About Me

Monday, January 30, 2023

"சிறகுகள்"


சற்றே நீண்ட பதிவு. பல நிறுத்தங்களில் நின்று செல்லும்  இடைநிறுத்தம் பேருந்துப் பயணம் போல பதிவைத் தொடருங்கள். 



"டேய் எப்புட்றா!" 


-ஒரு சிறுவனின் குறும்பதிவு காணொளியில் வைரலானது. தனியே வலைக் காட்சிகளில் சிறுவன்,சிறுவனது பெற்றோரின் 

நேர்காணல்கள் இடம் பெற்றதை கண்டிருப்பீர்கள். 


புரியாத புதிர்


காணொளிப் பதிவுகள் பதிவேற்றம் முடிந்து தொடரும் பார்வைக் கணக்குகள் எப்பொழுதும்  புரியாத புதிராகும்.


சில காணொளிப் பதிவுகள் 

கானலாகி காணாக் காட்சியாகும். சில காட்டுத் தீயாகி பற்றிப் பரவும். 

"டேய் எப்புட்றா" காட்டுத் தீயானது.


காணொளிப் பயணம் மலையாகி மலைக்க வைக்கலாம். இல்லையெனில் மோட்டுவளை பார்த்தபடி "இதத் தொடரலாமா? இல்ல வுட்ரலாமா?" என யோசிக்க வைக்கலாம். 


இதுவும் கடந்து

" மாத்தி யோசிடா"… என்றபடி காதோரம் கிள்ளி  மனதை மடை மாற்றலாம். இவை எவைகளுமற்று நான் என்னிடம் கேட்டது, கேட்பது ஒரு கேள்வி தான். 


அந்தக் கேள்வி… 


 " டேய் எப்புட்றா? "


உண்மையைச் சொல்கிறேன். "காணொளி" தொடங்கும் எண்ணம் எனது ஆறேழு வருட யோசனை. கடந்த வருடம் கூட ஒரு பெயரிட்டு விரைவில்

" your tube"  என status தட்டினேன். 


அதோடு சரி. அந்த எண்ணம் காற்றில் அறுபட்ட பட்டமாகி காற்றுவாக்கில்  பறந்து போனது.  ஆனால், இப்பொழுது காற்றுவாக்கில் இரு வேறு தளங்களில் பயணிக்கிறேன். 


 எனது பதிவுகளைக் காணும் நட்புடை அன்பர்களின் விழிகளின் சிறகசைப்பில் தான் இப் பயணங்கள் சாத்தியமாகிறது. அன்பர்களுக்கு நன்றி… 


Once upon a time… 


மனப்பறவையில் எழுதிவந்த நிலையில்… 

2022- ல் மீண்டும் காணொளி எண்ணம் தலையெடுத்தது.




"பத்தோட பதினொன்னு. அதுல நீயும் கண்ணு. சும்மா ஸ்டார்ட் பண்ணு" என்று மனம் சிறகு விரிக்காமல்  கியர் தட்டியது. ஆரம்பிக்கலாமா? என்று மனம் கேள்வி எழுப்ப கியர் தட்டிய வண்டி


" sorry Dear. இதெல்லாம் ஆவுறதில்ல. வேற சோலியப் பாரு" என 'சைடு ஸ்டாண்டு' போட்டு வண்டியை நிறுத்திவிட்டு போயே போய் விட்டது. 


"எதிர்பார்க்காததை எதிர்பார்த்துக் காத்திருங்கள்" எனும் "பிக்பாஸ்" வசனம் காதுகளுக்குள் 'குன்னாங்குன்னா குர்' எனக் கத்தியது. 


ஆறேழு வருட எண்ணம் 'ப்ளான்' பண்ணாத ஒரு கணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்தது. 



படிக்கிற காலத்தில்… 


" It அது But  ஆனால் what என்ன?" 


என்கிற  கேள்வியை எதிர் கொண்டு புரியாது விழித்த போது 

"டேய் மக்கு இதுக்கு பதில் தேடுறியா? 

கேள்வியிலேயே பதில் இருக்கு"

என பின்புத்தி தலையில் தட்டியது. 


