உருவிப் பறித்த மருதாணி இலைகளுக்குள் உறைந்து கிடக்கும் குளுமையும், விரல்களோடு கைப்பிடிக்கக் காத்திருக்கும் சிவப்பு வண்ணமும் போல சில நினைவுகள்.
இன்று…
காலை மணி 6.01.
'என் மேய்ப்பர் நீ தானய்யா' … கைப்பேசியின் துயில் எழுப்பல் பாடல் ஒலிக்கிறது.
'Snooze on'...
ஐந்து நிமிட இடைவெளி. மீண்டும்
'என் மேய்ப்பர் நீ தானய்யா' ஒலிக்கிறது.
வீட்டுக்காரம்மா… எரிச்சலாக
'அலாரம் மத்தவங்கள எழுப்புறதுக்கா'…
என என் கைப்பேசியின் மண்டையில் ஒரு தட்டுத் தட்டி அங்கிருந்து அப்புறப்படுத்துவார். நான் மீண்டும் குப்புறப் படுத்துக் கொள்வேன். இன்றும் அப்படியே.
காலை மணி 9.07.
விடுமுறை தினத்தை முன்னிட்டு எழுந்த நேரம்.
தினக் காலண்டரில்
' ஏப்ரல் 1' வெயில் முகம் காட்டிச் சிரித்தது.
அதான் வந்துட்டம்ல. எப்பவும் ஏப்ரல் மாசம்னா ஒரு பழைய ரீலு ஒண்ண ஓட்டுவைல. இந்த முறையும் ரீல் ஓடுமா? என காற்றில் படபடத்தது.
மார்ச் மாசம் ஓடியே போயிருச்சு. அன்னிக்கு ஏப்ரல் மாசம்னா ஏரியாவே களைகட்டும்.
'இந்தாப்பா. இப்புடி
பொசுக்குனு ரீல ஓட்டுணா எப்புடி. முன்ன பின்ன detail பண்ணுப்பா' .
ஓகே. ஓகே…
Detail-ஆ சொல்றேன்.
மனம் திரும்புதே…
Once upon a time
"80" - களின் மத்திமக் காலம்.
இடம்
மதுரை
'ஜெய்ஹிந்துபுரம் 1வது தெரு'.
"80" - களுக்குள் வந்துவிட்டீர்கள்.
'பொற்காலம்' என்றே சொல்லலாம்.
ஏப்ரல் - 1 -
மனம்' 80'- களின் மத்திமக் காலத்தில் காலூன்றியது.
அன்று நிகழ்ந்த நிகழ்வுகளை ஒரு பார்வையாளனாகப் பார்க்கப் போகிறேன். என்னோடு நீங்களும் காண்பீர்கள். அத்தகைய உணர்வைக் கடத்தினால் படித்து முடித்தவுடன் நீங்கள் உணர்ந்தால் மகிழ்வேன்.
சரி களம் காணலாம்.
அன்று...
எவர் கைகளிலும் 'கைப் பேசி' இல்லை. தொகுப்பு வீடுகள் (காம்பவுண்ட் வீடுகள்) அதிகம் உள்ள பகுதியாக ஜெய்ஹிந்துபுரம் இருந்தது. சிறிய சந்துக்குள் நுழைந்து வெளிவந்தால் 'ப' வடிவத்தில் முப்புறமும் சின்னஞ்சிறிய வீடுகள் வரிசை கட்டி வரவேற்கும்.
தொலைக்காட்சிப் பெட்டிகள் அரிதான சூழலில் குடுத்தனக் காரர்களின் பேச்சு சப்தங்கள் காதுகளை நிறைக்கும். தீர்ந்து போகாத பேச்சுக்களிடையே உறவுகளின் பிணைப்பு அறுபடாத சங்கிலித் தொடராக நீளும்.
இன்று வீதியிறங்கினால் வீட்டுக்குள் ஓடும் தொலைக்காட்சியின் நிகழ்வுகளை வெளியிலிருந்து வசனங்களாகக் கேட்கலாம். பேச்சுக்கள் குறைந்தே போனது. அம்மாவின் கைகளுக்குள் கதகதப்பாக அடங்கிக் கொள்ளும் கைக்குழந்தை போல சதா நேரங்களிலும் கைப்பேசி கைகளுக்குள் அடங்கிக் கிடக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது. சரி கிடக்கட்டும். பழைய கதைக்குத் திரும்பலாம்.
