நல்ல வெயிற் பொழுது.
சாலைப்பூச்சின் தார் உருகி வாகனங்களின் சக்கரப் பற்களோடு ஒட்டிக் கொண்டு 'உன்னை விட்டேனா பார்' என்றபடி வட்டச்சுற்று சுற்றிக் கொண்டே ஓடியது. வெயில்னா வெயில் அப்படி ஒரு வெயில்.
"வெயிலோடு விளையாடி … வெயிலோடு உறவாடி" …
பாடல் எல்லாம் டவுசர், பாவாடை சட்டைக் காலத்தில் பாடவேண்டியது. காரணம் சிறுவயதில் விளையாட்டு தான் பிரதானமாக இருக்கும். வெயிலை ஒரு பொருட்டாக அந்த வயது எண்ணாது.
'என்னம்மா கண்ணு சவுரியமா?'
என 'சத்யராஜ்' சார் போல வசனம் பேசி வெயிலை இளம்வயது வம்புக்கு இழுக்கும்.
"நீ வாடி உன்ன அப்புறமா வச்சுக்கிறேன்"
- "இப்போ போறேன். Next meet பண்றேன்" என்றபடி வெயில் நம்மை போட்டுத் தாக்க
காலம் கனியக் காத்திருக்கும்.
சிறுவயது கடக்கும். காலம் கடந்தோடும். வெயிலோடு உறவாடியது, கலாய்த்தது எல்லாம் மறந்த வயதில்
"I am Back" ... என
எகத்தாளமிட்டு வெயில் சிரிக்கும்.
"அக்கா… சவுரியந்தானா? இப்புடி குடையப் புடிச்சிகிட்டு நின்னா வுட்றுவமா. துவைச்சுத் தொங்கவுடுவம்ல.
'அண்ணே' . ந்தா வர்றேன். வெயிலோடு மல்லுக்கட்டுவியளோ. இப்ப கட்டுறது. கண்ணக்கட்டுதுன்னு நிழல் பார்த்து நிக்கிறிக" - என வெயில் நம் வயது பார்த்துக் கலாய்க்கும்.
வெயில் மட்டுமல்ல. இன்ன பிற சூழல்களும் கால நேரம் பார்த்து நம்மை இவ்விதமாய்க் கலாய்க்கும். வாழ்வின் வளமை, வன்மை இரண்டும் நிழலும், வெயிலும் போலவே அமையும்.
நேரம் காலை 11.00மணி…
சொல்லவே வேணாம். காலம்பறவே அப்புடி அடிக்கிற வெயிலு '11 மணினா' சும்மாவா விடும். துவையல் தான்.
'பரபர"… பறக்கும் சாலைகளில் கானல் நீர் கபடி ஆடியது.
'ந்தா கண்டுக்க. நாந்தே கானல் நீர். கிட்ட வந்தா காணாமப் போயிருவம்ல'
என கானல்நீர் மோடிவித்தை காட்டும்.
வாகனங்கள் கடந்ததற்கான அடையாளங்களைத் தார்ச் சாலைகள் சக்கரப் பற்களின் அச்சுக்களை வெயில் சூட்டோடு சுவைத்து சக்கை போல சக்கரத்தடங்களை சாலையில் துப்பும்.
காணும் முகங்களில் வெயிலின் வெம்மை உள்ளங்கை ரேகையாக விரிந்திருக்கும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்.
இதோ… நிழல் அருமை தெரிந்தவளாக நம்ம 'வெண்ணிலா!'
நம்ம வெண்ணிலாவா? எப்ப இருந்து? கேள்விலாம் வேணாம். கதையில வரப்போற மவராசியத் தான் சொல்றேன்.
ஸப்பாடி! கதைக்கு வந்தாச்சு. இது உங்க குரல் தான். இந்தா கதைய ஆரம்பிச்சிட்டேன்.
பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் நின்ற 'வெண்ணிலா' வெயிலை நன்கு உணர்ந்தவளாக நிழலில் ஆசுவாசமாக நின்று கொண்டிருந்தாள். பேருந்துக்காக காத்து நிற்கும் நேரத்தில் வீடடைந்தவுடன் முடிக்க வேண்டிய வேலைகளிலேயே வெண்ணிலாவின் மனம் ஒடிக்கொண்டிருந்தது. இதோடு நான்கு பேருந்துகளைக் கூட்டம் காரணமாக ஏறாமல் கடக்க விட்டுவிட்டாள் நம்ம வெண்ணிலா.
ஏன்?
வெயிலின் கசகசப்பில் கூட்டநெரிசலில் பயணிப்பது பெரிய அவஸ்தை என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.
சின்ன flash Back…
"அம்மு... கூட்டமா வர்ற பஸ்ல ஏறாத. அப்படியே கூட்டமாவே வந்தா பேசாம ஆட்டோவுல வா. காச மிச்சம் புடிக்க நெனைக்காத. நம்ம உடம்பு தான் முக்கியம். சரியா. "
- வெண்ணிலாவின் கணவன் கரிசனையாகச் சொன்ன 'flash back' முடிந்து விட்டது.
கணவன் சொன்னாலும் வெண்ணிலாவுக்கு ஆட்டோ மீது மனம் செல்லவே இல்லை.
" சீக்கிரமா 'ஸ்கூட்டி' ஓட்டக் கத்துக்கணும். 'கொரோனா' காலத்துல அது தான் பாதுகாப்பு" என மனசுக்குள் சொல்லிக் கொண்டாள் வெண்ணிலா.
