About Me

Showing posts with label 'ஹிஜாப்' அதிர்வலைகள்... (தேசிய பிரச்சினையா?). Show all posts
Showing posts with label 'ஹிஜாப்' அதிர்வலைகள்... (தேசிய பிரச்சினையா?). Show all posts

Friday, February 11, 2022

'இதுவும் கடக்கும்'...

Fly...

இறைவன் தாம் படைத்த எல்லாவற்றிலும்  நல்லவற்றையே கண்டார். 
நல்லன கண்டடைவதே 
வாழ்வின் வழி. 

"வெற்றிகள், தோல்விகள், பிரச்சினைகள், சிக்கல்கள்" இவைகள் எல்லாம் வாழ்க்கைப் பயணத்தில் நம் உடன் பயணம் செய்யும் பயணிகள். நிறுத்தம் வருகையில் எல்லாம் விடை கொள்ளும். பயணங்கள் மட்டும் முடிவதே இல்லை. 

"பறத்தலே பறவையின் வாழ்வு" 

            மனம் கொத்தும் பறவை... 

உலாப் பூக்களில் ...

கதம்பம், முல்லை, தாமரை என   முப் பூக்களின் உலா முடிந்து தொடரும் ' பூ நெனப்பில்' இருக்கையில் கடந்த பூக்களின் திட்டமிடா வரிசை போலவே இந்தப்பூவும் நூல் பிடித்து வந்தது. 
நூல் பிடித்த' பூ' மலர்களின் அரசி "ரோசா"... 

வெள்ளி மலரில் "ரோசா" எனப் பகிர்ந்தேன். ஆனால்...? அதே நாள் இரவில் மனம் மாறியது. 

தேநீர் தருணம்... 


'ரோசாப் பூவின்' நினைவுகளை மொட்டவிழ்க்கும் சூழல் இப்போது இல்லை.

 "ரோசாப் பூ" பிப்ரவரி - 14 ஆம் நாளில் உலா வரும். "ரோசாப் பூ" தன் உலாவை 
'காதலர்கள் தினத்தில்' அமைத்துக்கொள்வது எனது திட்டத்தில் அல்ல. அதுவாகவே அமைந்தது. மனம் செய்யும் மாயம் இது. 

பாவையரை பூவையராகப் பார்க்கும் சமூகம் நம் சமூகம். அதே போல பூவைப் பாவையாகப் பார்ப்பதும் நம் இயல்பு. 
'பெண் வைக்கிற இடத்துல பூ வைக்கணும்' எனச் சொல்லக் கேட்டதுண்டு. கடந்த சில நாட்களாக செய்திகளில் இடம்பெறும் "ஹிஜாப்"  என்ற சொல் நிறைய விஷயங்களை யோசிக்க வைத்தது. 

எதிர்பாரா எதிர்ப்பு... 


"ஹிஜாப்" என்பது அரேபியச் சொல். "ஹிஜாப்" என்றால் 'திரை' , 'தடுப்பு' , 'மதில்' என்று பொருள்.   பொது வெளிகளில்  குறிப்பாக ஆண்கள் முன்னிலையில் இஸ்லாமிய மகளிர் அணியும்  கலாச்சார ஆடை தான் "ஹிஜாப்" . இஸ்லாமிய மகளிரைக் கட்டுப்படுத்தும் ஆடை அல்ல. பிறரைக் காயப்படுத்தும் அடையாளமும் அல்ல.  "ஹிஜாப்" அணிதல் இஸ்லாமிய மகளிரின் உரிமை. 
இது முகமதியர்களின் பொது நியதி. முக மறுப்புகள் இல்லை. 

அறிந்த வரை... 

பணி செய்யும் இஸ்லாமிய மகளிரோ அல்லது   கல்வி பயிலும் இஸ்லாமிய சகோதரிகளோ பொது வெளிகளில் 'ஹிஜாப்' அணிந்து வருவார்கள். பணிசெய்யும், கல்வி பயிலும் களம் வந்தவுடன் அங்கு அணியவேண்டிய உடை மீதான சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு  தாங்கள் ஏற்கும் 'பாத்திரங்களுக்குத் தக்க வடிவம் கொள்ளும் தண்ணீர் போல' இஸ்லாமிய மகளிரும் "ஹிஜாப்" விஷயத்தில் தங்களை தக்கமுறையில் தகவமைத்துக் கொள்ளுகிறார்கள். பணிபுரியும், கல்வி பயிலும் இடங்களுக்கு ஏற்ற உடைகளை அங்கு சென்றதும்  அணிந்து கொள்கிறார்கள். பொது வெளிக்குத் திரும்பியதும் 'ஹிஜாப்' அணிந்து கொள்கிறார்கள். இவ் வழக்கத்தைக் கைக் கொண்ட இஸ்லாமிய சகோதரிகளை, தோழிகளை மதுரையில் கல்லூரியில்  பயின்ற காலங்களில் நேரில் கண்டிருக்கிறேன். இன்றும் இம்முறைமை தொடர்கிறது. நீங்களும் அநேக முறை கண்டிருக்கலாம்.  