குழாயடியில் கதைகள் பேசிய படி தாவணி அணிந்த அக்காக்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
குதிரை வண்டி என்னைக் கடந்து போகிறது. ரிக்ஷாக்காரர் ஓய்வாக அமர்ந்து பீடி புகைத்துக் கொண்டிருக்கிறார். காதோரம் சேமிப்பில் இரண்டு துண்டுப்பீடிகள் உதடுகளின் ஊதலுக்காகக் காத்திருந்தன.
சிறுவர்கள் தங்கள் கைகளில் பேனாவை பின்பக்கமாக மறைத்து வைத்துக் கொண்டு குறுக்கும், நடுக்கும் ஓடி தெருவில் நடந்து செல்பவர்களின் ஆடைகளில் பேனாவிற்குள் நிரம்பியிருந்த ஊதா நிற & சிவப்பு நிற 'எழுது மை' திரவத்தை தெளித்த படி இருக்கிறார்கள்.
சிலரது கைகளுக்குள் இரு பாதியாக நறுக்கிய கத்தரிக்காய் துண்டுகள் இருக்கின்றன. அதில் மாட்டுவண்டிச்சக்கர அச்சு மையும் ஒட்டியிருக்கிறது.
கடகடவென ஓடிச்சென்று கத்தரிக்காயைச் சட்டையில் ஒட்டி விட்டு 'ஏப்ரல் பூல்' எனக் கத்தியபடி கடந்து ஓடுகின்றனர்.
ஓடும் சிறுவர்களின் முகத்தில் வெற்றிக்களிப்பு அட்சய ரேகையாகப் படர்ந்திருக்கிறது.
இதோ... அந்தச் சிறுவர்களிடம் சிக்காமல் நைசாக மறைந்து மறைந்து கடைக்குச் சென்று கொண்டிருந்த என்னைக் காண்கிறேன். சட்டை அணியாமல் தோற்பட்டை நாடாவுடன் சேர்த்துத் தைத்த 'கால்சராய்' அணிந்திருக்கிறேன்.
ஒடிசலான தேகம். முகச் சாயலில் எவ்வளவு வித்தியாசங்கள். ஓர வகிடு எடுத்து வாரிய தலைமுடி. தேங்காய் எண்ணெய் முகத்திலும் வழிகிறது. நானா இது!. ஆச்சரிய ரேகைகள் உள்ளங்கை ரேகையாக விரிகின்றன.
சற்றும் எதிர்பாராத வகையில் கடைக்கு அருகில் இருந்த ஒருவன் எனது வெற்றுடம்பில் மையைத் தெளித்து விட்டு 'ஏப்ரல் பூல்' எனக் கத்திக் கொண்டு ஓடுகிறான்.
நான் போரில் தோற்ற வீரனாக வருத்தமுடன் வீடு திரும்புகிறேன். இது அன்றைய நாளின் எனது இரண்டாவது தோல்வி. அப்படியென்றால் முதல் தோல்வி எது? பதில் வருகிறது.
முதலில் தோற்றது அம்மாவிடம் தான்.
காலைப் பொழுது...
இன்னும் உறக்கம் கலையவில்லை. அருகில் உறங்கிக் கொண்டிருந்த அண்ணனையும், தம்பியையும் காணவில்லை. எங்கே போனார்கள். கண்களைக் கசக்கியபடி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
'டேய்... உங்க அம்மாச்சி வந்திருக்காங்கடா. எந்திரிக்கலயா?'
அம்மாவின் உற்சாகக் குரல் காதுகளில் அலாரம் அடிக்கிறது.
வாரிச்சுருட்டி எழுந்து 'அம்மாச்சி' எனக் குரல் எழுப்பி அம்மாச்சியைத் தேடுகிறேன்.
