About Me

Thursday, April 27, 2023

இன்பனும், இதய மிட்டாயும்...



      'ஏப்ரல்' மாதம் சூட்டோடு சூடாகத்  தனது ஓட்டத்தை ஓடி முடித்து  இறுகப் பிடித்த சூட்டை தயார் நிலையில் இருக்கும் 'மே' மாதக் கரங்களில் இம்மி கூட மிச்சமில்லாமல்  இறக்கி வைக்கப் போகிறது.  


       "இந்த ஏரியா… அந்த ஏரியா… எல்லா ஏரியாவும் இனி சும்மா அனல் பறக்க விடுவம்ல. 

எதிர்த்து நின்னா 'டெபாசிட்ட' காலி பண்ணிடுவோம். ஓரஞ்சாரமா ஒதுங்கிக் கடந்து போயிருங்க"  

            என ஏக வசனம் பேசும் 'மே' மாதம். 


"பேச்சு பேச்சாதான் இருக்கணும். என்ன கொளுத்து கொளுத்துனாலும் 'தாங்குவம்ல' என கோடை கொண்டாட்டங்களும் ஒரு பக்கம் கலை கட்டும். 


வெயிலாய், மழையாய் எதிரெதிர்  முகம் காட்டும் 'கோடை' மெய்யாகவே தெய்வம் தந்த கொடை என்றால் எவருக்கேனும் காதுகள்  சிவக்குமா? 


  " மழை மட்டுமா அழகு. சுடும் வெயில் கூட அழகு" 

'சைவம்' திரைப்படப்பாடல்

 காதுகளில் ரீங்காரமிடுகிறது. 



 "சித்திரைக் கதைகள்"- னு சொல்லிட்டு சுள்ளெனும் வெயிலை விவரிக்காமல் எப்படிக் கதைக்குப் போவது. அதான் இந்த 'வெயில் அறிமுகம்'. போதும்னு நெனக்கிறேன். கதைக்குப் போகலாம். 


சித்திரைச் சிறுகதைகளில்… 


கதை எண் - 3



      'குளுகுளு' வசதிகளோடு பன்னாட்டு நுகர்வோர் அங்காடி 'புதுமாப்பிள்ளை' போல உம்மென்று இல்லாமல் மாப்பிள்ளையின் நண்பர்களைப் போல சிரிச்சாப் போல சும்மா ஜம்மென்று வந்தவர்களை வரவேற்றது. புதிய பகுதியில் பயணத்தைத் தொடங்கி ஒரு வாரம் கடந்து விட்டது. 



இன்பனின் அலுவலக எதிரில் தான் இந்த அங்காடி இருக்கிறது என்றாலும் இன்பன் இன்னமும் அங்காடிக்குள் எட்டு வைக்கவில்லை. 


'இன்பன்' வேறு யாருமல்ல. உங்களில் ஒருவன். இல்லை. இல்லை. நம்மில் ஒருவன் என்பதே சரியாக இருக்கும். 



அன்று விடுமுறை தினம்… 


காலை 11.00மணி


'அங்காடிக்குள்ள போயி ஒரு எட்டு பார்த்துட்டு வரலாமா?' என்ற எண்ணம் இன்பனின் காதோரம் தினம் கிசுகிசுக்கும். கிசுகிசுப்பு 'கியர்' தட்டி இன்பனை அங்காடிக்கு கூட்டியே வந்துவிட்டது. 



   இன்பன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மூச்சிறைக்க சரிவிலிருந்து மேட்டுப் பகுதிக்கு நடந்து, மன்னிக்கவும் ஏறிக் கொண்டிருந்தார் எனச் சொல்வதே உத்தமம். 


வலது கைகளுக்குள் அடங்கியிருந்த வாகன நிறுத்த வாடகைச் சீட்டின் ரசீது சற்றே  பாரமாக இருந்தது. 


வாகன நிறுத்த வாடகைத் தொகை சீட்டுத் தாளில் ஏறி அமர்ந்து 'அட்னக்கால்' போட்டு பல் இளித்தது. 


வெளிப்புற வெயில் மட்டுமல்ல இரண்டு மணி நேர வாகன நிறுத்த வாடகையும்  சதமடித்திருந்தது. கூடுதலாக ஆகும் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் '25 ரூபாய்' வசூலிக்கப்படுவதாக பின் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. 'பார்றா.இது வேறயா?'... 


