" திருநாட்களை விட திருநாளுக்காக காத்திருக்கிற, தயாராகிற தருணங்கள் தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்.
அப்படி "முகம்" பாடலுக்காகத் தயாரான தருணங்கள் அழகான மனச் சித்திரக் காட்சிகளாக விரிகின்றன. இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன். முக்கிய வேலைகள் இருப்பின் நேரம் அமையும் போது வாசியுங்கள்.
"கொடையாய்…
புதிராய்…
இரு முகமாய்
மழையின் முகம்".
மழையோடு மழையாய் உறவாடி சொட்டச் சொட்ட நனைந்து முகமே நினைந்து முகம் தேடிக் கண்டு முகத்தை அறியும் முகமாக மனம் கொத்தும் பறவையின் முதன்மைப் பதிவாக
"முகம்"
பாடலை முன் வைக்கிறேன்.
மனம் கொத்தும் பறவையின் "காணொளி" தொடர்பாக பணிகள் மேற்கொண்ட தருணங்களிலெல்லாம் அடை மழை பெய்தது.
முகம் முழுமை பெறத் தொடங்கிய வேலையில் "மாண்டஸ்" புயல் முகம் காட்டியது. 'எடிட்டிங்' முடித்து வீடு திரும்பிய கணம் மனசுக்குள் கனம் குறைந்தது.
காத்திருப்புகளின் கதவுகள் திறந்து முகத்திரை விலகியது.
காணும் விழிகளின் சிறகசைப்பில்
இசைவாய் இசையோடு
வரும் வெள்ளி
(16-12-2022)
இரவு 7.00 மணிக்கு
'மனம் கொத்தும் பறவை' காணொளியில் உங்களின் கண்ணொளியில் "முகம்" மலரும். தொடர்ந்து கண்ணுற்று உற்சாகம் அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்…
பெய்யெனப் பெய்த மழை
நம் குணத்திற்கு மாறாகச் சில விஷயங்களை செய்துமுடித்தால்?...
"டேய். அதிசயம் டா. நீயா இதச் செஞ்ச. மழை தான்டா வரப் போகுது!"
என நம் வீட்டில் இருப்பவர்கள், நம்மை அறிந்தவர்கள் கலாய்த்து சொட்டச் சொட்ட நனைத்து நம்மைக் காயப் போடுவார்கள்.
அப்படி மழை உண்மையில் கலாய்த்துக் காயப்போட்டது. நனைந்த உடைகள் காய்ந்து போகாது இன்னமும் ஈரமாகவே கொடியில் ஊஞ்சலாடிக் கொண்டு இருக்க மனதின் ஈரம் காயும் முன் எழுதிப் பகிரவேண்டும் என முயன்று எழுதினேன்.
மனச்சித்திரங்களைத் தொடராக எழுதி வந்த நிலையில் கடந்த ஒருமாத காலமாக "மனப்பறவை" எழுத்துக் களத்தில் நான் எதுவும் எழுதவில்லை. எழுத்து கொஞ்சம் தூரமாய்ப் போனது.
"கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்"
என்பார்கள். எனது எழுத்துக்களில் இதுவரை நான் பகிர்ந்த '86' பதிவுகளும் கண் கண்டதை, கடந்ததையே எழுதினேன். என்னுடைய எழுத்துக்கள் அபாரமானவைகள் அல்ல. மன பாரம் குறைக்கவே எழுத ஆரம்பித்தேன்.
காணாமலே விசுவசிக்கிற களம் சினிமாத் துறை.
ஒரு நாள் நம் இடத்தை சென்று அடைந்து விடலாம் என நம்பிக்கையிலேயே நாட்களைக் நகர்த்தும் மனம். பல வேளைகளில் வேலை இருக்காது.
திரைத்துறையில் வேலை நிமித்தங்கள் எதிரெதிர் துருவங்களில் நிறுத்தி வேடிக்கை காட்டும்.
வேலையில் இருக்கிற போது 'மொபைல்' பறபறவென்று பரபரக்கும். ராப்பகல் தூங்கவிடாமல் பல் இளிக்கும்.
"நான் ரொம்ப பிஸியோ பிஸி"
என பவுசு காட்ட வைக்கும்.
இதற்கு எதிர் துருவமாக வேலையற்ற நாட்கள் வெயில் முகம் காட்டிச் சிரிக்கும்.
