


 பாரதியின் பாடல் வரிகளைக் கண்ணுறுகிறபோதெல்லாம் வரிக்குதிரையின் பாய்ச்சலைப் போல 'மனக் குதிரை' வரிக் குதிரையின் வேகமெடுக்கும். 


வேகத்துடன் நிதானமாகவே சித்திர உலாவைத் தொடர்கிறேன். 


"ஹலோ" … 

'ஒரு நிமிசம் நீங்க எப்பவுமே நிதானமா ராத்தூக்கத்துக்கு முன்னாடி தானே பதிவுகள' upload' பண்ணுவீங்க. என்னமோ புதுசா நிதானத்துடன் "சித்திர 

உலாவை" தொடர்கிறேன்னு பவுசு காட்றீங்க'. 


இது "மனப்பறவை" கூட்டிற்குள்ளிலிருந்து வரும் மனக் குரல்கள். 

ரொம்பச் சரி. ரொம்பச் சரி. ஒத்துக்கிறேன். 

என் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிடுவதில்  தொடங்கி எல்லாவற்றிலும் 

தாமதப்படுவதே எனது வாடிக்கை ஆகிவிட்டது. 


" படிக்கிறப்ப நீங்க  ஸ்கூலுக்கு சீக்கிரம் போயிருந்தா தான. என்னையும் சீக்கிரம் ஸ்கூல்ல விடுவீங்க. இப்பொழுதெல்லாம் மகன்'Gabree' திட்டுகிறான். 


தாமதங்களுக்கு மன்னிக்கவும். தாமதமாகப் பகிரும் போதும் 'late comer' ஆக இல்லாமல் வாசிப்புப் பதிவேட்டில் விடுபடாமல் வருகை புரிந்து வாசித்து உற்சாகம் அளிக்கும் அனைவருக்கும் நன்றிகள். 


"சித்திரம்" குறித்து இது மூன்றாவது பதிவு.



  எழுதத் தொடங்குகையில் தொடரியாக எழுதவேண்டும் என்ற எந்த முன் மனப் பதிவும் எனக்கு இல்லை. 


மாயச்சித்திரங்கள் போல மனசுக்குள் நிகழ்ந்த மாயமாக இப்பொழுது சித்திரப் பதிவுகளைத் தொடராக்குகிறேன்.



வண்ணத்துப் பூச்சியின் உடலில் இயற்கை தூவிய வண்ணங்களைப் போல அல்லாமல் சித்திர உலகம் வண்ணங்களற்ற வர்ணங்களாக தன் வானை விரித்தது. விரிந்த சித்திர வானில் வாழ்வின் எண்ணங்கள் வண்ணங்கள் சேர்த்தது.


தொடர்ந்து வாசித்து உற்சாகப்படுத்துவதால் சித்திர உலாவைத் தொடங்குகிறேன். வாசிக்கும் இனியவர்களால் இதுவும் சாத்தியப்படுகிறது. 

இனியும்அவர்களால் (உங்களால்) மேலும் வசமாகும் என 'மனப்பறவை'  சிறகு விரிக்கிறது.


வரைகலையில் தூரிகை கொண்டு உயிர் பெறும் சித்திரங்களைப் போல உயிர் கொண்டு உலகைத் தரிசிக்கிற முதல் நொடியிலிருந்து மனச் சித்திரங்களும் இதயத்திற்குள் இடம்வலமாக அசைவாடி இடம்பிடிக்கின்றன. 



நானும் மனச் சித்திரங்களை முதன்மைப்படுத்தியே தொடரவிருக்கிறேன். 


"நோக்குவன எல்லாம் அவையே போறல்" 

-என்கிற இலக்கண மரபு போல

காண்பவை யாவும் சித்திரங்களாகத் தான் தோன்றுகின்றன. இருப்பினும் காண்கிற யாவும் மனசுக்குள் சித்திரச் சட்டகமாக உறைந்து விடுவதில்லை. 


 'சில.. பல' என்கிற விகிதாச்சார முறைமையிலேயே சில காட்சிகள், நிகழ்வுகள் மனசுக்குள் சித்திரமாக உறையாமல் மாயக் குமிழ்களாக காற்றில் பறந்து உடைகின்றன.  


உடைபடாத குமிழ்களாக மாறும் சித்திரக் காட்சிகள்  அழியா மனச்சித்திரங்களாக எப்பொழுதும் உயிர்ப்போடு அசைவாடிக் கொண்டே இருக்கின்றன. அப்படியான மனச் சித்திரங்களின் உலாவைப் பகிர்கிறேன். 



உங்களுக்குள்ளும் நீங்கள் அடைகாக்கும் மனச் சித்திரங்கள் நிறைய இருக்கலாம். சித்திர உலாவிற்குள் நுழைந்து வெளி வருகையில் உங்கள் மனம் உங்களின் மனக் கூட்டிற்குத் திரும்பலாம். உங்கள் மனசுக்குள் அழிக்க முடியாது உறைந்து கிடக்கும் அசைவாடும் மனச் சித்திரங்களைப் பார்க்கலாம். 


சித்திர உலாவில்… 



"சித்திரப் பார்வை" … 

வானகமே இளவெயிலே மரச்செறிவே

… 

நீங்களெல்லாம் கானலின் நீரோ

வெறும் காட்சிப் பிழைதானோ… 


காணும் காட்சிகளில் சில பிழையாகும்.

