About Me

Tuesday, May 30, 2023

வீடு...




கேள்வியிலிருந்தே இந்தப் பதிவை தொடங்குகிறேன். 


உங்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் எது? பிடிக்காத இடம் எது? 


இயல்பாகவே எதிர்கொள்ளும் கேள்வி தான். 


 எதிரெதிர் நிலைகளில் கை உயர்த்தி வருகை காட்டும் பதில்களில் பிடித்த இடத்திலும் வீடு இருக்கும். 


பிடிக்காமல் விட்டுவிடுதலையாக நினைக்கும் இடமாகவும் வீடு இருக்கும். 


 இரட்டை வேடங்கள் ஏற்கும் கதாப்பாத்திரம் போலவே வீடும் இரட்டை முகம் காட்டி நிற்கும். 


வீட்டை இயக்கும் உறவுகளைப் பொறுத்தே வீட்டின் முகம் ஒருமுகமாகி அறிமுகமாகும். 



அறியும் முகமாய் வீடு… 




'கல்லும், மண்ணும்

இறுகப் பிடித்து 

உணர்வுகள் சூழ… 

மனம் நெகிழ

எழும் வீடு… 

கண்ணுறக்கத்தில் 

விழிக்கும் கனவல்ல. 

    கூடும் நினைவுகளால் 

நிறைந்து எழும்

      ' கூடு' … 


          " இல்லம்" எனும்   "வீடு!". 



கடற்கரையும், மண் வீடும்


து

வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் குழந்தையாக மாற்றும் மாயவித்தையை கடற்புறங்கள் எங்கு கற்றனவோ? நினைக்கையில் ஆகாசத்தின் கீழ் விரிந்து கிடக்கும் 'கடல்' ஆச்சரியம் அளிக்கும். 


அள்ளித் தருவது, சொல்லித் தருவது வானம் மட்டுமல்ல. கடலும், கடல் தொடும் கரையும் என்றால் ஒப்புக் கொள்வீர்கள் தானே. 


கடற்கரைக்குச் சென்று கடல் பார்த்து அமர்ந்த சில நிமிடங்களில் கைகள் தானாகவே கடல்மணலை அள்ளும். கோலமிடும். 


அப்புறம்? … அப்புறம்? … 


      தலைப்பிற்கு வரவேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. நிசமாகவே கண்ட காட்சிகளிலிருந்து என்னையும் கண்டே சொல்கிறேன். 

            கைகள் மணலைக் குவிக்கும். உசரே, உசரே… கோபுரம் போலவே கைகள் தட்டித் தட்டி மண் குவியலை உயர்த்தும். நடுவே குழிபறித்து மண்கோபுரத்தில் வாயில் திறக்கும்.            

மண்டியிட்டுக் கட்டிய மண்கோபுரத்தைக் கண்கள் இடம் வலமாய், முன், பின்னாய் அளக்கும்.

ஏதோ ஒன்று குறைவதாக மனம் சொல்லுமா? அல்லது கோபுர மண் சொல்லுமா? தெரியாது. 


கண்கள் மூடும். ஆராயும்.

ஆராய்ந்த கண்களுக்குள் 'மின்மினி' பறக்கும். மனம் மண்துகள்கள் ஒட்டியிருந்த கைகளைத் தட்டி வலது கை நீட்டி சுட்டுவிரல் கொண்டு மண் கோபுரத்தைச் சுற்றி முதலும், முடிவும் இல்லா முழுமையில் வட்டமிடும். முகத்தில் புன்னகை பூக்கும். 


மண் கோபுரம் வீடா? கோயிலா? 

பட்டிமன்றம் ஏதுமில்லாமல் இரண்டும் ஒன்றுதான் என மனம்  தீர்ப்புச் சொல்லும். 


வீடும், கோயிலும் ஒன்றே எனச் சொல்லும் மனம் வாய்த்தால் வீடே ஆகச் சிறந்த பேறாகும். 



"உள்ளது உள்ளபடி 

உள்ளத்து உள்ளபடி… 

வீட்டுப் படி ஏறு…  

மண்ணில் எழுந்த 

'வானவில்' வீடு! 

ஏறு படி ஏறு 

உள்ளத்து உள்ளபடி ஏறு

இது என் வாசற்படி 

எனக் கூறு… 

அன்பால் அரவணைக்கும் 

கூடு 

மண்ணில் எழுந்த 

" வானவில்" வீடு!  … 

உள்ளது உள்ளபடி ஏறு'…. 



வரும் பதில்… 

என்னவாக இருக்கும்? கேள்வியில் தொடங்கி கேள்வியிலேயே நிறைவு செய்கிறேன். 


தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றிகள். 

தொடர்ந்திருங்கள்…


மனப்பறவை பறக்கும்… 



-இருதய். ஆ


No comments:

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...