'நீ இனி துரும்புடா. கம்முனு கெட'
-என எகத்தாளம் பேசும். தொலைபேசி மெளனத்தில் தொலையும்.
வேலையில்லாத பகற்பொழுது நீளும் வானமாக நீளும். கோடையின் உச்சி வெயிலாய் மனதைச் சுடும்.
சுடு வெயிலிலும் நிழல் தரும் இடமாக எனது எழுத்துக் களத்தை அமைத்துக் கொண்டேன். மனப்பறவை தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. தொடங்குவது தான் முக்கியம். தொடங்கிவிட்டால் தொடங்கியதை நாமே தொடர ஆரம்பித்துவிடுவோம்.
"இவன்லாம் எழுதி நாம வாசிக்கிறதா"
எனக் கடக்காமல்
"அண்ணே… நீங்க வாசிங்க. நான் தூங்கணும்" - என்கிற நகைச்சுவை நடிகர் திரு. 'செந்தில்' அவர்களின் காமெடிக் காட்சி போல இல்லாமல் இன்றுவரை நான் பகிர்வதை வாசித்து உற்சாகம் தருபவர்கள் நிறைய பேர்.
தோழர்கள், சகாக்கள், தோழிகள், ஆசிரியப் பெருந்தகைகள், வெளிநாட்டில் இருக்கும் உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் கனிவான நன்றிகள். இந்த விசையோடு இசைவாய்
'மனம் கொத்தும் பறவை' காணொளி பயணத்தையும் தொடர்கிறேன்.
https://www.youtube.com/@manamkothumparavai44
"நண்பேன்டா" - என நட்பு துணை நிற்க ஒரு குடைக்குள் இணைந்த முகங்களை நினைத்தால்
"மறக்குமா? நெஞ்சம்! " என பாடத் தோன்றும்.
"மனம் கொத்தும் பறவை" முதன்மைப் பதிவாக அறியும் முகமாக அறிந்த முகங்களோடு வருகிறேன். பாடல் பதிவின் முந்தைய இரவும் நல்ல மழை. பாடல் பதிவு முடிந்த அன்றும் அடை மழை.
இச்சூழலில் காமிராமேன், காமிரா இரண்டும் உறுதியாகாமல் இருந்தது. அச்சமயத்தில் நட்பு குடை விரித்தது.
'காமிராமேன், காமிரா' எல்லாவற்றையும் இரவோடு இரவாகப் பேசி ஏற்பாடு செய்து தந்தவர் ஒளிப்பதிவாளர் நண்பர் "ஒளிக்குட்டி என்கிற வெங்கட்". நன்றிகள். பாடல் பதிவை படம் பிடித்தவரின் பெயர் 'சாமி' . சாமிக்கு நன்றிகள்.
அறிந்த முகங்கள்
" நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். திண்ணையில் அமர்ந்து ஊதி ஊதித் திண்ணலாம்" - என்றில்லாமல்
கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் சரியாகவே வரும் நட்பின் கணக்கில் எல்லாம் இனிதே நடந்தது.
"முகம்" முதற் பதிவின் தலைப்பு "கார் களம்". "காலம்" என்ற எழுத்து களமாக மாறி" கார் களம்" என விரிய காருக்குள்ளேயே மனம் கொத்தும் பறவையின் அறிமுகப் பதிவிற்கான script - ஐ எழுதி முடித்து single shot-ல் எடுக்க முடிவு செய்து காமிராமேன் ஜித்தேஷிடம் காட்சிகளைச் சொன்னேன்.
" நல்லாருக்கு. எடுக்கலாம்
சார் "என்றார். shooting செல்ல வாடகைக்கு கார் அமர்த்தி எல்லாம் முடிவு செய்து அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து சன்னல் திறந்த போது மழை பெய்து கொண்டிருந்தது.
மழைச்சூழல் எல்லாவற்றையும் மாற்றியது.
நான் எதிர்பார்த்தபடி பாடல் நன்றாக அமைந்தது. பாடல் தொடர்பாக நான் திட்டமிட்டபடியே காட்சிப்படுத்தும் சூழல் தான் ஏனோ? அமையவில்லை.
இருப்பினும் என்னிடம் இருந்ததைக் கொண்டு பாடலை முடித்திருக்கிறோம்.
சில காட்சிகளை எனது மொபைலில் எடுத்துச் சேர்த்திருக்கிறேன்.
