'வானிலை அறிக்கை' பெரும்பாலும் அறிக்கைகளைப் பொய்யாக்கும்.
"சா... பூ... த்ரீ" போட்டு
'கிளியாங் கிளியா' விளையாடி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும். எதிர் முகம் காட்டிச் சிரிக்கும்.
'அக்கினி வெயில்' தொடங்கி விட்டது என்பது செய்தி. ஆனால், கடந்த நான்கு நாட்களாகவே சூழல் வேறாக இருக்கிறது. வெயில் கதவடைத்து 80's குமரியாக சாளரத்தின் வழியே அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. மேகம் இறங்கி வந்து வாசல் நனைக்கிறது. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
எது எப்படியோ சூழல் அக்கினி வெயிலை சில நாட்கள் காத்திருக்கும் பட்டியலில் வைத்ததற்காக மகிழலாம்.
:சித்திரைக் கதைகளில் பகிர இருந்த நான்காம் கதையான " மெளன ராகம்" மோகனும், புதுமைப்பெண் 'ரேவதியும்' திரைக்கு நகரும் நோக்கில் இருப்பதால்
"மெளன ராகம்" மோகனும், புதுமைப்பெண் 'ரேவதியும்' மனப்பறவையில் வரப் போவதில்லை. மன்னிக்கவும். இவர்களை வெண் திரையில் அறிமுகப்படுத்தும் எண்ணம் இருக்கிறது.
நிசத்தில் கதையும், கிறுக்கல் சித்திரங்களும் முடித்து பகிரத் தயாராகவே இருந்தேன்.
ஆனால், இக்கதை சிறுகதை தளத்திலிருந்து திரைமொழிக்கு நகர்ந்தது. சிறுகதையை திரைப்படமாக்க எண்ணியதே காரணம். திரைக்கதையாக எழுத இருக்கிறேன். இதோடு இன்னும் ஒரு 'த்ரில்லர்' கதையையும் திரைக்கதையாக எழுத வேண்டும். இரு கதைகளில் எது முந்தும் எனத் தெரியாது. முனைப்பு ஒன்று மட்டுமே என் வசம். மற்ற அனைத்தும் காலத்தின் வசம்.
வசமாகலாம். வசமாகாமலும் போகலாம். எதிர்முனைப்பில் சொல்லவில்லை. நடக்கத்தான் ஆசை. எது எப்படி இருந்தாலும் 'பயணமே அழகு' என்பது தெளிவு.
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்டு பகிரமுடியாமற் போன சூழலுக்காக வருந்துகிறேன்.
சின்னத்திரைத் தொடர்களில்
"இவருக்குப் பதிலாக இவர்" என ஆள் மாற்றுவார்களே அப்படி வேறு ஒரு பதிவைப் பகிர்கிறேன்.
சித்திரைக் கதைகளில்...
என் பெயர் "கதவு". எங்கள் சமூகத்தின் சார்பில் ஒரு கதை சொல்ல வந்திருக்கிறேன்.
"ஒரு ஊர்ல"...
என்றெல்லாம் எனக்கு கதை சொல்லத் தெரியாது.
எனக்கு எப்படிச் சௌகர்யப்படுகிறதோ அப்படிச் சொல்கிறேன். புரிந்து கொள்ளுவீர்கள். புத்திசாலிகள் நீங்கள் என்பதை எங்கள் சமூகம் அறியும்.
சரி எங்கள் கதையை ஆரம்பிக்கிறேன்.
ஊரெல்லாம் வீடுகள். வீடெல்லாம் நாங்கள். எங்களைக் கடக்காமல் யாரும் வீட்டிற்குள் செல்ல முடியாது.
உங்களுடைய ஆகச் சிறந்த கண்டுபிடிப்புகளுள் எங்கள் சமூகத்திற்கும் இடமுண்டு.
எப்பொழுது எங்களைக் கண்டீர்கள். ஞாபகம் இருக்கிறதா? யோசிக்க வேண்டாம். நானே சொல்லி விடுகிறேன்.
சகமனிதர்களின் மீதான நம்பிக்கை குன்றியபோது எங்களைக் கண்டீர்கள். உங்களையும், உங்கள் உடைமைகளையும் காக்க உங்கள் வீடுகளின் படிகள் ஏறி அமர்ந்தோம். தொடக்கத்தில் உங்கள் எண்ணப்படியே எல்லாம் நன்றாகவே நடந்தது.
காவலுக்கு எங்களைக் கண்ட பின்னரும் உங்களின் எண்ணத்தில் மண் விழுந்தது.
