About Me

Sunday, October 2, 2022

"யானை" வந்த வீதி...


 அன்பில் வேண்டுகோள்… 


   கொஞ்சம் மிக  நீண்ட உலா இது. உங்கள்  அன்றாட அலுவல்கள் முடிந்து ஓய்ந்திருக்கையில் ஆசுவாசமாக சாய்ந்து அமர்ந்து அமைதலான நேரத்தில் வாசியுங்கள். பகிர்வு வசமாகும் நம்பிக்கையில் தொடர்கிறேன்… 



வரைகலையில் சுயம்புவாகும் இயற்கை. ஆகாசத்தில் மேகக்கூட்டங்களாகி எழும்பி  ஆச்சர்யச் சித்திரங்களை வெண் வண்ணங்களால் நிறைத்து கண்களுக்குள் பசுமை கடத்தும். 

மேகச் சித்திரங்கள் கடவுளின் கருணையால் மழையென இறங்கி "செம்புலப்பெயல் நீராக" மனசுக்குள் நிறைக்கும். 


அன்பர்கள் அனைவருக்கும் நவராத்திரியின் தொடரியில் வரும்

"ஆயுத பூஜை"

நல்வாழ்த்துக்களை மகிழ்வில் பகிர்கிறேன். பதிவைத் தொடர்கிறேன். 




சுடும் வெயில் வரையும் சித்திர நிழலில்  யானையின் நிழல் உருவம்  காண அவ்வளவு அழகாக இருக்கும். 


 நிழல் கூட நிச வண்ணத்தில் புனையா நிழற்சித்திரமாக விரிவது  யானையின் ஆகச் சிறந்த அழகு.யானையின் வண்ணமும், நிழலும் "ஜிகிரிதோஸ்த்து", 'நண்பேன்டா' என நிசமும் நிழலும் இறுக அணைத்து 'உம்மா' கொடுத்துக்கொள்ளும். 


யானையென்றால் சும்மாவா! 



இன்று... 

 நெருக்கம் நிறைந்த பரபரப்பு உறைந்த சூழலில் மனிதர்கள் நடப்பதே ஓடுவது போலத் தான் தெரிகிறது. அத்துணை பரபரப்பு. 


ஆனால், 

அன்று… 

குறுகிய வீதிகளில் சின்னஞ்சிறு சந்துபொந்துகளில் கூட 'டொன்டாய்ங்… டொன்டாய்ங்' … 

யானையார் பாகனோடு அசைவாடி வீதி உலா வருவார். அன்று கண்ட காட்சிகள் இன்றும் என் மனக் கூட்டுக்குள் அழியாச் சித்திரங்களாக விரிகின்றன. 


இன்றைய குழந்தைகளுக்கு அக்காட்சிகள் அரிதாகி… இன்னும் சொல்லப்போனால் கிட்டாமல் போனதோ என எண்ணத் தோன்றுகிறது. உண்மை தானோ? நீங்களே சொல்லுங்கள். 


 மனச் சித்திர உலாவை… 

நான் கடந்த பகுதியில் முடித்த இடத்திலிருந்து தொடர்கிறேன். 


சித்திர உலாவில்… 



"யானை" வந்த வீதி


அன்று.. 


'90' -களின் மத்திமக் காலம்.



நான் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் 'ஆங்கில இலக்கியம்' படித்துக்கொண்டிருந்தேன்.. 


ஆங்கில 'பொயட்டுகள்' 

ஷேக்ஸ்பியர், ஷெல்லி, வோர்ட்ஸ்ஒர்த்… நினைவில் நின்ற அளவிற்கு ஆங்கில இலக்கணம், ஆங்கிலப் பேச்சு, ஆங்கிலத்திலேயே எழுதும் பயிற்சி எவையும் கைவரவில்லை.  மண்டைக்குள் ஏறவில்லை. 


நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். "நண்பேன்டா" 

என்கிற குழுப்பெயரில் "வாட்ஸ் ஆப்" - ல் இன்றும் நட்பைத் தொடர்கிறோம். 


