அன்பின் மொழி...
"ஆதியும்
அந்தமுமாக…
உயிர்க் காற்றாக…
விரிந்து
அண்டவெளியின்
அணுத்துகள்களை
அன்பில் நிறைப்பாள்!"
"அனுஅனுவாய்…
அன்பில் தன்னைக் கரைத்து
தரணியில் உயர…
தன்னையே
"பிறைநிலவென" தேய்ப்பாள்!
அன்பில் வளர்ப்பாள்…
வளர் பிறையாவாள்!
முகம் நிறை ஒளியாக…
முழுமதியாய் ! ...
முன் வருவாள்! "
" சொல்லி முடியா அன்பை சொல்லெடுத்துப் புகழ தமிழோடு மல்லுக்கட்டுகிறேன்.
மங்கலமாய்ச் சிரித்து…
காதோரம்
செல்லமாய்க் கிள்ளி…
காதலோடு
காதிலே சொன்னாள்
இனிய "தமிழச்சி" …
"வார்த்தைகளுக்குள் வளைக்க முடியா…
'வானவில்'
அம்மா!
வார்த்தைத் தேடலை முடித்துக்கொள்கிறேன். அன்பெனும் கடலில் இறங்கலாம். கைகள் கொள்ளும் வரை அன்பை அள்ளலாம். அன்பின் நீரை அள்ளிப் பருக பாத்திரங்கள் தேவையில்லை. நாமே அன்னையின் பாத்திரம். அன்பை அள்ளிப் பருகலாம்.
பருவநிலையில் இனி
"வசந்தகாலம்" .
வாழ்வின் பருவநிலைக்குள்
வசந்தங்களை நிறைத்த *அன்னையரை '
வாழ்த்தும் காலம்…
வாழ்த்தலாம்...
கொஞ்சம் பின்னோக்கிப் பயணிக்கிறேன்.
2019- ஆம் ஆண்டு…
நான் சின்னத் திரைக்கு வந்து "22 ஆண்டுகள்" கடந்துவிட்டன. இத்தனை வருடங்களில் மன நிறைவாக பல்வேறு நிகழ்ச்சிகளை இயக்கி தயாரிப்பு நிறுவனங்களின் வழியாக தனியார் தொலைக்காட்சிகளோடு தொடர்பில் இருந்திருக்கிறேன். ஆனால் தொடர்ந்த ஓட்டமாக ஓடியதில்லை.
பலவேளைகளில் பெரிய இடைவெளிகள் என்னை இட்டு நிரப்பும். எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் ஓடியதால் மனம் சமநிலைக்குத் திரும்ப கடினப்படும்.
இப்படியொரு கடினமான சூழலில்…
"அன்னையர் விருதுகள்"
எனும் நிகழ்ச்சியை இயக்கும் வாய்ப்பை காலம் கைகளில் தந்தது.
எனது இருபத்து இரண்டு ஆண்டுகாலங்களில் நான் கண்டிராத ஒரு சூழலுக்குள் நுழைந்தேன். தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் இருந்து பணிபுரிந்த நாட்களில் தண்ணீருக்குள் இருக்கும் மீன்களின் சந்தோசத்தை அறிந்தேன். மூன்று மாதங்கள் அங்கிருந்த கணங்களில் செய்திப் பிரிவில் எப்படி தயாரிப்புப் பணிகள் நிகழ்கிறது என்பதை அறிய நல்ல வாய்ப்பாக அமைந்தது. இதற்கு முன்னரும் மூன்று முறை 'மகளிர் தின' நிகழ்விற்காகப் பணிபுரிந்திருந்தாலும் அது வேறு அனுபவமாகவே இருந்தது.
"அன்னையர்" விருதுகளுக்காக பணிபுரிகையில்
நடைமுறையில் சில பொழுதுகள் கடினமாகக் கழிந்தாலும் நான் எனது பெரும்பான்மையான அன்றைய காலத்தை "நியூஸ் 18"தொலைக்காட்சி நிறுவனத்தில் கரைத்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு பாடம், சில பல அனுபவங்களோடு கரை ஏறினேன்.
மனசுக்குள் மகிழ்வைக் கடத்திய நிகழ்ச்சி
"அன்னையர் விருதுகள்"
தொடக்கத்தில் நிகழ்ச்சியின் தன்மை வேறாக இருந்தது. பிரபலமான அன்னையருக்கு விருதுகள் என்ற நிலையிலே இருந்ததை ஒருவரின் கேள்வி எல்லாவற்றையும் மாற்றியது.
"பிரபலமான அன்னைக்கு விருதா?
அல்லது
பிரபலங்களை உருவாக்கிய அன்னைக்கா?
