'PRAISE THE LORD' …
தீபாவளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள்
அந்த நாள் முதல் இந்த நாள் வரை திருவிழா, பண்டிகை நாட்கள் என்றால் எனக்கு…
மன்னிக்கவும், நம் எல்லோருக்கும் நமது தாயும், தந்தையும், சொந்த மண்ணும் தான் நினைவிற்கு வரும். வரவேண்டும். இந்நினைவுகள் தான் நம்மைத் தொடர் வாழ்வின் நிலைப்பாட்டில் வேரூன்றி நிற்க வைக்கும். நீங்களும் அறிவீர்கள். இதன் காரணமாகவே பெரும்பாலும் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்குக் கிளம்பிவிடுகிறார்கள்.
'நிற்க. அதற்குத் தக' …
வாழ்க்கையில் இரு நிலைகள் எப்பொழுதும் உண்டு.
ஒன்று
பார்வையாளனாக வளையத்திற்கு வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பது.
மற்றொன்று
வளையத்திற்குள் வளைய வளைய வந்து வளைந்து நெளிந்து நெகிழ்ந்து வேடிக்கை காட்டுவது.
"வேடிக்கை காட்டுதல்" , "வேடிக்கை பார்த்தல்"
என்ற இரு நிலைகளும் வாழ்வில் என்றும் வாடிக்கை. உண்மை தானே அன்பர்களே.
"மனம்" எனும் பறவை…
மனம் ஒரு பறவை.
நினைவுகள் நம் சிறகுகள். மனம் பறவையாகி கடந்த காலத்திற்குப் பறக்கும். பழம் நினைவுகள் உண்ணும். பின் எதிர் நோக்கில் உறையும். கனா காணும். எதிர்பார்ப்புகளோடு மனசுக்குள் கூடு கட்டும். பின் கூடு விட்டு சிறகு விரிக்கும்.
எதிர் நோக்கில் பறக்க நிகழ் காலத்தில் கால் ஊன்றி முன் பின் நினைந்து கடந்து பறப்பது மனப் பறவையின் இயல்பு.
நாணயத்தின் இரு பக்கங்கள் போல…
"அன்று
இன்று" …
எனும் இரு அத்தியாயங்கள் வாழ்வின் பக்கங்களில் காலத்தால் எழுதப்படும்.
பரீட்சை எழுதுகையில் வினாத்தாளில்
'கோடிட்ட இடங்களை நிரப்புக'
என்ற ஒரு பகுதி இடம் பெறும்.
விடுபட்ட இடங்களில் சரியான பதிலை அளிப்பதும்,
சில, பல சமயங்களில் தவறாக பதில் நிரப்புவதும் போல வாழ்விலும் சரிகளையும், தவறுகளையும் நிரப்பிய படி கடக்கிற வாழ்வில் நம்மைச் சரிசெய்து முதுகில் உற்சாகமாய்த் தட்டி தொடர்ந்து ஓட வைப்பது ஓட்டத்திற்கான எரிபொருளாய் அமைவது நாம் கொண்டாடும் பண்டிகைகளும், திருவிழாக்களும் தான் என்று சொன்னால்
'I objection my lord"
என எதிர் தரப்பில் எவரும் வாதிடப் போவதில்லை. உண்மை தானே.
"ஓடு தங்கம். நீ ஓடு. தங்கமோ! வெண்கலமோ… எது கிடைத்தாலும் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் நீ ஓடு. வாழ்வின் ஓட்டமே அழகு" என காலம் சொல்லும்.
பந்தயங்கள் நம்மை இயந்திரங்களாக மாற்றிவிடாதபடி தந்திரமின்றி ஜெகத்தினில் அன்புடை மந்திரங்களோடு அனுதினமும் பயணித்தால் நாளெல்லாம் ஒளித் திருநாள் தான்.
அந்த நாள் முதல் இந்த நாள் வரை…
" தீபாவளி"
தீபாவளி என்றதும் என் மனம் எப்பொழுதும் 80-களின் மத்திமத்தில் காலூன்றும். கடந்த வருட(2021) தீபாவளிப் பதிவுகளில் அந்நினைவுகளைப் பகிர்ந்திருந்தேன்.
அப்பொழுது எனது அப்பா இருந்தார். எழுதி முடித்து அப்பாவிடம் பேசினேன். அந்நினைவுகளை மீண்டும் அப்பாவோடு பேசி மகிழ்ந்தேன். அம்மாவிடமும் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டேன்.
