About Me

Thursday, April 27, 2023

இன்பனும், இதய மிட்டாயும்...



      'ஏப்ரல்' மாதம் சூட்டோடு சூடாகத்  தனது ஓட்டத்தை ஓடி முடித்து  இறுகப் பிடித்த சூட்டை தயார் நிலையில் இருக்கும் 'மே' மாதக் கரங்களில் இம்மி கூட மிச்சமில்லாமல்  இறக்கி வைக்கப் போகிறது.  


       "இந்த ஏரியா… அந்த ஏரியா… எல்லா ஏரியாவும் இனி சும்மா அனல் பறக்க விடுவம்ல. 

எதிர்த்து நின்னா 'டெபாசிட்ட' காலி பண்ணிடுவோம். ஓரஞ்சாரமா ஒதுங்கிக் கடந்து போயிருங்க"  

            என ஏக வசனம் பேசும் 'மே' மாதம். 


"பேச்சு பேச்சாதான் இருக்கணும். என்ன கொளுத்து கொளுத்துனாலும் 'தாங்குவம்ல' என கோடை கொண்டாட்டங்களும் ஒரு பக்கம் கலை கட்டும். 


வெயிலாய், மழையாய் எதிரெதிர்  முகம் காட்டும் 'கோடை' மெய்யாகவே தெய்வம் தந்த கொடை என்றால் எவருக்கேனும் காதுகள்  சிவக்குமா? 


  " மழை மட்டுமா அழகு. சுடும் வெயில் கூட அழகு" 

'சைவம்' திரைப்படப்பாடல்

 காதுகளில் ரீங்காரமிடுகிறது. 



 "சித்திரைக் கதைகள்"- னு சொல்லிட்டு சுள்ளெனும் வெயிலை விவரிக்காமல் எப்படிக் கதைக்குப் போவது. அதான் இந்த 'வெயில் அறிமுகம்'. போதும்னு நெனக்கிறேன். கதைக்குப் போகலாம். 


சித்திரைச் சிறுகதைகளில்… 


கதை எண் - 3



      'குளுகுளு' வசதிகளோடு பன்னாட்டு நுகர்வோர் அங்காடி 'புதுமாப்பிள்ளை' போல உம்மென்று இல்லாமல் மாப்பிள்ளையின் நண்பர்களைப் போல சிரிச்சாப் போல சும்மா ஜம்மென்று வந்தவர்களை வரவேற்றது. புதிய பகுதியில் பயணத்தைத் தொடங்கி ஒரு வாரம் கடந்து விட்டது. 



இன்பனின் அலுவலக எதிரில் தான் இந்த அங்காடி இருக்கிறது என்றாலும் இன்பன் இன்னமும் அங்காடிக்குள் எட்டு வைக்கவில்லை. 


'இன்பன்' வேறு யாருமல்ல. உங்களில் ஒருவன். இல்லை. இல்லை. நம்மில் ஒருவன் என்பதே சரியாக இருக்கும். 



அன்று விடுமுறை தினம்… 


காலை 11.00மணி


'அங்காடிக்குள்ள போயி ஒரு எட்டு பார்த்துட்டு வரலாமா?' என்ற எண்ணம் இன்பனின் காதோரம் தினம் கிசுகிசுக்கும். கிசுகிசுப்பு 'கியர்' தட்டி இன்பனை அங்காடிக்கு கூட்டியே வந்துவிட்டது. 



   இன்பன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மூச்சிறைக்க சரிவிலிருந்து மேட்டுப் பகுதிக்கு நடந்து, மன்னிக்கவும் ஏறிக் கொண்டிருந்தார் எனச் சொல்வதே உத்தமம். 


வலது கைகளுக்குள் அடங்கியிருந்த வாகன நிறுத்த வாடகைச் சீட்டின் ரசீது சற்றே  பாரமாக இருந்தது. 


வாகன நிறுத்த வாடகைத் தொகை சீட்டுத் தாளில் ஏறி அமர்ந்து 'அட்னக்கால்' போட்டு பல் இளித்தது. 