கல்லூரியில் எங்கள் 'ஆங்கிலத்துறை' இரண்டாவது மாடியில் அமைந்திருந்தது. இரண்டாவது மாடி என்றாலும் நல்ல உயரத்தில் இருக்கும். அகன்ற விசாலமான படிகளில் ஏறி வகுப்பறை அடைவோம். நல்ல காற்று. ஏராளமான மரங்கள், பூக்கள் நிறைந்த பகுதி அது. அழிக்கமுடியா மனச் சித்திரங்களாக இன்றும் நினைத்த மாத்திரம் மனசுக்குள் நிழலிடும். 


மூன்றாண்டுகள் நிறைவில் மண்டைக்குள் ஏறாத ஆங்கிலக் கல்வியை விடுத்து ஆங்கிலத்துறையின் படிகள் இறங்கி  இளங்கலைப் பட்டம் வாங்கினேன். பட்டம் காற்றில் பறந்து போனது. 


ஆனால்… மூன்றாண்டுகளில் காதுகளுக்குள் நுழைய மறுத்த ஆங்கிலக் கல்வி ஒரு சொற்றொடரை மட்டும் இன்றும் நினைவில் நிற்க வைத்திருக்கிறது. 


 சொற்றொடர்…


"All are equal. 

But some are more equal than others" …

"ஜார்ஜ் ஆர்வல்" 


"Animal Farm" - ஐ அப்பொழுது அறிமுகம் செய்தவர் ஒரு பேராசிரியை. பெயர் விடுத்து செய்தியை மட்டும் பகிர்கிறேன். 


நிரூபரை விட செய்தி தானே முக்கியம்.  நிரூபரும் முக்கியம் தான். செய்திகளின் வேர்கள் அவர்கள் என்பதில் ஐயமில்லை. மண்ணுக்குள் இருக்கும் வேர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. 

'இந்தாப்பா… அதான் சொல்லீட்டீர்ல. அந்தப் பேராசிரியை பெயரைச் சொல்லப்போறதில்ல. புரிஞ்சிடுச்சு செய்திய சொல்லுங்க' என நீங்கள் மனசுக்குள் நினைப்பது எனக்கு முன் நிழலிடுகிறது. 


செய்திக்கு வருகிறேன். 


"Animal Farm"  புத்தகத்தை

 வாசித்து விளக்கமளிப்பார் இனிமை நிறை பேராசிரியை . அவரது உச்சரிப்பு  வளைந்து நெளிந்து நிமிர்ந்து உருமாறும் சித்திரம் போலவே இருக்கும். 


"அப்ப நீங்க புத்தகத்தைப் பார்க்கல" - என நீங்கள் அடிக்கும் 'கமெண்ட்' என் காதில் கேட்கிறது.

புத்தகம் பார்த்திருந்தால் நான் "எம். ஏ ஆங்கில இலக்கியத்தை" தொடர்ந்திருப்பேன். 


சித்திர உலாவிற்குள் எழுத்தை மடை மாற்றலாமா? 


'90' -களின் மத்திம காலத்திற்குள் இருக்கிறோம். 


கல்லூரி பத்துமணிக்கு என்பதால் சாவகாசமாக ஆற்றுக்குள் இறங்கி (மதுரை வைகை ஆற்று தெப்பக்குளம் பாலம் அப்பொழுது இல்லை) கல்லூரிக்குள் நுழையும் முன் அருகாமை உள்ள தெருக்குழாயில் சாக்கடைத் தண்ணீர் நீங்கும் படியாகக் கால்களைக் கழுவிவிட்டு கல்லூரிக்குள் நுழைவேன். 


தியாகராசர் கல்லூரிக்கு அருகாமை உள்ள சந்து கடந்து கல்லூரிக்குச் செல்கையில் நான் கண்ட சித்திரக் காட்சிகள் ஏராளம். 


'காம்பவுண்டு' வீடுகள் நிறைந்த பகுதி அது. 

வெளிவராந்தா படிக்கட்டுத் திண்டுகளில் அமர்ந்தபடி இரண்டு மூன்று மங்கையர் கூடிக்குலாவி சிரிப்பொலி சிதற வளையல்கள் ஒன்றோடொன்று உரச அதிவேகமாக  பூக்கள் கட்டுவார்கள்.



எதிர்  முகம் கண்டபடி விழிகள் சிரிக்கும்.  மந்திரம் இட்டது போல, ஈரச்சாக்கில் முகம் சிரிக்கும் குண்டு மல்லிகளை கைகளின் விரல்கள் பதவிசாக எடுக்கும். பூத்தொடுக்கும்.  