இப்பொழுது எழுதும் தீபாவளிப் பதிவிலும் அப்பாவை நினைத்துக் கொள்கிறேன். அப்பா மறைந்து நினைவுகளாக அனுதினமும் மனசுக்குள் சிறகசைக்கிறார். பண்டிகைக் காலங்களில் அப்பாவுக்கு சிறகுகள் முளைக்கும். வீட்டில் ஒட்டடை தட்டி விழாக்களை எதிர்நோக்குவார். அம்மா கடிந்து கொள்ளும் அளவிற்கு ஓய்தலின்றி பரபரப்பார்.
பெரும்பாலான வீடுகளில் இக்காட்சிகள் இடம்பெறும்.
வெளியூர்களில் வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் எப்பாடுபட்டாவது பண்டிகை கொண்டாட சொந்த ஊர் கிளம்பிவிடுவார்கள். காரணம் தண்ணீரை நோக்கித் தானே வேர்கள் பரவும்.
தம் பிள்ளைகளையும், பேரன், பேத்தியரையும் மீண்டும் காணும் உற்சாகம் தான் பெற்றோருக்குத் திருவிழா. அந்த நாளை எதிர் நோக்கி காத்திருப்பார்கள்.
தாய், தந்தையோடு தன் உறவுகளோடு இணையவே திருவிழாக்களும், பண்டிகைகளும். இவைகள் காலத்தால்
உருவாக்கப்பட்ட அசத்தல் அஜந்தாக்களோ! என மனம் மகிழ்ந்துகொள்கிறது.
"90" -களின் தீபாவளி, "2000" -தீபாவளி என பகுத்துப் பேச நிறைய நினைவுகள் உண்டு. ஆனால், அவற்றை எழுதும் மனநிலையில் மனம் இல்லை. எழுத முடியவில்லை.சில மனச் சிக்கல்களால் எழுத முடியாமற் போனது. பதிவை எழுதத் தொடங்கி ஒரே மூச்சில் இரவுமுழுக்க அமர்ந்து எழுதியிருக்கலாம் என மனம் சொல்கிறது. முதல் நாள் எழுத ஆரம்பித்து '90' -களின் தீபாவளி வரை எழுதி மீதியை மறுநாள் எழுதலாம் என்றெண்ணி தூங்கச் சென்றேன். அப்பொழுதே இரவு. 2.00 மணி. சரி காலை மீதத்தை எழுதி முடித்து கிறுக்கல்களை ஆரம்பிக்கலாம் என முடிவு செய்தேன்.
ஒரு நாள் விடியலைப் போலவே தான் மறுநாளும் விடிகிறது.
ஆனால், சூழல் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை அலம்பி நெகிழ வைத்துவிடுகிறது. நான் அலம்புகிற
தண்ணீராகவே அறியப்படுகிறவன். வருத்தம் ஒன்றும் இல்லை. நான் அலம்புவது தெளிவதற்கு என்பது எனக்குத் தெரியும். என்னை நன்கு உணர்ந்தவர்களுக்குத் தெரியும். என்னை நன்கு அறிந்தவர்களின் மீது நம்பிக்கை கொண்டு எழுத முடியாத நிலைக்கு மன்னிப்பு கோரி பதிவை முடிக்கிறேன். நீங்கள் அறியாத ஒன்றை நான் ஒன்றும் எழுதிவிடப் போவதில்லை. நீங்கள் அறிந்ததை என் நினைவுகளோடு கலந்து தான் எழுதுகிறேன். தொடர்ந்து எழுதுவேன்.
அந்த நாள் முதல் இந்த நாள் வரை தீபாவளி மட்டுமல்ல எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் அன்பு மட்டுமே எல்லோரையும் ஓன்றில் இணைக்கும்.
அன்பெனும் சங்கிலிப் பிணைப்பில் ஒரு கண்ணி திரிந்தாலும் இறுக்கம் மற்ற கண்ணிகளையும் பற்றி இழுக்கும். அதிகம் முறுக்கேறுகிற கயிறு அறுந்து போகும்.
வில்லாக வளைந்து உடைந்து போகாத படி சரியான விசையில் நின்று எண்ணிய திசையில் தொய்வின்றி பறந்து இலக்கை அடைகிற அம்பாக வில்லாக இருக்கும் மனம் வேண்டும் என்ற எண்ணமே இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தின் புவிஈர்ப்பு விசையாக மனதை இழுக்கிறது.
எண்ணிய நல் எண்ணங்கள் யாவும் ஈடேற அல்லன தேய்ந்து நல்லன பெருக தீப ஒளியின் சுடரொளி வழித் துணையாக அமையட்டும்.
ஒளி இருக்கும் இடத்தில் இருளுக்கு ஏது இடம்.
அனைவருக்கும்
ஒளித் திருநாளின் நல்வாழ்த்துக்கள்…
மனப்பறவை பறக்கும்…