வெளிப்புற வெயில் மட்டுமல்ல இரண்டு மணி நேர வாகன நிறுத்த வாடகையும்  சதமடித்திருந்தது. கூடுதலாக ஆகும் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் '25 ரூபாய்' வசூலிக்கப்படுவதாக பின் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. 'பார்றா.இது வேறயா?'... 


இந்நேரம் 'இன்பன்' இருக்குமிடத்தை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 


 விரைவாக ஏறி நன்கு குளிரூட்டப்பட்டிருந்த புதிதாகத் திறக்கப்பட்டிருந்த

  பன்னாட்டு நுகர்வு அங்காடிக்குள் நுழைந்தார் இன்பன். 


எப்பேற்பட்ட வெயிலாக இருந்தாலும் அங்காடிக்குள் அனுமதி இல்லை போலும்!. 


"குளு குளு வெண்பனி போலே" 

-என பாட்டுப் பாடத் தோன்றும். அப்படி ஒரு 'ஜில்லோ… ஜில்! '.

அங்காடிக்குள் நுழைந்தவுடன் இன்பனின் மனம் இதைத் தான் உணர்ந்தது. அப்படியே நின்றுகொண்டு அன்னார்ந்து பார்க்க ஏதோ அதிசய உலகம் போலத் தோன்றியது. 


சரி நேரம் ஓடுகிறது. இரண்டு மணி நேரத்தை தாண்டிவிடாமல் சும்மாக்காட்டிக்கு ஒரு சுற்று சுற்றி வரலாம். ஆங்கிலத்தில்

'Window shopping' என்பார்களே. 'சாட்சாத்' இன்பன் இதற்காகத் தான் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது. 


 அங்காடிக் கடைகளுக்குள் இருந்த ஆட்களை விட அங்காடியின் வெளிப்புற வளாகத்தில் தான் கூட்டம் களைகட்டியது. 


"சோடி போட்டுக்கலாமா…         சோடி"... 

  • எனும் விதமாக சோடிசோடியாகச் சுற்றியவர்கள் தான் அதிகம்.

கடை நடத்துகிறவர்களுக்கு எப்படி கட்டுப்படியாகிறது எனத் தெரியவில்லை. கட்டுப்படியாகும் சூட்சுமம் கதையின் முடிவில் தெரிந்துவிடும். 


எல்லாவற்றையும் பார்க்கிறபோது

       'என்னமோ போடா மாதவா!' … நகைச்சுவை நடிகர் திரு. 'ஜனகராஜ்' அவர்களைப் போல சொல்லத் தோன்றுகிறது. 


ஒவ்வொரு அங்காடியும் ஒரு ரகமாக இருக்க பொருட்கள் தங்கள் விலையைச் சற்றே உசத்தியாக உயர்த்திப் பிடித்திருந்தன. 

  

'பார்க்க', 'ரசிக்க' என்ற படியே வண்ணமயமான அங்காடிகளைக் கடந்தார் இன்பன். 


கடைசியாக ஓர் இனிப்பக அங்காடிக்குள் நுழைந்து சுற்று முற்றும் பார்க்க  பன்னாட்டு இனிப்பு வகைகள்

 'தக தக... ஜிகு ஜிகு...' மினுமினுப்பு கூட்டி பந்தாவாக அமர்ந்திருந்தன.


பதவிசாக பகட்டாக அலங்கரிக்கப்பட்ட சிறுசிறு கண்ணாடிப் பெட்டிகளுக்குள் இருந்த இனிப்பு வகையறாக்கள் இன்பனுக்கு 'இன்விடேசன்' தந்து வரவேற்றன. 


'சிக்குவேனா பார்' என பார்த்தபடியே அத்தனை பெட்டிகளையும் கண்சிமிட்டியபடியே கடந்தார் இன்பன். கடைசியாக இதய வடிவில் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டிக்குள் இன்பனின் இதயம் சிக்கிக் கொண்டது. சிவந்த நிற இதய மிட்டாய்களைக் கண்டார் இன்பன். 



"அட!... இந்த மிட்டாய்கள எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே" என பெட்டியைக் கையில் எடுத்துப்பார்க்க 

" Handy heart  bites" என நாமகரணம் சூட்டப்பட்டிருந்தது.