பூக்களை  எடுக்கும், 

தொடுக்கும் விரல்களின் வேகம் எப்படி இருக்கும் தெரியுமா? 


இக்காட்சிகளைப் பார்க்கையில் சிதறிக்கிடக்கும்  கம்புஇரையை  வேகவேகமாகக் கோழிகள் தன் கூர்வாயால் கொத்தி உண்ணுமே அப்படி இருக்கும் அன்று நான் கண்ட பாவையர் பூத்தொடுக்கும் காட்சி. ஆகச் சிறந்த அழகியல் காட்சிகள் அவைகள். 


மங்கையர் பூக்கட்டிய மனச் சித்திரக் காட்சிகளை விவரித்தால் வாய்ச்சொற்களால் என்ன பயனும் இல. மனசுக்குள் கற்பனை செய்து பாருங்கள். 


நான் அன்று குழாயடியில் கால்களைக் கழுவியவாறே அக்காட்சிகளைக் காண்பேன்.

வைகை ஆற்றுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். சில வேளைகளில் நான் காண்பதை காணாதவாறு அம்மங்கையர் களவு செய்வார்கள்.


மங்கையருக்கே உரிய 'extra qualification' அது. 


"மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் புரிந்திடல் வேண்டும்" சும்மாவா பாடினார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மங்கையரை புகழந்தாகிவிட்டது. 


கடந்த பதிவிற்கு முந்தைய பதிவில் நான் கிறுக்கிய "ஆடவர் கருத்துச் சித்திரம்" கண்ட சில பாவையர் என்னை "பாவிப் பய" - என திட்டியிருக்கலாம். அதனால் கொஞ்சம் கவனமாக கபடி ஆடுகிறேன்.


பாவையர் பூக்கட்டிய மனச் சித்திரங்கள் சட்டகமாக வயது கூடாத 'மன்மதன்' , 'ரதி' போல அப்படியே மனக் கூட்டிற்குள் இன்றும் உறைந்து மேகச் சித்திரங்கள் போல மிதக்கின்றன. 


அழகியல் மனச் சித்திரம் கடந்து கல்லூரி நுழைவு வாயில் வருகையில் வாயிலுக்கு எதிரே ஒரு மண்டபம் உண்டு. 



மண்டபம் அருகே மணிச் சத்தம் காற்றில் கலக்க விசிறிக் காதுகளோ இடம் வலமாக விசிற யானைப்பாகன் கைலியை இடக்கையில் பிடித்தபடி வலக்கையில் பீடி பிடித்து புகை விட்டுக் கொண்டிருப்பார். 


"ஸ்மோக்" பின்னணியில் யானை கனவு தேசத்தில் நிற்பது போலத் தெரியும். சில நேரங்களில் பாகன்கள் யானையாரிடம் அதகளப்படுவது இம்மாதிரியான செயல்கள் காரணமாக இருக்குமோ? 


மதுரை "தியாகராசர் கல்லூரி" 'திருக்கோயில்கள்' சூழ நிமிர்ந்து நிற்கும். வெள்ளிக் கிழமைகளில் பக்திப் பிரவாகம் வீதிகளில் பெருக்கெடுத்து நதியெனப் பாய்ந்தோடும். 



யானையாரின் தரிசனங்கள் நிச்சயம் உண்டு. நெற்றி நிறைய விபூதிப் பட்டையிட்டு சமயங்களில் சந்தனப்பொட்டு, குங்குமம் என யானையாரின் நெற்றி பார்க்க ஆச்சாரமாக அமோகமாக இருக்கும். 

"80's & 90's kids" இம்மாதிரியான மனச்சித்திரங்களைக் கண்டிருக்கலாம். 


மதுரை 'அனுப்பானடி' தெருவில் 'மீனாட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளி' இருக்கிறது. அருகாமையில் 'சுந்தரேஸ்வரர் ஆலயம்'

இந்தப் பகுதியிலும் மேற்சொன்ன ஒப்பனைகளோடு யானையார் தெப்பக்குள மைய மண்டபத்தை உற்று நோக்கியபடி நின்று கொண்டிருப்பார். அங்கு  பருத்திப்பால் வண்டிக் கடை நிற்கும். 


