அன்புடை அப்பா…
'2022' -மே-12 "
'வியாழன்'
வெயிலின் வெம்மையோடு மனசுக்குள் வெறுமையைக் கடத்திய நாள்.
அன்புடைய அப்பா… நிசத்திலிருந்து கரைந்து நிழலாக எழுந்து நினைவுகளாகி பெருவெளியில் உயிர்க்காற்றை விசிறிப் பறந்து போன நாள்.
என் வாழ்வில்
மறக்க முடியாத நாள்.
அன்னை வழியில்
அறியும் உன்னத உறவுகளில்
நித்தியமாக
நீளும் வானமாகத்
தொடரும் உறவு...
என்றும் தந்தையே!
யாதுமாகி....
நின்ற தந்தையின் நினைவுகள்
வெயில் விழுந்த பிம்பத்தின்
நிழலாக தொடர்கிறது...
அன்புடைய அப்பா…
அன்று
கதிரவன் எழத் தவறவில்லை.
நம் வீட்டுப் பூக்கள் பூக்கத் தவறவில்லை.
இலைகள் மலர்ச்சியின் விரிவை மறக்கவில்லை.
முகம் முகமாக அமர்ந்து நீங்கள் உறவாடி லயிக்கும் காகிதப் பூக்கள் மலர்ச்சியை இழக்கவில்லை.
எல்லாம் இனிதே நிகழ்ந்த பொழுதில் எங்களின் இனிமை "அப்பா" நீங்கள் மட்டும் இமைகள் விரித்த சில கணங்களில் தன்னுயிரைச் சுருக்கி சுமை பெருக பூவுலகை விடுத்தது ஏனோ?
விடை தெரியா கேள்விக்குள் மடை திறந்த வெள்ளமாக மனம் பாய்கிறது.
"காண்கின்ற உலகம் நமது இல்லை.
காணாத பரலோகம் தான் நமது குடியிருப்பு…"
மறையின் பாடல் கேள்விக்கு விடை தருகிறது.
எதுவும் கடக்கும் உலகில்
அன்புடை அப்பாவின் நினைவுகளில் பறக்கும்…
நான் பகிர்ந்து வரும்
'உலாப் பூக்களில்' 72-ம் பதிவாக அப்பாவுடனான அந்நாளைய அனுபவங்களைப் பகிர பதிவை தயார் செய்தேன். 71-ம் பதிவை வாசித்தவர்கள் அறிவார்கள். அப்பாவின் அழகியலை எனது சிறுபிராய பள்ளிப் பருவ நாட்களில் அனுபவித்திருக்கிறேன்.
அப்பாவிற்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. அவரது கையெழுத்து ஓவியம் போலத்தான் இருக்கும். இது மெய்.
சித்திரப் பூவின்(செம்பருத்தி) எண்ணங்கள் அப்பா வரைந்த பயிற்சிப் புறாவை நோக்கிய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது. இந்த நினைவுகளை மையப்படுத்தியே 72-ம் பதிவை எழுத ஆரம்பித்தேன். இதற்கான கிறுக்கல்களை முதலில் தயார் செய்தேன்.
'முகப் புத்தகம்' , 'வாட்ஸ் ஆப்' மூலம்
72-ம் பதிவின் கிறுக்கலோடு
"சித்திரப் பூ நெனப்பில் பறந்து வந்த பயிற்சிப் புறா"
- வரும் "வெள்ளிக்கிழமை 13-ம்" தேதி இடம்பெறும் எனப் பகிர்ந்தேன்.
நாளும் வந்தது. மனம் சில நாட்களாகவே ஏனோ கல் எறிந்த குளமாகவே இருந்தது. மனசுக்குள் அமைதி இல்லை. வெளிக்காட்டாமல் இருந்தேன்.
அப்பா உயிரோடு இருக்கும் போதே வெளி வரவேண்டிய பதிவு ஒரு வாரம் கடந்து தள்ளிப் போனது. காரணம் அடுத்தடுத்து மே மாதத்தில் மே தினம், ஈகைத் திருநாள், அன்னையர் தினம் என மூன்று பதிவுகளைப் பகிர்ந்ததால் உலாப் பூக்களை ஒரு வாரம் தள்ளி வைத்தேன்.
