About Me

Showing posts with label "நினைவில் வெள்ளை ரோசா".... Show all posts
Showing posts with label "நினைவில் வெள்ளை ரோசா".... Show all posts

Friday, February 25, 2022

பூக்களின் பாடசாலையில் வெள்ளை ரோசா ...

Fly...


            மனம் கொத்தும் பறவை 

காற்று அலம்பிவிட்ட வானத்தில் நீலநிறமும், வெண்மையும் மாறிமாறி 'ஸ்விட்ச்' தட்ட மனம் ஆகாசத்தில் வெண் பஞ்சுக்
கூட்டம் போல பறக்க ஆரம்பித்தது. 

வானம் எப்பொழுதும் போதி மரம் தான். 'என்ன...! போதிமரத்தடியில் ஆசுவாசமாக அமரத்தான் முடிவதில்லை' - என மனம் முணுமுணுக்கும். மனதுடன் ஒர் ஒப்பந்தமிட்டு இரவில் போதிமரத்தடியில் அமர்ந்து விடுவேன். 
"நான்... 
போதி மரம்... 
நிலா" ...

 'டிசைன் டிசைனாக' படம் காட்டும் மேகக் கூட்டங்கள். ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு சித்திரம் திரை விலக்கும். 

       நேரம் கடக்கும். சமீபமாக நான் விரும்பிக் கேட்கும் பாடல்
' 'Hallamithi Habibo' என்று நீங்கள் எண்ணியிருந்தால்...
'ஸப்பாடி... முடியல. 'தாறுமாறு தக்காளி சோறாக' இப்பாடலை பரிமாறிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வயதான பாட்டி அவரது பேரனுடன் (' யூ டியூபரோ? ) இப்பாடலுக்கு ஆடியதைக் கண்டவுடன் ' கண்டா வரச் சொல்லுங்க. பாட்டிய கையோட கூட்டி வாங்கனு' சொல்லத் தோன்றுகிறது. 
'தாறு மாறு தக்காளிச் சோறு தான் போங்க' . சரி என் விசயத்துக்கு வருகிறேன்.

அடிக்கடி கேட்கும் பாடல்... 
     ' உனை மெது மெதுவாய் ஒரு              பயணம் போல... 
                தொடங்கிடவா' ... 
' salmon-3d'-ல் 'sid sriram' பாடிய பாடல். கேட்டுப் பாருங்கள். 
மெதுமெதுவாக நான் 'உலாப் பூக்கள்' பயணத்திற்குள் உங்களுடன்  நுழைகிறேன். 

தேநீர் தருணம்...


'ரோசா' இந்தப் பதிவிலும் தொடர்கிறது. ரோசா ராணி ஆயிற்றே!...
           ரோசா முட்களுக்கு மத்தியில் தான் தன் மொட்டவிழ்க்கிறது. ஆனால் ?...
 தாவரவியல் கோட்பாடுகள் மறுக்கிறது. 
'ரோசாவை சூழும் முட்கள் முட்களல்ல. அவை திருத்தி வளரும் கிளைகள், தண்டுப் பகுதிகள்' என்கிறது தாவரவியல். 

அடப்போங்க சாரே...

     "முட்களுக்கு மத்தியில் பூக்கும் ரோசா!
கன்னித்தீவுல வில்லன் மூசா...
கவலை வேணாம்... 
நான் உன் ராசா...
உனக்காகத் தூக்குவேன் கூசா!...
ரோசான்னா லேசா? 
பூக்கும் என்றும்' மாஸா'! " 
    என்றெல்லாம் பாட வேண்டியிருக்கிறது. 'இப்ப போய்க்கிட்டு தண்டு. திருத்தப்பட்ட கிளைன்னு சொல்லிக்கிட்டு' செல்லாது. உங்கள் பாடமெல்லாம் அறுந்த பட்டமாகப் பறந்து போகும். 

 அப்புறம், 

ரோசாவே... 
    முள் உனக்கு க்ரீடமா?         வேலியா? "
என்றெல்லாம் தத்துவ விசாரங்களில் பெருக வேண்டியிருக்கிறது.

 அதனால்
' உங்க பேச்சு கா'... செல்லாது. செல்லாது. 

ரோசாவுக்கு இருப்பது முள்ளே. முள்ளே. முள்ளே. உள்ளே மனம் தீர்ப்புச் சொல்லிவிட்டது. 

      " ரோசாவுக்கு முட்கள் 
வேலியோ! 
          இருக்கலாம். 
'வேலி தாண்டாமல் ரசி' 
பாடம் சொல்கிறாள். 
மலர்களின் அரசி. 



வேலி தாண்டாத ரசனை பூக்களின் பாடசாலையில் மட்டுமல்ல பூவுலகிலும் அதுவே வேதாந்தம். 

மலர்களின் அரசி பற்றிய நினைவுகள்,  அனுபவங்கள் அத்தனையையும் ஒரே ஒரு பூக் கூடைக்குள் அள்ளிவிட முடியாது.