 சில மழையாகும். 

சில சிற்பியின் சிலையாகும். 

இன்னும் சில… 

இன்னும் பல… 

எல்லாம் உள… 

உளமெனும் களத்துக்குள்

நிழலாடும்…

மனச் சித்திரங்கள்

மலையாகும்...

மலைக்க வைக்கும்!

மழையென மனமதை நனைக்கும்.

மறக்குமா நெஞ்சம்?... 


சித்திரப் பார்வையில்.....

மறக்க முடியா 

முதற் "மனச் சித்திரம்" 



       உயிர் கொண்டு கண் திறக்க விழியின் கருமுடி தூரிகையாக எதிர் உறையும் அம்மாவின் முகமே....

மனம் அறிந்த அன்பில் நிறை முதல் அழகுச் சித்திரம்! … 


உணர்வுகொண்டு மறைவில் இலைமறைகாயாகும் அப்பாவின் சித்திரத்து ஒண்ணா அன்பில் மறை முகமாய்…

தன் முகம் மறைத்து

உணர்வில் உறையும்...

மனம் அறிந்த  உணர்வின்

முதற் சித்திரம்!... 

'அப்பா!' ... 

கண்டிப்பு காட்டி கல்விக் கடலில் நீந்திக் கரையேற அர்ப்பணிப்பில் நிறைந்த ஆசிரியர்கள் மனம் அறிந்த குருச் சித்திரம்!...


எல்லைகளற்ற வெளியில் நாளைய குறித்த கவலைகளின்றி சிறகு விரிக்கும் பறவைகளாக வாழ்வு வானில் பறக்க சிறக்க சிறகு தரும் எதிர்பார்ப்புகளற்ற பறவைகளின் முகமாக மனம் அறிந்த சித்திரம் 

நட்பு!... 


இன்னும் இன்னும் என மனச் சித்திரங்கள் சிறகு விரித்து நீளும் வாழ்வில் 'றெக்கை' தட்டிப் பறக்கும். பறக்கலாம். 


தூரிகைகள் தேவையில்லை. மனமே தூரிகை. மறக்க முடியா நினைவுகளே சித்திரங்கள். 


மனச் சித்திரங்களைக் காணும் முன் சித்திரங்கள் குறித்த பொதுப் பார்வைக்குத் திரும்புகிறேன். 



புனைவுச் சித்திரங்கள், புனையா சித்திரங்கள் என்ற இரு வகைகளுக்குள் கருத்தியலாக, பண்பியலாக, அழகியலாக சித்திர உலகை அறியலாம். 


மனக் கூற்றின் படி… 

"புனையாச் சித்திரம்"


கண்டதை அப்படியே  சொல்வது புனையாச் சித்திரம். 


"அதிகாலை… 

குளியல் முடிந்து 

கேசத்தின் ஈரக்கசிவோடு 

ஒருபக்க தலைசாய்த்து

கேசம் உலர்த்தி.. 

ஒப்பனைகளற்ற வெளியில்

முகம் சிரிக்கும்… 

அவள்

கண் கண்ட

புனையாச்  சித்திரம்"… 


மனக் கூற்றின் படி

"புனைவுச் சித்திரம்" … 


கண்டதை அப்படியே கடத்தாது கடத்தலில் வண்ணங்கள் குழைத்து எண்ணங்கள் உடுத்தி உலா வந்தால் அது

புனைவுச் சித்திரம்!... 


"அதிகாலை… 

குளியல் முடித்து 

கருகரு கேசத்தின்

ஈரம் உலர்த்தி… 

நடுவகிடு கோடெடுத்து

நட்ட நடுவில்.. 

வட்டத்தில் செம்பொட்டிட்டு 

வீட்டுக் கூடத்தில்

இள மஞ்சள்வெயில் காயும் 

அவள்… 

மனம் அறிந்த

புனைவுச் சித்திரம்!"..


அப்புறம்… 

மனம் அறிந்த

  • "அழகியல்" சித்திரம்… 


     " இறுகக் 

கட்டிக் கொள்கையில்… 

    இப்படியா கண்களை 

     மூடிக் கொள்(ல்)வாய். 

கண்களைத் திற கண்மணி… 

     இது நிலாக் காதல்! 

கண்களைத் திற… 

நிலவின் ஒளியில் 

காயட்டும் நம் காதல்!".... 


கருத்தியல் சித்திரத்துடன் சித்திரப் பார்வையை இந்த வாரம் முடிக்கிறேன். 


திருமணத்திற்குத் தயாராகும் க(ன)ணவான்களுக்கு வாழ்த்துக்கள். உலா முடிவில் மறைவில் நிற்கும் திருவிழாத் தேராகும் திருமணம் முடிந்த கண(ன)வான்களுக்கு என்னையும் சேர்த்து...

பார்த்து ரசிக்க மட்டும்

இந்த கருத்துச் சித்திரம்… 

'மனம்' பத்திரம்… 



"சித்திர உலா" தொடரும்… 


"மனப் பறவை" பறக்கும்… 

நினைவுகள்.. 

சித்திரங்களாகும்



இருதய். ஆ



அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...