இந்நேரம் 'இன்பன்' இருக்குமிடத்தை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 


 விரைவாக ஏறி நன்கு குளிரூட்டப்பட்டிருந்த புதிதாகத் திறக்கப்பட்டிருந்த

  பன்னாட்டு நுகர்வு அங்காடிக்குள் நுழைந்தார் இன்பன். 


எப்பேற்பட்ட வெயிலாக இருந்தாலும் அங்காடிக்குள் அனுமதி இல்லை போலும்!. 


"குளு குளு வெண்பனி போலே" 

-என பாட்டுப் பாடத் தோன்றும். அப்படி ஒரு 'ஜில்லோ… ஜில்! '.

அங்காடிக்குள் நுழைந்தவுடன் இன்பனின் மனம் இதைத் தான் உணர்ந்தது. அப்படியே நின்றுகொண்டு அன்னார்ந்து பார்க்க ஏதோ அதிசய உலகம் போலத் தோன்றியது. 


சரி நேரம் ஓடுகிறது. இரண்டு மணி நேரத்தை தாண்டிவிடாமல் சும்மாக்காட்டிக்கு ஒரு சுற்று சுற்றி வரலாம். ஆங்கிலத்தில்

'Window shopping' என்பார்களே. 'சாட்சாத்' இன்பன் இதற்காகத் தான் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது. 


 அங்காடிக் கடைகளுக்குள் இருந்த ஆட்களை விட அங்காடியின் வெளிப்புற வளாகத்தில் தான் கூட்டம் களைகட்டியது. 


"சோடி போட்டுக்கலாமா…         சோடி"... 

  • எனும் விதமாக சோடிசோடியாகச் சுற்றியவர்கள் தான் அதிகம்.

கடை நடத்துகிறவர்களுக்கு எப்படி கட்டுப்படியாகிறது எனத் தெரியவில்லை. கட்டுப்படியாகும் சூட்சுமம் கதையின் முடிவில் தெரிந்துவிடும். 


எல்லாவற்றையும் பார்க்கிறபோது

       'என்னமோ போடா மாதவா!' … நகைச்சுவை நடிகர் திரு. 'ஜனகராஜ்' அவர்களைப் போல சொல்லத் தோன்றுகிறது. 


ஒவ்வொரு அங்காடியும் ஒரு ரகமாக இருக்க பொருட்கள் தங்கள் விலையைச் சற்றே உசத்தியாக உயர்த்திப் பிடித்திருந்தன. 

  

'பார்க்க', 'ரசிக்க' என்ற படியே வண்ணமயமான அங்காடிகளைக் கடந்தார் இன்பன். 


கடைசியாக ஓர் இனிப்பக அங்காடிக்குள் நுழைந்து சுற்று முற்றும் பார்க்க  பன்னாட்டு இனிப்பு வகைகள்

 'தக தக... ஜிகு ஜிகு...' மினுமினுப்பு கூட்டி பந்தாவாக அமர்ந்திருந்தன.


பதவிசாக பகட்டாக அலங்கரிக்கப்பட்ட சிறுசிறு கண்ணாடிப் பெட்டிகளுக்குள் இருந்த இனிப்பு வகையறாக்கள் இன்பனுக்கு 'இன்விடேசன்' தந்து வரவேற்றன. 


'சிக்குவேனா பார்' என பார்த்தபடியே அத்தனை பெட்டிகளையும் கண்சிமிட்டியபடியே கடந்தார் இன்பன். கடைசியாக இதய வடிவில் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டிக்குள் இன்பனின் இதயம் சிக்கிக் கொண்டது. சிவந்த நிற இதய மிட்டாய்களைக் கண்டார் இன்பன். 



"அட!... இந்த மிட்டாய்கள எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே" என பெட்டியைக் கையில் எடுத்துப்பார்க்க 

" Handy heart  bites" என நாமகரணம் சூட்டப்பட்டிருந்தது.



உள்ளே  

  '15 மிட்டாய்கள்' பல் இளித்தன. விலை "300 ரூபாய்" என பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்க  'இதய மிட்டாய்' விலை இருதயத்தை இடம் மாறித் துடிக்க வைத்தது. 


