About Me

Showing posts with label அற்புத விளக்கும் (Reelu puthusu). Show all posts
Showing posts with label அற்புத விளக்கும் (Reelu puthusu). Show all posts

Sunday, March 17, 2024

அலாவுதீனும், அற்புத விளக்கும்...



மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன்.



நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் போது பேச நிறைய கதைகள் இருக்கும். தீர்ந்து போகாத பேச்சுக்கள் போல கதை உலகமும் முடிவற்றது. உயிர்க்காற்றால் நிறைந்தது. வசிக்கலாம். சுவாசிக்கலாம். சொல்லக் கதைகள் இந்த உலகில் நிறைய உண்டு.


நானும் இப்ப கதைகளோட தான் வந்திருக்கேன். கதைத் தொகுப்பிற்கு ‘ஒளிவழிக் கதைகள்’னு பேரு வச்சுருக்கேன். 

இந்தத் தலைப்புல ஏற்கனவே ‘மனம்கொத்தும் பறவை’

காணொளியில் ஒளிக்கதைகளாகப் பதிவு பண்ணியிருக்கேன். விரும்புகிறவர்கள் மனம் கொத்தும் பறவையில் ஒளிஒலிக் காட்சிகளாகக்  காணலாம். எழுத்துவடிவக் கதையின் முடிவில் ஒளிக்கதையின் ஒளி ஒலிப் பதிவைப் பதிவு செய்திருக்கிறேன். விரும்பினால் காணுங்கள்.

        இப்ப எழுத்து வெளிக் கதைக்குள்ள பறந்து வந்துருங்க.



ஆயிரத்து ஓர் இரவுகளில் 


ஓர் இரவு 



'காட்டு மழை' காட்டு  காட்டுன்னு காட்டுது. காட்டு மழைன்னு பேருக்குச் சொல்லல.இப்ப மழை போட்டுத் தாக்கற இடமே  காடு தான்.


காடுன்னு ஒன்னு இருந்தா அங்க சிங்கம், புலி, நரி, எல்லாம் இருக்கும்ல. இந்த 'லிஸ்ட்ல' புதுசா ஒரு ஆளச் சேர்த்துக்கங்க.

  


Zeroல இருந்து ஹீரோ ஆகணும்னு போராடிக்கிட்டு இருக்க ஒரு சராசரி மனுசன்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.

 


பேரு

           "அலாவுதீன்

பெயரு போன ஆளு. இந்த ஆள கதையோட "Hero" னு சொல்றது சரியாப்படல.

சாதாரண ஆளு பேர் போன ஆளா மாறுற கதை ரொம்பப் பழசு தான். பழைய திராட்சை ரசத்துக்கு மவுசும், பவரும் எப்பவும் ஒசத்தி தான. அலாவுதீன் கதையும் பழைய திராட்சை ரசம் மாதிரி தான்.  காலந்தோறும் இந்தக் ‘கத’ புதுப்புதுக் கதவுகளத் திறந்துவிடத் தவறுனதே இல்ல. 


மொழிகள் கடந்து விழிகள் விரிய படித்து, பார்த்து ரசிக்கிற 'அலாவுதீன்' கதைய நானும் விடுறதா இல்ல. விட்ட கத தொட்ட கதையா தொடர நெனச்சு  திரைக்கதைய மாத்தி எழுதியிருக்கேன். படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க. 


சொல்லாமலே கடந்தாலும் பரவாயில்ல. படிச்சு முடிச்சதும் இந்தக் ‘கத’ உங்க மனசுல வண்ண மீன்களாக நீந்துனா போதும். 

 

"அலாவுதீனும், அற்புத விளக்கும்" 


கதை நடக்கற இடம் அடர்ந்த காடு. 


சட்டுனு  கடக்க முடியாத காடு. நிறைய நாள் கிடந்து தான் இந்தக் காட்டக் கடக்க முடியும்.

 

இப்ப நீங்க அடர்ந்த காட்டுல இருக்கீங்க. உங்க  கண்ணுக்கு எதுவுமே தெரியாது.



"காடு" இருட்ட நீண்ட போர்வையா போர்த்(திக்) கிட்டு படுத்துக் கெடக்கு. 

காட்டு மழை பெய்யுது. 


இதுக்கு மேல இங்க 

நிக்கறது அவ்வளவு நல்லதில்ல. மழையோடு இடியும் இறங்குது. 


