மனப்பறவையில் முதன்முறையாக எனது சிறுகதையைப் பகிர்கிறேன்.
வாசித்து முடித்து முடியுமானால் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். கட்டாயம் ஒன்றுமில்லை. மனசுக்குள் மத்தாப்பூ கொளுத்தினாலே போதும்.
மத்தாப்பூவாக வாழ்வில் வண்ணங்கள் உயர எண்ணங்கள் ஈடேற அனைவருக்கும்
"தமிழ்ப் புத்தாண்டு"
நல்வாழ்த்துக்கள்
கதைக்கத் தொடங்குகிறேன்...
சூரியனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் 'ராசம்மா' என்கிற 'ராசி'. ஏழறை மணிக்கு அடிக்கிற வெயிலா இது. மண்டை காய்கிறது. ஏற்கனவே 'கருவாச்சி' எனும் பட்டம் உண்டு. எத்தனை முறை குளித்தாலும் நிறம் மாறப் போவதில்லை. இதில் இந்த கோடை வெயில் வேறு. ஏதேதோ நினைத்தபடி கமலாவின் மாடி வீட்டைப் பார்த்தாள் ராசம்மா.
இன்னும் கமலா வெளியே முகம் காட்டவில்லை. 'இந்நேரம் வந்துவிடுவாளே. உடம்பு சரியில்லாமல் உறங்குகிறாளோ?' யோசித்துக் கொண்டிருக்கையில் 'ராசி' அமர்ந்திருந்த மின்கம்பி ஆட ஆரம்பித்தது.
சுதாரித்தாள்' ராசம்மா' எனும்
'ராசி '. அணில் ஒன்று மின் கம்பி ஊடாகப் பயணித்து அருகில் இருந்த கொய்யா மரத்திற்குத் தாவியது.
இதையெல்லாம் கவனித்த 'ராசி' இந்தக் 'கோவாலுக்கு' எந்தப் பிரச்சினையும் இல்ல. கொய்யாவத் தின்னுட்டு நாளக் கடத்திருவான். 'நமக்குச் சோறு தான் முக்கியம்' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு கமலாவின் மாடிவீட்டை அடைந்தது 'ராசம்மா' என்கிற 'காகம்'.
கமலாவின் வீட்டுச் சாப்பாடு தட்டாமல் ராசிக்கு இலையிலோ அல்லது தட்டிலோ வந்துவிடும்.ஏழறை மணிக்கு காலை பலகாரத்துடன் கொஞ்சம் சோறும் பிசைந்து எடுத்து வந்து ராசிக்கு வைத்துவிடுவாள் கமலா.
சாப்பிட்டு முடித்து அவளது பிள்ளைகளுக்கான உணவை வாயில் அதக்கிக் கொண்டு ராசி பறக்கும் வரை அருகில் நின்று கொண்டு கமலா ராசியிடம் ஏதேனும் பேசிக் கொண்டிருப்பாள். இதுவே கமலாவின் தின வழக்கம்.
காகத்திற்கு 'ராசம்மா' எனப் பெயர் வைத்து 'ராசி' எனச் சுருக்கியவள் கமலா தான். கமலா ராசியை தன் உறவுக்கார இறந்துபோன 'ஆத்துமாவாக' எண்ணிவந்தாள். அதற்கேற்றாற்போல ராசியும் கமலா வீட்டைச் சுற்றியே பறந்து திரியும்.
'அது சரி. ராசியும், கமலாவும் ராசியானது இருக்கட்டும். இன்றைக்கு ஏன் இன்னும் கமலா காலை உணவுடன் வெளியே வரவில்லை?'
ராசியைப் போலவே உங்களுக்கும் கேள்வி எழலாம். கேள்வியின் பதிலோடு கதையும் முடிவுக்கு வரப் போகிறது.
ராசி கமலாவின் சமையலறைச் சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்க கமலா கைகளில் உணவுடன் மொட்டை மாடித் திண்டு நோக்கித் திரும்பினாள்.
'அதான... பார்த்தேன். கமலாவாவது ஒடம்பு சரியில்லாம படுக்கறதாவது. நல்ல மனசுக்காரிக்கு ஒரு நோக்காடும் வரக்கூடாது'
மனசுக்குள் நினைத்துக் கொண்டு திண்டு வந்து அமர்ந்தாள் 'ராசி' .
'ராசி... ஆளக் காணாமேனு தேடுனயா? காலைல கொஞ்சம் லேட்டா எந்திரிச்சிட்டேன். இந்தா சாப்பிடு' வைத்துவிட்டு ராசி சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலா. மனசுக்குள் ஏதேதோ எண்ண ஓட்டங்கள் ஓடின.
எதிர்க்க இருக்க வீட்டம்மா கைகள் நிறைய சோத்த வச்சுக்கிட்டு
'கா... கா... கா'...னு கத்துனாக் கூட ஒண்ணுகூட அங்குன போய் சாப்பிட மாட்டேங்குதுங்க. வச்ச சோத்த பூனை தான் தின்னுட்டுப் போகுது. 'இந்தப் பறவைகளுக்கு மனுசங்க மனசு தெரியும் போல...!' என்ற எண்ண ஓட்டத்துடன் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்க ராசி சாப்பிட்டு முடித்து தன் பிள்ளைகளுக்கான உணவை வாயில் கவ்விக் கொள்ள 'கமலா' ராசியிடம் ஒரு விஷயம் சொன்னாள்.
' இனி வெயிலு கொளுத்தும். தண்ணிக்கு அங்குன எங்கயும் தேடிப் போகாத. இனிமே ஒரு சின்ன டவராவுல தண்ணிய இங்குன வச்சிடுவேன். குடிச்சுக்கோ. மத்தவங்ககிட்டயும் சொல்லிடு'
என்றாள் நல் குணக்கார 'கமலா'. 'ராசி'எல்லாம் புரிந்தவளாக
'கா... கா' எனக் குரலெழுப்பி தன் கூடு நோக்கிப் பறந்தாள்.
கமலா சமையலைறைக்குள் நுழைந்து ராசிக்கான தண்ணீர் டவராவைக் கழுவித் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தாள்.
"காக்கை... குருவி... எங்கள் சாதி"
- மகாகவி 'பாரதியார்' பாடல் வரிகள் மனசுக்குள் நிழலிடுகிறது.
கோடையில் தங்கள் வீட்டுச் சாளர ஓரத்தில் ஏதேனும் நற்குவளையில் தண்ணீர் வைத்தீர்கள் என்றால் இந்தக் கதையின் நோக்கம் முழுமை பெறும். ஏற்கனவே இச்செயலை கைக்கொண்டவர்களுக்கு பூங்கொத்துக்கள் உரித்தாகட்டும். "இனி செஞ்சுட்டாப் போச்சு" என்ற உள்ளத்தவர்களுக்கு பறவைகளே நன்றிப் பூக்களோடு வாசல் வரும்.
வாசித்தமைக்கு நன்றிகள் பல...
மனப்பறவை பறக்கும்...
- இருதய். ஆ
4 comments:
நான் தினமும் ஒரு வட்டப் பாத்திரத்தில் பறவைகள் நீர் அருந்த வைப்பதுண்டு...வாழ்த்துகள்..💐
பறைவகளுக்கு கோடை காலத்தில் உணவுடன் தண்ணீரும் வைத்தல் நலம் என்ற அருமையான கருத்தை சொன்னதற்கு வாழ்த்துகள்,பாராட்டுகள்.
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். வாசித்தமைக்கு நன்றி.
வாசித்து எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்...
Post a Comment