(இப்பொழுது நம்ம வெண்ணிலா என உங்கள் மனம் சொல்லியிருந்தால் வெண்ணிலா மகிழ்வாள்)இரண்டு பெரிய கட்டைப் பைகள் நிறைய வாழைப்பழங்களைச் சுமந்தபடி வெண்ணிலாவிற்கு அருகில் வந்து நின்றார் 'பொக்கை வாய் பேச்சியம்மா'.
'எப்புடி… கதையோட தலைப்புக்கு வந்தேன் பார்த்தீங்களா. 'Title touch' முக்கியம்ல.
இனி வெண்ணிலாவும், பொக்கைவாய் பேச்சியம்மாவும் சிநேகிதமானத சொல்றேன். கேட்டுக்கங்க.
வெண்ணிலாவை உற்றுக் கவனித்த பேச்சியம்மா 'அம்மாடி வேக்காட்டுல நடந்து வந்தது என்னன்டோ இருக்கு. போரூரு போற பஸ்சு வந்ததும் சொல்லுறியா. இங்குனவே உட்கார்ந்துக்குறேன்' என்றபடி பொசுக்கென்று தரையில் குத்துகாலிட்டு அமர்ந்தார் பேச்சியம்மா.
' போரூர் போற பஸ்சில தான் நானும் ஏறுவேன். உங்க பைய நான் தூக்கிக்கறேன். எறங்கும் போது தர்றேன். உச்சி வெயில் நேரத்துல தனியா வராத அப்பத்தா.உட்கார்ந்துக்க.
பஸ் வந்ததும் சொல்றேன்'
என்றாள் - - - - வெண்ணிலா.
போரூர் செல்லும் பேருந்து இப்பொழுதும் கூட்டமாகவே வந்தது. முகக் கவசங்கள் வேறு பயணத்தில் இருப்பவர்களை பாடாய்ப்படுத்தியது. வேறு வழியில்லை. முகக் கவசம் அணிந்துதான் ஆக வேண்டும். பேருந்துக்குள் கூட்டம் வேறு. தனி நபர் இடைவெளி சில வேளைகளில் சாத்தியப்படுவதே இல்லை. வாழ்வின் சூழல் அப்படி.
வெண்ணிலாவிற்கு இதற்கு மேல் நிற்க மனம் வரவில்லை. வீட்டில் தன்னை வரவேற்கக் காத்து நிற்கும் வேலைகள் வேறு மனசுக்குள் அலாரம் அடித்தன.
பேச்சியம்மாள் இரண்டு கைகளையும் தாடைக்கு முட்டுக் கொடுத்து கண்களை மூடி அமர்ந்திருந்தார். வெண்ணிலாவின் மனசுக்குள் அவளது அப்பத்தாவின் முகம் நிழலாடியது.
கதையோட Turning point-க்கு வந்தாச்சு.
வந்தது ஒர் "ஆட்டோ" …
"ஆட்டோ..." வெண்ணிலாவின் சப்தமான குரல் ஆட்டோவை நிறுத்தியது.
இரண்டு வாழைப்பழ பெரிய கட்டைப் பைகளையும் தன் கைகளில் தூக்கிக் கொண்டு கண் மூடி அமர்ந்திருந்த பேச்சியம்மாளை தன்னோடு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டாள் நம்ம வெண்ணிலா.
ஆட்டோ டிரைவரிடம் எந்த பேரமும் பேசவில்லை. ஆட்டோ கிளம்பியது.
'சேர் ஆட்டோவாமா? ' பொக்கை வாய் பேச்சியம்மாள் கேட்ட கேள்விக்கு - - - வெண்ணிலா புன்முறுத்தபடி பதில் சொன்னாள்.
'அப்பத்தா... நீங்க எந்த சேரும் தர வேணாம். போரூர்ல எங்க இறக்கிவிடனும்னு சொல்லுங்க' என்றாள் - - - வெண்ணிலா.
' பஸ் ஸ்டாண்டுல எறக்கி வுட்றுமா? அங்குனதான் கடை போட்றுக்கேன்' என்றபடி தன் பைகளில் இருந்த வாழைப் பழங்களில் ஒரு சீப்பை தனியே எடுத்து - - - வெண்ணிலாவுக்குக் கொடுத்தார் பேச்சியம்மாள்.
வாங்க மறுத்த
நம்ம வெண்ணிலாவின் கைகளில் பொக்கை வாய் பேச்சியம்மா பழங்களை திணித்தார்.
' சேர் வேணாம்னு சொன்னைலமா. இத வச்சுக்க. புள்ளைகளுக்குக் குடு '
என்றபடி கட்டைப் பைக்குள் சாமிக்கு வாங்கி வைத்திருந்த மல்லிகைப் பூக்களை எடுத்து நம்ம வெண்ணிலாவின் கைகளுக்குள் சேர்த்துச் சிரித்தார் பொக்கை வாய் பேச்சியம்மா.
தார்ச்சாலையின் சூடு ஆட்டோவின் சக்கரங்களை நகல் எடுக்க அசலான பொக்கை வாய்ச் சிரிப்பு வெக்கைக் காற்றின் சூட்டைக் குறைக்க - - - வெண்ணிலா தன் கரம் சேர்ந்த மல்லிகையோடு அப்பத்தாவின் மன்னிக்கவும். உணர்ச்சிவசப்பட்டுட்டேன். பொக்கைவாய் பேச்சியம்மாளின் கைகளைப் பற்றிப் பூத்தாள் "நம்ம வெண்ணிலா"...
4 comments:
அருமை மேலும் தொடரவும்
வாசித்து தொடர்ந்து எழுத முயல வைப்பதற்கு நன்றி. தொடர்ந்திருங்கள்...
அருமை...
மிக்க நன்றி... வாசித்தமைக்கு நன்றிகள்...
Post a Comment