பருத்திப்பால் குடிக்க அங்கு செல்கையில் சமயங்களில் 

யானைப் பாகன் யானையோடு பருத்திப்பால் கடையில் நின்றுகொண்டு பருத்திப்பால் குடித்துக் கொண்டிருப்பார். 


யானையார் சைடு கண்ணால்

 "டேங் கப்பா… உனக்கே நியாயமா? இப்புடி பார்க்க வச்சு பருத்திப்பால் குடிக்கிறீயே" - என mind voice - ல் முணுமுணுப்பார். 


யானைப் பாகன் தெனாவெட்டாக ஒரு கையை யானையின் பருத்த காலில் பதித்து மறு கையை பருத்திப் பால் குவளையோடு சேர்த்து 'சொர்ருக், சொர்ரூக்' என பருத்திப்பால் உறிஞ்சிய மனச் சித்திரக் காட்சிகள் கண்களுக்குள்  ஒளியேற்றுகின்றன. 


யானையின் இன்னும் சில மனச்சித்திரங்கள் மையமாக நிழலிடுகின்றன.


பாகன் யானை மீது அமர்ந்து  யானையார் காதோரம் தன் கால்களால் ஏதோ சங்கேத அசைவை மீட்ட யானையார் லாவகமாக தனது துதிக்கை நீட்டி பெட்டிக் கடைக்குள் நுழைக்க கடைக்காரர் ஒரு கும்பிடு போட்டு சில்லரை எடுத்துக் கொடுப்பார். 


துதிக்கையில் சில்லரை வாங்கும் யானையார் அப்படியே கடைக்காரர் தலையில் ஒரு தட்டு தட்டி ஆசீர்வழங்கி சில்லரையை துதிக்கையால் மேல் உயர்த்தி பாகனிடம் தர பாகன் "சமத்துடா கண்ணு" என்பது போல வாங்கிக் கொள்வார். இக் காட்சிகள் 

'90' -களுக்குப் பிறகு நான் அறிந்தவரை அரிதாகி அறியாக் காட்சிகளாக காணாமற் போயின. 



யானை மகிழ்வின் குறியீடு. நல்ல தொடக்கத்தின் குறியீடு.

 'பிள்ளையார்' சுழி இட்டு எழுதுபவர்களை நீங்கள் கண்டிருக்கலாம். எழுதத் தொடங்கும் முன், ஒன்றின் தொடக்கத்திற்கு முன் "பிள்ளையார் சுழி" இடுவது தடையில்லா இயக்கத்திற்கு துணை செய்யும் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம். 


காலமாற்றத்தில் யானை இனமும் அருகி வருவதாக  ஆய்வுகள் சொல்லி வருகின்றன. மக்களோடு மக்களாக 'சைக்கிள் ரிக்ஷாக்கள்' , 'குதிரை வண்டிகள்' , 'மாட்டுவண்டிகள்' , 'மிதிவண்டிகள்' உருண்டோடிய சாலைகளில்

 அன்று… யானைகளும் பாகனோடு மணிச் சத்தம் கேட்க அசைவாடி வந்த காட்சிகள் நிசமாகவே ஓர் அற்புத அதிசய மனச் சித்திரங்களாகவே மனசுக்குள் கண்ணாடித் தொட்டிக்குள் முட்டி மோதும் வண்ணக் கண்ணாடி  மீன்களாக நீந்துகின்றன. 


"யானை வந்த வீதி" என தலைப்பு அமைகையில் "யானை வரும் வீதிகள்" என மனம் தலைப்பை பரிந்துரைக்கவில்லை. கண்  காணும் நிகழ்கால நிகழ்கள சித்திரங்கள் அப்படி. 

உண்மை தானே… 


சித்திர உலாவில்… 

மனச் சித்திர *யானை உலா" தொடரும்… 


மனப்பறவை பறக்கும்… 



தொடர்ந்திருத்தலுக்கு நன்றிகள். தொடர்ந்திருக்கும் எதிர்நோக்கில்… 


                                    - இருதய். ஆ


4 comments:

Anonymous said...

Verynice and back to future our life...
Super irudhaya
All the best ❣️

Irudhy.a said...

Thanks lot for your valuable comments. Anyway journey continues. Hope well.

G V SAMUEL said...

We don't know how to start our experience to script , but the writer did it the best thanks.

Irudhy.a said...

Thanks brother. Take care...

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...