About Me

Wednesday, October 12, 2022

வீதி வந்த யானையும்,கதையான நிசங்களும்

Praise the Lord...


-நிறைவில்... 

மனச்சித்திர யானை-

அன்று...



அகலமற்ற குறுகிய வீதிகளில் யானையார் பாகனோடு 

நடந்து வந்த காட்சிகள்

 அகல மறுக்கும் 

மனச் சித்திரக் சாட்சிகளாக என்றைக்கும் மனதைக் கடந்து போகாத மனச்சித்திரங்களாக, வான் மழை  மேகங்களாக மனசுக்குள் மிதக்கும. மழையென இறங்கும்.




காட்சி-1

அன்று… 

'80' -களின் மத்திமக் காலம்… 


மதுரை

'தெற்குவாசல்' பேருந்து நிறுத்தம்

(மீனாட்சி திரையரங்கம் அருகில்)

  பேருந்து நிற்கிறது. 



சன்னலோர அமர்வு எப்பொழுதும் ஆனந்த அழைப்பு. கிட்டுவது கொஞ்சம் அரிது. கிட்டும் போதெல்லாம் மதுரையின் அன்றைய சாலையோரக் காட்சிகள் கண்கொள்ளாக் காட்சிகளாக கண் முன் கடை விரிக்கும். 


கடைவிரித்த காட்சிகளில் 'யானை'குறித்த மனச் சித்திரத்தை மட்டும் பகிர்கிறேன். 

 பேருந்தின் சன்னலோரமாய் அமர்ந்து வேடிக்கை காண்கையில் இடம் வலமாய் அசைந்து அசைந்து இசைவாய் யானையார் சன்னலோரத்து அருகாமையில்   கடந்து போவார். யானையின் மேல் ஒரு கனத்த சாக்கு விரித்து பாகன் அமர்ந்திருப்பார். 



யானையை அதன் உயரத்திற்கு ஈடாகப் பேருந்தின் சன்னல் வழியே கண்ட காட்சி உண்மையில் ஆகச் சிறந்த மனச் சித்திரமாக விரிகிறது. 

காட்சி-2

கதையான நிசம்… 

   மதுரை 

ஜெய்ஹிந்துபுரம் முதல் தெரு… 


சின்னஞ்சிறு தெருக்கள். சந்து சந்தாக புகுந்து நிறைந்த காம்பவுண்டு வீடுகள். குடிசை வீடுகள் எல்லாம் கைவிரல்கள் போல குட்டையும் நெட்டையுமாக காட்சி அளிக்கும்.


முன் அந்தி மாலைப்பொழுது



மேல் சட்டை  அணியாமல் தோளைப் பற்றியுள்ள நாடா பிடித்த கால்சராய் அணிந்துகொண்டு தோஸ்த்துகளோடு 

 "ஆத்தலக்கடி… 

பூத்தலக்கடி… 

நம்பர் எத்தன?" 

விளையாடிக்கொண்டிருந்த அழகான பொழுது. 



 அற்புதமான விளையாட்டு. மொத்தம் பத்து பேர் இருப்போம். ஐந்து பேர் ஓர் அணி. மற்ற ஐந்து பேர் இன்னொரு அணி. ஒரு அணியினர்  குதிரைகளாக மாற இன்னொரு அணியினர் தனித்தனியாக குதிரை மேல் ஏறி அமர்ந்து கொள்ள வேண்டும். மேல் அமர்ந்தவர்கள் குதிரையாக மாறிய அணியினரின் கண்களைக் கைகளால் மூடுவார்கள். 


மேல் அமர்ந்த ஒரு தோஸ்த்து 

  ரைமிங்காக… 

பாட்டுக் கட்டி… 

    "ஆத்தலக்கடி… 

பூத்தலக்கடி… 

நம்பர் எத்தன?"

என தனது கைவிரல்களை விரித்து ஏதேனும் ஒரு எண்ணிக்கை காட்டுவார். 


குதிரையாகக்  குனிந்த அணியினரின் கண்களை மேல் அமர்ந்தவர்கள் கைகளால் மூடியிருப்பார்கள். மதியம் உண்ட உணவின் வாசம் கண்களை மூடிய தோஸ்த்துக்களின் கைவிரல்களில் பேசும். 

