குறித்தும் தீர ஆலோசித்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்தார்.
என்ன முடிவு?
Have your cup of "tea"
அன்று..
எங்கள் அம்மாச்சி கதைகள் சொல்லும்போது கொக்கிபோட்டு கொக்கிபோட்டுத் தான் கதைகள் சொல்லுவார். கதை பிடிக்க கேள்விக் கொக்கிகள் ஏதுவாக இருந்தன. தொடர்பு முறைகள் ஒரு வழிப்பாதையாக இல்லாமல் இருவழிப்பாதையாக இருந்தால் போக்குவரவு சிறப்பாக இருக்கும். குறிப்பாகக் கதை சொல்லலில் இந்த உத்தி சிறந்த கொக்கியாகி கதை பிடித்துப் பயணிக்க உதவும்.
கதைகள் பேசியும் கதைகள் கேட்டும் பறந்து திரிந்த காலங்களில் கதை சொல்லிகளால் கதைகள் சொல்லளவு நின்றுபோகாமால் பேசும் பொருளாகவே இருந்தன.
இப்பொழுது 'ராசா' கதையின் போக்கிற்குச் செல்லலாம்.
'ராசா'வின் முடியும், முடிவும்!
'மகுட ராசாவால்' எதிலும் ஒன்ற முடியவில்லை. எண்ணமுடியா தலைமுடியால் சொல்லமுடியா அவஸ்தைகளை நம் ராசா அனுபவித்தார். அந்தப்புரத்தில்
'மயிலாட்டம்' கண்டு வந்தபின்னர் தலையாட்டம் அதிகமானது. கடந்த இரண்டு நாட்களாக அந்தப்புரம் கூட செல்லாது தவிர்த்தார். தலையில் தறி நெய்து தவியாய் தவித்தார்.தறி நெய்வதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும் என்றெண்ணி
'பொறுத்தது போதும். பொங்கி எழு மகாராசா!'
எனச் சூளுரைத்து அரச சபையில் முடி திருத்தம் செய்யும் அம்பட்டனை தன் தனியிடத்திற்கு வரவழைத்தார். அம்பட்டனும் வந்தார்.
'ராசா' சற்றே மூர்க்கத்துடன் அம்பட்டனிடம்
"அம்பட்டா இது முதற்கொண்டு நீ என்னிடத்தில் கண்ட கேட்ட எல்லாவற்றையும் உன் மனசுக்குள் உண்டு உயிர்த்து விடு. மண் தோண்டிப் புதைத்துவிடு. புதைத்துப் புதிதாகப் பிறந்துவிடு. கடந்தவற்றை, நடந்தவற்றை மறந்துவிடு. இல்லையெனில் நீ மண்ணில் புதைவாய்."
- - - எச்சரிக்கை மணி அடித்து தன் முடி மகுடம் அகற்றி அம்பட்டனிடம் தன் தலையில் மண்டிக்கிடந்த தலை முடியைக் கத்தரிக்கச் சொன்னார்.
மகுடம் அற்ற மகாராசாவைக் கண்ட அம்பட்டன் பிறவிப் பயன் அடைந்ததைப்
போல மகிழ்ந்தான்.
One minute please...
'மகுடம் இல்லா மகாராசா'வை நான் என் கிறுக்கலில் வெளிப்படுத்தவில்லை. நல்ல வேளை தப்பித்தார் நம் மகாராசா! கிறுக்காமல் விட்டதன் காரணம் சொல்லிவிடுகிறேன். தொடரும் சூழல்களில் 'ராசா' குறித்த கழுதக் காது உருவத்தை உங்கள் கற்பனைக் குதிரையில் அமர்த்தி உலவ விடுங்கள். கதை உலகின் ஆகச் சிறந்த வசதி இது.
இனி உங்கள் கற்பனையில் 'ராசா' உருவம்....
கழுத்துவரை நீண்டு காதுகளை முற்றிலும் மறைத்து இருந்தன சுருள்முடிகள். பாம்பு போல வளைந்து நெளிந்த தலைமுடியின் கத்தரிப்பை அம்பட்டன் உச்சந்தலையிலிருந்து தொடங்க ராசாவின் மண்டைக்குள் 'பல்பு' எரிந்தது.
ராசாவின் சுருள்முடி தரை விழுந்து காற்றில் பறந்தது.
இதோ...
ராசா இதுவரை காத்து வந்த ரகசியமும் காற்றில் பறக்கப்போகிறது. காதுகளின் முடியை நறுக்கென்று கத்தரித்த அம்பட்டனை ஒர் உண்மை சுருக்கென்று தைத்தது.