கண்கள மூடிச்சட்டுனு ஒரு சொடக்குப் போடுங்க. 

சூப்பர்… 


இப்ப கண்களத் திறங்க.

காட்டுக்குள்ளயே இருக்கற அடர்ந்த இருள் சூழ்ந்த குகைக்குள்ள தான் இப்ப இருக்கீங்க. 


அட போப்பா. இதுக்கு காட்டுலயே இருந்திருக்கலாம்னு தோணுதா? 


கவலைப்படாதீங்க. உங்க எல்லாருக்கும் குகைக்குள்ள சொகுசான இருக்கை வசதிகள் ஏற்பாடு பண்ணியிருக்கேன். சாஞ்சு உட்கார்ந்துக்கங்க. 


தூங்குனா இருக்கை எழுந்துக்கும். அப்புறம் கீழ விழுந்துட்டு எம்மேல கோபப்படாதீங்க. 


 கதைய இன்னும் தொடங்கலையே???


குகைக் கதவு எங்க இருக்குன்னு சொன்னா ஒளிவழி தேடி ஓடிப்போயிருவோம். கதவு எங்க இருக்குன்னு சொல்றீங்களா? 


புரியுது. கதவு எங்க இருக்குன்னு சொல்றத விட நான் கதைய சொல்றது தான் சரின்னு படுது. படுத்தி எடுக்காம கதையின் கதவத் திறக்கறேன். 


அடர்ந்த இருள் சூழ்ந்த.....

குகைக்குள்ள யாரோ நடக்கற சத்தம் கேட்குது. கேட்குதா?


"சித்தப்பா. என்னைய குகைக்குள்ள தள்ளிவிட்டுட்டு எங்க போனீங்க. பயங்கர இருட்டா இருக்கு.

நான் கத்தறது கேட்குதா?"


" சித்தப்பா… சித்தப்பா"… 

கத்திக்கிட்டு இருக்கறது நம்ம ஹீரோ அலாவுதீன் தான். 


 அலாவுதீன் கதைய படிச்சுப்பார்த்தீங்கன்னா யார் அந்த சித்தப்பான்னு தெரிஞ்சுக்குவீங்க. 


நான் சித்தப்பாவ detail பண்ணல. சுருக்கமாச் சொன்னா… 


அலாவுதீன் இருட்டுக்குள்ள தட்டுத் தடுமாறி நடந்துகிட்டே இருந்தான்.

இருட்டுக்குள்ள இருக்க இருக்க அந்த இருட்டுக்கு நம்ம கண்கள் பழகிரும். உண்மை தானே.

அப்புறம் இருளே குறைவான ஒளியா நம்ம கண்களோட பேசும். 


அலாவுதீன் கைகள்ள ஒரு பொருள் தட்டுப்பட்டுச்சு. குறைவான ஒளியின் உதவியால அலாவுதீன் தன் கண்களுக்கு அருகாமையில வச்சு அந்தப் பொருளப்  பார்த்தான். 


என்னன்னு சரியா பிடிபடல. கைகள்ள பிடிச்சு கண்கள மூடித் தடவிப் பார்த்தான். 


விரல்களால தடவிப் பார்க்கப் பார்க்க திறந்தது அகக் கதவு.


திறந்த அகக் கதவின் வழியா ஒரு விளக்கு தெரிஞ்சது. தெரிஞ்ச விளக்கு எரிஞ்சது. 


விளக்குக்குள்ள இருந்து ஒரு பூதம் வெளிய வந்துச்சு. 


  "ஆலம்பனா… 

   நான் உங்கள் அடிமை" 

எனக்கு விடுதலை அளித்த எசமானுக்கு வணக்கம். 


இந்த பூதத்துக்கு நான் வச்சிருக்க பேரு 'பூம்... BHOOm'

அலாவுதீனுக்கு பயம் ஏதுமில்ல. பூதம் பார்க்க கொஞ்சம் காமெடியா இருந்துச்சு. 


பூதத்தவிட அந்த இருட்டு தான் அலாவுதீனுக்குப் பயமா இருந்துச்சு. 


இப்ப ஒரு பூதம் வந்ததும் அலாவுதீனுக்கு தைரியம் வந்துருச்சு. கூட ஒரு ஆளு சிக்கியாச்சுனு மனசத் தேத்திக்கிட்டான். 