 இப்போது விழிகள் திறக்க ஒரு விஷயம் மட்டும் மனசுக்குள் ஆழமாய் வேரூன்றுகிறது. 


முன்னெடுக்கிற விஷயங்களில் தீராக் காதல் இருந்தால் வாழ்க்கை தன் தீராத பக்கங்களை நாம் எழுதித் தீர்க்க கணக்குப் பார்க்காமல் தந்து கொண்டே இருக்கும். 



"மனம் கொத்தும் பறவை"


காணொளி தொடங்கி நிறையக் காத்திருப்புகளைக் கடந்து" முகம் "என்ற பாடலை முதன்மைப் பதிவாக்கி சிறகு விரித்தது

"மனம் கொத்தும் பறவை". 



வான் வெளியில் சிறகு விரிக்கும் பறவை பறக்கிற பிற பறவைகளோடு தன் உயரத்தை ஒப்பிடாதது போல மனம் கொத்தும் பறவையும் ஒப்புமைகளற்ற வெளியில் பறக்க முயலும். 


காணொளிப் பதிவுகளைக் கண்ணுற்று உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள்.

பதிவேற்றிய பதிவுகள் பிடித்திருந்தால் அறிந்தவர்களுக்குப் பகிருங்கள். இதை எனது  விண்ணப்பமாக எண்ணிக்கொள்ளுங்கள். 
Pls subscribe 
"மனம் கொத்தும் பறவை" 
        "Manam kothum paravai" 
Thanks lot... 

"முகம்" பதிவிற்குப் பிறகு



" என்ன செய்வதாகத் திட்டம்?" என சில நண்பர்கள் கேட்கையில் திட்டங்கள் எதுவுமில்லை என்றேன். 


காணொளிப் பயணம் '100 மீட்டர்' ஓட்டப் பந்தயமல்ல. 'மாரத்தான்' ஓட்டம். மன்னிக்கவும். மாரத்தான் ஓட்டம் எனக் கூடச் சொல்ல முடியாது. எல்லோருக்கும் பிடிக்கும் "நீளும் வானம்" எனச் சொல்வது தான் சரியாகுமோ?


காணொளிப் பகிர்வில் பார்வைக் கணக்குகளை முன்னிறுத்தி  பகிர்வை முன்வைத்தால் பல்லக்குத் தூக்கியாக்கி கை நிறைய பாரத்தோடே நடக்க வைத்துவிடும். 


பறவைகளைப் போல ஒப்புமைகளற்ற வெளியில் பகிர்வில் பார்வைகள் குறித்த கவலைகளற்று மனம் விரும்புவதை எண்ணியதைப் பகிரவே முயல்கிறேன். 


"நிற்க. அதற்குத் தக" 



கதவைத் தட்டிவிட்டு அறைக்குள்  நுழைகிற கண்ணியம் நமது கண்ணியம். 


ஆனால் இன்றைய சூழலில் முகம் காட்டாமல் நினைத்த நொடிகளில் எதிர் முகத்திற்குள் பிரவேசிக்கிற சூழல் கைப்பேசியின் சுழல். 


நாம் விரும்பாமலே, கேட்காமலே நிறைய குறும்பதிவுகள், செய்திகள், தகவல்களை கைப்பேசி நம் கண் முன்னே நிறுத்துகிறது. 


நானும் விதி விலக்கல்ல.  'முகம்' பாடலை எனக்கு அறிமுகமான பெரும்பாலானவர்களுக்குப் பகிர்ந்தேன். 


பகிர்ந்தவுடன் பலரிடமிருந்து பதில் பறந்து வந்தது. பதில் தராதவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த வருத்தமும் இல்லை. அவர்களின் எல்லைக்குள் நுழையும்  தகுதியோ அல்லது அனுமதியோ எனக்கில்லை என எண்ணிக் கொள்கிறேன். 


முடிந்தவரை நினைத்த மாத்திரம் பகிர்வுகளை எல்லோருக்கும் பகிர்வதை தவிர்க்கவே முயல்கிறேன். சமூக வலைத்தளங்களில் பகிர்கிறேன். விரும்பியவர்கள் பார்க்கட்டும் என்பதே எண்ணம். 