காலப்போக்கில் கதவுகளாகிய எங்கள் சமூகத்தின் மீதும் உங்களின் நம்பிக்கை தகர்ந்தது. எங்களையும் மீறி தவறுகள் நடந்தன. உங்கள் உடைமைகளுக்குப் பங்கம் விளைந்தன.
எங்கள் சமூகத்தைப் புதிய கூட்டணிக்குள் இணைத்தீர்கள்.
கூட்டணிச் சமூகத்தின் பெயர் "பூட்டு".
பூட்டுக்களோடு நீங்கள் படும் பாடு காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பூட்டிவிட்டு பூட்டோடு
தொங்குவீர்கள்.
'அவநம்பிக்கை'
தொடர்ந்ததால் விளைந்த தொங்கல்கள் இவைகள்.
தொங்கிமுடித்து எங்களை ஒரு பார்வை பார்ப்பீர்கள். நாங்கள் பூட்டைப் பார்ப்போம். எது எதற்குக் காவல் எதுவும் புரியாது.
'கதவு' &' பூட்டு' இரண்டு சமூகத்தையும் நம்பாமல் பாதுகாப்பின் அச்சம் உங்களைத் துரத்தியது.
துரத்தலின் முடிவில் எங்களோடு கூட்டணியாக மூன்றாவது அணியை உருவாக்கினீர்கள். உங்கள் சமூகத்திலிருந்து ஒர் நபரைக் காவலுக்கு வைத்தீர்கள்.
இந்தக் கூட்டணிக்கு
'கூர்கா' , 'காவலாளி' , 'வாட்ச்மேன்' எனப் பல பெயர்கள் உண்டு.
காலம் கடந்தது. மூன்றாவது அணியின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை குறைந்தது. அச்சம் வேங்கைப் புலியாகத் துரத்தியது.
விளைவு…???
இமைக்கா எந்திரக் கண்களாக 'தானியங்கி கேமராக்கள்' நீங்கள் கண்ட எங்கள் சமூகத்திற்கு மேல் வந்து அமர்ந்து கொண்டன.
எல்லாம் இனிதே நடந்தும் அச்சமென்னும் வேங்கைப் புலி உங்களை விட்ட பாடில்லை.
நினைக்கையில் கவலையாகத் தான் இருக்கிறது.காரணம் கதவுகளாகிய நாங்கள் உங்கள் அனைத்து உணர்வுகளையும் அறிவோம். சில நேரம் எங்கள் பக்கம் சாய்ந்து அமர்வீர்கள். கவலைகளை எங்கள் காதோரம் சொல்லுவீர்கள். உங்களின் அகம், புறம் இரு கதைகளையும் நாங்கள் அறிவோம்.
உங்களின் மகிழ்வு, வருத்தம், கோபம் எல்லாம் அறிவோம்.
கோபம் தலைக்கு ஏறினால் சடாரென அடித்து ஒரு சாத்து சாத்துவீர்கள். உங்களின் இதயத் துடிப்பை அறிவோம். எல்லாம் அறிந்தும் எதுவும் எதையும் மாற்ற எங்களால் முடியாது.
வீட்டுக் கதவுகளை தாழிடும் கணங்களை மாற்ற முடியாது. எதையும் நம்பமுடியாத சூழல்களைக் காலம் கண் முன் வலையாக விரித்து நிற்கிறது.
கதவுகளை அடைக்காமல் கால் நீட்டி அமர்ந்து கதவுகளில் நகர்ந்தாடி விளையாடி கதவுகளிடம் கதைகள் பேசி நிலைக்கதவோரம் ஆறுதல் தேடி இளைப்பாறிய நாட்கள் இனி வரப் போவதில்லை.
"மாற்றம் ஒன்றே மாறாதது " . உங்களின் பாடம் எங்களுக்கு மனப்பாடம்.
உங்கள் மனசுக்குக் கேட்கும்படி ஒரு பதம் சொல்கிறோம்.
அன்பில் வேண்டுகோள்…
மனக் கதவுகளைத் திறந்தே வையுங்கள். மனசுக்குள் இருக்கும் வெக்கை குறையும்.
காற்று வரட்டும்...
இப்படிக்கு
தங்களின் உண்மையுள்ள
தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றிகள்...
மனப்பறவை பறக்கும்…
2 comments:
அருமையான மொழிநடை... வாழ்த்துகள்...🎉
வாசித்தமைக்கு நன்றி....
Post a Comment