 இச்சூழலில் " ஹிஜாப்" எப்படி பிரச்சினையாக உருவெடுத்தது? சில பிரச்சினைகள் சமூகத்தில் திடீரென முளைப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால், கவலைகள் கொள்ளத் தேவை இல்லை. 


சிறு மழைக்கு குடை விரித்த விஷக் காளான்களுக்கு வேர்களின் ஆயுள் குறைவு. 
புழுதிக்  காற்றுக்கு சிறு செடி அசைவாடும். படபடக்கும்.

 'இந்தியா' சிறு செடி அல்ல. உரமேறி வேர்கள் பரப்பி விழுதுகள் கண்ட பல்லாண்டு 'ஆலமரம்' 


"ஹிஜாப்" பிரச்சினையை பொது வெளிகளில் காரசாரமாக விவாதிக்காமல் அமைதியாகக் கடப்பதே  நல்லதெனத் தோன்றுகிறது. நானும் முதலில் வீரா வேசமாக 'ஹிஜாப்' உடை மீதான தடை உடை என்றெல்லாம் பகிர்ந்தேன்.
பின்பு யோசிக்கையில் மனம் ஒரு பாடம் சொன்னது. 

       கர்நாடகத்தில் ஒரு கல்லூரியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஊதி ஊதி  தீப்பொறியாகி மாநிலம் கடந்து பரவி விட்டது. 'நெருப்பு' சேர்ந்தாரையும் எரிக்கும். அறிந்ததே. ஒரு குறிப்பிட்ட மதவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தேசியக் கொடியை இறக்கி  காவி நிறக் கொடியை ஏற்றுகிறார்கள். செய்திகளில் கண்ணுற்ற போது  அந்நியர்களிடமிருந்து தேசத்தை மீட்டு சுதந்திரக் கொடியைப் பறக்க விட்ட 'தியாகச் செம்மல்கள்' நினைவிற்கு வந்தார்கள். இந்திய சுதந்திரம் அந்நியர்களிடம் இரந்து பெறவில்லை. தியாகிகள் உயிர்கள் துறக்கப் பெற்றோம். இனி துறக்க எதுவுமில்லை. 

வாய்மையில் தூய்மை காத்தலும், பொறுமையோடு இருத்தலும் தான் எல்லாம் சிறக்க வழி. இவ் வழிகள் கைக்கொள்ள முயன்று பல முறை தோற்று கோப வழிகளிலே விழிகள் விரிய நடந்திருக்கிறேன். இப்பொழுதும் கோபம் கடக்க முயன்று கொண்டே தான் இருக்கிறேன். 'கோபம்' இரு முனைக் கூர் கத்தி. அனுபவம் உண்டு. 

 'அகிம்சை' தான் 'மார்க்கம்' என்றார் தேசப்பிதா 'மகாத்மா காந்தியடிகள்'. தேசக் கொடியின் மையச் சக்கரம் அகிம்சையால் தான்  சுழல்கிறதோ! 

'அகிம்சைச் சக்கரம்' எல்லாச் சுழல்களையும் கடக்கும் தோணியாகும். 
'இதுவும் எதுவும் கடக்கும்'  என்றது மனம்.   " ஹிஜாப்" பிரச்சினையின் அடிவேர்கள் தேடிப் புறப்படத் தேவையில்லை. எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிவேர்கள் தேட ஆரம்பித்தால் பூவுலகம் 'பூக்காடாகவோ' , 'பூந் தோட்டமாகவோ' இருக்க முடியாது. 

பூக்களை பாவையாகவும், பாவையரை பூக்களாகவும் காணும் சூழலெல்லாம் மாறிப் போகும். 

பூவுலகை பூக்களாகப் பார்ப்பது  பாவையருக்கு மட்டுமல்ல எல்லா மாக்களுக்கும் அது தான் அழகு. 

"பூக்களுக்குள் பேதங்கள் எப்பொழுதும் இல்லை. 


பூக்களே வேதங்களானால்
பூவுலகின் எல்லைகளுக்குள் பேதங்கள்  இல்லை" 
-என உரக்கச் சொல்லலாம்.  

சப்தங்களின்றிப் பூக்கும் பூக்களைப் போல  மனம் ஒவ்வொரு நாளும் பூக்கட்டும். 
 
போர்க்களத்திற்குள் நுழையத் தான் ஆயுதங்கள் வேண்டும். 'பூக்களம்' திரும்ப ஆயுதங்கள் தேவையில்லை.  யோசிக்காமல் உதடுகள் உதிர்க்கும் சொற்களும் வலிமை மிகு ஆயுதங்கள் தான். அறிவீர்கள். 

'வேதாகமத்தில்' எனக்கு மிகவும் பிடித்தமான வரிகளைப் பகிர்ந்து பதிவை நிறைவு செய்கிறேன். 


" உதடுகளுக்கு காவலாளிகளை வைத்துக் கொள்".
-ஆமென்.

அன்புடை வேண்டுகோள்.... 
      
  விருப்பம் இருப்பின் அறிந்தவர்களுக்குப் பகிருங்கள்... 
               
மனம் பறவையாகும்... 
மனம் கொத்தும்! 
பறக்கும்.... 


இருதய். ஆ





  
 






அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...