இன்பன் சற்றே யோசித்து உணர்வு வயப்பட்ட நிலையோடு 'அட காசு கெடக்கு. இந்த மிட்டாய்களும், பெட்டியும் அம்புட்டு அழகா இருக்கு. வாங்கிட்டுப் போய் இனியன்கிட்ட தந்தா எம்புட்டு சந்தோசப்படுவான்' மனம் 'றெக்கை' தட்டியது.



மகன் இனியனுக்காக மற்ற சிந்தனைகளை புறந்தள்ள முடிவில் விலைரசீது கைக்கு வந்தது.


 300 ரூபாயைத் தேய்க்கத் தயாராக இருந்த இன்பன் சற்றே ஏமாற்றம் அடைந்தார்.

 "பில் தொகை பிம்பிளிக்கி பிலாபி" என்றபடி மதிப்புக் கூட்டு வரி பிறகு அந்த வரி, இந்த வரி எல்லாம் சேர்த்து  '375 ரூபாய்' என்றது.


' பார்றா. இது வேறயா?'

தொகையைத் தேய்த்து இதயவடிவ மிட்டாய்ப் பெட்டியை கையகப்படுத்தி விரைவாக இருசக்கர வாகன நிறுத்தம் நோக்கி நடையைக் கட்டினார் இன்பன். 


நல்ல வேளை... 

இரண்டுமணி நேர அவகாசம் முடிய இன்னும் ஐந்து நிமிடங்கள் பாக்கி  இருந்தது. ஐந்து நிமிட பாக்கியோடு பல்துறை கண்கவர் நுகர்வு அங்காடியின் எல்லைக் கோட்டைக் கடந்தாகிவிட்டது. வெளிப்புறம் வந்து அன்னார்ந்து பார்க்க வானில் கதிரவன் உச்சம் தொட்டிருந்தான். 


வீடு வந்து சேர்ந்ததும் சிரித்த முகத்தோடு "எவ்வளவு அடிச்சாலும் தாங்குவம்ல" என்ற படி தன் மகன் முன் இதயவடிவ மிட்டாய்ப் பெட்டியை  நீட்டினார் இன்பன். 



மகன் புன்சிரிப்போடு பெட்டியை வாங்கினான்.  

"அப்பா மிட்டாய் பெட்டி சூப்பரா இருக்கு!. மிட்டாய் தீர்ந்ததும் கீழ போட்றாம என்கிட்ட குடுத்துருங்க. நான் பத்திரமா வச்சுக்குவேன்' என்றான். 


" சரிப்பா. மிட்டாய் சாப்பிட்டு எப்புடி இருக்குனு சொல்லு" என்ற அப்பாவின் குரலுக்கு பச்சைக்கொடி அசைத்து சிவந்த நிற இதயவடிவ மிட்டாய் பெட்டிக்குள்ளிருந்து இரண்டு மிட்டாய்களை எடுத்தான்  இனியன். 


"அப்பா, ஒண்ணு உங்களுக்கு இன்னொன்னு எனக்கு. சாப்பிடுங்க. அம்மாவுக்கும் தரணும்" என பாசக்கார மகனாக  கைகளுக்குள் இதய மிட்டாயைத் திணித்தான்.


இன்பனும்,இனியனும் இதயவடிவ மிட்டாயை "சவக்கு, சவக்கு" என மெல்ல மிட்டாயின் சுவை இன்பனின் மண்டைக்குள் பழைய குண்டு பல்பை எரியவிட்டது.


"அட... இது நம்ம பாட்டி கடைல 10 காசுக்கு  வாங்கிச் சாப்பிட்ட

" தேன் மிட்டாய் " மாதிரில இருக்கு. இதயா இம்புட்டு விலை போட்டு வாங்குனோம்!?". 

ஆச்சரியம், அதிர்ச்சி, கேள்விகள் எல்லாம் மனசுக்குள் குடை விரிக்க இதய வடிவ சிவந்த 

    " Handy heart  bites" - ன் ஒப்பனை களைந்தது.


தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றிகள்.... 

மனப் பறவை பறக்கும்...

              

- இருதய். ஆ

          




No comments:

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...