விருதை யாருக்கு கொடுக்கப் போகிறீர்கள்?"
கேள்வி கேட்டவர் மரியாதைக்குரிய ஊடகச் சகோதரர் திரு. 'தயாளன்' அவர்கள். ஆற்றுப்படுத்தலில் தாராள குணமுள்ளவர். இந்த வேளையில் அவருக்கு எனது நன்றிப் பூக்கள்…
நான் கேள்வியைப் பிடித்துக் கரையேறினேன். நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களிடம் பேசினேன். பிரபலங்களை உருவாக்கிய அன்னையருக்கு விருதுகள் தருவதே அன்னையர் தினத்தை, அன்னையர் விருதை அர்த்தமுள்ளதாக்கும் என வேண்டுகோள் வைத்தேன். கனிவோடு ஏற்றார்கள்.
"அன்னையர் விருதுகள்" அர்த்தமுள்ள நிகழ்வாக அமைந்தது. நிறைய ஊடக நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. நிகழ்வைத் தொகுத்தவர்கள், களப் பணியில் இருந்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக ஒத்துழைத்தார்கள். இந்த வேளையில் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
அன்னையரைப் போற்ற "அன்னையர் கீதம்" ஒன்றை இசை சேர்த்து இணைத்தோம். இசை அமைத்தவர் இசைப்புயல் திரு. "ஏ..ஆர்.ரஹ்மான்" அவர்களின் இசைக் கல்லூரி மாணவர் சகோதரர் 'ஆதி' அவர்கள். பாடலை எழுதியவர் அவரது நண்பர். 'கண்ணன்'.
நான் பாடலின் வடிவம் வரவேண்டிய சூழலை மட்டும் சொன்னேன். அன்னையருக்கான தாலாட்டாக இப்பாடல் இருக்கலாம் என்ற விருப்பத்தைச் சொன்னேன்.
"தாலாட்டுப் பாடவா கண்ணம்மா...
விருதுகளின் நிகழ்வன்று நிகழ்வின் தொகுப்புரைகளை நான் எழுத முடியாத சூழல். நேரம் நெருக்கடியானது. ஊடக சகோதரர் திரு. 'பால சக்கரவர்த்தி' அவர்கள் எழுதி உதவினார். அவருக்கும் எனது நன்றிப் பூக்கள். அப்போது நிகழ்ச்சியின் அறிமுகத்தில் இடம்பெற ஒரு கதை மட்டும் எழுதினேன். அந்தக் கதையை இப்பொழுது சில மாறுதல்களோடு பகிர்கிறேன்.
இப்ப ஒரு கதை சொல்லட்டா…
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு…
எதுவும் குறைவுபடாத குற்றமில்லா ஒரு தேசம். தேசத்தின் தேசாந்திரிகள் அனைவரும்…????
"ஸப்பாடி… கண்ணக்கட்டுதே"...
சரி சொல்லித் தானே ஆகணும்.
தேசத்தின் 'தேசாந்திரிகள்' அனைவரும் மீசை வைத்த ஆண்கள். பெண்களே இல்லாத தேசம் அந்த தேவையற்ற தேசம்.
காலப்போக்கில்… மன்னனிடத்தில் எல்லா மீசை முளைத்த ஆண்களும் வந்து மனக்குறைவு பட ஆரம்பித்தனர்.
மனக் குறைவு
"மன்னரே…
எல்லாம் இருக்கிறது. எல்லாம் கிடைக்கிறது. இருப்பினும் ஏதோ ஒன்று குறைகிறது. என்னவென்று சொல்லத் தெரியவில்லை.
தெய்வம் உங்களைக் காண வருகையில் குறைவைச் சொல்லுங்கள்.வாழ்வை நிறைவாக நாங்கள் உணர வேண்டும்"- என்றனர் ஆசைகள் முளைத்த மீசை வைத்த ஆண்கள்.
எல்லாம் நிறைவேறியது
தெய்வம் வந்தார். மன்னன் குறைவைச் சொல்ல…
தெய்வம் குறுக்கும் நெடுக்குமாக நடந்து ஒரு முடிவுக்கு வந்தார்.
மறுநாள்…
தெய்வம் அனைவரையும் அவைக்கு வரச் சொன்னார்.
ஆசைமுளைத்த தேசாந்திரிகளே…
உங்களது எண்ணம் நிறைவேறும். உங்களது குறைவுகள் நிறைவுகளாக மாறும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அப்படியொரு செயலைச் செய்து முடித்திருக்கிறேன். உங்கள் அனுமதியின்றி நேற்றிரவு உங்களது 'விலா' எலும்பை உருவிப் போனேன்.