இதோ… 

"மனம் கொத்தும் பறவை"யில்

வாராந்திரப் பதிவாக 


Promo


https://youtu.be/tWtybmOl5WM

"காதோரம் கேட்கும் பாட்டு" 

தொடங்கவிருக்கிறேன். முதற்பதிவேற்றம் சில காரணங்களால் தாமதமாகிறது. 


இதற்கிடையில் இராமாயண "இலக்குவன்" பற்றிய பதிவைப் பகிர்ந்தேன். வரவேற்புகள் இருந்தும் நீக்கினேன். சில மாற்றங்கள் செய்து மீண்டும் பதிவேற்றம் செய்தேன். 


காரணங்களை மனம் கொத்தும் பறவையில் தொடரும் காணொளிப் பதிவில் பகிர இருக்கிறேன். 

"காணொளிப் பதிவ பார்க்க சமிக்ஞை குடுக்குற" 

தங்களின் நினைப்பு சரியே. "தட்டுங்கள் திறக்கப்படும்" வேத வசனம் நினைவில் சிறகசைக்கிறது. 


வரும்  சனிக்கிழமை 

"காதோரம் கேட்கும் பாட்டு"



நிச்சயம்  கேட்கும். 

ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9.00மணிக்கு பதிவேற்றமாகும்.

தங்களின் ஒய்வான வேளையில் காணுங்கள். நிர்பந்தங்கள் எவையும் இல்லை. 


எதிர்பார்ப்புகளற்ற வெளியில்


அறிந்த முகங்களும், அறியா முகங்கள் பலரும் கண்ணுற்று உற்சாகப்படுத்துகையில்… 


"டேய். எப்புட்றா!? " 


என்கிற ஆச்சரியங்கள், மனசுக்குள் குடை விரிக்கின்றன.


"கவிதைகள் பழகுபவன்" 

அண்ணே…  நான் இந்தப் பதிவ நிறைவு செய்கிறேன் என கை உயர்த்துகிறான்.


"சரி பழகிட்டுப் போ" 

என்கிறீர்கள். மிக்க நன்றி. 


"கடற்கரை… 





இக்கரையில் நான்… 

அக்கரை...


குறித்த அக்கறை இல்லை. 

கடற்தரையில்

கரை ஒதுங்கும்

சிப்பிகளைச் சேகரிக்கும்

சிறு பிள்ளையாகிறேன்… 

பறவையின்

சிறகுகளாகிறது…

மனம் தினம்!"… 


மனக் கணக்குடன் நிறைவு செய்கிறேன்


1+1=3

     " டேய் எப்புட்றா" 

 கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தப்பும் கணக்கு. கூட்டணியில் மட்டுமே சரியாகும் இக் கணக்கு. 


" என்ன கூட்டணி?" 

சில பதில்களைச் சொல்லாமல் விட்டாலும் பதில் விளங்கும். உண்மை தானே.


தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றிகள்…


மனப்பறவை பறக்கும்…


                                - இருதய். ஆ

















Tuesday, January 3, 2023

பனித்துளி...

Praise the Lord... 



மிக  நீண்ட பகலும், மிக நீண்ட இரவும்    ஒரு வருடத்தில் எப்பருவநிலையில் நிகழும்?  

' ஒரு எட்டு கூகுள் அண்ணாச்சியின் வலைச்சந்தைக்குள்ள  போனா  கண்டுக்கலாம்' 

என எண்ணி விரல்கள் கைப்பேசியை எடுக்க தொடுதிரையின் முகத் திரை இருள் நிறத்தில் அமைதியாக இருந்தது.   கைப்பேசியின் அமைதிப்பேரணியைக் கலைக்க மனமில்லாமல் மனம்  ஆராய்ச்சி அறிவைக் கடந்து மோட்டுவளையைப் பார்த்து யோசிக்க… 

"வேலையற்றவனின் பகற்பொழுதும், உறக்கம் தொலைத்தவனின்  இரவுப் பொழுதும்  தான் மிக நீண்டது"

ஆராய்ச்சிகளற்று அக்கம்பக்கம் பார்த்து அறியும் அறிவு சொல்லியது.


