மனம் கொத்தும் பறவை
"'சும்மா கதை பேசாம வேலையப் பாருங்க' ...
'கதைவிடுறதுல பெரிய ஆளு அவரு!'
'எல்லாமே கட்டுக்கதை' ...
'இந்தக் கதையெல்லாம் எங்கிட்ட வேணாம்' .
'அவங்க சொன்ன கதைய நம்பீட்டிங்களா?' "
- கேட்கும், வாசித்தறியும் கதை உலகம் இன்றைய சூழலில் காட்சி வழி ஊடகங்களால் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும் ஏதேனும் ஒரு சூழலில் எங்கேனும் 'கதை' என்ற சொல்லாடல் தாழிடப்பட்ட கதவுகளின் இடுக்குகளின் வழியே வீட்டிற்குள் 'சரேலென' நுழையும் முன்னைய நாட்களின் தபால்களைப் போல 'கதை' என்ற சொல்லும் நம் காதுகளுக்குள் நுழைந்து கதைக் கதவுகளைத் திறந்து விடுகின்றன.
பதிவின் தொடக்கத்தில் நீங்கள் வாசித்த 'கதை' எனும் சொல்லாடல்களை பேச்சு வழக்குகளை வெவ்வேறு சூழல்களில் நாம் கேட்டிருக்கக் கூடும்.
சாரமற்றோ, சாரத்துடனோ எப்படியாயினும் கதைகள் பேசும் மனிதர்கள் தான் கதை உலகின் உயிர்க்காற்று குறைந்து போகாத படி கதைகளின் விதைகளை விதைத்துக் கடக்கிறார்கள்.
என் சிறு பிராயத்தில்...
'அம்மாச்சி' கதைத்த கதைகளில்
ஏனோ குளத்தினுள் விழுந்த கல்லைப் போல என் மனதின் அடிஆழத்தில் விழுந்து அசைவாடியபடியே கிடக்கிறது.
இக்கதையை உங்களிடம் பகிர விரும்பினேன். இதோ இப் பதிவுடன் கதை முடிந்துவிடும். இதன் முடிவில் உங்களுக்குள் வேறு சில கதைகள் கிளைக்குமானால் அதுவே கதை உலகில் பல கதவுகளைத் திறந்துவிடும்...
Have your cup of "tea"...
அம்பட்டன் 'மகுட ராசா'வின் கழுதக் காது விஷயத்தை 'மகுட ரகசியத்தை' தன் மனையாளிடம் இறக்கி வைத்து இலவம் பஞ்சாகிப் பறக்கிறான். அம்பட்டன் மனதின் எடை குறைந்து மனையாளின் மனத் தராசில் எடை கூடுகிறது. உளறிக் கொண்டே இருக்கிறாள்.
மனையாள் ரகசியம் காக்கமுடியாமல் தனக்கு வினையளாகிவிடுவாளோ என்றெண்ணி அவளை யாருமறியாமல் காட்டிற்கு அழைத்துச் செல்கிறான்.
இனி...
அம்பலத்தில் 'மகுடராசா'...
அம்பட்டன் காட்டிற்குள் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கையில் இருந்த மண்வெட்டியால் ஆழமாக குழி வெட்ட ஆரம்பித்தான்.
முழுமதியும் சகத் தோழமை நட்சத்திரங்களும் கண்கொட்டாமல் இருவரையும் கவனித்தபடி இருந்தன.
ரகசியங்களை சக மனிதர்களிடம் மறைக்க முடியும். இயற்கையிடம் மறைக்க முடியுமா?
அறியாத அம்பட்டன் மீண்டும் யாருமற்ற சூழலை உறுதிப்படுத்திக் கொண்டு மனையாளை வெட்டிய குழி அருகில் அமரச் சொல்கிறான். மனையாள் கணவனின் நடவடிக்கைகள் புரியாது குழம்பி குழியருகே அமர மறுக்கிறாள்.
அம்பட்டன் மனையாளிடம்...
'உன் வயிற்றுக்குள் உப்பி வளரும் ரகசியத்தை இக் குழிக்குள் இறக்கி வை. நான் ரகசியத்தை மண்ணிட்டு மூடி விடுகிறேன். உன் மனம் இலகுவாகும்'
- என்கிறான். மனையாள் மண்டியிட்டு அமர்ந்து குழிக்குள் படர்ந்திருந்த இருள் விலக்கி வெளிச்ச உண்மையான ராசாவின் காது ரகசியத்தை வயிற்று உப்புசம் குறையுமட்டும்
"ராசாக் காது.... கழுதக் காது!?
ராசாக்காது.... கழுதக் காது!"