சட்டென ஆசைமுளைத்த ஆண்கள் தங்கள் விலாவைத் தொட்டுப்பார்த்து அதிர்ந்தார்கள்.
தெய்வம் தொடர்ந்தார்…
அஞ்சாதீர்கள். உங்கள் விலா எலும்பிலிருந்து உங்களுக்கான 'இணையை' நான் படைத்து விட்டேன். உங்களுக்கு நேரெதிர் உடற்கூறுகளோடு இருப்பாள். அவள் "பெண்" எனப்படுவாள்.
இனி உங்களுக்கு எல்லாமுமாக இருப்பாள்.
முதலில் உங்களது மன்னன் தன் "இணை" காணட்டும். பிறகு நீங்கள் காணலாம்.
அனைவர் முகத்திலும் ஆச்சரிய ரேகைகள் படர்ந்து விரிய தேசாந்திரிகளின் மன்னன் தன் "இணை" கண்டான்.
மனம் மகிழ்ந்தான். வானம் இடிபட எகிறிக் குதித்தான்.
ஆசை முளைத்த ஆண்களும் அவரவர் இணை கண்டனர். இணையின் உதட்டில் பூத்த புன்னகைப் பூக்களைக் கொய்தனர். அலைகடலென ஆர்ப்பரித்தனர்.
ஆரவாரவொலிகளுக்கு
இடையில் கடவுளின் குரல் ஒலித்தது.
"ஆசைகளை அணிந்து கொண்டீர்கள். உங்கள் இணையோடு புதிய வாழ்விற்குள் நுழைந்து விட்டீர்கள்.
இனி நான் உங்கள் மத்தியில் உலவ முடியாது. கூடிக் கழித்திருங்கள். இனி நன்மை தீமைகள் அறிவீர்கள். போய் வருகிறேன்."
என்றபடி தெய்வம் புறப்பட மன்னன் குறுக்கிட்டான்.
"தெய்வமே…
எங்களை திடீரென கை நெகிழ்ந்தால் எங்கு செல்வோம். எங்கள் எல்லோருக்கும் நீர் தந்தையல்லவா. போகாதீர்கள். "
-எனத் தடுக்க தெய்வம் பதில் மொழி பகர்ந்தார்.
" நான் தந்தையாக மட்டுமே இருந்ததால் வந்த குறை இது. அதையும் உங்களுக்கு இணை ஏற்படுத்தி சமன்படுத்திவிட்டேன். பிறகென்ன கவலை? மகிழ்ந்திருங்கள். புதிய உயிரை உங்கள் இணை சுமந்து பெறுவாள். புதிய உயிர் உச்சரிக்கும் முதல் மொழி அழைப்பில் என்னைக் காண்பீர்கள்."
-என்று கடவுள் கிளம்ப…
மன்னன் மீண்டும் குறுக்கிட்டான்.
" தெய்வமே…
புதிய உயிரின் விழிப்பின் விளிப்பு நிலை வரை காத்திருக்க இயலாது. இப்பொழுதே சொல்லிவிடுங்கள். புதிய உயிரின் முதல் விளிப்பு நிலை என்ன?"
தெய்வம் புன்முறுவலாக…
" அம்மா"….
என்றார்.
மன்னன் மறுபடியும் குறுக்கிட்டான்.
"அம்மா" என்றால் தெய்வமா? "
என்று மன்னன் வினவ…
தெய்வம்
மறுபடியும் புன்முறுத்தபடியே…
"அம்மா"....
மொழி அறியாக் குழந்தையின் தேவைகளை…
அன்பின் மொழியால்
அறிபவள்…
தன்னைக் கரைத்து
அனைவரையும்
கரையேற்றுபவள்…
இமைக்கா விழிகளோடு…
இரவிலும் விழித்திருக்கும்
கதிரவனாக
தன் நொடிகள்
கடப்பாள்…காப்பாள்!. "
"அம்மா" என்றால் தெய்வம் மட்டுமல்ல. அதுக்கும் மேல…!
-என்ற படி புன்முறுவல் கசிய காற்றில் தன்னைக் கரைத்து மறைந்தார்.
புதிய உயிர்கள் உருக்கொள்ள
"அம்மா " என்ற விளிப்பு நிலை அறிய ஆசை முளைத்த ஆண்கள் இணையோடு காத்திருந்தனர்.
பெண்களின் உரு நிலையின் உன்னத உயர்வு
"அம்மா"...
என்ற விளிப்பு நிலை தானே…!.
விளிக்கலாம்…
"அன்பென்றாலே அம்மா!"
மனப் பறவை மனம் கொத்தும்…
பறக்கும்....