'அப்படியே ஷாக் ஆயிட்டாரு?' அரச சபை அம்பட்டன்.
'ராசா'வின் காதுகளைக் கண்ட அம்பட்டனுக்கு அவரை விட்டு காத தூரம் ஓடிவிட வேண்டும் எனத் தோன்றியது.
காரணம்.......?
"ராசாக் காது.... கழுதக் காது....!? ராசாக் காது.... கழுதக் காது...?!
ராசாக் காது... கழுதக் காது...!?"
அன்று...
எங்கள் அம்மாச்சி...
'ராசாக் காது... கழுதக் காது'
- என்று 'ராசா'வின் ரகசியத்தை உடைத்த போது எங்கள் முகத்தில் அம்பட்டனின் அதிர்ச்சி ரேகைகள் காட்சிகளாக விரிந்தன.
அம்மாச்சியின் முகபாவனைகளும், கதைசொல்லலின் தோரணைகளும் கதைப்பேச்சில் உச்சம் தொடும். இறுக அழுத்தித் தேய்த்த உள்ளங்கைகளில் வேர் விடும் சூட்டைப்போல கதைக்களம் சூடு பிடிக்கும். இருவழிக் கதைப்பயணத்தில் எதிர்வழி எங்கள் வழியே கேள்விகள் புறப்படும்.
'அம்மாச்சீ ! ...' ராசா'வுக்கு ஏன் கழுதக் காது இருந்துச்சு?'
- எதிர்நோக்கிக் காத்திருந்த கேள்வி தன் அருகே வந்ததும் அம்மாச்சி எங்கள் பாதைக்குத் தாவுவார்.
"ராசாக்களா... பெத்தவுக செஞ்ச
பாவ புண்ணியமெல்லாம் புள்ளைங்கள வந்து சேரும். நம்ம ராசாவப் பெத்தவுக... செஞ்ச பாவத்துக்கு ராசாவுக்கு கழுதக் காத குடுத்துட்டாரு சாமி'.
கதையின் ஊடாக பாவத்தின் வீச்சை அதன் பயத்தை மனதில் விதைப்பார் அம்மாச்சி. 'பாவம்' மனசுக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்தும்.
"பாவத்தின் சம்பளம் மரணம்"
' ஆத்தாடி! பாவமே செய்யமாட்டோம்பா'
கன்னத்தின் இருபுறமும் கைகளால் தட்டிக் கொள்வோம்.
எங்கள் அம்மாச்சி சிறந்த கதை சொல்லி. உங்கள் தாத்தா பாட்டியும் சிறந்த கதை சொல்லிகளாக இருந்தால் எனது இக் கூற்றை ஏற்றுக் கொள்வீர்கள்.
உங்கள் மனசுக்குள் அப்படி உங்களின் தாத்தா பாட்டியிடம் கேட்ட கதைகள் ஏதேனும் இருப்பின் முடியுமானால் எனது
'இ-மெயிலுக்கு' உங்கள் மெயில் வழி விரல் தட்டி அனுப்புங்கள். வழித்தடத்தில் காத்திருக்கிறேன். கதை உண்ணும் சிறுபறவையாக....
கதைகள் ஏறவேண்டிய இரயில்
Prakashaxavier@gmail.com
பேச மறந்த கதைகள்
நம் பாட்டன்கள்
பாட்டிகள் சொன்ன கதைகளை அவரவர் முகப்புத்தகத்தில் களமேற்றுங்கள். பழங்கதைகளின் முகம் அறியும் காலமிது...
பேச மறந்த கதைகளைப் பேசும் கதைகளாக்க நம்மால் முடியும்.
'ராசா'வின் கதையில் மையமுடிச்சு அவிழ்ந்துவிட்டது. இனி கதையில் சுவாரஸ்யம் இருக்குமோ? ஐயம் வேண்டாம். டிசம்பர் குளிருக்குச் சூடு பறக்க... தொடரும் பதிவில் தொடர்ந்து 'ராசா' கதை பிறக்கும்...
திருப்பங்களுடன்....!
காத்திருக்கிறேன்.
மூலக்கதை
அம்மாச்சி'சொர்ணம்மாள்'
திரைக்கதை, கிறுக்கல்கள்
இருதய்.ஆ
பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்...
மனப் பறவை மனம் கொத்தும்...
பழம் நினைவுகள் உண்ணும்!
பறக்கும்...
Irudhy.a