 உலகெங்கும் பூக்கும் ரோசாக்களில் நூறு வகைகளும், நிறைய வண்ணங்களும் இருப்பதாக தாவரவியல் 'டக்ளஸண்ணே' சொல்கிறார். அப்படியிருக்கையில் இரண்டு பதிவாக ரோசா உலா வருவதில் மகிழ்ச்சி தான். 
இப் பதிவில் சிகப்பு ரோசாவை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிட்டு 'வெள்ளை ரோசா' தனி ஆவர்த்தனம் செய்கிறார்.

        
தனித்த அழகில் 'வெள்ளை ரோசா' !


 ரோசாக்களில் சிகப்பு ரோசா காதலில் கெட்டிக்காரி. சாட்சியின் காட்சிகளாக சிகப்பு ரோசாக்களை கூந்தலில் செருகி நடைபோடும் பாவையர்களை அதிகம் காணலாம். அதிலும் பிற பூக்களை விட ரோசாக்கள் பெருவாரியாக பூவையரின் காதோரமாகவே தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்கிறது. 

ஏனோ?..... 


'ரோசா' பூவையரின் காதோரமாக ரகசியம் பேசுமோ! 
இருக்கலாம். அதனால் தானோ! ஏனோ! காளையர்கள் காதலியிடம் காதல் சேதி உரைக்க ரோசாவைக் கரம் பிடிக்கிறார்கள். 
'காதோரம் தான் நான் பேசுவேன்' இது ரோசாக்களின் குரலாக இருக்கலாம். 

"வெள்ளை ரோசா" மனசுக்கு நெருக்கமாக இருப்பதற்கு என் சிறு பிராய நினைவுகளே காரணம். கதையல்ல நிசம். சில பல நினைவுகள் எப்படி எனக்குள் வேர் பிடித்தே கிடக்கிறது. கிளை பரப்புகிறது! கேள்விகள் கேட்டுக் கொள்கிறேன். 
மனம் ஒரு' விசித்திரப் பறவை' . நெருக்கமான நினைவுகளை  அப்படியே மனக் கூட்டுக்குள் வைத்து அடை காக்கும். 

அன்று... 

மதுரை 'காஜிமார் தெருவில்' மாடிவீட்டில் குடியிருந்த காலம். எத்தனையோ நினைவுகள் அலையடித்தாலும் இன்றும் மனதை நனைத்தபடியே இருக்கும் ஒர் அலை அற்புதமானது. என் சகோதர்களுக்கு நினைவில் உள்ளதா? தெரியவில்லை. 

நான் மூன்றாவது படித்துக் கொண்டிருந்தேன். 
 'சகாயமாதா நடுநிலைப்பள்ளி' 'வெள்ளை ரோசாவை' எனக்கு அறிமுகப்படுத்தியது. 


"வெள்ளை ரோசாவும், லக்ஷ்மி டீச்சரும்" ... 

            என் அம்மாவை விட  வயது குறைந்தவர். ஆனாலும் அம்மாவின் நெருங்கிய தோழியானார் 'லக்ஷ்மி டீச்சர்'. அம்மாவின் வகுப்பறைக்கும் 'லக்ஷ்மி டீச்சரின்' வகுப்பறைக்கும் ஊடாக ஒரு நடைபாதை இருக்கும். நான் என் அம்மாவிடம் '3c'வகுப்பில் படித்தபோது (?) 'லக்ஷ்மி டீச்சரை' தினம் காணும் சூழல் அமைந்தது. 

'இருக்காங்க. ஆனா இல்ல' - என்கிற வடிவில் தான் இருப்பார் 'லக்ஷ்மி டீச்சர்' . 'மலேயா சேலை' கட்டிவருவார். அப்பொழுது 'மலேயா சீலைகள்' கொஞ்சம் 'ஒசத்தி'. இப்பொழுது நினைத்தாலும் 'லக்ஷ்மி டீச்சர்' குறித்த நினைவுகள் மறக்காமல் ஒளிப்படமாக ஞாபகத்தில் ஓடுகிறது. 

காரணம்... 

'ஒற்றை வெள்ளை ரோசா'... 

'லக்ஷ்மி டீச்சரின்' காதோரம் மென்மை பூத்துச் சிரிக்கும் வெள்ளை ரோசா . ஒற்றை ரோசாவைக்  தான் காதோரம் கூந்தலில் செருகியிருப்பார். உடன்  அடர் பச்சையில் சில
இலைகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.
அதிர்ந்து பேசிக் கண்டதில்லை. சத்தமிட்டுச் சிரித்துப் பார்த்ததில்லை. எப்பொழுதும் புன்முறுவலோடு இருப்பார். ஒரு மெளனம் அவரது கூந்தலில்  அமர்ந்திருக்கும் 
 'வெள்ளை ரோசாப் பூ' போல புன்முறுவலுக்குள் உறைந்திருக்கும். சிகப்பு ரோசா வைத்து வந்ததாக என் நினைவில் இல்லை. வெள்ளை ரோசாவை ஏன் தேர்ந்து கொண்டார்? ஒற்றை ரோசாவாக இல்லாமல் இன்னும் ஒரு ரோசாவைச் சேர்த்து சூடியிருக்கலாமே? இப்பொழுது கேள்விகள் முளைக்கிறது. பதில் ஒற்றை வெள்ளை ரோசாவுக்குத் தெரிந்திருக்கலாம். 