(வி)சித்திர இரவு



பகற்பொழுதைக் காட்டிலும் விசித்திரங்கள் விழித்துக் கொள்ளும் இரவே மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. சப்தங்களற்ற இரவுப்பொழுது   இரைச்சல் நிறைந்த மனதிற்கு எப்பொழுதும் இன்பச் சுற்றுலா தான். 


நெரிசல் மிகுந்த பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறி பயண தூர இடைவெளியில் இருக்கை தேடும் கண்களைப் போல இரவின் தனிமையை மனம் தனதாக்கி இருளின் நிறத்தை  ஆடையென உடுத்திக்கொள்ளும். 

இருளே ஒளியாகி விழிகளில் விளக்கேற்றும். 


"இருள்" என்பது குறைவான "ஒளி" ஆதர்ச ஒளிப்பதிவாளர். மதிப்பிற்குரிய "பி.சி.ஸ்ரீராம்" அவர்களின் கருத்தியல் இது. 

இருளுக்குள்ளும் ஒளி காணும் இயல்பு கண்களுக்கு உண்டு. 


இரவை  "ரகசிய சிநேகிதன்" என விளிப்பது இயல்பு. எனக்கு அப்படித் தோன்றவில்லை.



கோடிக்கண்களால் நட்சத்திரங்கள் விழித்திருக்கும் இரவில் ரகசியங்களுக்கு ஏது இடம். 


இரவு தன் முகம் காண்பவனின் மனநிலைக்கு ஏற்ப  தன் முகம் காட்டும். 'இரவு' எனக்கு கதைகள் பேசும் தோழன். 


ஆதர்ச எழுத்தாளர் மதிப்பிற்குரிய. திரு. ஜெயமோகன் அவர்களின் "இரவு" நாவலை வாசிக்கிற போது அருகாமையில் இரவும் இருக்கையிட்டு அமர்ந்து கொள்வதாகத் தோன்றும். அருமையான நாவல். இரவில் வாழும் மனிதர்களின் வாழ்வு அற்புதமாக கண்முன் விரியும். 


இரவு வாழ்வு மனித உடலின் உடற்கூற்றுக் கோட்பாடுகளுக்கு எதிரானது என புற அறிவு "நொய்…நொய்" என்று  தொணதொணக்கும். 


தொடர்ந்து இரவில் விழித்திருந்தால் உடல் ஓய்வே கொள்ளாது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி அறிவு. ஆராய்ச்சி அறிவைப் புறந்தள்ளுகிறது விசித்திரங்கள் விழித்திருக்கும் இரவு. 


ஊரெல்லாம் உறங்குகையில்

       கோடிக் கண்களால் 

விழித்திருக்கிறது வானம்! 

      விழிகள் திறக்கிறது ஆகாசத்தின் மௌனம்.

       தேடலின் பொருட்டே 

உறக்கம் தொலைகிறது. 


தேடுவதும், 

தொலைவதும்

தோற்பதும், வெல்வதும்… 

இரவின் விடியலில் சூரியனைக் கண்ட பனியாகக்

காணாமற் போகும். 



"ஸப்பாடி" 'பனி'-ங்கற சொல்லுக்கு வந்துட்டேன். இந்தப்பதிவோட தலைப்பு 


"பனித்துளி"... 


போலாம் ரெய்ட்… 


பனிக்கால இரவுகளில் இலைகளின் மீது உறங்கும் பனித்துளி விடியலில் கதிரவன் விழிக்க கண் முன்னே மறைகிற கடன்காரனாக காணாமற் போகும். 



பனியின் ஆயுளை வெம்மையே தீர்மானிக்கிறது.


" அனல் மேலே பனித்துளி" 'வாரணம் ஆயிரம்' திரைப்பாடல். 

எப்பொழுது கேட்டாலும் "கேளுங்க. கேளுங்க. கேட்டுக்கிட்டே இருங்க…"என காதுகளிடம் 'Recommend' பண்ணும். 


கண்ணாடி & பனித்துளி



வெம்மை கண்டால் சட்டென உலரும் பனித்துளி உலர்ந்துபோவதற்கு முன் எதிர்முகங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாகிறது. ஒரு சிறு பனித்துளி சூரியனையே பிரதிபலிக்கிறது. பின்  உலர்ந்து போகிறது. 