உள்ளே  

  '15 மிட்டாய்கள்' பல் இளித்தன. விலை "300 ரூபாய்" என பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்க  'இதய மிட்டாய்' விலை இருதயத்தை இடம் மாறித் துடிக்க வைத்தது. 


இன்பன் சற்றே யோசித்து உணர்வு வயப்பட்ட நிலையோடு 'அட காசு கெடக்கு. இந்த மிட்டாய்களும், பெட்டியும் அம்புட்டு அழகா இருக்கு. வாங்கிட்டுப் போய் இனியன்கிட்ட தந்தா எம்புட்டு சந்தோசப்படுவான்' மனம் 'றெக்கை' தட்டியது.



மகன் இனியனுக்காக மற்ற சிந்தனைகளை புறந்தள்ள முடிவில் விலைரசீது கைக்கு வந்தது.


 300 ரூபாயைத் தேய்க்கத் தயாராக இருந்த இன்பன் சற்றே ஏமாற்றம் அடைந்தார்.

 "பில் தொகை பிம்பிளிக்கி பிலாபி" என்றபடி மதிப்புக் கூட்டு வரி பிறகு அந்த வரி, இந்த வரி எல்லாம் சேர்த்து  '375 ரூபாய்' என்றது.


' பார்றா. இது வேறயா?'

தொகையைத் தேய்த்து இதயவடிவ மிட்டாய்ப் பெட்டியை கையகப்படுத்தி விரைவாக இருசக்கர வாகன நிறுத்தம் நோக்கி நடையைக் கட்டினார் இன்பன். 


நல்ல வேளை... 

இரண்டுமணி நேர அவகாசம் முடிய இன்னும் ஐந்து நிமிடங்கள் பாக்கி  இருந்தது. ஐந்து நிமிட பாக்கியோடு பல்துறை கண்கவர் நுகர்வு அங்காடியின் எல்லைக் கோட்டைக் கடந்தாகிவிட்டது. வெளிப்புறம் வந்து அன்னார்ந்து பார்க்க வானில் கதிரவன் உச்சம் தொட்டிருந்தான். 


வீடு வந்து சேர்ந்ததும் சிரித்த முகத்தோடு "எவ்வளவு அடிச்சாலும் தாங்குவம்ல" என்ற படி தன் மகன் முன் இதயவடிவ மிட்டாய்ப் பெட்டியை  நீட்டினார் இன்பன். 



மகன் புன்சிரிப்போடு பெட்டியை வாங்கினான்.  

"அப்பா மிட்டாய் பெட்டி சூப்பரா இருக்கு!. மிட்டாய் தீர்ந்ததும் கீழ போட்றாம என்கிட்ட குடுத்துருங்க. நான் பத்திரமா வச்சுக்குவேன்' என்றான். 


" சரிப்பா. மிட்டாய் சாப்பிட்டு எப்புடி இருக்குனு சொல்லு" என்ற அப்பாவின் குரலுக்கு பச்சைக்கொடி அசைத்து சிவந்த நிற இதயவடிவ மிட்டாய் பெட்டிக்குள்ளிருந்து இரண்டு மிட்டாய்களை எடுத்தான்  இனியன். 


"அப்பா, ஒண்ணு உங்களுக்கு இன்னொன்னு எனக்கு. சாப்பிடுங்க. அம்மாவுக்கும் தரணும்" என பாசக்கார மகனாக  கைகளுக்குள் இதய மிட்டாயைத் திணித்தான்.


இன்பனும்,இனியனும் இதயவடிவ மிட்டாயை "சவக்கு, சவக்கு" என மெல்ல மிட்டாயின் சுவை இன்பனின் மண்டைக்குள் பழைய குண்டு பல்பை எரியவிட்டது.


"அட... இது நம்ம பாட்டி கடைல 10 காசுக்கு  வாங்கிச் சாப்பிட்ட

" தேன் மிட்டாய் " மாதிரில இருக்கு. இதயா இம்புட்டு விலை போட்டு வாங்குனோம்!?". 

ஆச்சரியம், அதிர்ச்சி, கேள்விகள் எல்லாம் மனசுக்குள் குடை விரிக்க இதய வடிவ சிவந்த 

    " Handy heart  bites" - ன் ஒப்பனை களைந்தது.


தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றிகள்.... 

மனப் பறவை பறக்கும்...

              

- இருதய். ஆ

          




Saturday, April 22, 2023

பொக்கை வாய்ச் சிரிப்பும் ஒரு சீப்பு வாழைப்பழமும்...




நல்ல வெயிற் பொழுது.


சாலைப்பூச்சின் தார்  உருகி வாகனங்களின் சக்கரப் பற்களோடு ஒட்டிக் கொண்டு 'உன்னை விட்டேனா பார்' என்றபடி வட்டச்சுற்று சுற்றிக் கொண்டே ஓடியது. வெயில்னா வெயில் அப்படி ஒரு வெயில்.

 


"வெயிலோடு விளையாடி … வெயிலோடு உறவாடி" … 

பாடல் எல்லாம் டவுசர், பாவாடை சட்டைக் காலத்தில் பாடவேண்டியது. காரணம் சிறுவயதில் விளையாட்டு தான் பிரதானமாக இருக்கும். வெயிலை ஒரு பொருட்டாக அந்த வயது எண்ணாது. 



'என்னம்மா கண்ணு சவுரியமா?' 

என 'சத்யராஜ்' சார் போல வசனம் பேசி வெயிலை இளம்வயது வம்புக்கு இழுக்கும்.  


"நீ வாடி உன்ன அப்புறமா வச்சுக்கிறேன்"

-  "இப்போ போறேன். Next meet பண்றேன்" என்றபடி வெயில் நம்மை போட்டுத் தாக்க

காலம் கனியக் காத்திருக்கும். 


சிறுவயது கடக்கும். காலம் கடந்தோடும். வெயிலோடு உறவாடியது, கலாய்த்தது எல்லாம் மறந்த  வயதில்

"I am Back" ... என

எகத்தாளமிட்டு வெயில் சிரிக்கும்.

 

"அக்கா… சவுரியந்தானா? இப்புடி குடையப் புடிச்சிகிட்டு நின்னா வுட்றுவமா. துவைச்சுத் தொங்கவுடுவம்ல.

'அண்ணே' . ந்தா வர்றேன். வெயிலோடு மல்லுக்கட்டுவியளோ. இப்ப கட்டுறது. கண்ணக்கட்டுதுன்னு நிழல் பார்த்து நிக்கிறிக" - என வெயில் நம் வயது பார்த்துக் கலாய்க்கும். 


வெயில் மட்டுமல்ல. இன்ன பிற சூழல்களும் கால நேரம் பார்த்து நம்மை இவ்விதமாய்க் கலாய்க்கும். வாழ்வின் வளமை, வன்மை இரண்டும் நிழலும், வெயிலும் போலவே அமையும். 

  



நேரம் காலை 11.00மணி…


சொல்லவே வேணாம். காலம்பறவே அப்புடி அடிக்கிற வெயிலு '11 மணினா' சும்மாவா விடும். துவையல் தான். 

'பரபர"… பறக்கும் சாலைகளில் கானல் நீர் கபடி ஆடியது. 


 'ந்தா கண்டுக்க. நாந்தே கானல் நீர். கிட்ட வந்தா காணாமப் போயிருவம்ல'

என கானல்நீர் மோடிவித்தை காட்டும். 


வாகனங்கள் கடந்ததற்கான அடையாளங்களைத் தார்ச் சாலைகள் சக்கரப் பற்களின் அச்சுக்களை வெயில் சூட்டோடு சுவைத்து சக்கை போல சக்கரத்தடங்களை சாலையில் துப்பும். 


 காணும் முகங்களில் வெயிலின் வெம்மை உள்ளங்கை ரேகையாக விரிந்திருக்கும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். 


இதோ… நிழல் அருமை தெரிந்தவளாக நம்ம 'வெண்ணிலா!'



நம்ம வெண்ணிலாவா? எப்ப இருந்து? கேள்விலாம் வேணாம். கதையில வரப்போற மவராசியத் தான் சொல்றேன். 


ஸப்பாடி! கதைக்கு வந்தாச்சு. இது உங்க குரல் தான். இந்தா கதைய ஆரம்பிச்சிட்டேன். 


பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் நின்ற 'வெண்ணிலா' வெயிலை  நன்கு உணர்ந்தவளாக நிழலில் ஆசுவாசமாக நின்று கொண்டிருந்தாள். பேருந்துக்காக காத்து நிற்கும் நேரத்தில் வீடடைந்தவுடன் முடிக்க வேண்டிய வேலைகளிலேயே வெண்ணிலாவின் மனம் ஒடிக்கொண்டிருந்தது. இதோடு நான்கு பேருந்துகளைக் கூட்டம் காரணமாக ஏறாமல் கடக்க விட்டுவிட்டாள் நம்ம வெண்ணிலா.

ஏன்? 


வெயிலின் கசகசப்பில் கூட்டநெரிசலில் பயணிப்பது பெரிய அவஸ்தை என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.


சின்ன flash Back… 

    "அம்மு... கூட்டமா வர்ற பஸ்ல ஏறாத. அப்படியே கூட்டமாவே வந்தா பேசாம ஆட்டோவுல வா. காச மிச்சம் புடிக்க நெனைக்காத. நம்ம உடம்பு தான் முக்கியம். சரியா. "

   - வெண்ணிலாவின் கணவன் கரிசனையாகச் சொன்ன 'flash back' முடிந்து விட்டது. 

கணவன் சொன்னாலும் வெண்ணிலாவுக்கு ஆட்டோ மீது மனம் செல்லவே இல்லை.

" சீக்கிரமா 'ஸ்கூட்டி'  ஓட்டக் கத்துக்கணும். 'கொரோனா' காலத்துல அது தான் பாதுகாப்பு" என மனசுக்குள் சொல்லிக் கொண்டாள் வெண்ணிலா. 

(இப்பொழுது நம்ம வெண்ணிலா என உங்கள் மனம் சொல்லியிருந்தால் வெண்ணிலா மகிழ்வாள்) 

      இரண்டு பெரிய கட்டைப் பைகள் நிறைய வாழைப்பழங்களைச் சுமந்தபடி வெண்ணிலாவிற்கு அருகில் வந்து நின்றார் 'பொக்கை வாய் பேச்சியம்மா'.




'எப்புடி… கதையோட தலைப்புக்கு வந்தேன் பார்த்தீங்களா. 'Title touch' முக்கியம்ல. 


இனி வெண்ணிலாவும், பொக்கைவாய் பேச்சியம்மாவும் சிநேகிதமானத சொல்றேன். கேட்டுக்கங்க. 


வெண்ணிலாவை உற்றுக் கவனித்த பேச்சியம்மா 'அம்மாடி வேக்காட்டுல நடந்து வந்தது என்னன்டோ இருக்கு.  போரூரு போற பஸ்சு வந்ததும் சொல்லுறியா. இங்குனவே உட்கார்ந்துக்குறேன்' என்றபடி பொசுக்கென்று தரையில் குத்துகாலிட்டு அமர்ந்தார் பேச்சியம்மா. 


' போரூர் போற பஸ்சில தான் நானும் ஏறுவேன். உங்க பைய நான் தூக்கிக்கறேன். எறங்கும் போது தர்றேன். உச்சி வெயில்  நேரத்துல தனியா வராத அப்பத்தா.உட்கார்ந்துக்க.

பஸ் வந்ததும் சொல்றேன்'

   என்றாள் - - - - வெண்ணிலா.


போரூர் செல்லும் பேருந்து இப்பொழுதும் கூட்டமாகவே வந்தது. முகக் கவசங்கள் வேறு பயணத்தில் இருப்பவர்களை பாடாய்ப்படுத்தியது. வேறு வழியில்லை. முகக் கவசம் அணிந்துதான் ஆக வேண்டும். பேருந்துக்குள் கூட்டம் வேறு. தனி நபர் இடைவெளி சில வேளைகளில் சாத்தியப்படுவதே இல்லை. வாழ்வின் சூழல் அப்படி.


வெண்ணிலாவிற்கு இதற்கு மேல் நிற்க மனம் வரவில்லை. வீட்டில் தன்னை வரவேற்கக் காத்து நிற்கும் வேலைகள் வேறு மனசுக்குள் அலாரம் அடித்தன.