'April Fool. ஏமாந்த Fool' ஏற்கனவே அம்மாவிடம் ஏமாந்துபோன எனது அண்ணனும், தம்பியும் அம்மாவோடு சேர்ந்து
'கோரஸ்' பாடுகிறார்கள்.
அப்பா வருகிறார். கருகரு மீசை. தோற் சுருக்கமின்றி இளமையாக இருக்கிறார்.
"இந்தா பிள்ள சின்னப் பயலுகள காலங்காத்தால ஏமாத்திகிட்டு.
'ஏப்ரல்' பொறந்தா உன் கூத்து பெருங் கூத்து. தெருவுல அதவிட பெரிய கூத்து ஓடிக்கிட்டு இருக்குது".
அம்மாவிடம்
"April Fool" ஆன முதல் ஆள் அப்பா தான். அப்பாவின் சலிப்பிற்கான காரணம் விளங்குகிறது.
அம்மாவிடம் இருக்கிற துறுதுறுப்பையும், சுறுசுறுப்பையும், கலகலப்பையும் காண்கிறேன். இன்று அம்மா நடப்பதே குறைந்து பெரும்பாலும் அமர்வு தான். ஓடி ஓடி வேலை செய்த வாழ்வைக் காலம் ஓரம் கட்டி அமரவைத்து விடுகிறது.
வயது ஏற ஏற முதுமை கூடி கண்ணெதிரே கை நழுவி தொட முடியாத தூரம் நோக்கி ஒவ்வொரு நாளும் பயணப்படுகிற முதுமைப் பெற்றோர்களைக் காண்கையில் வாழ்வின் மீதான பிடிப்பு அற்றுப் போகிறது. வாழ்வின் நியதியை மாற்றவா முடியும்.
இன்று அப்பா இல்லை. வான் வீட்டிற்குச் சென்று ஒரு வருடம் ஆகப் போகிறது. அப்பாவின் இருப்பை மட்டும் இழந்திருக்கிறேன். மற்றபடி அப்பாவின் நினைவுகள் இன்றி ஒரு நாளும் கடக்காது.
அன்றைய' ஏப்ரல்' முதல் நாளின் காலைப் பொழுதுகள் மீண்டும் ஒரு முறையேனும் விடியுமா?. மனம் கேள்விக் குடைகள் விரிக்கிறது.
'மாற்றம் ஒன்றே மாறாதது' என மனம் காதுகளுக்குள் கிசுகிசுத்தபடி மீண்டும் '2023 ஏப்ரல்' தினத்தின்
காலைப் பொழுதிற்குள் நுழைந்தது. பரபரப்பான காலைப் பொழுதைக் கடந்து எனது வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுப் பறந்து போனது.
மகன் கைப்பேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறான். வீட்டுக்காரம்மா காலை உணவின் தயாரிப்பு வேலைகளில் மூழ்கியிருந்தார்.
நான் எனது அம்மாவிடம் பேச எண்ணி அம்மாவின் கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டேன்.
நான் மீண்டும் ஏமாற விரும்பினேன். ஆனால் அம்மாவிடம் பேசிய போது கடந்த ஏப்ரலில் அப்பாவோடு தேவாலயம் சென்று வந்த நினைவுகளைத் தான் பகிர்ந்தார். அன்றைய நினைவுகள் குறித்த பேச்சு அம்மாவிடம் இல்லை. நானும் பழையனவற்றைப் பேசாமல் நலவிசாரிப்போட கைப்பேசியைத் துண்டித்தேன்.
மனப்பறவை பறக்கும்...
-இருதய். ஆ
6 comments:
அருமை..ஏப்ரல் என்றாலே இந்த நினைவுகள் தான்...
My brother always practical hatsoff
Thanks for your reading and feedback brother. Take care...
வாசித்தமைக்கு நன்றிகள்...
வயதான பெற்றோரைப் பேணிக் காப்போம்!அது நமது கடமை.
தந்தையைப் போல் ஒரு தெய்வமில்லை.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
என்பது உணர்த்தப்பட்டது.உணர்ந்தேன் நன்றி!
தங்களின் எண்ணங்களைக் கண்டு மகிழ்கிறேன். வாசித்தமைக்கு நன்றி. தொடர்ந்திருங்கள்...
Post a Comment