ஒரு sharpener, சிறு பென்சில், டபுள் டேப் துணை கொண்டு மகன் 'gabree'
"கிடார்" செய்து கொடுத்தான். அதை வைத்து "End Titling video" தயார் செய்தேன். அவனுக்கு 'பென்சில் பாக்ஸ்' வாங்கச் சென்றபோது 'சாக்ஸபோன்' வாசிக்கும் ஒரு பொம்மை கண்களில் பட அதை வாங்கி "முகம் டைட்டில்" தயார் செய்தேன். இப்படி நோக்குவன எல்லாம் முகத்தின் உருவாக்கத்திற்கு பயன்பட்டது. எல்லாம் இறைவன் அருள் என்பதே உண்மை. என் பலம் என எதுவும் இல்லை.'பஃபூன்' திரைப்பட எடிட்டர் சகோ. 'வெற்றி' 'முகம்' பாடலை எடிட் செய்ய விரும்பினேன்.
அவர் தான் நான் இயக்கிய "chennai Homes" விளம்பரப் படத்தை எடிட் செய்தார். அவருக்காகக் காத்திருந்தேன்.
படவேலைகளில் பிஸியாக இருக்கவே முடிவை மாற்றி என்னோடு கடந்த ஒன்பது வருடங்களாகப் பயணிக்கும் வசந்தை வைத்து எடிட்டிங் முடித்தேன். வசந்த் என்னோடு முகம் காட்டியதோடு எடிட்டராகவும் எனக்குத் தோள் கொடுத்தார். நன்றிகள்.
சசிகலா தயாரிப்பு நிறுவனத்தில் அறிமுகமான "ராஜ்" பாட்டு வரிகளை டிசைன் செய்துகொடுத்தார்.
பல காத்திருப்புகளைக் கடந்து எல்லாவற்றையும் தாண்டி நிறைவாய் முடிக்க
"தேவனின் கிருபை" மனசுக்குள் குடை விரிக்க எல்லாம் இனிதே முடிந்திருக்கிறது.
முகப் பதிவுகளில் எனது முகம் காட்டக் காரணம் எனது அப்பா தான். அப்பா உயிரோடு இருந்தபோது எனது துறை சார்ந்து எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. 'இப்ப என்னடா பண்ற?' என்றெல்லாம் கேட்டதே இல்லை. 'உம் முகத்த டிவில காட்றா' என்பார். நான் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். எனக்கு விருப்பம் இருந்ததில்லை. அதை இப்பொழுது மனம் கொத்தும் பறவை காணொளியின் மூலம் நிறைவேற்றிக் கொண்டதாக நினைக்கிறேன். நடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் நான் நடிக்க விரும்பவில்லை. அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கலாமோ? என இப்பொழுது எண்ணத் தோன்றுகிறது.
"முகம்" - அறிமுகப் பாடலை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.
நம்மை நேசிப்பவர்கள் உடன் இருக்கும் போதே அவர்கள் விரும்பிய வண்ணம் நம் வண்ணம் அமைந்துவிட்டால் அது பெரிய கொடுப்பினை. உண்மை தானோ?..
செப்டம்பர் முதல் எழுந்த சிந்தனை டிசம்பரில் முழுமை பெற்றிருக்கிறது.
தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றிகள்.
12 comments:
Dear brother write about christmas Carol's thanks
நம்மை நேசிப்பவர்கள் உடன் இருக்கும் போதே அவர்கள் விரும்பிய வண்ணம் நம் வண்ணம் அமைந்தால் வாழ்க்கை வரம்
வாழ்த்துகள்...All the Very best... WAITING...
வாசித்தமைக்கு மிக்க நன்றி...
Sure brother.. Thanks for ur valuable support. Take care.
Thank you...
அருமை
Thank you. வாசித்தமைக்கு நன்றி...
சாதிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணமே உங்களை வெற்றியாளராக்கும். வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. வெற்றியும், தோல்வியும் வாழ்வின் இலக்குமல்ல. அளவுகோலுமல்ல. அக்கணம் வாழ்தலே வாழ்வு என்று வாழ முயல்கிறேன்.
Your lyrics , very touching . today itself i watched. My blessings and wishes to you bro. Payanam thodarattum.....
Thanks lot for your valuable comments. Take care...
Post a Comment