இதோ.. இன்னும்' 72 - ம்' பதிவு முடிவு பெறாமல் அப்படியே நிற்கிறது. அப்பா வரைந்த பயிற்சிப் புறாவை நான் முடிந்த வரை அப்படியே வரைந்து முடித்தேன். கிளையுள்ள கொப்பிலே "பயிற்சிப் புறா" அப்படியே நிற்கிறது. நிச்சயம் நினைவுகளின் சிறகசைத்துப் பறக்கும்.
புறாவை வரைந்த அப்பா ஏனோ? சிறகு விரித்து பறந்தே போனார். நீங்கள் வாசிக்கும் இப்பதிவை காலம் 'மனம் கொத்தும் பறவையில்' மறக்க இயலாப் பதிவாக பதிய வைத்துவிட்டது.
தொடர விருப்பது தந்தையின் மீதான நினைவுகளே…
இதைப் பகிர நிறைய யோசித்தேன். நம் மனச்சுமையை ஏன் பொதுவெளியில் பகிரவேண்டும். எல்லோருக்கும் ஏதேனும் மனபாரம் இருக்கவே செய்யும். மனபாரத்திலிருந்து விடுபடுதலை நோக்கியே எல்லோரது நகர்வும் இருக்கையில் நாம் வாசிப்பவர்களிடத்து நம் மனச்சுமையை இறக்குதல் சரியாகுமா? எனத் தயங்கினேன்.
இருப்பினும் மனம்கொத்தும் பறவையில் அப்பாவின் நினைவுகள் நிழலிட விரும்பினேன். நிழலில் இளைப்பாற விரும்பினேன். விரும்பிய வண்ணம் அப்பாவோடு பயணித்ததால் பதிவை சுமைகளற்று மயிலிறகின் வருடலைப் போலவே பகிர
முயல்கிறேன். சந்தோசித்து வாழவே அப்பாவும் விரும்புவார். விரும்பினார். எல்லோரது தந்தையும் தம் பிள்ளைகளின் மகிழ்வைத் தானே தங்களின் துடுப்பாகக் கொள்வார்கள்.
விரும்புவர்கள் தொடர்ந்து வாசியுங்கள். மனம் சஞ்சலப்பட்டால் வாசிக்காமல் கடந்து விடுங்கள். தவறில்லை.
கடந்து போகவே நானும் விரும்புகிறேன். எதுவும் கடந்து போகும் வாழ்வில் நாம் கடந்து வந்த பாதைகளுக்கு மீண்டும் திரும்பப் போவதில்லை. கடந்த பாதைகள் நினைவுகளாகவே நம் மனக் கூட்டிற்குத் திரும்பும். திரும்பிய நினைவுகளுக்குச் சிறகு முளைக்கும். மனம் பறக்கும். பழம் நினைவுகள் உண்ணும்.
"கண்ணாடித் தொட்டிக்குள்
முட்டித் திரும்பி...
மேல் எழும்பும்
வண்ணக் கண்ணாடி மீன்களாக....
மீளும் தந்தையின் நினைவுகள்" ...
தந்தையின் நினைவுகளில் நீந்திக் கரையேறுவேன்.
நினைவுகள் சில சமயம்
மீன்களாக நீந்திக் கடக்கும்.
பல சமயங்களில்
சிறகு விரித்த பறவைகளாக
மேல் எழும்பும்...
மேல் எழும்ப பறவைக்கு சிறகுகள் போதும்"
வாடாத காகிதப் பூக்களைப் போல மலர்தலின் அமைதலாக தந்தையின் நல் நினைவுகளோடு தொடரவிருக்கும் பதிவை
தந்தையின் இறப்பிற்கு பின்னரான
பதினாறாம் நாள் நினைவு தினத்தில் பகிர்கிறேன்.
வரும் வெள்ளி 27-05-2022
மனம் பறவையாகும்...
பறக்கும்....
இருதய். ஆ