கண்களை மூடிய நிலையில்  கைவிரல்கள் சொல்லும் எண்ணைக் கணித்து ஒருவர் சொல்ல வேண்டும். சரியாகச் சொல்லிவிட்டால் மேல் அமர்ந்தவர்கள் குதிரையாக வேண்டும். குதிரையாக இருந்த அணியினர் அவர்களின் மேல் ஏறி அமர வேண்டும்.


சரியாகச் சொல்லாவிட்டால் மத்தளத்தில் ஒரு அடி விழும். குதிரைகள் ஓடும். மேல் அமர்ந்தவர்கள் நிறுத்த நிற்கும். மீண்டும் ஆட்டம் தொடங்கும். அப்படி ஒரு அதகளமான ஆட்டம் அது. 

அதகள ஆட்டம் தொடங்கி நடக்கையில் மணிச் சத்தம் கேட்டது. 



 " டொன்டாய்ங்… டொன்டாய்ங்…" 

யானையார் ஆரவாரமாக வீதி வழியே உலா வர குட்டிப் பையன்களும், சிறுமிகளும் 

"கக்க, பிக்க" … 

எனச் சிரித்து ஆரவார ஒலி எழுப்பி குதூகலக் கூச்சலோடு யானையாரைத் தொடர்ந்து வருவார்கள். 


 பாகன் சில குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக யானை மீது ஏற்றி உலா வருவார். இறக்கிவிடுவார். அவ்வமயம் யானையார் கால் மடித்து குனிந்து தன் உயரம்

குறைக்கும் அழகு ஆகச் சிறந்த அழகியல் காட்சியாக இருக்கும்.


 கதையான நிசத்திற்கு  வருகிறேன். 


யானையார் தெருவில் நின்ற படி சட்டெனத் தயாராவார். யானையாரின் தயார்நிலையை அறிந்த பாகன் மேலிருந்து கீழிறங்குவார். யானையாருக்கு சற்றுத் தள்ளி நின்றபடி தன்  காதோரம் இருந்த பீடியைப் பற்ற வைத்து புகை விடுவார்.


யானையாரின்

விசிறிக் காதுகள் அசைவாட இசைபட… 

"சொடச் சொடச்

சடச் சட

சொர் சொர்" …

எனச் சுடச்சுட வாய்க்கால் உடைபட்ட நீராக யானையாரின் உச்சா போகும் படலம்  (சிறுநீர் கழித்தல்) சில பல மணித்துளிகளில் நடந்து முடியும். 


பிறகு… 

யானையார் தள்ளி நின்று  பீடி புகைக்கும் பாகனிடம் சாடைமாடையாக கண்களில் கடுதாசி எழுதுவார். 

"ஆனது ஆச்சு. ஒரு அஞ்சு நிமிசம்" 

என்பதாகக் கண்களின்  கடுதாசி அமையும். நின்ற  பாகன் தெருவோரமே குத்த வைத்து அமர்வார். 


பிறகென்ன… 

அஞ்சு நிமிச அவகாசம் தொடங்கும். 

"தப்ப தப்பவென" 'two பாத்ரூம்' போவார் யானையார். சாக்கு நிறத்தில் கொஞ்சம் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்த வஸ்த்துக்கள். திண்ணமாக தரையில் சாக்குவிரித்தபடி கிடக்கும் அந்த வஸ்த்துக்கள். யானையார் உடம்பு சிலிர்ப்பார். பாகன் 'தோ வந்துட்டேன்' என உடன் இணைந்து கொள்வார். 


யானையார்

'போலாம். ரெய்ட்" எனக் கிளம்ப பாகன் உலாவைத் தொடர்வார். 


" ஆத்தலக்கடி "விளையாட்டு தடைபட்டு அத்தனை பேரும் ஓட்ட ஓட்டமாக ஓடி யானை விரித்த அந்த…..! சாக்கு நிறமும் இள மஞ்சள்நிறமும் கலந்த வஸ்த்துக்களில் ஏறி 

" தையத் தக்க… தையத் தக்க "

எனப் பாதங்கள்  அழுந்தக் குதித்து மிதிப்போம். கால்களின் பாதத்தில் யானையாரின் வஸ்த்துக்கள் விரல்கள் பிடித்த மருதாணியாக ஒட்டிக் கொள்ளும். அப்படியே வீட்டிற்குள் நுழைவோம்.