- எனப் பெருங்குரலெடுத்துக் கத்தி முடிக்கிறாள். இலகுவாகிறாள். அம்பட்டன் சுற்றிலும் நோட்டமிட்டு பெருமூச்செறிந்து மண்ணிட்டு ரகசியத்தை மண்ணோடு புதைத்து அதன் மேல் ஒரு செடியை நடுகிறான்.
எல்லாம் இனிதே நிறைவுறுகிறது.
காலங்கள் கடந்தன.
அரண்மனையில் அன்று ஒரு திருவிழா அரங்கேறுகிறது. புதிய முரசுகள் அரண்மனையின் நடையில் வீற்றிருக்கின்றன. 'மகுட ராசா' விழா தொடக்கத்தை முரசறைவதிலிருந்து தொடங்க உத்தரவிடுகிறார்.
புதிய முரசுகள் அறையும் கலைஞர்கள் கோலால் முரசைத் தட்ட முரசுகள் அத்தனையும் ஒத்திசைவோடு...
" ராசா... ராசா... ராசா...!" - என எதிரொலிக்க ஆரம்பித்தன. அவையில் ஆச்சரிய அதிர்வுகள் எழுந்தன.
மகுட ராசா முரசுகள் குரல் எழுப்புவதை ஆச்சரியத்துடன் கண்ணோக்கி கைகளை "ஆகட்டும் வாசியுங்கள்" - என்பதாக சைகை காட்ட முரசறையும் கலைஞர்கள் தொடர ஆரம்பிக்கின்றனர்.
முரசுகள் அத்தனையும் மூர்க்கமாக ...
"ராசாக் காது கழுதக் காது...? ராசாக் காது கழுதக் காது....!" என அதிர ஆரம்பிக்க எட்ட நின்று கண்ட அம்பட்டன்,
முரசுகளின் ஓசையில் மனையாளின் குரல் அம்பலமாவதைக் கண்டு அதிர்கிறான். அவைக் கண்கள் முழுவதும் மகுடராசாவை ஈக்களாக மொய்க்க மகுட ராசா தன்னைத் தெருவில் கிடக்கும் மலமாக உணர்ந்து கூனிக் குறுகுகிறார். தலை குனிகிறார். குனிந்த தலையிலிருந்த மகுடம் கழண்டு தரைதொட்டு உருண்டோடுகிறது.
மகுடமற்ற ராசாவின் நீண்ட இரு கழுதைக் காதுகள் அம்பலமாகி திறந்துகிடக்கும் காதுகள் தோறும் சென்று ராசாவின் ரகசியத்தை தோரணமாக்கித் தொங்கவிட்டன.
அன்று அம்பட்டன் அவனது மனையாளின் பெருங்குரலோடு மண் மூடி நட்ட சிறு செடி..... புதையுண்டு கிடந்த ரகசிய உண்மையை வேரோடு பிடித்து வளர்ந்து நின்றது. முரசுகள் உருவாக்க ஏற்ற மரமாகத் தன்னைத் தந்தது. முரசுகளுக்குள் 'உண்மை' புகுந்து கொண்டது.
தலைகீழாகக் கவிழ்த்தாலும் மேல் நோக்கி எழும்பும் நெருப்பு போன்றது 'உண்மை'.
அன்று... அம்மாச்சி கதை முடிக்கையில் ஆகாசத்தில் முழுமதியும் அதன் தோழமை நட்சத்திரங்களும் எங்களைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தன.
காலங்கள் கடந்து கனிந்து இதோ 'மகுட ராசா' கதையை கொஞ்சம் மெருகேற்றி உரு மாறிவிடாதபடிக்கு கவனத்துடன் உங்களிடம் பகிர்ந்துவிட்டேன். கதை இப்பதிவோடு முடிந்துவிட்டது. இருப்பினும் இக்கதை உங்களின் வாயில் கடந்து இன்னும் சிலர் காதுகளுக்கு எட்டுமானால் 'மகுடராசா' தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார். இக் கதையை எங்கள் அம்மாச்சிக்கு காணிக்கை ஆக்குகிறேன். வாசித்துவரும் அனைவருக்கும் நன்றி நவில்கிறேன்.
"வலியது வாழும்"
கதை உலகமும் சுற்றும் பூமிக்குள் நின்றுவிடாது சுழலும்.
சுழல்வதற்கான காரணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
சமீபமாக கேட்கும் கதைச்செயலிகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. இப்புழக்கத்திற்கு என்னைப் பழக்கி கதைகளைக் கேட்பதை வழக்கமாக்கிக் கொள்ள முயல்கிறேன். உங்கள் எண்ணமும் இந்த வண்ணம் ஆகலாம். கதைகளின் உலகிற்குள் பிரவேசிக்கலாம்.
'கற்றலின் கேட்டல் நன்று '-காதுகளுக்குள் ஒரு குரல் கிசுகிசுக்கிறது.
அன்பில் ஒரு வேண்டுகோள்...
பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்
....
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்...
Irudhy.a