இறுகப் பிடித்த கரங்களின்  வழியே நீராய்க் கசிந்து  கரைந்து வெளியேறும் பனித்துகள்கள் போல காலம் கரைந்து நம் கண்களின் வழியே கடந்துபோகிறது. 


பனித்துளியாக, பிரதிபலிக்கும் கண்ணாடியாக கடந்தகாலம் சிலபல  மாயங்களை, வித்தைகளை, அற்புதங்களை  கண்முன் காட்டி கபடி ஆடியது. 


தன் அணியின் இன்னொரு  ஆட்டக்காரனாக புதிய வருடத்தை "போய் பாடி வா"  என நம் எல்லைக்குள் சடுகுடு ஆட அனுப்பிவிட்டது.


புதுவருடத்திற்கு மனப்பறவையில்  என்ன எழுதலாம்? என இரவின் நிழலில் அமர்ந்திருக்கையில் 'டிசம்பர் பனி' சில்லிட்டு பனித்துளியாக கைகள் சேர்ந்தது. 



பனித் தலைப்பை இறுகப் பிடித்து எழுத எழுத கரைந்து காணாமல் போகும் பனித்துகள் போல கடந்த வருடம் மனம் தொலைத்த தருணங்களில் முட்டிக்கொண்டு மீண்டும் தன்னைத் தேடியது. தொலைத்தது பொருள் இல்லை. எனது அப்பாவின் இருப்பு. 

பனித்துகள்கள் போல பிரதிபலித்து கரைந்து கடந்துபோனார் அப்பா.


அனல் மேலே பனித்துளியாக கடந்த கணங்களை மறக்கமுடியாது.

கடந்து போன நாட்களில் சிலபல தருணங்கள் மனதிற்குள் வெம்மையைக் கடத்தியிருக்கலாம். வெம்மை ஏற்படுத்திய வெறுமைகளைக் கடக்க காலம் கற்றுக்கொடுக்கும். கடக்க முயலும் மனதோடு விசையுறு பந்தாக மீளமுடியும்.


"புதிதாய்ப் பிறத்தலே பூக்களின் வேதம்"

நான் எழுதிய வரிகள். உலகில் என்ன நிகழ்ந்தாலும் பூக்கள் பூக்கத் தவறுவதில்லை.



இதழ்கள் விரிக்கும் பூக்களைப் போல புதிய வருடம் கரங்கள் விரித்து நிற்கிறது. 


வீதியிறங்கி நடக்கையில் தகப்பனின் விரல்களோடு கைகள் பிடித்துக் கொண்டு நடை போடும் சிறுவன் போல புதிய வருட நாட்களின் நகர்வில் கடிகார முட்களோடு தன்னைப் பிணைத்துக்கொள்கிறது மனம். 


கடிகார நகர்வில் முட்களின் பாதையில் 

பூக்களும் இருக்கலாம்!

       பயணமே அழகு… 

        பயணிக்கலாம். 

மனதிற்குச் சிறகு

 முளைக்கலாம். 


புத்தாண்டு உறுதிமொழி. 

"இன்னிக்கு இல்லைனா என்ன? நாளைக்குப் பார்த்துக்கலாம். 


   நாளைக்கும் இல்லைனா??? 

நாளான்னைக்குப் பார்த்துக்கலாம்" 


 "நாளை" என்பது நாளல்லவே. அது நம் நம்பிக்கையே. 


"அனல் மேலே பனித்துளி" பாடலைப் போலவே மனதிற்கு நெருக்கமான இன்னொரு பாடலும் உண்டு.


'பாண்டவர் பூமி' திரைப்படத்தில் இடம்பெற்ற

"அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்.

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய

நிலாக் காலம்"

கவிஞர். திரு. சிநேகன் அவர்களின் பாடலோடு முடிக்கிறேன்.



நீளும் வானமாக வாழ்வு… 

மனம் இரு சிறகு! 

மனப்பறவை பறக்கும்…


இருதய். ஆ














அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...