பூக்குடை தான் விரிப்பார். ஆனால் மற்ற வண்ணப் பூக்களைச் சூடிக் கண்டதில்லை. இப்பொழுதேனும் வண்ணப் பூக்கள் சூடுவாரா? சத்தமிட்டுச் சிரிக்கும் வழக்கிற்கு வந்திருப்பாரா? 

திருமணம் முடிந்து பிள்ளைகள் இருக்கலாம். கணவர் அதிர்ந்து பேசுபவராக அமைந்திருக்கக் கூடாது. என் அம்மாவிடம் கேட்டால் 'லக்ஷ்மி டீச்சர்' பற்றிய ஏதேனும் தகவல்களை அறியலாம். ஆனால், நான் கேட்கப் போவதில்லை. 'லக்ஷ்மி டீச்சரின்' ஞாபகங்கள் புதிய வடிவங்களுக்குள் பிரவேசிக்க என் 'மனப் பறவை' அனுமதிக்கவில்லை. 



ஒற்றை வெள்ளை ரோசா நினைவுகள் என்றும் இளமையாகவே இருக்கட்டும். 

ரோசாக்களின் வண்ணங்கள் எதுவாயினும் மனசுக்குள் படரும் எண்ணம் ஒன்று தான். 
அது அன்போ! காதலோ! எதுவாயினும் இருக்கலாம். 
ரோசாவின் மீதான அன்பும், காதலும் தீர்ந்து போகாத பேச்சுக்கள் போல என்றைக்கும் தொடர்ந்திருக்கும். 

 சிறு பிராயத்தில் என் அம்மாவும், இப்பொழுது என் மனையாளும் ஒரு விசயத்தில் ஒன்றுபட்டிருத்தலை அநேக முறை கண்டிருக்கிறேன். சில நாட்களுக்கு முன் கூட கண்டேன். 

கண்ட ஒற்றுமை

  இருவரும் 'ரோசாப் பூவை' குப்பையில் இட்டுக் கண்டதில்லை. 
என் கண்கள் குப்பையில் கிடக்கும் ரோசாவைக் கண்டதே இல்லை. இதே போன்ற அனுபவங்களை நீங்களும் கடந்திருக்கலாம். 
நான் இப்பொழுது பகிர்ந்திருக்கும் ரோசாவின் புகைப்படம் மூன்று நாட்கள் வரை பொறுத்திருந்து நான் எடுத்தது. 


காய்ந்த பின்னும் ஒய்யாரமாக அமர்ந்திருந்தது. "சிகப்பு ரோசா"

காய்ந்து போன ரோசாவின் இதழ்களில் பாவையரின்
ரோசா மீதான காதல் காய்வதே இல்லை. 
 
காய்ந்து போன ரோசா
இப்பொழுது அங்கில்லை. எங்கே சென்றது. ஆராயவில்லை. ஆராய்ந்து தீர்க்க முற்பட்டால் பூக்களை ரசிக்க முடியாது. பூக்களின் தேர்வுக்கும் மனதின் ஆளுமைக்கும் நிறைய சம்பந்தங்கள் இருப்பதாகவே மனம் சொல்கிறது. 

பூக்கள் என்ன சொல்கிறது?.... 

 எல்லாவற்றையும்  ஆராயாமல் கடத்தலே வாழ்க்கை பூக் காடாக  இருப்பதற்கான சாத்தியங்கள்.

 சத்தியமாக கொஞ்சம் கடினம் தான். 'ஆராய்ந்து அறிதலே அறிவு'. கற்றலில் அறிந்தது. கல்லாமலேயே அறியும் அறிவு ஒன்று உண்டு. 

 "எல்லாவற்றையும் ஆராயாதே" . பூக்களின் பாடசாலையில்... 
இதுவே வேதம். 

      "ஆலை இல்லா ஊரில்            இலுப்பைப் பூ சர்க்கரை!" - 
                                - என்பது போல கல்லூரிக் காலத்தில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தரையெங்கும் வாசனையற்ற வெவ்வேறு வண்ணங்கள் நிறைந்த 'தொட்டி ரோசாக்கள்' (Table Roses) கடை விரித்திருக்கும். 


இந்த ரோசாக்களுக்கு முட்கள் இல்லை. ஏன்? 
"படவா ராஸ்கோலு... ஆராயாதே"-
என்கிறாள் 'மனப் பறவை' .

மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்... 


இருதய். ஆ
 
   
 
   
     


     
            









அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...