பேச்சியம்மாள் இரண்டு கைகளையும் தாடைக்கு முட்டுக் கொடுத்து கண்களை மூடி அமர்ந்திருந்தார். வெண்ணிலாவின் மனசுக்குள் அவளது  அப்பத்தாவின் முகம்  நிழலாடியது. 


கதையோட Turning point-க்கு வந்தாச்சு.

வந்தது ஒர் "ஆட்டோ" … 



   "ஆட்டோ..." வெண்ணிலாவின் சப்தமான குரல் ஆட்டோவை நிறுத்தியது.

  இரண்டு வாழைப்பழ பெரிய கட்டைப் பைகளையும் தன் கைகளில் தூக்கிக் கொண்டு கண் மூடி அமர்ந்திருந்த பேச்சியம்மாளை தன்னோடு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டாள் நம்ம வெண்ணிலா. 


    ஆட்டோ டிரைவரிடம் எந்த பேரமும் பேசவில்லை. ஆட்டோ கிளம்பியது.


'சேர் ஆட்டோவாமா? ' பொக்கை வாய் பேச்சியம்மாள் கேட்ட கேள்விக்கு - - - வெண்ணிலா புன்முறுத்தபடி பதில் சொன்னாள்.

'அப்பத்தா... நீங்க எந்த சேரும் தர வேணாம். போரூர்ல எங்க இறக்கிவிடனும்னு சொல்லுங்க' என்றாள் - - - வெண்ணிலா.

  ' பஸ் ஸ்டாண்டுல எறக்கி வுட்றுமா? அங்குனதான் கடை போட்றுக்கேன்' என்றபடி தன் பைகளில் இருந்த வாழைப் பழங்களில் ஒரு சீப்பை தனியே எடுத்து - - - வெண்ணிலாவுக்குக் கொடுத்தார் பேச்சியம்மாள்.

   வாங்க மறுத்த

நம்ம வெண்ணிலாவின் கைகளில் பொக்கை வாய் பேச்சியம்மா பழங்களை திணித்தார்.


' சேர் வேணாம்னு சொன்னைலமா. இத வச்சுக்க. புள்ளைகளுக்குக் குடு '

என்றபடி கட்டைப் பைக்குள் சாமிக்கு வாங்கி வைத்திருந்த மல்லிகைப் பூக்களை எடுத்து நம்ம வெண்ணிலாவின் கைகளுக்குள் சேர்த்துச் சிரித்தார்   பொக்கை வாய் பேச்சியம்மா.


தார்ச்சாலையின் சூடு ஆட்டோவின் சக்கரங்களை நகல் எடுக்க அசலான பொக்கை வாய்ச் சிரிப்பு வெக்கைக் காற்றின் சூட்டைக் குறைக்க  - - - வெண்ணிலா தன் கரம் சேர்ந்த மல்லிகையோடு அப்பத்தாவின் மன்னிக்கவும். உணர்ச்சிவசப்பட்டுட்டேன். பொக்கைவாய் பேச்சியம்மாளின் கைகளைப் பற்றிப் பூத்தாள் "நம்ம வெண்ணிலா"... 


           
"மனம் கொத்தும் பறவை" காணொளி தொடர்பான பதிவுகளை மீண்டும் தொடரவிருக்கிறேன். இடைவெளிக்குக் காரணம் மனத் தடையே. தடைகள் தாண்ட முயல்கிறேன். விரைவில் மனம் கொத்தும் பறவையிலும் சித்திரைக் கதைகள் இடம்பெறும். பகிரவிருக்கும் வடிவம் குறித்து யோசிக்கிறேன். இது ஒரு முன்னோட்டம் தான். எல்லாம் கூடினால் "காட்டுல செல்ஃபி புள்ளைங்க" மனம் கொத்தும் பறவையில் தொடராக இடம் பெறும். 
"காதோரம் கேட்கும் பாட்டு" மே மாதம் முதல் கேட்கும். 
தொடர்ந்த உங்களது ஆதரவிற்கு நன்றிகள்... 
 

   மனப் பறவை  பறக்கும்...


                         - இருதய். ஆ             

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...