விடுதலை அளித்த எசமானுக்கு வணக்கம். 


"ஆலம்பனா" … 

நான் உங்கள் அடிமை… 

உத்தரவிடுங்கள் 

உதவக் காத்திருக்கிறேன். 


இந்தக் கரியக் குகைக்குள் எப்படி வந்தீர்கள்?


ம்... அது பெரிய கதை. கதைக்குள்ள ‘கத’ சொல்ல விரும்பல. அதுனால அந்த "Flash back" சொல்ல முடியாது. (வாசிப்பவர்கள் 'அலாவுதீன்' மையக் கதையை வாசித்தால் சித்தப்பா ஒரு 'டுபாக்கூர்' என அறிந்துகொள்வீர்கள்)

அலாவுதீன் 'பூம்'கிட்ட தைரியமா பேச ஆரம்பிச்சான்.

நான் என்ன சொன்னாலும் செய்வியா?  


நீங்கள் கேட்பது எதுவாயினும் நொடியில் தருவேன். கேளுங்கள் எசமானரே… 


அலாவுதீன் யோசிக்கவே இல்ல.சட்டுனு கேட்டான். 


இந்த விளக்கு எரியணும்.  கூடவே ஒரு கண்டிஷனும் போட்டான். இந்த விளக்கு அணையவே கூடாது. செய்வியா? 

பூதத்திற்கு ஏமாற்றமாக இருந்தது. 

எசமானரே… 

பெரிதாகக் கேட்பீர்கள் என நினைத்தால் விளக்கை ஏற்றச் சொல்கிறீர்கள். 


 "ப்பூ" … என்று ஊதினால் எரியும் விளக்கு அணைந்துவிடும். 

நான் "ப்பூ…" என ஊதினால் இந்த விளக்கு அணையா விளக்காக ஒளிர்விடும். இதெல்லாம் எனக்கு "ஜுஜீபி". 


"ஜீஜீபி" என்றால்? அலாவுதீன் விளங்காமல் கேட்டான். 


"ஜீஜீபி" என்றால் 'மிகச் சாதாரணம்' எனப் பொருள் எசமானரே...


சரி. 

'நான் இந்தக் குகைய விட்டு வெளிய போகணும். இருள் சூழ்ந்த காட்டக் கடக்கணும். அதுக்கு எனக்கு ஒளி தேவை. என் வழியில ஒளி இருந்தா எனக்கான எல்லாத்தையும் அடைய என்னால முடியும்'. 

என்றான் அலாவுதீன். 


எசமானரே… 

நீங்கள் கட்டளையிட்டால் ஒரு நொடியில் நான் உங்களை உங்கள் வீட்டில் சேர்ப்பேன். பிறகு எதற்கு அணையா விளக்கு? 


 பூதம் மண்டியிட்டு தன் தோள்களில் ஏறி அமரச் சொன்னது. 


மறுத்த அலாவுதீன் உனக்கான விடுதலை கிடைச்சிடுச்சு. நீ யாருக்கு முன்னாடியும் மண்டியிடாத. உன் உலகத்துக்குப் போய் சந்தோசமா இரு. நான் என் வீட்டுக்குப் போகணும். நான் சொன்னதச் செய்வியா? எனக்கான ஒளி இருந்தா  போதும். வழி தேடிக்குவேன். 

என்றான் அலாவுதீன். 


விளக்கு எரிந்தது. பூ(த)ம் மறைந்தது. 



அலாவுதீன் விளக்கின் ஒளியில் குகையைக் கடந்து போய்க்கொண்டிருந்தான்.



மனப் பறவை பறக்கும்… 


சித்திரங்கள்
எண்ணம் & எழுத்து 
இருதய்.ஆ

மனம் கொத்தும் பறவை 
காணொளி
https://www.youtube.com/@manamkothumparavai44 

ஒளிவழிக் கதைகள் 
Short1
" அலாவுதீனும் அற்புத விளக்கும்" 
 'Alladinum Arputha vilakum
-Reelu puthusu-

https://youtu.be/gVHX5RLNHis?feature=share

தொடர்ந்தருங்கள். தொடர்ந்திடுங்கள். 
வாசிப்பிற்கு நன்றி... 
#irudhy.a 
#writer #director 
@manamkothumparavai44 
Www.மனப்பறவை.com




























 






அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...