எனது அப்பா நக்கல் நையாண்டிகளில் 'Headmaster'. பெடலெடுப்பார். அவரை நன்கு அறிந்தவர்கள் அறிவார்கள். நான் அன்று தான் முழுமையாக அவரது நக்கலை அறிந்தேன். 

"டேய்… நில்லுங்கடா. கால்லாம் ஏன்டா இப்புடி இருக்கு. ஏதோ வாடை வருது. என்னத்தடா மிதிச்சிட்டு வர்றீங்க?" 

-என முகத்தை அஷ்டகோணலாக்கி கேள்விக் கணைகள் தொடுப்பார் அப்பா. 


ப்பா… யானை வந்துச்சுல்ல" என ஆரம்பித்து திரைக்கதை சமைத்துச் சொல்வேன். 

"ப்பா. யானை' two bath room' போனதும் அதுல….ஏறி மிதிச்சுக் குதிச்சா அறிவு வளருமாம். அதான் ஏறிக் குதிச்சோம்" - என்போம்.


அப்பா அசால்ட்டாகச் சொல்லுவார்… 

 "ம்… ஏறிக் குதிக்கிறதுக்குப் பதிலா கொஞ்சமா எடுத்து தலையில தேய்ச்சிட்டு வந்திருக்கலாம்ல"-

என நக்கலடித்து

 "சை… போயி காலக் கழுவுங்கடா"

என நகர்ந்து செல்லுவார்.


" அப்பா "உங்களை மறக்குமா நெஞ்சம்! "…

 அப்பாவுடனான  நினைவுகள் மழை மேகங்களாக மன வானில் அலையும். ஒன்றும் கலையாது மழையென இறங்கி மனதை நனைக்கும்.   அப்பா இப்பொழுது இல்லை. நினைவுகளாகச் சிறகசைத்தபடி எப்பொழுதும் மனசுக்குள்  பறப்பார்.  பறக்கிறார்.


நிறைவில் மனச்சித்திர யானை 



யானை முழுமையின் அழகு.  


சின்னஞ்சிறு வீதியில், சந்து, பொந்துகளில் இருபுறமும் கண்கள் கடை விரிக்க சிறுசுகள் முதல் பெரியவர்கள் வீதி வழி  கடந்து போகும் யானையைக் கண்டு மகிழ்வுடன் நிற்பார்கள். எவரேனும் கைகளில் வாளி நிறைத் தண்ணீரோடு தயாராக இருப்பார்கள்.

யானையார் 

"ந்தா வந்துட்டேன்ல"

என எட்டு  வைத்து மணிச் சத்த மெட்டுக் கட்டி   வாளிக்குள் இருந்த தண்ணீரைத் தன் 

துதிக்கைக்குள் நிரப்பி  

ஒரு சத்தத்தோடு…

துதிக்கையை  மேல் உயர்த்தி 

"ப்பூ" …. 

என பொறிவானமாக ஊதி இரு புறமும் நிற்கும் ஆட்கள் மேல் தண்ணீர் அபிஷேகம் நிகழ்த்துவார். மழையின் குளிர்ச் சாரலாக நிறைகிறது அந் நினைவுகள். 


நினைவுகள் சில நேரம் மீன்களாக நீந்தும். சில நேரம் பறவையாகிப் பறக்கும். 


நீந்தவோ, பறக்கவோ… 

நினைவுகள் போதும். 


தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றிகள். தொடர்ந்திடுங்கள்… 


மனச் சித்திரங்கள் தொடரும். 


                        இருதய். ஆ

















6 comments:

arun said...

வீதி வந்த யானையின் பயணத்தை நினைவுகளாக தந்தமைக்கு மிக்க நன்றி...

Irudhy.a said...

Thanks brother. தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றிகள். தொடர்ந்திடுங்கள்...

Anonymous said...

நினைவுகள் உயிர் பெற்றது...அருமை...

Anonymous said...

I read this story. It's excellent and fabulous. Keep on continue your writing and publishing. Tq very much.

Irudhy.a said...

Welcome to 'manaparavai' . Thanks for your valuable comments. Pls keep reading. Journey goes on..

Irudhy.a said...

Thanks cheta...

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...